கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 2, 2010

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஜெ.வுக்கு கலைஞர் கேள்வி


முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறப்பு நீதிமன்ற, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்குகளில் என்ன கூறினார்கள் என்ற விவரங்களை தேதி குறிப்பிட்டு நான் எழுதியபோதிலும், நான் ஏதோ பொய்யை திரும்ப திரும்ப சொல்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்புக்களையே அவர் இல்லை என்று மறுக்கிறாரா? பொய் என்று கூறுகிறாரா என்று தெரியவில்லை.

வழக்கு விசாரணையை ஜெயலலிதா தாமதப்படுத்த முயற்சிக்கிறார் என்று நான் எழுதினேன். அதற்கு ஜெயலலிதா நான் தான் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறேன் என்று சொல்கிறார். இந்த வழக்கிலே குற்றச்சாட்டு அவர் மீது தான். தீர்ப்பிலே தண்டனை விதிக்கப்பட்டால் அது அவரைத்தான் பாதிக்கும். இந்த நிலையில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நான் முயற்சிப்பேனா அல்லது அவர் முயற்சிப்பாரா என்பதை பாமர மனிதன் கூட புரிந்து கொள்ள முடியும்.


ஆனால் அவர் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த தான் முயற்சிக்கவே இல்லை என்று சாதிக்க முயலுகிறார். அது உண்மை என்றால், அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்று வழக்கு விசாரணை தொடங்கி 13 ஆண்டுகளுக்குப்பிறகு நீதிமன்றத்திலே மனு ஏன் தாக்கல் செய்தார்? விரைவிலே வழக்கினை நடத்த ஒத்துழைப்பு தந்து, அவர் குற்றமற்றவர் என்றால் தீர்ப்பினை எதிர்கொள்ள முன்வர வேண்டியதுதானே?


வழக்கு விசாரணை விரைவாக நடந்து முடிந்தால், தான் தண்டனை பெற்றிட நேரிடுமே என்பதற்காக தானே அந்த வழக்கிலே இருந்தே தன்னை விடுவித்துக்கொள்ள ஒவ்வொரு நீதிமன்றமாக அலைந்து மனு செய்து கொண்டிருக்கிறார். இது ஒன்றிலிருந்தே யார் விசாரணையை தாமதப்படுத்த முயலுகிறார்கள் என்பது புரிகிறதா இல்லையா? இதிலே நான் ஏதோ பொய்யை திரும்பத்திரும்ப சொல்வதாக புலம்பி என்ன பயன்?


அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் 25 5 2010 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தனது வழக்கறிஞர் கேட்கவில்லை என்றும், வழக்கு ஆவணங்களின் நகல்களைத்தான் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார். சில நாளிதழ்களில் வெளிவந்த செய்தியைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் உண்மையில் ஏதோ ஒன்றை நீதிமன்றத்திலே கூறி, அதன் காரணமாக வழக்கு விசாரணையை காலதாமதம் செய்கிறார்கள் என்பது தான். அதனை ஒப்புக்கொள்ளும் வகையில் வழக்கு ஆவணங்களை படிப்பதற்குத்தான் தனது வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டதாக ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டதால், வழக்கு விசாரணையை தாமதப்படுத்த யார் முயலுகிறார் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


மேலும் ஜெயலலிதா அவரது அறிக்கையில் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் என்னோடு தற்போது கைகோர்த்து விட்டார் என்று புலம்பியிருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அவருடைய வழக்கறிஞரே அவரை கைவிட்டு விட்டார் என்றும், அவரது தரப்பிலே நியாயம் இல்லை என்றும் தெரிகிறதா இல்லையா? அவரிடம் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் எல்லாம் வரிசையாக ஒவ்வொருவராக அவரை விட்டு விலகி என்னிடம் வருகிறார்கள் என்றால் நியாயம் எங்கே இருக்கின்றது என்று இது ஒன்றிலிருந்தே புரிகிறதா? இல்லையா?


ஜெயலலிதா தனது அறிக்கையில் என் மீது வேறு சில குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக என் மகன் மீதான ஒரு வழக்கை குறிப்பிட்டு அந்த வழக்கில் தீர்ப்புக்குப்பின் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி, ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு வழக்கறிஞரிடம் கருத்து கேட்டபோது, அவர் இந்த வழக்கு மேல்முறையீடு செய்வதற்கு உகந்ததல்ல என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்பதை அம்மையார் தனக்கு வசதியாக மறந்து விட்டார் போலும்!


அதுமாத்திரமல்ல; சிறப்பு நீதிமன்றத்திலே பல வழக்குகளில் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு அவர் ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் அதே வழக்குகளில் சாட்சிகளை கலைத்து பின்னர் விடுவிக்கப்பட்டாரே, அப்போதெல்லாம் அந்த தீர்ப்புகளை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு செய்தாரா? பிறரை நோக்கி இவர் குற்றம்சாட்டும்போது இவருடைய நிலை என்ன என்பதைப்பற்றி இவரே யோசித்து அறிக்கை விட வேண்டாமா?


ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நான் ஏதோ மத்திய புலனாய்வுத்துறை அதிகாரியை மாற்றியதாக ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே, அதனை அவரால் நிரூபிக்க முடியுமா? நான் எந்த அதிகாரியையாவது மாற்றச்சொல்லி யாரிடம் கேட்டேன் என்பதை ஆதாரத்தோடு விளக்க தயாரா? அதேநேரத்தில் ஜெயலலிதா எத்தனை அதிகாரிகளை மாற்றச்சொல்லி தன் கைப்படவே எழுதிக் கொடுத்தார் என்று ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே, அதை சுலபமாக மறந்து விட்டாரா? கண்டனம் தெரிவித்த வழக்கறிஞர்கள் மீது கொலை வெறிதாக்குதல் என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே புலம்பியிருக்கிறார். அவரது ஆட்சிக்காலத்தில் அவருக்கு எதிராக வாதாட முன்வந்த காரணத்திற்காக மூத்த வழக்கறிஞர்கள் விஜயனும், சண்முகசுந்தரமும் எந்த அளவிற்கு தாக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்து விட்டார்கள் என்று ஜெயலலிதா கருதுகிறாரா?


தமிழகத்தில் ஐந்து முறை நான் முதல்வராக இருந்து விட்டேன். ஜெயலலிதா இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கிறார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அவரைப்பற்றி கருத்து தெரிவித்ததைப் போல ஒரு முறையாவது எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது என்மீது களங்கம் கற்பித்து குற்றச்சாட்டுகளை தெரிவித்தது உண்டா?


இதோ ஜெயலலிதா பற்றியும், அவரது ஆட்சியைப்பற்றியும் ஒரு சில நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள், தீர்ப்புகள் வருமாறு:


ஜெயலலிதா முதல் அமைச்சராக ஆவதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்து மதிப்பு அதாவது 1 7 1991 அன்றைய தேதியில் 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஐந்தாண்டுகள் அனுபவித்து முடிந்த பிறகு 12 5 1996 அன்று ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 ரூபாயாகும். இந்த செய்தி நாமாக இட்டுக்கட்டிப் பரப்பிய செய்தியல்ல. இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையை தடுத்திட ஜெயலலிதா உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து விசாரணை சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்த போதிலும் பின்னர் தடையை நீக்கி விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.


இந்த வழக்கிலே ஜெயலலிதா பிறகு உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிர்பார்ப்பு ஜாமீன் கோரினார். அதனை நிராகரித்து உயர்நீதிமன்றம் ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்றும், அரசியல் பகை காரணமாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்றும் தீர்ப்பு கூறியது.


ஏனென்றால் ஜெயலலிதா வீட்டை சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட நகைகள், வெள்ளிச் சாமான்கள், ஏனைய சொத்துக்கள், மற்றும் திருவான்மிழூர் தொடங்கி மகாபலிபுரம் வரை வாங்கப்பட்டுள்ள பங்களாக்களின் பத்திரங்கள் ஆகியவைகளை கணக்கிட்டு எடுக்கப்பட்ட ஆதாரங் களின் பேரில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சி பெட்டிகளிலும், ஏடுகளிலும் பார்த்துப்பார்த்து ஆச்சரியப்பட்ட சொத்துக்கள்தான் அவை.


அதைப்போலவே ஜெயலலிதாவின் வங்கி கணக்கிலே மூன்று லட்சம் டாலர் வரவு வைக்கப்படுகிறது. அன்னிய செலாவணி சட்டத்தின்கீழ் இதன் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. டாலரை அனுப்பியது யார் என்றே தனக்கு தெரியாது என்று ஜெயலலிதா கூறிவிட்டார். அதுகுறித்த வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் மீது ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது 6 12 1996 அன்று நீதிபதி சிவப்பா வழங்கிய தீர்ப்பிலே "வேண்டுமென்றே அரசியலில் காழ்ப்புணர்ச்சியோடு தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாக ஜெயலலிதா தரப்பிலே கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. இந்த குற்றச்சாட்டுக்கான ஆரம்ப ஆதாரங்கள் உள்ளன. தனிமனித சுதந்திரத்தை விட கூறப்பட்ட ஊழலை கண்டுபிடிப்பது விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு முக்கியமாகும். அரசுத்தரப்பு ஆவணங்களை ஆராய்ந்தபோது இந்த வழக்குகள் உள்நோக்கத்துடன் போடப்படவில்லை என்று தோன்றுகிறது'' என்று தீர்ப்பளித்து.


மைலாப்பூர் கனரா வங்கியிலும், ஸ்ரீராம் நிதிநிறுவனத்திலும் ஜெயலலிதா பெயரில் மூன்று கோடியே 58 லட்சம் ரூபாய் இருந்தது முடக்கி வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜெயலலிதா தொடுத்த வழக்கின் மீது நீதிபதி ராமமூர்த்தி அளித்த தீர்ப்பிலே "ஜெயலலிதாவின் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. ஜெயலலிதா தனது பெயரில் வங்கியில் உள்ள பணம் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது அல்ல என்று கூறுவதை இப்போது ஏற்க முடியாது'' என்று தெரிவித்தார்.


ஜெயலலிதா மீது தனி நீதிமன்றங்கள் அமைத்து விசாரணை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை என்றும் பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் லிபரான், பத்மநாபன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பில்,


"ஜெயலலிதாவின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்
நிறுவப்பட்டிருப்பது சட்டரீதியாக முறையானதே. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. தனி நீதிமன்றங்களை அமைத்து கடந்த 30 4 97ல் வெளியிடப்பட்ட அரசின் உத்தரவு சட்டத்துக்கு முரணானதல்ல. ஊழல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் விசாரணையை நாள்தோறும் நடத்தி முடிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. அதைவிட இவ்வழக்குகளில் பூர்வாங்க ஆதாரங்கள் காணப்படுவதால் விசாரணையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்''.


அரசு அலுவலர்களை டிஸ்மிஸ் செய்ததை ரத்து செய்யக்கோரியும், கைது செய்யப்பட்ட அரசு அலுவலர்களை விடுவிக்கக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 7 2003 அன்று நீதிபதி பி.டி.தினகரன் வழங்கிய தீர்ப்பு வருமாறு:


"இந்த பிரச்சினையில் அரசு நல்ல முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தேன். அரசு எந்த முடிவும் அறிவிக்கவில்லை. மேலும் இதில் காலதாமதப்படுத்தியது. அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசு அதைக்கூட செய்ய தவறிவிட்டது. அரசு அலுவலர்கள் தானாக முன்வந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். எனவே அதை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கிறேன். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அரசு இதில் காலதாமதப்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது. வேதனை அளிக்கிறது. நியாயமான விசாரணையே இல்லாமல் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வது தவறானது, சட்ட விரோதமானது. அனைத்து அரசு ஊழியர்களையும் விடுதலை செய்கிறேன். எஸ்மா சட்டம் பிரிவு 4, 5ன் கீழ் கைதான அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். போலீஸ் டி.ஜி.பி. இதை உடனே அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களை சஸ்பெண்டு, டிஸ்மிஸ் செய்த அனைத்து உத்தரவுகளையும் நிறுத்தி வைக்கிறேன். அனைவரும் உடனடியாக வேலைக்குப் போக வேண்டும். புதிய ஆட்களை பணியில் நியமிக்கக்கூடாது. அரசு இதில் நல்ல முடிவெடுக்க அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.''


இந்த தீர்ப்புக்குப்பிறகு அரசு வழக்கறிஞர் இந்த உத்தரவை இரண்டு நாளைக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியபோது, நீதிபதி "இதை ஏற்க முடியாது, நள்ளிரவில் எதையும் செய்யாதவர்களை தூக்கத்தில் தட்டியெழுப்பி கைது செய்துள்ளதுபோல இன்று நள்ளிரவு விடுதலை செய்யுங்கள்'' என்றார்.


உயர்நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பளித்ததும், ஜெயலலிதா அரசு அதனையேற்காமல், இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்திற்கே சென்று மேல்முறையீடு செய்து, அன்றையதினம் மாலையில் உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெற்றது. அந்த அளவிற்கு அரசு அலுவலர்களிடம் விரோதம் பாராட்டியவர்தான் ஜெயலலிதா.


2003 ம் ஆண்டு தமிழக அரசின் பணிநீக்க அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் நளினி சிதம்பரம், பொதுநல வழக்கு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, ஏ.ஆர்.லெட்சுமணன் ஆகியோர் கூறும்போது, வன்முறையில் ஈடுபடாத அரசு அலுவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வரவேண்டுமென்று காத்திருக்காமல், தமிழக அரசே பெருந்தன்மையாக ஊழியர்களை பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். வேலைநிறுத்த போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 2200 ஊழியர்களைத்தவிர மீதமுள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை மீண்டும் பணியிலே சேர்த்திட வேண்டுமென்று கூறியதோடு, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி 24 7 2003 அன்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று கூறியது. ஆனால் ஜெயலலிதா அரசு நீதிமன்ற பரிந்துரைக்கு பின்பும், எப்படியாவது பணியில் சேர்க்காமல் தவிர்ப்பதிலேயே கவனம் செலுத்தியது. எனவே 24 ம் தேதிய விசாரணையின்போது, உச்சநீதிமன்ற பரிந்துரைக்கு மாற்று கருத்தை தெரிவிக்க விரும்புவதாக தமிழக அரசின் சார்பில் தெரிவித்தார்கள். அதற்கு நீதிபதிகள் அரசு ஊழியர்களின் நலன்தான் உச்சநீதிமன்றத்துக்கு முக்கியம், மாற்றுக்கருத்தை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.


இவ்வளவும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும், அவருடைய அரசுக்கும் பல நீதியரசர்கள் கொடுத்த சான்றிதழ்கள். இதற்கெல்லாம் ஜெயலலிதா தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்திருந்தால், தற்போது அவர் மத்திய அமைச்சர் ராசாவை பதவி விலக வேண்டுமென்று கேட்க தகுதி படைத்தவர் என்று கூறலாம். அப்படி இல்லாத நேரத்தில் அவர் எந்த முகத்தோடு மற்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுகிறார் என்றுதான் கேட்கத்தோன்றுகிறது!


No comments:

Post a Comment