முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி&பதில் அறிக்கை:
தமிழக மீனவர் செல்லப்பன் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட பிரச்னை குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறாரே?
இந்த பிரச்னை குறித்து செய்தி தெரிந்ததும், உடனடியாக நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் வழங்க கூறினேன். அத்துடன், பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் அன்றே கடிதங்களையும் எழுதினேன். 8ம் தேதி மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9ம் தேதி மதியத்திற்குள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இப்பிரச்னை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க. மீனவர் அணி சார்பில் இதற்காகவே ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப்பட்டுள்ளது.
இதெல்லாம் முடிந்த பிறகு, விழித்து கொண்ட ஜெயலலிதா அதை பற்றி அறிக்கை விடுத்துள்ளார். அதில், மத்திய அரசுக்கு ஆதரவை திமுக விலக்கி, திமுக அமைச்சர்களை ராஜினாமா செய்ய வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும் என்ற கிராமத்து பழமொழி போல எப்படியாவது மத்திய அரசிலிருந்து திமுக விலக வேண்டும், மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி கவிழ வேண்டும், ஊர் பற்றி எரிகிற நேரத்தில் கிடைத்த வரை ஆதாயம் பெறலாம் என்று ஜெயலலிதா துடிக்கிறார்.
இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசுக்கு நான் வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் ஜெயலலிதா. அவர் ஆட்சியிலே இருந்தபோது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார்? அவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டுதானே இருந்தார்? மாறாக இலங்கைக்கு படையெடுத்து செல்கிறேன் என்று புறப்பட்டாரா?
ஜெயலலிதாவைப் போலவே சில பேர் தங்களை வீராதி, வீரர்கள் என்று காட்டிக் கொள்ள டெல்லிக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள்.
இந்த சூராதிசூரர்கள், சூரபத்மன் பேரர்கள், ‘இதோ புறப்பட்டு விட்டது பார், எங்கள் போர்ப்படை’ என்று இலங்கைக்கு கடற்படையை அனுப்பப் போகிறார்களா? அல்லது தங்கள் தொண்டர் படை வீரர்களையெல்லாம் கடலில் குதித்து நீந்தியே சென்று கொழும்பு துறைமுகத்தில் கரையேறி அங்குள்ள கோட்டை கொத்தளங்களை முற்றுகையிட சொல்லப் போகிறார்களா? ஒரு வேளை அப்படி அவர்கள் போட்டிருந்த திட்டத்தை நான் டெல்லிக்கு கடிதம் எழுதியதின் மூலமாக கெடுத்துவிட்டேனா என்பதை தெரிவித்தால் அவர்களுடைய வீரத்தை பாராட்டவாவது முடியும்.
தமிழ்நாட்டில் தனது ஆட்சி அமைந்தவுடன் இலங்கைக் கடற்படையினால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் களையப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்திருக்கிறாரே?
மீனவர்களின் இன்னல்கள் மாத்திரமா, அரசு ஊழியர்களின் ஊதியமும், போனசும் கூட பல மடங்கு உயர்த்தப்பட்டு, வேலை வாய்ப்பு தடைச் சட்டத்தையும் அவரே முன்னின்று வாபஸ் பெற்று, எஸ்மா, டெஸ்மா சட்டம், ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் அடக்குவதற்கு பயன்படுத்தக் கூடாது என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ‘அம்மா தாயே வாழ்க வாழ்க’ என்று அனைத்து இந்தியாவும் கோஷம் எழுப்பும். இத்தனைக்கும் அந்த ஈவு இரக்கமுள்ள அம்மையாரின் ஆட்சி மீண்டும் வந்தாக வேண்டுமே? அத்தைக்கு மீசை முளைக்கிறதா என்று அடிக்கடி தடவி, தடவிப் பார்த்து கொண்டால் மட்டும் மீசை முளைத்து விடுமா என்ன?
செல்வ வரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக செய்தி வந்திருக்கிறதே?
கடந்த 1993&1994ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முறையாக தாக்கல் செய்யவில்லை என்பதற்காக வருமான வரித்துறை குற்றம்சாட்டி தொடர்ந்த வழக்கு. அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரச்னைக்கான வழக்கு. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தன்னை அந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு ஜெயலலிதா தரப்பில் தாக்கலான மனுவை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறார்.
ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கும் எத்தனையோ ஆண்டுகளாக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அதிலிருந்தும் தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா பல முறை மனு கொடுத்து கொண்டுதான் இருக்கிறார். அவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் நடத்தும் போராட்டம் குறித்து?
சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1&9&2006 முதல் ரூ.2500 என்றும், சமையலர்களுக்கு 15&9&2008 முதல் ரூ.1300 என்றும், சமையல் உதவியாளர்களுக்கு 15&9&2008 முதல் ரூ.950 என்றும் ஊதியம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது. அரசு அலுவலர்களை போல், சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர்களுக்கும் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்கப்படுகிறது. பணி மூப்பு அடிப்படையில் 10 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர்களின் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.700, ரூ.600, ரூ.500 முறையே வழங்கப்படுகிறது. பொங்கல் கருணைத் தொகையை ரூ.500லிருந்து ரூ.825 ஆகவும், பிறகு ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கும் சத்துணவு அமைப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களைப் போலவே தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சலுகைகளை அவர்களுக்கு அளித்தமைக்காக 21&11&2009ல் பல்வேறு சத்துணவு மற்றும் குழந்தைகள் மைய ஊழியர் சங்கங்கள் இணைந்து சென்னையில் ஒரு நன்றி விழா நடத்தினர். அந்த மாநாட்டிலும் நான் இவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்கள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றார்கள்.
ஆனால், ஒரு கட்சியின் சார்புடைய சிலர் மட்டும் அரசை எதிர்த்து இதுபோன்ற கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டம் உள்நோக்கத் தோடும், கட்சி கண்ணோட்டத்துடனும் நடத்தப்படும் ஒன்றுதான்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment