கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 30, 2010

இருப்பதையும் இழக்காமல் இடஒதுக்கீடு அமைந்திட...! - கலைஞர் கடிதம்


சமூக நீதிக் களத்தில் 90 ஆண்டுப் பின்னணி வரலாற்றைப் பெற்றுள்ள இயக்கம் நமது திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நீ அறிவாய்! திராவிட இயக்கத்தின் ஆணிவேர்க் கட்சியாம் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், 1921ஆம் ஆண்டில் முதல் கம்யூனல் ஜி.ஓ. எனப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள்முதல்; வாழையடிவாழையென வளர்ந்து கழகம் இமயமென உயர்ந்து நிற்கும் இன்றுவரை சமூகநீதி என்பதை நமது உயிர்மூச்சுக் கொள்கையாகப் போற்றிப் பேணி வருகிறோம். தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள் கையை மறுஆய்வு செய்யும் பிரச்சினை பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டு வந்தாலும், முதல்முறையாக நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 1969ஆம் ஆண்டில் திரு.ஏ.என்.சட்டநாதன் அவர்கள் தலைமையில் 13.11.1969 அன்று பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்காகவும், அவர்தம் நிலையை மேம்படுத்தவும், அரசு அதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆராயவும், கல்வி வசதிகள், அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம், சமுதாய நலவளர்ச்சி ஆகிய முனைகளில் அவர்களுடைய நிலையை மேம்படுத்த மாநில அரசு என்னென்ன நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரை செய்யவும், தமிழகத்தின் வரலாற்றில் முதன்முதலில் அமைக்கப்பட்ட குழு இதுதான். இந்தச் சட்டநாதன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேதான் அதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 16 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம்; என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை மாற்றியமைத்து, 7.6.1971 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 சதவிகிதம்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 சதவிகிதம்; என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல்வேறு வகுப்புகள், கல்வி நிலையங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு உரிய பங்கினைப் பெறமுடிய வில்லை என்கிற உணர்வு மேலோங்கி, மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு தனிஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வந்ததையொட்டி; பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாசு அவர்களை கலந்தாலோசித்து; பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக் கியும்; நான் மூன்றாம் முறையாக முதலமைச் சராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் 28.3.1989 அன்று ஆணையிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகையைக் கருத்தில்கொண்டு, 1990ஆம் ஆண்டில் பொதுத் தொகுப்புக்கான ஒதுக்கீட்டிலிருந்து தனியே 1 விழுக்காடு பழங்குடியினருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்டோருக்கும் என 22.6.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் அய்ந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, தற்போது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையினைப் பெற்று, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவிகித இடஒதுக்கீட்டில் இருந்து 3.5 சதவிகித இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் களுக்கு என தனியே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அதைப்போலவே, தாழ்த்தப்பட்டோருள் கடைக்கோடிப் பிரிவினராய் இருந்துவரும் அருந்ததியர்க்கு தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை ஏற்று, தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுவரும் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் 3 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

நான் இவ்வளவு விவரங்களையும் தொகுத்துச் சொல்வதற்குக் காரணம் இடஒதுக்கீட்டின் பரிணாம மாற்றங்களை நீ நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பிற்படுத்தப்பட்டோருக்கென வழங்கப்பட்டு வந்த 30 சதவிகித மொத்த இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு தனியே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதும்; பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இஸ்லாமியர்க்கு 3.5 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்கியதும்; அருந்ததியர் களுக்கு 3 சதவிகித தனி உள்ஒதுக்கீடு வழங்கியதும்; பழங்குடியினர்க்கு ஒரு சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கியதும் கழக ஆட்சியிலேதான். எப்போதுமே கோரிக்கைகளிலே நியாயம் இருக்குமேயானால்; சட்டமும் காலமும் ஒத்துவருமானால்; அந்தக் கோரிக்கைகளை ஒத்திப்போடாமல் உடனடியாக ஏற்று, நிறைவேற்றி வருவது கழக ஆட்சி என்பதனை நடுநிலையாளர்கள் நன்கு அறிவார்கள். அந்த அடிப்படையிலே தான் மிகப் பிற்படுத்தப்பட்டோர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும், பழங்குடியினர்க்கும் தனித்தனியே இடஒதுக்கீடுகள் கழக ஆட்சியிலே வழங்கப்பட்டுள்ளன.

தற்போது டாக்டர் இராமதாசு அவர்கள், அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையிலே இருக்கும் அடிப்படை நியாயங்களைப்பற்றியெல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக் கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத்திலே 1994ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டு, ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்சநீதி மன்றம் இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. அந்த இடைக்காலத் தீர்ப்பில், ‘‘It has been laid down that if a State wants to exceed 50 percent reservation, then it is required to base its decision on the quantifiable data’’, அதாவது, ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதனை நியாயப்படுத்து வதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளித்திடும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு நமக்கு ஜாதிவாரியான மக்கள்தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு (CasteBased Census) மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மாநிலத்தில் மட்டும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டுமென்றால், அதற்கு 400 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அந்த நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறலாமென்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நமக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதையெல்லாம் முடிவு செய்திட இயலும். அப்படிச் செய்தால்தான், சட்டப்படி அந்த முடிவுகள் எல்லாம் செல்லுபடியாகும். அப்படியில்லை என்றால் நாம் எடுக்கும் முடிவு சட்டத்திற்குப் புறம்பானதாக ஆகிவிடக்கூடும். எனவே, வன்னியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு என்ற பிரச்சினையில் நாம் உடனடியாக அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்திற்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப்பிறகு தனி ஒதுக்கீடு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதுதான் சட்டப்படியான அணுகுமுறையாக அமைந்திடும். இதில் அவசரம் காட்டினால், பிரச்சினை திசை திரும்பிவிடக்கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்பதாலும் தொடர்புடைய அனைவரும் இந்த இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இணக்கமான ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என்று நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம்!

அன்புள்ள,
மு.க.

No comments:

Post a Comment