கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, June 16, 2010

செம்மொழி மாநாட்டுக்கு ஊறு விளைவிக்க எண்ணுவோரின் கனவு நிறைவேறாது: கலைஞர்


இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழும் இருக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் திட்டவட்டமான கொள்கை. இதற்காக பல முறை கழக பொது குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.

அதுபோலவே நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கு மொழியாகவும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று தொடர்ந்து வாதாடி வந்திருக்கிறோம். அதற்காக கழக அரசு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகளை பற்றியெல்லாம் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.


நம்முடைய தமிழ்ப்பற்றை தமிழின் வளர்ச்சியை தமிழின் தாக்கத்தை தமிழுக்கு உரிய மாண்பினை தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தர வேண்டுமென்ற நமது ஆர்வத்தினை தமிழகத்திற்கு நினைவூட்ட வேண்டிய அவசியம் கிடையாது.


ஆனால், ஜுன் மாதம் 23 ம் நாள் தொடங்கி கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டிய செய்திகள் அன்றாடம் ஏடுகளில் வெளிவருவதையும், அதற்கான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறுவதையும் கண்டு மனம் பொறாத ஒரு சிலர் எதையாவது காரணமாக காட்டி அதனை செய்தியாக்கிட படாதபாடுபடுகிறார்கள். உதாரணமாக மதுரை மாநகரில் வழக்கறிஞர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்.


அந்த வழக்கறிஞர்களை அ.தி.மு.க.வினரும், ம.தி.மு.க.வினரும் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்களாம். அரசுக்கு எதிராக எங்கே, யார் குரல் கொடுத்தாலும் சரி, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த இரண்டு கட்சியினரும் புறப்பட்டுவிடுகிறார்கள். உண்மையில் அந்த வழக்கறிஞர்கள் எழுப்பியுள்ள கோரிக்கை குறித்து தமிழக கழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லையா என்பதை நான் தெளிவாக்கிட விரும்புகிறேன்.


சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அவர்களின் தமிழ் மன்றம் சார்பாக 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனுவினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த ரிட் மனுவினை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்திய அரசமைப்பு சட்டம், பிரிவு 348(2) ன் கீழ், அதிலே நீதி மன்றம் தலையிட முடியாது என்றும் கருத்துரைத்தது. ஆனால் அப்போது ஆட்சி பொறுப்பிலே இருந்த ஜெயலலிதா, இந்த பிரச்சினையிலே அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. மாறாக இப்போது இந்த பிரச்சினைக்காக மதுரையிலே வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்றதும், உடனே அதனைதூண்டி விட்டு குளிர்காயும் நிலையை மேற்கொண்டு அந்த அம்மையார் அறிக்கை விட்டுள்ளார்.

ஆனால் இந்த உண்மையை மனதிலே கொண்டு தமிழக வழக்கறிஞர்களின், மக்களின் கனவை நிறைவேற்றிடும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்துவதற்குரிய தீர்மானம் ஒன்றினை 6 12 2006 ல் கழக ஆட்சியிலே, தமிழ்நாடு சட்டப் பேரவையிலே என்னால் கொண்டு வரப்பட்டு அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


இந்த தீர்மானத்துக்கு தமிழக கவர்னரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்துவது சட்டப்படி சரியான நடவடிக்கையே என்று கவர்னர் கருதினார். அவ்வாறே சென்னை உயர்நீதிமன்றமும் கருதியது. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தரவேண்டுமென்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இதற்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்கிறேன், வாருங்கள் என்று அழைத்துவிட்டு வந்து குவிந்த கட்சிக்காரர்களின் மனுக்களை முழுவதும் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மணி நேரம் மட்டுமே பேருக்கு இருந்து விட்டு அவசர அவசரமாக கொடநாட்டுக்கு புறப்பட்டு போய் விட்ட ஜெயலலிதா உலகத் தமிழ் மாநாடு பற்றியும் புலம்பியிருக்கிறார். தனக்குத் தானே தம்பட்ட தன்னல மாநாடு என்றெல்லாம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். இது தன்னல மாநாடாம்! ஆனால் தஞ்சையிலே ஜெயலலிதா 1995 ம் ஆண்டு நடத்திய உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரால் "ஜெயலலிதா வாழ்த்துப்பா'' பாடினார்களே, அதற்கு என்ன பெயராம்? அப்படி பாடி மாநாடு நடத்தியவர்களுக்கு கோவை மாநாடு தன்னல மாநாடாகத்தான் தெரியும்!


இதுவரை நடைபெற்ற மாநாடுகளையெல்லாம் வெற்றி கொள்ளும் வகையில் உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் வருகிறார்கள் என்ற செய்தியை படித்து விட்டு உள்ளம் வெம்பி, மாநாட்டினை ஜெயலலிதா குறை கூறுகிறார். கொடநாடு சென்ற போதிலும் அன்றாடம் விடுக்கும் அறிக்கைகளிலே என்னை பற்றியே எழுதிக்குவிக்கிறார். அங்கிருந்து முன்னணியினர் பலர் கழகத்திலே வந்து இணைவதையும், அதிலே பல்லாயிரக்கணக்கானவர்கள் அறிவாலயமே கொள்ளாத அளவுக்கு வருவதையும் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.கழகத்திலிருந்து அ.தி.மு.க.வுக்கு வரப் போகிறார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, எஞ்சிய அ.தி.மு.க.வினர் இங்கே வந்து விடாமல் பார்த்துக்கொள்ள முயலுகிறார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதிகளுக்கு 32 கோடி ரூபாயை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க. அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் பெறப்படவில்லை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எ.பி.ஷா, 29 11 2006 தேதியிட்ட கடிதத்தில் இந்த பிரச்சினை குறித்து எனக்கு ஒரு கடிதம் எழுதிய போது ஐந்தே நாட்களில் 4 12 2006 அன்று அவருக்கு எழுதிய பதிலை இந்த நேரத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். (அந்த கடிதத்தில், உயர்நீதிமன்ற நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையினை, அடிப்படை கொள்கை அளவில் தாங்களும், ஏனைய உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ஏற்றமைக்கு நன்றி. இப்பணிக்காக, கூடுதல் மொழிபெயர்ப்பாளர்கள், சுருக்கெழுத்தாளர்கள் நியமிக்கப்படவேண்டும், தமிழ் சட்ட புத்தகங்களை அதிகரிக்க வேண்டும், நூலகங்களில் அவை தடையின்றி கிடைக்கச்செய்ய வேண்டும், தமிழ் சட்ட புத்தகங்களை கொண்ட தனி நூலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டமைப்புப் பணிகளை செய்ய வேண்டியிருப்பதை உணர்கிறேன். மேற்கண்ட வசதிகளை விரைவாக செய்து தர தமிழக அரசு அர்ப்பணிப்போடு செயல்படும் என்பைத தெரிவித்துக் கொள்கிறேன்'' என்ற குறிப்பிடப்பட்டிருந்தது)


மீண்டும் 21.2.2007 தேதியிட்ட கடிதத்தில் உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் ரூ.22 கோடி செலவில் (ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருப்பது போல 32 கோடி ரூபாய் அல்ல) கட்டமைப்புகளை உருவாக்க கருத்துரு அனுப்பி, கட்டடம் கட்டுவதற்கான மதிப்பீடுகளை உயர்நீதி மன்றம் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டு பதில் கடிதம் தமிழக அரசினால் எழுதப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா தனது அறிக்கையில் எந்தவிதமான பதிலும் அனுப்பவில்லை என்று கூறியிருப்பது எப்போதும் போலவே உண்மைக்கு மாறானது. நான் எழுதிய இந்த கடிதத்திலிருந்து தமிழக அரசு இந்தப் பிரச்சினையிலே எவ்வளவு அக்கறையோடு இருந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம்.


தி.மு.க.வுக்கும், தமிழுக்கும் உள்ள உறவைப்பற்றி ஜெயலலிதா சான்று கூறத்தேவையில்லை. தமிழுக்காக 1965 ல் திருச்சி மாவட்டத்தில் கீழப்பழூர் சிங்கத்தமிழன் சின்னச்சாமி, சென்னையில் விருகம்பாக்கம் சிவலிங்கம், அரங்கநாதன், திருச்சி அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை மாணவன் சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், கோவை பீளமேடு தண்டபாணி என்று தங்கள் உயிரைத்தியாகம் செய்த மறவர்களின் கூடாரம் தான் தி.மு.க. 1965 க்கு முன்பே 1963 ல் அறிஞர் அண்ணா தமிழுக்காக போராட்டம் நடத்தி, அரசியல் சட்டத்தைக் கொளுத்த முற்பட்டு சிறைக்கு சென்றவர். 1965 ம் ஆண்டு போராட்டத்தில், என்னை கைது செய்து சென்னையிலிருந்து நெல்லை வரையிலே போலீஸ் லாரியிலே இழுத்துச்சென்று பாளையங்கோட்டை தனிமைச் சிறையிலே அடைத்தார்கள்.


மொழிப்பிரச்சினையிலே தி.மு.க. எந்த காலத்திலும் யாருக்கும் விட்டுக்கொடுத்தது அல்ல. மொழிக்காக தியாகம் செய்தவர்களில் தி.மு.க.வினரை மிஞ்சக்கூடியவர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை.


மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், நான் உடனடியாக மதுரையிலே இருந்த மத்திய மந்திரி மு.க.அழகிரியை தொடர்பு கொண்டு விவரம் கூறி அதைப்பற்றி உடனடியாக கவனிக்க வேண்டுமென்று கூறினேன். தம்பி அழகிரியை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏ.கே.ராமசாமி, வெள்ளைச்சாமி ஆகியோர் சந்தித்து நிலைமைகளை விளக்கியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மத்திய மந்திரி அழகிரி உடனடியாக மத்திய அரசின் சட்டத்துறை மந்திரி வீரப்ப மொய்லியை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு இதைப்பற்றி பேசியிருக்கிறார். மத்திய மந்திரியும் விரைவில் இதுபற்றி கவனித்து ஆவன செய்வதாக உறுதியளித்திருக்கிறார். அந்த விவரங்களை எல்லாம் மதுரை வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளிடம் அழகிரி விளக்கியபோது, அவர்களும் அதனையேற்று சென்றிருக்கிறார்கள்.


இதிலிருந்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றத்திலே தமிழும் இடம் பெற வேண்டும் என்பதிலே உள்ள ஆர்வத்தையும், பொறுப்பையும், அக்கறையையும் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும், ஜெயலலிதாவும், அவருக்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருப்போரும் உண்மைகளை மறைத்து, கலவரத்தை தூண்டி விட எண்ணுகிறார்கள். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு ஒரு சிலரை தூண்டி விட்டு, அதனைப் பெரிதுபடுத்தி, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு ஊறுவிளைவிக்க எண்ணுவோரின் கனவு நிறைவேறாது என்பது மட்டும் திண்ணம்.

குத்திக்கொள்வோரை பற்றி கவலைப்படாமல்; வந்திடுக மாநாட்டுக்கு; தந்திடுக தமிழுக்கு, தமிழர் ஆட்சிக்கு என்றும் குறையாத வலிமை! வாய்மைதான் வெல்லும் என்பதை வஞ்சகர்க்கு உணர்த்திட வரிப்புலியே வருக!

No comments:

Post a Comment