இந்தியா டுடே சிறப்பிதழுக்குக் கலைஞர் பேட்டி! (2008)
கே: உங்களது இளமைக் காலம் வறுமையானதா? ப: எனது இளமைக்காலம், நீங்கள் நினைப்பதுபோல, வறுமை சூழ்ந்தது இல்லை. எனது பெற்றோர் வைதீகத்தில் தோய்ந்தவர்கள் என்பதால், எனக்குக் காதணி விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கும், வித்யாரம்பம் என்ற பெயரில் ஆடம்பரமாக என்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கும், பள்ளிக் கல்வி மட்டுமின்றி, எனக்கென இசைக் கல்விக்குத் தனியே ஏற்பாடு செய்வதற்கும், தனியாக எனக்கு ஆசிரியர் அமைத்துப் பாடம் போதிப்ப-தற்கும், தேவையான வசதி வாய்ப்புகளை பெற்றிருந்த குடும்பத்திலேயே நான் பிறந்தேன். கே: நீங்கள் எப்போதிலிருந்து பாடப்புத்தகங்கள் தவிர்த்து மற்ற புத்தகங்களை படிக்க ஆரம்பித்தீர்கள்? ப: நான் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்-டிருந்தபோதே, குடியரசுப் பதிப்பக வெளியீடுகளை மிகுந்த கவனத்தோடு படிக்கத் தொடங்கினேன். எனது சிந்தனைப் போக்கில் திருப்பமாக அமைந்த இன்னொரு செய்தியையும் இந்த இடத்திலே நான் குறிப்பிட்டாக வேண்டும். நான் அய்ந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது பனகல் அரசர் என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப் பாடக் கட்டுரையாக வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூல் முழுவதையும் வகுப்பிலேயே நான் ஒருவன்தான் அப்படியே மனப்பாடம் செய்து, சொல்வேன். கே: நீங்கள் சின்ன வயதிலேயே நீதிக்கட்சித் தலைவர் அழகர்சாமியால் ஈர்க்கப்பட்டுள்ளீர்கள். அதுதான் நீங்கள் அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தற்குக் காரணமா? ப: பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்த-மானவாதமும், -அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரம் கொப்-பளிக்கும் வரிகளும், - அண்ணா பேச்சில் நிறைந்திருந்த அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. 1938, பிப்ரவரி 25 ஆம் நாள் தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்ற முடிவு இராஜாஜி அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரண-மாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கான கொடி உயர்த்-தப்பட்டது. பெரியார், இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போருக்குத் தலைமையேற்றார். இந்தி ஆதிக்க எதிப்புப் பிரச்சாரத்தில் அண்ணாதுரை என்ற புதிய பெயர் தமிழ்நாட்டின் மூலை-முடுக்கெல்லாம் எதிரொலித்தது. அப்போது பள்ளிப் பருவத்திலே இருந்த எனக்கு மாணவர்கள் பலரை இணைத்து சங்கங்கள் அமைப்பதில் தனி ஆர்வம் ஏற்பட்டது. சிறுவர் சீர்திருத்தச் சங்கம், இளை-ஞர் சங்கம் - வாரந்தோறும் கூட்டங்கள், சிறப்புத் தலைப்புகளில் சொற்பொழிவுகள் என்று அமைப்புப் பணி-யிலும், ஆக்கப் பணியிலும் ஈடுபட்டிருந்த காலம் அது. 1938 இல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்-கள் பலரை அணிவகுத்திடச் செய்து, திருவாரூர் தெருக்களில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்ப்பரணி பாடி ஊர்வலம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இதுவே எனது அரசியல் பாதைக்கு வெள்ளோட்டமாக அமைந்துவிட்டது. கே: நீங்கள் நான் சூத்திரன் என்பதால்... என்று அடிக்கடி சொல்வீர்கள். உங்கள் இளமைக் காலத்தில் அப்படியான ஜாதிக் கொடுமைக்கு நீங்கள் ஆளாகி யிருக்கிறீர்களா? ப: நான் மட்டுமல்ல. நாடே ஜாதிக் கொடுமை-களுக்கு ஆட்பட்டு நொறுங்கிக் கிடந்தது. மேல்ஜாதி - கீழ்ஜாதி என்ற வேறுபாடு, தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தோஷம் என்ற கொடுமை இவையனைத்தும் மண்டிக் கிடந்த சமுதாயம் அன்றைய சமுதாயம். அப்படிப்-பட்ட சமுதாயம் என்னுள் ஏற்படுத்திய உணர்வுதான் நான் சூத்திரன் என்பதாகும். கே: உங்கள் தந்தையின் மறைவின்போது நீங்கள் ஒரு மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தீர்கள். உங்கள் முதல் மனைவி பத்மாவதி அம்மாள் மறைவின்போதும் கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தீர்கள். தயாளு அம்மாள் உடனான திருமண தினத்தன்றே போராட்டங் களில் கலந்து கொண்டீர்கள். குடும்பத்தினரின் பார்வை யில் இந்தப் போக்கு எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது? ப: என்னுள்ளே எப்போதும் ஒளிவீசிக் கொண்-டிருந்த லட்சிய தீபம், கொள்கைக்காக எதையும் தியாகம் செய்யச் சித்தமாய் இருந்த வேகம் ஆகியவற்றை முழுமை-யாக அறிந்து வைத்திருந்த எனது குடும்பத்தினருக்கு, நான் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வேன் என்ற திடநெஞ்சம் இருந்த காரணத்தினால், என்னுடைய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளைக் கண்டு அவர்கள் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. கே: நீங்கள் ஒரு பேட்டியில் அண்ணாவையும் உங்களையும் அழகியல் அற்ற எழுத்தாளர்கள் என்று விமர்சிப்பவர்கள் அரசியல் பார்வை கொண்டவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏன் அப்படி சொன்னீர்கள் என்று விளக்க முடியுமா? ப: அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்திலும், என்-னு-டைய எழுத்திலும் அழகியல் இல்லை என்று நெஞ்சில் கைவைத்து, மனசாட்சியைத் தொட்டு யாராவது சொல்ல முடியுமா? அப்படிச் சொல்பவர்கள் யாரேனும் இருந்தால், அவர்கள் அழகியலையும் அறியாதவர்கள், அரசியலையும் புரியாதவர்கள். அண்ணா அவர்களும் நானும் ஏற்றுக் கொண்டு பின்பற்றிய கொள்கைகளின் காரணமாகப் பலவற்றை இழந்திருக்கிறோம். எனினும் எந்த இழப்பும் எங்கள் இதயத்தை கனக்கச் செய்ததில்லை. ஒன்றை இழந்து பெறும் சுகம் இரண்டு பங்கல்லவா? கே: ஏதோ ஒரு சக்தியால் இந்த உலகத்தில் எல்லாம் நிகழ்கிறது என்று குறளோவியத்தில் எழுதியிருக்கிறீர்கள். அந்தச் சக்தி கடவுள் இல்லை என்பதை இப்போதும் அழுத்தமாகச் சொல்வீர்களா? அந்த சக்தியை கடவுள் என்று பெருவாரியான கூட்டம் நம்பி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பதை ஒற்றை வரியில் நிராகரித்துவிட முடியுமா? ப: இல்லையென்பார்கள் சிலர் உண்டென்று சிலர் சொல்வர் எனக்கில்லை கடவுள் கவலை என்ற பாவேந்தரின் பாடல் வரிகளையே பதிலாகத் தருகிறேன். நான் நாத்திகன் ஏனெனில் மனிதனை நேசிக்கிறேன் என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக் கொள்ளும் எனக்கு யாரையும் நிராகரித்திட வேண்டும் என்ற நினைப்பில்லை! கே: தீவிரப் பகுத்தறிவாளர் நீங்கள். ஆனால், ஏதோ ஒரு வகையில் கடவுள், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகள் (மஞ்சள் துண்டு அணிவது, தங்களைச் சேர்ந்தவர்களின் கடவுள் நம்பிக்கை உள்பட) உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ப: நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ள-ளவும் மாற்றமில்லை. நான் மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கையினால் அல்ல என்பதையும், அதற்கான காரணத்தையும் பலமுறை விளக்கியிருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர, மூடநம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தேவையான தெளிவில்லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக்கொள்வேன். இதில் எங்கே முரண்பாடு என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகிவிடாது! ஓஷோ எழுதிய தம்மபதம் என்ற நூலில் மஞ்சளாடை பற்றி புத்தர் என்ன சொன்னார் என்-பதை, சேறு படிந்த சிந்தனைகளும் / நிறைந்த ஏமாற்-றும் துணிவும் கொண்டவன் / மஞ்சளாடை அணிவது பொருந்துமா? / தன்னியல்பை ஆள்பவன் எவனோ / ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ / அவனே மஞ்சளாடை அணியலாம் என்று விளக்கி-யிருக்கிறார். கே: தி.மு.க., அ.தி.மு.க. இணைப்பிற்கு பிஜுபட்நாயக் முயற்சி செய்தார். இந்த முயற்சி ஏன் சாத்தியமில்லாமல் போனது? ப: 12.09.1979 அன்று பிஜு பட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து, தி.மு.க., அ.தி.மு.க. இணைப்பு குறித்துப் பேசியபோது நான் தெரிவித்த கருத்துகளும், நிபந்தனைகளும் உண்மைதானா என்ற 13.09.1979 அன்று பிஜு பட்நாயக் முன்னிலையில் சென்னை, சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வேறொரு அறையில் நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் தனிமையில் பேசியபோது, எம்.ஜி.ஆர். என்னிடம் வியப்பு மேலிடக் கேட்டார். இணைப்பிற்குப் பிறகும், எம்.ஜி.ஆர். அவர்களே முதலமைச்சராகப் பதவியில் நீடிக்கலாம். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்கலாம். அந்தக் கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எந்த மறுப்பும் இல்லை. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் யாருக்கும் அமைச்சர் பதவி தேவையில்லை. முக்கியமாக எம்.ஜி.ஆர். இடஒதுக்கீட்டில் கொண்டு வந்த சமூகநீதிக்குப் புறம்பான ஒன்பதாயிரம் ரூபாய் உச்சவரம்பு ஆணை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று நான் தெரிவித்திருந்த கருத்துகள் பற்றித்தான் எம்.ஜி.ஆருக்கு வியப்பு! எம்.ஜி.ஆர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக்குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி, இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார். பிஜு பட்நாயக் முன்னிலையில் நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள், அதாவது 14.09.1979 அன்று, வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள், தி.மு.க., அ.தி.மு.க. இணைப்பு பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல, அவரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு.கழகத்தையும், என்னையும் மிகக் கடுமையாகவும், தரக் குறைவாகவும் தாக்கிப் பேசினார்கள். வேலூருக்குப் பிறகு இணைப்பு பற்றிய பேச்சு தொடரவில்லை. பிஜு பட்நாயக் அவர்களின் முயற்சி சாத்தியமற்றுப் போனது. சேப்பாக்கம் சந்திப்பிற்கும், வேலூர் பொதுக் கூட்டத்திற்கும் இடையில் என்ன நடந்தது என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். |
No comments:
Post a Comment