கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 19, 2010

கலைஞர் குமுதம் இதழுக்கு அளித்துள்ள பேட்டி


23.6.2010 நாளிட்ட அவ்விதழுக்கு முதல்வர் அளித்தபேட்டி வருமாறு:

செய்தியாளர்: -இதுவரை எத்தனையோ பேர் உங்களை சந்தித்துள்ளார்கள். வெகுகாலமாக நீங்கள் சந்திக்க விரும்பும் நபர்?

முதல்வர் கலைஞர் : இரவலாக இதயத்தைத் தந்திடு என ஒருவரிடம் கேட்டுப் பெற்றிருக்கிறேனே; அதைத் திருப்பித் தரத்தான் அவரைத் தேடிக் கொண்டிருக் கிறேன்!

செய்தியாளர்: இளமைப் பருவத்தில் கல்லூரிக்குச் சென்று படிக்கவில்லையே என்ற வருத்தம் உண்டா?

கலைஞர் : உண்டு உலகத்தையே புத்தகமாகப் படிக்கும் வாய்ப்பைப் பெற்று; அந்த வருத்தத்தைப் போக்கிக் கொண்டுள்ளேன்.

செய்தியாளர்:- வாலி - வைரமுத்து ஒப்பிடவும்?

கலைஞர் : வாலியின் கவிதை; பட்டத்து யானையின் பவனி. வைரமுத்துவின் கவிதை; பஞ்ச கல்யாணிக் குதிரையின் கம்பீரம்!

செய்தியாளர்:- கிரிக்கெட்டில் நீங்கள் 20/20 ரசிகரா அல்லது கிரிக்கெட்டை அனுபவித்து ஆடவேண்டும் என்று நினைக்கிற டெஸ்ட் மேட்ச் ரசிகரா?

கலைஞர் : மேட்ச் இல்லாமல் அனுபவிக்கவும் முடி யாது - ஆடவும் முடியாதே!

செய்தியாளர்:- அண்மையில் உங்கள் குடும்பத்து வரவுகளான இரட்டையர்களுக்கு என்ன பெயர்கள் வைத்தீர்கள்?

கலைஞர் : நலன் என்றும் நிலா என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள் - வாழ்த்தும் வாய்ப்பை எனக்கும் வழங்கியுள்ளார்கள். வாழ்க நலன்; வாழ்க நிலா!

செய்தியாளர்:- சமீபத்திய மகிழ்ச்சி?

கலைஞர் : பிறப்பொக்கும் என்ற பாடலை எழுதி - அதன் சிறப்பொக்கத் தம்பி ஏ.ஆர்.ரகு மான் இசை யமைத்துக் கேட்டதுதான் சமீபத்திய மகிழ்ச்சியாகும்.

செய்தியாளர்:- நிறைவேறாத கனவு ஒன்று?

கலைஞர் : தமிழ் ஈழம்!

செய்தியாளர்:வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி யாக வரும்போது வயதாகி விட்டதே என்று எப்போ தாவது கவலைப் பட்டதுண்டா?

கலைஞர் : கர்வம் கொண்டதுமில்லை; அதனால்; கவலை கொண்டதுமில்லை!

செய்தியாளர்:சமீபத்தில் நீங்கள் வாய்விட்டுச் சிரித்த ஜோக்?

கலைஞர் : வாயை விட்டு விட்டால்; பிறகு எப்படி சிரிக்க முடியும்?

செய்தியாளர்:- சின்ன வயதில் உங்களுக்குக் கோபம் சுர் என்று வருமாமே?

கலைஞர் : சுயமரியாதைப் பாலருந்தி வளர்ந்ததால் அவமரியாதையைப் பொறுத்துக் கொண்டதில்லை.

செய்தியாளர்:- திருக்குவளையில் நீங்கள் மறக்க முடியாத இரு நண்பர்கள்?

கலைஞர் : இருவரைச் சொன்னால் இருநூறு பேருக் குக் கோபம் வருமே!

செய்தியாளர்: இளம் வயதில் உங்கள் அப்பா உங்களை அடித்திருக்கிறாரா? எதற்காக?

கலைஞர் :- அடித்து வளர்க்கப்பட்ட பிள்ளைதான், அப்பாவினால் அல்ல! என் அம்மாவினால்!

செய்தியாளர்: திருவாரூர் தெப்பக் குளத்தில் நீச்சலடித்த துண்டா?

கலைஞர் : உண்டு; அதைப்பற்றி நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறேனே!

செய்தியாளர்: கோபாலபுரம் வீட்டை தானம் செய்ய வேண்டும் என்ற முடிவு, நீண்ட நாள் யோசனைக்குப் பின் வந்ததா... திடீர் முடிவா?

கலைஞர் : என் உற்றார், உறவினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் - என் வழியில் எளிமையாக நடக்க வேண்டுமென்பதற்காக நான் சிந்தித்து எடுத்த முடிவு அது!

செய்தியாளர்: நீங்கள் ரொம்ப காலமாகப் பாதுகாத்து வரும் அண்ணா தந்த பரிசுப் பொருள்?

கலைஞர் : கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் அவர் அணிவித்த கணையாழி!

செய்தியாளர்:- நான்கைந்து படத்தில் ஹீரோவாக நடித்தவுடனேயே அடுத்த முதல்வர் என்று கனவு காணும் இன்றைய சில நடிகர்கள் பற்றி...?

கலைஞர் : ஜனநாயகத்தில் நடிகர்களுக்கும் நாடாளும் வாய்ப்பு உண்டு. ஆனால் வாய்ப்பு மட்டும் போதாது; வாய்மையும் வேண்டும்.

செய்தியாளர்:- நல்ல தமிழைத் தேட வேண்டிய இந்தக் கால சினிமா பாடல்கள் பற்றி...

கலைஞர் : தங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக் கிறது!

செய்தியாளர்: இளம் வயதில் நீங்கள் எழுதிய சிறு கதைகளைப் படிக்கிறபோது வேறு மாதிரியாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியதுண்டா?

கலைஞர் : ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பற்றி அப்படி நினைக்க முடியுமா?

செய்தியாளர்:-திரை இசையில் நீங்கள் மெலடி ரசிகரா அல்லது விறுவிறுப்பான பாட்டுகளை விரும்புவீர்களா?

கலைஞர் : இசையமைப்பு - பாட்டின் பொருள் - இவைகள் நேர்த்தியாக இருந்தால், இரண்டையும் விரும்புவேன்.

செய்தியாளர்: கடைசியாக எப்போது மனமுடைந்து அழுதீர்கள்?

கலைஞர் :-அண்ணாவும், அன்புக் கண்மணி மாறனும்,- அய்யா பெரியாரும் மறைந்தபோது!

செய்தியாளர்: ஜெயலலிதாவின் அணுகு முறையில் இன்று வரை உங்களுக்குப் புரியாதது எது?

கலைஞர் :- உங்களுக்குப் புரிந்ததுதான்!

செய்தியாளர்: சங்கத் தமிழ் - குஷ்பு தமிழ் ஒப்பிடவும்!

கலைஞர் : நல்லவேளை; குமுதம் தமிழையும் குறிப் பிடாமல் விட்டு விட்டீர்களே?

செய்தியாளர்:- இன்னமும் இங்கே ஜாதியமும், மூடநம்பிக்கைகளும் ஒழிய வில்லையே?

கலைஞர் : ஆதிக்கம் செலுத்தும் ஆணவமும் அதற்குப் பணிந்து கிடக்கும் அடிமைத்தனமும் இருக் கும் வரையில் எப்படி அவை ஒழிய முடியும்?

செய்தியாளர்:- உங்களுக்குப் பிடித்த உணவு?

கலைஞர் : தயிர் சாதம்.

செய்தியாளர்:- இன்றைய இளம் ஹீரோக்களில் உங்களைக் கவர்ந்தவர்?

கலைஞர் : சிவாஜிக்குப் பிறகு இன்னும் பிறக்கவில்லை!

செய்தியாளர்: நீங்கள் வடிவேலு காமெடியை மிகவும் ரசிப்பீர்களாமே?

கலைஞர் : காமெடி என்றாலே ரசித்துத் தானே ஆக வேண்டும்.

செய்தியாளர்: ஸ்டாலின், அழகிரி முரண்டு பிடிக்கும் போது யாரை சமாளிப்பது சுலபம்?

கலைஞர் : என்னிடம் இருவருமே முரண்டு பிடிப்பதில்லை.

செய்தியாளர்: எத்தனையோ படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறீர்கள். அவற்றில் உங்களால் மறக்க முடியாத ஒன்று?

கலைஞர் : மனசாட்சி உறங்கும்போது தானே மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது என்ற பூம்புகார் படத்து வசனம்தான்!

செய்தியாளர்: உங்கள் மனதைக் கொள்ளை கொண்ட ராகம்?

கலைஞர் : தோடி ராகம் அதுவும் திருவாவடு துறையார் வாசித்தது!

செய்தியாளர்:உங்களை பிரமிக்க வைத்த பெண்மணி?

கலைஞர் : கண்ணகி - கண்ணகி - கண்ணகியேதான்!

செய்தியாளர்: இந்த நாட்டை திருத்த முடியாது என்று எப்போதும் புலம்புபவர்களை என்ன செய்யலாம்?

கலைஞர் :- மலைவாசத்துக்குத்தான் அனுப்பிப் பார்க்கவேண்டும்!

செய்தியாளர்:வெறும் எதுகை, மோனையில் விளை யாடியே காலத்தை ஓட்டும் சில கவிஞர்களைக் கவனிக் கிறீர்களா?

கலைஞர் : கவிஞர்களைக் கவனிக்கிறேன் - அவர் களின் கவிதைகளை அல்ல!

செய்தியாளர்:- சோனியாகாந்தியிடம் பிடித்தது?

கலைஞர் : அந்த நெஞ்சுறுதி!

செய்தியாளர்: கடற்கரையில் அண்ணாவுக்குக் காவ லாக கம்பன், இளங்கோ நிற்கும் காரணம்?

கலைஞர் : அண்ணாவுக்குக் காவலாக யாரும் நிற்க வில்லை; அண்ணாதான் அனைத்துத் தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் காவலாக இருக்கிறார்.

செய்தியாளர்:- அந்த 67 இந்த 87?

கலைஞர் : இடையே இருபது ஆண்டுகள்!

செய்தியாளர்: உங்கள் பிள்ளைகளும் உங்களைத் தலைவர் என அழைக்கும்போது என்னவோ போல் இருக்குமா?

கலைஞர் : கட்சித் தலைவர் என்று வந்து விட்டால் பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் தொண்டர்கள் தானே?

செய்தியாளர்: பிரசுரமான முதல் படைப்பு நினைவி லிருக்கிறதா?

கலைஞர் : கிழவன் கனவு

செய்தியாளர்:- நீங்கள் பார்த்த முதல் படம்?

கலைஞர் : பேசாத படம் - கீசகன் வதம்.

செய்தியாளர்: பிடித்த நடிகை - அப்போது? இப்போது?

கலைஞர் : அப்போது அஸ்வத்தம்மா (சிந்தாமணி) இப்போது; அங்கமுத்து (பராசக்தி).

செய்தியாளர்:- அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா?

கலைஞர் : தமிழ்த் தாயின் முகத்தில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை!

செய்தியாளர்:- நீங்கள் முதலில் முயன்று பின் நமக்கு வராத விஷயம் இது என்று ஒதுக்கிய காரியம் ஏதாவது உண்டா?

கலைஞர் : நாதசுரப் பயிற்சி - பிடிக்காமல் ஒதுங்கி விட்டேன்.

செய்தியாளர்:- நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள்கூட நாளை நான்தான் முதல்வர் என்கிறார்கள். ஆனால் 5 முறை தமிழ்நாட்டின் முதல்வர் நீங்கள், உங்களுக்குப் பிரதமராகும் கனவு வரவே இல்லையா?

கலைஞர் : என் உயரம் எனக்குத் தெரிகிறதே!


நன்றி: குமுதம் (23.6.2010)

No comments:

Post a Comment