முதல்வர் கருணாநிதி தமிழில் எழுதிய 12 புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஏற்புரை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
இங்கே நம்முடைய தமிழ் அறிஞர் வா.செ. குழந்தைசாமி பேசும்போது இவர் அஞ்சுகத் தாய்க்கும், முத்துவேலர் என்ற தந்தைக்கும் பிறந்தவரல்ல இவர் இயற்கை நமக்கு ஈந்த செல்வம் என்று குறிப்பிட்டார். நான் பெற்ற பேறுகளில், பெரும் பேறு தமிழறிஞர் குழந்தைசாமியின் வாயினால் சொன்ன இந்த வார்த்தை என்பதை என்றைக்கும் மறக்க மாட்டேன்.
அத்தகைய கடமை உணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை இந்த நூல் வெளியீட்டு விழாவிலே நாம் உணர்ந்து அதற்கேற்ப நானும் நடந்து கொள்வேன் நீங்களும் நடக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
அப்படி பயன்படுத்துகின்ற பழக்கத்தை, அந்த முறையை ஏற்படுத்தி அதற்கு குருநாதராக இருந்து எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் தந்தை பெரியார். ஒருவர் காலமாகி விட்டால், காலமாகி விட்டார் என்று சொல்வதை விட, இயற்கை எய்திவிட்டார் என்று கூறுவதைத் தான் பெரியார் விரும்புவார். அதைத் தான் எல்லோரும் பின்பற்றிச் சொல்வது வழக்கம். இயற்கை எய்துவது எப்படி ஆண்டவனை இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்ற கருத்து இங்கே சொல்லப்படுகிறதோ, அதைப் போலத்தான் நம்முடைய பெரியவர் குழந்தைசாமி இங்கே பேசும்போது இவர் அஞ்சுகத் தாய்க்கும், முத்துவேலருக்கும் பிறந்தவர் அல்ல, இவர் இயற்கையால் தோன்றியவர் என்று குறிப்பிட்டார்.
தோன்றியவர் என்று சொன்னார்களோ, இயற்கைக்குத் தோன்றியவர் என்று சொன்னார்களோ நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் எந்த அளவுக்கு என்னிடத்திலே நம்பிக்கையும், என்னைப் பற்றிய உயர்வான எண்ணமும் கொண்டவர்கள் தமிழகத்திலே நம்முடைய குழந்தைசாமியைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணும்போது நான் தமிழகத்திலே பிறந்தேன் என்பதால் பெருமை அடைகிறேன். குழந்தைசாமி போன்றவர்கள் இருக்கின்ற தமிழகத்திலே பிறந்தேனே என மகிழ்ச்சியடைகிறேன்.
வைரமுத்து பேசும்போது நான் எந்த அளவிற்கு தமிழகத்திலே, எத்தனை நூற்றுக்கணக்கான கவிதைகளை, நூல்களை எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் குறிப்பிட்டார். ஒருநாள் நான் தூங்கிக் கொண்டிருந்த போது என்னை அறியாமல் நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு, குறட்டை விட்டுத் தூங்கிய போது காளியோ, தேவியோ கனவிலே தோன்றி அல்லது தோன்றாமலே வந்து நின்று சூலாயுதத்தால் என் நாவிலே எழுதி, அதற்குப் பிறகு எழுதிய கவிதைகள் அல்ல, எழுத்துக்கள் அல்ல இவைகள். இவைகள் எல்லாம் நான் கேட்டு, தெரிந்து, தெளிந்து, உணர்ந்து, அறிந்து அதன் பிறகு எழுதியவைகள் தான். எனவே இவைகள் எதுவும் இயற்கையாக தெய்வீகத் தன்மை என்று சொல்வார்களே, அதைப் போல எனக்கு வாய்த்தது அல்ல என்பதை நான் மிகுந்த பணிவன்போடு, அடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
சின்னஞ்சிறு வயதிலேயே எனக்கு தமிழ்ப் பற்று, தமிழ் இலக்கியப் பற்று, தமிழ் வரலாறு பற்றிய மேன்மையான எண்ணம், தமிழ் மன்னர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஆவல் இவை அத்தனையும் என்னுடைய உள்ளத்திலே ஏற்பட்ட காரணத்தினாலே தான் அதனுடைய வளர்ச்சியாக அதை எண்ணியெண்ணி, பழகிப் பழகி, அதற்குப் பிறகு இன்றளவிற்கு நீங்கள் எல்லாம் என்னைப் பாராட்டுகின்ற வகையில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதவும், அவைகளை தமிழகத்திலே மாத்திரம் உலவ விட்டால் போதாது, உலகமெங்கும் உலவ விட வேண்டும், எனவே மொழி பெயர்க்க வேண்டுமென்று பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் திருவாசகமும், சாமிநாதனும், இவர்களுக்கு துணையாக நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்துவும் இருந்து இந்த நூல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், நான் அவர்களுக்கெல்லாம் கடமைப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு மனதார நன்றி கூற விரும்புகின்றேன்.
அந்த நன்றியைக் கூறுகின்ற மண்டபமாக இந்த மண்டபம் அமைந்திருப்பதும், இங்கே மாசற்ற மனத்தினராய் நீங்கள் எல்லாம் வீற்றிருப்பதும் உங்களிடையே அவர்களுக்காக நான் நன்றி நவிலுவதும் என்னுடைய கடமை. அந்தக் கடமையைத் தான் இப்போது நிறைவேற்றியிருக்கிறேன்.
இன்றையதினம் நான் இந்த அளவிற்கு ஒரு எழுத்தாளனாக, ஒரு தொண்டனாக, ஒரு தலைவனாக, ஆட்சிக் கட்டிலிலே வீற்றிருக்கும் முதல் அமைச்சராக, பெரியாரின் மாணவனாக, அண்ணாவின் தம்பியாக, உங்களுடைய உடன்பிறப்பாக பாராட்டப்படுகிறேன் என்றால், இதற்கெல்லாம் காரணம் நம்முடைய வி.சி. குழந்தைசாமி குறிப்பிட்டதைப் போல இயற்கையாக எனக்கு அமைந்தது அல்ல இவைகள் எல்லாம் தமிழ்த்தாய் ஊட்டிய தன்மானப் பால் தமிழ்த்தாய் ஊட்டிய உணர்வு தமிழ்த்தாய் ஊட்டிய பற்று, பாசம் அவை தான் இன்றைக்கு உங்களிடையே இந்த அளவிற்கு அமர வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
நான் இன்றல்ல, என்றென்றும் இப்பொழுது எழுதிய நூல்களை விட இன்னும் பல நூல்களை எழுதி அவற்றையெல்லாம் நீங்கள் பாராட்டுகின்ற அளவிற்கும், போற்றிப் புகழ்கின்ற அளவிற்கும் இந்த நாட்டினுடைய செழுமையை, சிறப்பை, தேவையை எல்லாம் உணர்த்துகின்ற நூல்களாக இன்னும் ஏழையெளிய மக்களுக்கு, பாட்டாளி மக்கள் எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற நூல்களாக, கருத்துரை கூறுகின்ற நூல்களாக எழுதி இலக்கியங்களை மாத்திரம் எழுதினால் போதாது, வரலாறுகளை எழுதினால் போதாது, கதை, கவிதைகளை எழுதினால் போதாது, நாட்டிலே மனிதனைப் பற்றி எழுத வேண்டும், மனித சமுதாயத்தைப் பற்றி எழுத வேண்டும் அந்தச் சமுதாயம் வாழ வழி என்ன என்பதை கலந்தாலோசித்து அதற்கேற்ப இன்றைக்கு நாட்டிலே பரவியிருக்கின்ற தீவிரவாதம், வன்முறை இவைகளை எல்லாம் சந்திப்பதற்கு எந்த முறையைக் கையாள வேண்டும் என்பவைகளையெல்லாம் சிந்திக்கின்ற வகையிலே நாம் நம்முடைய கொள்கைகளை நம்முடைய உணர்வுகளைத் தேக்கி வைத்து ஒன்றுகூடி கலந்துபேசி நாட்டிலே அமைதி செழிக்க அமைதி எங்கும் பரவிட வன்முறை வீழ்ந்திட பலாத்காரங்கள் இனி எங்கும் தலையெடுக்கக் கூடாது என்ற நிலை தொடர்ந்திட பாடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் நான் எழுதுவதற்கு பயன் உண்டு. அந்த எழுத்தால் பயனடைய வேண்டுமேயானால் வெறும் கவிதை, இலக்கியம், இவைகளிலே தேர்ச்சி பெற்றிருந்தால் மாத்திரம் போதாது, அவைகளின் மூலமாக மனிதனை மனிதனாக வாழச் செய்ய மனிதன் நன்றாக வாழ நலமாக வாழ என்று மாத்திரம் அல்லாமல் சுயமரியாதையோடு வாழ, சுதந்திரத்தோடு வாழ நாம் பணியாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment