கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 27, 2010

பெண்களுக்கு சம உரிமை கிட்டிட பாடுபட்ட பெரியார், அண்ணா போராட்ட உணர்வு வரவேண்டும் கல்லூரி மாணவிகள் மத்தியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.7.2010 அன்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவியர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி பேசியதாவது:

இன்று பட்டங்களைப் பெற்று சமூதாயத்திற்கும் நாட்டிற்கும் சிறப்பான பணியினை செய்ய இருக்கும் மாணவிகளுக்கு முதற்கண் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கப்பட்ட இந்த கல்லூரி பல்வேறு சிறப்புகளைப் பெற்று மிகப்பெரிய சாதனைகளை படைத்துவருகிறது. இந்த கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொண்டு உங்களையெல்லாம் வாழ்த்தும் இந்த அரிய வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி. நான் அதிகம் பேச விரும்பவில்லை. பொதுவாக ஒரு பழமொழி உண்டு _ பேச்சைக் குறைத்து செயலில்காட்டு என்பதற்கேற்ப பேச்சைத் தவிர்த்து செயலில் கவனம் செலுத்திவருகிறேன். நான் எத்தனையோ கல்லூரிகளின் நிகழ்ச்சிகளுக்குப் சென்றுவந்துள்ளேன். இந்நிகழ்ச்சியில் நீங்கள் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடு அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே பாராட்டுகிறேன். 18 ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கப்பட்ட இக்கல்லூரியில் தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறீர்கள். தன்னாட்சி தகுதி பெற்று, தேசியக் கல்வித் தரச்சான்று பெற்று, பல்கலைக்கழக நிதி உதவி பெறும் இக்கல்லூரியின் பணிகள் பாராட்டுக்குரியது. இது ஒரு தலைசிறந்த கல்லூரியாகத் திகழ்கின்றது. நமது நாட்டுப் பெண்கள் முன்பெல்லாம் போதிய கல்வி அறிவு பெறாத காரணத்தால் தங்களுடைய உரிமைகள் என்ன என்பதையே உணராமல் இருந்தார்கள். தற்போது, இந்நிலையில்லை. பெண்கள் தங்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வரலாற்றில் இடம் பெறத்தக்க வகையில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார்கள். பெண்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ்த் தென்றல் திரு.வி.க, ஈரோட்டுச் சிங்கம் தந்தை பெரியார், எங்களை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா ஆகியோர் பெண்களுக்கு சமஉரிமை கிடைக்க பாடுபட்டார்கள். அந்த போராட்ட உணர்வு உங்களுக்கு வரவேண்டும். ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்காக பல தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில் மிக முக்கியமானது பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் ஆகும். அத்தீர்மானத்தை 60 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றி தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றியவர் தான் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள். பெண்கள் சூட்டிய பெரியார் பட்டம்

1938ஆம் ஆண்டு தமிழகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடி வடசென்னை, ஒற்றைவாடை திரையரங்கு கூடத்தில் மிகப்பெரிய ஒரு விழாவை தந்தை பெரியாருக்காக ஏற்பாடு செய்திருந்தனர். அவ்விழாவில் அதுவரை ஈ.வெ.ராமசாமி என்று அழைக்கப்பட்டு வந்த தந்தை பெரியாருக்கு பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரியார் என்று பட்டம் சூட்டினர். இன்று பட்டம் பெறும் நீங்கள், அன்று பெண்கள் வழங்கிய பட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த வரலாற்று செய்தியை சொன்னேன். ஒரு ஆண் பட்டம் பெற்றால் அந்த பட்டம் அவருக்கு மட்டுமே பயன்படும், ஆனால் ஒரு பெண் பட்டம் பெற்றால் அந்த பட்டம் அவருடைய குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல், சமுதாயத்திற்கும் பயன்படும். நான் படித்த புத்தகத்தில் இருந்து ஒரு நிகழ்வை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தந்தைக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு மகளும் இருந்தனர். அவர்களை சோதிக்க விரும்பிய அவர்களின் தந்தை, மூன்று பிள்ளைகளையும் அழைத்து ரூ. 5 ஆயிரம் கொடுத்து, இந்தப் பணத்தைக் கொண்டு வீடு நிறைகிற அளவிற்கு ஏதாவது ஒரு பொருள் வாங்கிவாருங்கள் என்றார். முதல் மகன் வீடு நிறைய வேண்டுமே என்று ரூ. 5 ஆயிரத்திற்கும் பஞ்சு மூட்டைகளை வாங்கி வீடு முழுவதையும் நிரப்பினான். இரண்டாவது மகன் வைக்கோல் போர்களை வாங்கி நிரப்பினான். ஆனால், மகளோ ரூ.5க்கு ஒரு அகல் விளக்கு வாங்கி, வீடு நிறைய ஒளியை பரப்பினாள். இது தான் பெண்களின் மகத்துவம் ஆகும்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் நடக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் பெண் கல்விக்காக வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். கல்வித்துறைக்காக இந்தியாவிலேயே அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்வதில் முதல் மாநிலமாகத் திகழ்வது தமிழகம் தான். வேலைவாய்ப்பில் 30 சதவிகிதமும், உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதமும், பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்துள்ளார். 1996ஆம் ஆண்டு பெண்களுக்காக உள்ளாட்சி பொறுப்புகளில் இடஒதுக்கீட்டை முதன்முதலில் நிறைவேற்றியவர் தலைவர் கலைஞர் தான். ஏழை, எளிய கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி, திருமண நிதி உதவித் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்கி தற்போது ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருபவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான். பெண்களுக்கான இந்த சலுகைகளை எல்லாம் நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். பெண் குல மாணிக்கங்களாக அய்க்கிய நாடுகள் சபையில் முதல் இந்திய பெண் தலைவராக விஜயலட்சுமி பண்டிட் அவர்களும், முதல் பெண் ஆளுநராக கவிக்குயில் சரோஜினி நாயுடு அவர்களும், இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவராக புதுக்கோட்டையை சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இந்திராகாந்தி அவர்களும், சமுதாய தொண்டிற்காக முதல் பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவும், காவல்துறை முதல் பெண் உயர் அதிகாரியாக கிரண் பேடியும், இசைத்துறையில் புகழ் நாட்டிய பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்த தங்க மங்கை பி.டி.உஷாவும், நாட்டின் முதல் குடிமகனாக விளங்கக் கூடிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்களும், மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவராகவும், வழி காட்டியாகவும் விளங்கும் சோனியா காந்தி அவர்களும் பெண்கள் தான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார். இங்கு என்னுடைய வரலாற்றை எடுத்துச் சொன்ன கல்லூரியின் முதல்வர் அவர்கள் நான் உடற் கொடை வழங்கியது பற்றி குறிப்பிட்டார். மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு கொடை வழங்கும் நிகழ்ச்சியில் என் மனைவியோடு, நானும் கலந்து கொண்டேன். ஏற்கெனவே என் மனைவி உடல் உறுப்பு கொடை வழங்க முடிவு செய்து பதிவு செய்திருந்தார் என்பதே, எனக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் தெரியும். அவருடைய வழியை பின்பற்றி நானும் உடல் உறுப்பு கொடை வழங்க முடிவு செய்து, அந்த நிகழ்ச்சியிலேயே நானும் பதிவு செய்தேன். மார்கரேட் தாட்சர் கூறியதை போல் “If you want anything said, Ask a man. If you want anything done, Ask a woman” அதாவது, நீங்கள் எதையாவது சொல்ல விரும்பினால். ஓர் ஆணைக் கூப்பிட்டு சொல்லுங்கள். நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், அதை ஒரு பெண்ணிடம் கூறுங்கள். பெண்கள் எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். பட்டம் பெறுகின்ற உங்களை எல்லாம் நான் விரும்பி, வேண்டி கேட்பது, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. கடின உழைப்புக்கு தயாராக இருக்க வேண்டும். அர்பணிப்பு உணர்வுடன் நீங்கள் எல்லாம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை பின்பற்றி, கல்வியே பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ளது என்பதை உணர்ந்து நீங்கள் முன்னேற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், இந்தக் கல்லூரிக்கும் என் நன்றியை தெரிவித்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜோதி முருகன், கல்லூரியின் முதல்வர் நிர்மலா பிரசாத், செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment