முதல்வர் கருணாநிதி தமிழில் எழுதிய 12 புத்தகங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. புத்தகங்களை வெளியிட்டு துணை ஜனாதிபதி அமீது அன்சாரி வெளியிட்டு பேசியதாவது:
கருணாநிதியின் எழுத்துக்கள், பெரியார், அண்ணாவின் அரசியல் பாரம்பரியத்தையும், பாரதியாரின் இலக்கிய பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன. முறையான கல்லூரி கல்வியை அவர் முடிக்காவிட்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்வதில் அவருக்கு எந்த தடையும் இருந்ததில்லை. இதழியல், சினிமா, நாடகம் மற்றும் பேச்சாற்றல் ஆகியவற்றை அவர் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்காக வெற்றிகரமாக பயன்படுத்தியவர் இவர்.
நம்முடைய பழைய கதைகளை நமக்குள்ளாகவே கூறிக்கொள்வதில் எந்த வெற்றியும் கிடையாது. நம்முடைய கவிதைகளுக்கு வெளிநாடுகளில் மதிப்பு கிடைக்கும் போதுதான் அவை உண்மையாகவே புகழ்வாய்ந்தவையாக அமையும்' என்று மகாகவி பாரதியார் கூறியுள்ளார்.
இது தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளில் உள்ள கவிதைகளுக்கும், கதைகளுக்கும் பொருந்தும். நம்முடைய இலக்கியங்களையும், கவிதைகளையும், படைப்புகளையும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யாவிட்டால், நம்முடைய இலக்கிய செழுமையும், சிறப்பும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தெரியாமல் போய்விடும்.
நாடக இலக்கியத்திற்கு தன்னுடைய பங்களிப்பின் மூலம் இலக்கிய ஜாம்பவானாக முதல் அமைச்சர் கருணாநிதி உயர்ந்தார். அவருடைய அந்த நாடக இலக்கியம் முதலில் சினிமா தயாரிப்புகளுக்காக எழுதப்பட்டவையாகும். அவை பெரும் புகழ் பெற்று முத்திரை பதித்த படங்களாக வெளிவந்து, சமூக தீமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தாக எதிரொலித்தன.
கருணாநிதியின் உரைநடையிலும்கூட கவித்துவம் காணப்படுகிறது. அவருடைய கவிதைகளில் தமிழ் மொழியில் அவருக்குள்ள ஆளுமை வெளிப்படுகிறது. கருணாநிதியின் மொழி மற்றும் இலக்கிய கொள்கைகள் அவருடைய தொல்காப்பிய பூங்காவில் காணப்படுகின்றன. தொல்காப்பியத்தில் உள்ள ஒரு பாடல் குறித்து உரை எழுதிய கருணாநிதி ஏழ்மையை பற்றி கூறியுள்ள காட்சி என்னுள்ளத்தை வெகுவாக தொட்டது.
இன்று வெளியிடப்பட்ட மொழி பெயர்ப்புகளில் கருணாநிதியின் கட்டுரைகள் மற்றும் பேச்சுகளும் அடங்கும். அண்ணா, பெரியார் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை. அவர் தன்னுடைய கட்டுரையை, வாய்மையே தெய்வம்' என்ற மகாத்மா காந்தி தெரிவித்தார்; ஏழையின் சிரிப்பில் இறைவனை காணவேண்டும்' என்றார் அண்ணா; பிரதிபலனை எதிர்பார்க்காமல் நம்முடைய கடமையை செய்யவேண்டும்' என்றார் பெரியார்; கடின உழைப்பால்தான் வெற்றி கிடைக்கும்' என்று காமராஜர் தெரிவித்தார்'' என்ற நான்கு பெரும் தலைவர்களின் சிறந்த வார்த்தைகளை கொண்டு மிகப் பொருத்தமாக நிறைவு செய்துள்ளார். நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், இன்னும் பல ஆண்டுகள் கருணாநிதி தொண்டாற்ற வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment