கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, June 28, 2010

"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" சிறப்புக் கருத்தரங்கில் கி.வீரமணி உரை


கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நெருக்கடியான காலம்

நெருக்கடி காலத்தைச் சந்தித்திருக்கின்றோம். ஆனால் இப்பொழுது காலத்தின் நெருக்கடியைச் சந்திக்கின்ற வேளையில் நான் உங்கள் முன்னாலே நிற்கின்றேன்.

மக்கள் கடல்

இவ்வளவு பெரிய மக்கள் கடலைக் கூட்டி தமிழர்களின் உணர்வு எப்படிப்பட்டது என்பதற்கு அடையாளமாக ஈரோட்டுக் குருகுலப் பயிற்சியையும், காஞ்சிக் கருவூலத்தினுடைய சிறப்பான பாடங்களையும் உள்ளடக்கி இது வருமா? வராதா? என்று பல பேர் நினைத்த அந்த எண்ணங்களை எல்லாம் மாற்றி மிகப்பெரிய அளவிலே தமிழ் செம்மொழி என்பது கனவல்ல அது பெரும் திட்டம், இதோ வந்துவிட்டது என்பதைக் காட்டி, செம்-மொழியால் உயர்வு பெற்ற தமிழர்கள் நன்றி உணர்ச்சிக்காகக் குழுமியிருக்கின்ற மாநாடு இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகும். முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூட்டியிருக்கிறார்.

அத்தகைய பெருமைக்குரிய முதல்வர் கலைஞர் அவர்களே! இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு பல அறிவார்ந்த கருத்துகளை எடுத்து வைத்திருக்கின்ற அருமைத் தலைவர் பெருமக்களே!

தமிழ் இனத்தின் மீட்சிக்கான மாநாடு எதிரே இருக்கக் கூடிய ஆற்றல்மிகு இந்த மாநாட்டின் வெற்றிக்கு அடித்தளமாக அமர்ந்திருக்கக் கூடிய அறிஞர் பெருமக்களே! பல பேரை உருவகப்படுத்துவதற்குப் பதிலாக ஒருவரைச் சொன்னால் போதும் என்கிற வகையிலே_ஆற்றல் வாய்ந்த துணை முதலமைச்சர் அவர்களே!

நம்முடைய இனமானப் பேராசிரியர் உள்பட அனைத்து அமைச்சர் பெருமக்களே! வெளிநாடுகளி-லிருந்து வந்து கூடியிருக்கின்ற உலகத்தின் தமிழ் உறவுகளே! தாய்மார்களே! பெரியோர்களே! நண்-பர்களே! உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.

காலத்தால், கருத்தால், வளத்தால் மூத்த-மொழி-யான முத்தமிழ் என்ற முத்திரை பதித்த எம்மொழி செம்மொழி என்று பிரகடனப்படுத்தக் காரணமான, அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும், அதேபோல அந்த அறிஞர் பெருமக்களுடைய சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக்கி இப்பொழுது நடைமுறையிலே சட்டபூர்வமாக அதனை அறிவிக்க முயற்சி எடுத்ததோடு இல்லாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு நல்ல தலைப்பில் இங்கே சிறப்புக் கருத்தரங்கத்தை உருவாக்கி, இந்த மாநாடு கூடிக் கலைகின்ற மாநாடு அல்ல; அல்லது காட்சிக்காக இருக்கின்ற மாநாடு அல்ல. தமிழ் இனத்தின் மீட்சிக்காக இருக்கின்ற மாநாடு என்பதை உறுதி செய்யக் கூடிய அளவிலே_நல்ல திட்டத்தை உருவாக்கி_தமிழ் மொழியைப் பொறுத்த வரையிலே எப்படி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கும் தமிழ்_எதிலும் தமிழ் என்ற அடுத்த கொள்கைத் திட்டத்தை_அடுத்த இலக்கை நாம் எப்படி அடைவது என்பதை ஆய்வு செய்வதற்காக இங்கே அருமையாக கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, தமிழர்கள் ஒன்றாக வேண்டும் என்ற எண்ணத்தோடு கூடியிருக்கின்றோம்.

திராவிடர்களுடைய அடையாளம்

திராவிடர்களுடைய அடையாளம்_திராவிடம் என்பது எவ்வளவு பெரிய எழுச்சியை உருவாக்கி-யிருக்கிறது என்பதைக் காட்டுகின்ற வகையிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் தாய்த் திருநாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்து அதிலே எப்படி ஓர் எழுச்சியை உருவாக்கினார்களோ, அதே போலத்தான் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழி என்ற சிறப்பினை மிகத் தெளிவாக இங்கே உருவாக்கியிருக்கின்றார்கள்.

நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையிலே இது வெறும் செம்மொழி மாநாடு என்றால் மொழியி-னுடைய சிறப்புகள், ஆற்றல்கள், திறமைகள் இவற்றை எல்லாம் மட்டும் எடுத்துச் சொல்லுகின்ற மாநாடு அல்ல. இது மீட்சிக்குரிய மாநாடு.

நூறு ஆண்டுக்கு முன்னால் என்ன நிலை?

அருமை நண்பர்களே! ஒரு நூறாண்டுகளுக்கு முன்னாலே நீதிக்கட்சி, அதே போல திராவிடர் இயக்கம்_சுயமரியாதை இயக்கம் இந்த நாட்டிலே பிறப்பதற்கு முன்னால் அதனுடைய பணிகள் தந்தை பெரியார் அவர்களாலே, பேரறிஞர் அண்ணா அவர்களாலே, இன்றைய முதல்வர் அவர்கள் தன்னுடைய இளமைக் காலத்திலே தமிழ்க்கொடியை ஏந்தினார்களே, அந்தக் காலகட்டத்திலே எல்லாம் இருந்த சூழ்நிலை என்ன?

இன்றைக்கு செம்மொழி என்று பாராட்டக் கூடிய அளவிற்கு உலகம் ஒப்புக்கொள்ளக் கூடிய அளவிற்கு ஏற்கெனவே அதற்கு அந்தத் தகுதி இருந்தாலும் கூட, இன்றைக்கு பெருமையாக அது அதிகார பூர்வமான தகுதியைப் பெறக்கூடிய அளவிலே இருக்கக் கூடிய எம்மொழி_தமிழ் மொழி_மூத்த மொழி. காலத்தால் மூத்தது; கருத்தால் மூத்தது; வளத்தால் மூத்தது என்ற பெருமை எல்லாம் இருந்தாலும் இந்த மொழிக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலே என்ன பெயர்?

நீச்ச பாஷை

நீச்ச பாஷை கோயிலுக்குள்ளே அனுமதிக்கப்-படாத ஒரு மொழி. சாதாரணமாக கீழ் ஜாதிக்-காரர்கள் பேசக் கூடிய ஒரு மொழி. அதுமட்டுமல்ல; இது சூத்திர மக்களுடைய மொழி என்றெல்லாம் ஜாதியை அடையாளப்படுத்தி அந்த வகையிலே கீழ்மைப்படுத்தப்பட்ட மொழி_இன்றைக்கு எல்லோராலும் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்துள்ளது. இனிமேல் யாரும், எந்தக் கொம்பனும் இந்தத் தமிழ் மொழியை நீச்ச மொழி என்று சொல்ல முடியாது; சூத்திர மொழி என்று சொல்ல முடியாது. செம்மொழி என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும் என்ற அடித்தளத்தை உருவாக்கிய கலைஞர் அவர்களே! உங்களுக்குத் தமிழ் இனத்தின் சார்பாக எங்கள் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்-கொள்கின்றோம்.

மொழி காலத்திற்கேற்ப மாற வேண்டும்

இது வரையிலே இனத்தின் மரியாதை குறைந்திருந்தது. ஒரு மொழி என்று சொல்லும்-பொழுது அந்த மொழிக்கு இருக்கின்ற சிறப்பு என்னவென்று சொன்னால், அதனுடைய ஆற்றல் மட்டுமல்ல. தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி ஒன்றைச் சொல்லுவார்கள்: மொழி என்பது ஒரு போராட்டக்கருவி. அந்தப் போராட்டக் கருவி என்பது காலத்திற்குக் காலம் மாற வேண்டும். உங்களுடைய அற்புதமான கருத்துகளை ஆய்வரங்கத்திலே மிகத் தெளிவாகச் சொன்னீர்கள். அதைத்தான் இந்த மாநாட்டின் முத்தாய்ப்பாக எங்களைப் போன்றவர்கள் எடுத்துக்கொள்கிறோம். என்ன?

தமிழை 21ஆம் நூற்றாண்டிற்கு தயார் செய்யுங்கள்!

இருபத்தோராம் நூற்றாண்டிற்குத் தமிழை தயார் செய்யுங்கள். இதுதான் முக்கியமானது. அந்த ஆய்வரங்கத்திலே சொன்ன கருத்துகளோடு உலக அறிஞர்கள் சொன்ன கருத்துகள். தமிழ் நாட்டு அறிஞர்கள் சொன்ன கருத்துகள்_ எடுத்து வைத்த சிந்தனைகள்_இவைகளை எல்லாம் மய்யப்படுத்தி நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, ஒன்றை துணிந்தே சொன்னீர்கள். நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும் கூட நீங்கள் இந்த மாநாட்டை நடத்தக் கூடியவராக இருந்தாலும்கூட, நீங்கள் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்தாலும்கூட, என்ன சொன்னீர்கள்?

எங்களுக்கு ஆணையிடுங்கள்

ஆய்வரங்கத்திலே நீங்கள் சொன்னீர்கள், புலவர் பெருமக்களே, ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெரு-மக்களே, ஆணையிடுங்கள்! எங்களுக்கு ஆணை-யிட்டுக் கருத்துகளைச் சொல்லுங்கள்! என்று சொன்-னீர்கள். அதைச் செய்வதற்கு நாங்கள் இருக்-கின்றோம் என்று சொன்னீர்கள்.எனவே அப்படிப்பட்ட கருத்துகளை ஆணை-களாக எடுத்துக்கொண்டு மிகப்பெரிய அளவிலே எடுத்துக்கொண்டு செய்ய வேண்டிய காலகட்டம் இன்றைக்கு நம்முடைய நாட்டிலே இருக்கின்றது.

பெருமைப்படுவதா? துன்பப்படுவதா?

இது ஒரு வேதனையான அம்சம்தான். நாம் தமிழ்நாட்டிலே வாழுகின்றோம். தமிழ் மக்கள் வாழுகின்றோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று உத்தரவு போடுங்கள், ஆணையிடுங்கள் என்றெல்லாம் நாம் சொல்ல வேண்டிய நிலையிலே இருக்கின்-றோமே, அதை நினைத்துப் பெருமைப்படுவதா? அல்லது துன்பப்படுவதா? துயரப்படுவதா? இதைத் தான் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவேதான் செம்மொழி மாநாடு என்று சொன்னால் அது வெறும் மொழிப்பெருமையைச் சொல்லுவது அல்ல. மீட்சி வரவேண்டும் என்று சொல்லுவதுதான் முக்கியம்.

மணக்க வரும் தென்றலிலே

குளிரா இல்லை?

தோப்பிலே நிழலா இல்லை?

தனிப்பெரிதாந் துன்பமிது

தமிழ்நாட்டின் தெருக்களிலே

தமிழ்தான் இல்லை

இதுதான் மிக முக்கியம்.

தமிழர்களை அடையாளம் காண வேண்டுமா?

நான் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கும்பொழுது பார்த்திருக்கின்றேன். தமிழ்நாட்டிலே இருந்து, வங்காளத்திலே இருந்து, ஆந்திராவிலே இருந்து, கேரளத்திலே இருந்து, கன்னடத்திலே இருந்து, ஏனென்றால் ஒருவர் இன்னொருவரிடம் பேசும்-பொழுது அந்த மொழியிலேதான் பேசுவார்கள்.

ஆனால் உலகத்திலே தமிழர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும் என்று சொன்னால், ரொம்ப சுருக்கமான வழி ஒன்று உண்டு என்ன-வென்று சொன்னால் இரண்டு பேர் ஆங்கிலத்திலேயே பேசினால் அவர்கள் தமிழர்கள், அவர்கள் தமிழ்-நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது வெட்கப்பட வேண்டியதா? அல்லது மகிழ்ச்சியூட்டக் கூடியதா? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே ஆழமாகச் சிந்திக்கின்ற நேரத்திலே மிக வேகமான சிந்தனை நமக்கு வரவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு

எதற்கும் நோய் நாடி, நோய் முதல் நாட வேண்டும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொல்ல வேண்டிய அளவிற்கு வந்தது? அருள் கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு அந்தப் படையெடுப்பின் காரணமாகத்-தான் தமிழ் வீழ்ந்தது. ஏனென்றால் சோழன் காலத்தில் தமிழ் இல்லையா? சேரன் காலத்திலே தமிழ் இல்லையா? பாண்டியன் காலத்தில் தமிழ் இல்லையா? அவர்கள் காலத்தில் தமிழ் இருந்தது. பண்பாட்டுப் படையெடுப்பு உள்ளே நுழைந்த காரணத்தால், நுழையக் கூடாதது., நுழைந்தால் நடக்கக் கூடாதது நடந்தது.

முட்டுக்கட்டைகள்

எனவேதான் செம்மொழி எம்மொழி, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்கமிட்டால் போதாது. தமிழ் இருக்கின்றது. அந்தத் தமிழுக்கு எங்கெல்லாம் முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் நீக்கினாலொழிய வேறு வழி கிடையாது. வரலாறுகள் திரிபுவாதத்திற்கு ஆளாகக் கூடாது. நம்முடைய கருவிகள் அற்புதமான இசைக்கருவிகள்தான். ஆனால் வரலாறு என்ன?

தீட்டாயிடுத்து என்று எழுதியவர்தான்

தமிழ் பாடிய மேடை தீட்டாயிடுத்து என்று சொல்லும்பொழுது தீட்டாயிடுத்து என்று எழுதிய கலைஞர் அவர்கள்தான் இன்றைக்கு செம்மொழியைக் கொண்டு வந்திருக்கின்றார். அதுதான் இந்த இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்தக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி. அதுதான் இந்த லட்சியத்தின் வெற்றி. இப்படி வெற்றிகளுக்கு மேல் வெற்றி வந்தால் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் வரும். ஏனென்றால் தடையாக உள்ள முட்டுக்கட்டைகள் நீக்கப்பட வேண்டும். இன்னமும் கூட என்ன சொல்லுகிறார்கள்? கருநாடக சங்கீதம்_அதுதான் சங்கீதம் என்று தமிழ் இசைக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் யார் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்? படித்தவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பேராசிரியர் பெருமக்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? பொதுவாகச் சொல்லுவார்கள்.

தமிழிசை வளர்த்த மும்மூர்த்திகள்

தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் இவர்கள் தான் ஆதி மும்மூர்த்திகள் என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மை வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்தது. முத்துத்-தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை முன்னோடிகளின் வரலாறு வந்திருக்கிறதா? வரலாறு மறைந்தி-ருக்கிறதா? செம்மொழிச் சிறப்பு என்று சொன்னால் மட்டும் போதாது. இந்தப் புதை பொருள்களை மீண்டும் நாம் மீட்டெடுத்துப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

தமிழன் உள்ளே புக வேண்டும்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்று ஆக்கினீர்கள். தமிழ் உள்ளே புகுந்தது. ஆனால் தமிழன் இன்னும் உள்ளே புகவில்லை. என்னுடைய அருமை நண்பர் பேசும்பொழுது சொன்னார். தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று சொன்னார். லும் போட்டுச் சொல்லக் கூடிய நிலை இருந்தது. கலைஞர் முதல்வராக வந்த பிற்பாடுதான் அந்த லும் என்பதை எடுத்துவிட்டார். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று ஆணையிட்டார். ஏனென்றால் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று சொன்னால் போதுமா? நேரத்தின் நெருக்கடி கருதி சில கருத்துகளை மாத்திரம் சொல்லி முடிக்கின்றேன்.

இது கணினி யுகம். நம்முடைய பழம் பெருமை-களை மட்டும் பேசினால் போதாது. நம்முடைய வலிமை எங்கேயிருக்கிறதென்று சொன்னால் இந்தக் கால ஓட்டத்திலே நாம் சந்திக்க வேண்டியவைகளை சந்திக்க வேண்டும். பழம்பெருமை ஓர் இனத்திற்கு_-ஒரு மொழிக்குத் தேவை. அதை அறவே நாம் ஒதுக்கிவிட முடியாது. அதைத் தாண்டித்தான் நாம் செம்மொழியைப் பெற்றிருக்கின்றோம். இதுதான் செம்மொழிக்கு அடித்தளம். ஒப்புக்கொள்கின்றோம்.

உரத்தை உணவாகக் கொள்ளக் கூடாது

ஆனால் அந்தப் பழம்பெருமை எப்படியிருக்க வேண்டும்? வயலுக்கு உரமாக இருக்க வேண்டும். ஆனால் அந்தப் பழம் பெருமையே இன்றைக்குத் தமிழனிடத்திலே பல நேரங்களிலே உணவாக இருக்கிறது. எனவே உரத்தை உணவாகக் கொள்ளா-தீர்கள். உரத்தை உரமாக வைத்துக்கொள்ளுங்கள். அதை, உணவை உருவாக்குவதற்குரிய உரமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழை நவீன உலகத்திற்கேற்ப.....

எனவே தமிழை நவீன உலகத்திற்கு_21ஆம் நூற்றாண்டிற்கு அழைத்துப் போக வேண்டும் என்று சொன்னார்களே, அது தான் மிக முக்கியம்.

கணினியில் தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சி மொழியாகத் தமிழ், பயிற்று மொழியாகத் தமிழ், நீதி மன்ற மொழியாகத் தமிழ். பல மாதங்களுக்கு முன்னாலே முதல்வர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்திலே, தீர்மானம் நிறைவேற்றி யிருக்கின்றார்கள். குடியரசுத் தலைவரிடம் பேசியிருக்கின்றார்கள். இந்த முறை அல்ல; அதற்கு முன்னாலேயே பேசியிருக்கின்றார்கள். மத்திய சட்ட அமைச்சரிடம் நீதிமன்றங்களிலே தமிழ் வாதாடக் கூடிய மொழியாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார்கள்.

சட்ட விரோதமல்ல

இது சட்டப்படி விரோதமல்ல. அரசியல் சட்டப்படி நமக்கு யாரும் காட்ட வேண்டிய சலுகை அல்ல. பிச்சை அல்ல. இது நமது உரிமை. தமிழனுக்கு இருக்கின்ற பல்வேறு கோளாறுகளில் ஒன்று எது? சலுகை. எது உரிமை என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாத வேதனையான நிலையில் இருக்கின்றோம்.

அரசியல் சட்டத்தில் உள்ள உரிமை

அரசியல் சட்டம் 348ஆவது பிரிவின்படி மாநில ஆட்சி மொழி அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பீகார் மாநிலத்திலே, ராஜஸ்தான் மாநிலத்திலே, மத்திய பிரதேசத்திலே, உத்தரப்பிர-தேசத்திலே அதே போல பல மாநிலங்களிலே இந்தி வழக்காடு மொழியாக இன்றும் இருக்கிறது.

எனவே இது ஒன்றும் பெரிய பெருமை அல்ல. வேறு எதுவும் கிடைக்காதவர்கள் கலைஞர் ஆட்சிக்கு எதிராக இதையாவது பிடிக்கலாமா? என்று கருதுகின்றார்கள்.

மரக்கிளையில் பழம்!

அவர்களுக்குத் தெரியும், பழம் விழப்போகின்றது என்று. காக்கை மரக்கிளையில் உட்கார்ந்தால் எங்களால்தான் இந்தப் பழம் விழுந்தது என்று. ஆகவே அவரால் முடியாதது ஒன்றுமில்லை. காரணம் தமிழால் முடியாதது என்பதல்ல. சுயமரியாதை உணர்வோடு அவர்கள் எதையும் சிந்திக்கக் கூடியவர்கள். ஆகவே வழக்கறிஞர்கள் தெளிவாக இருக்கலாம். தமிழிலே பெயர்கள் வரவேண்டும். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக மக்கள் படித்தவர்களாக வாழுகிறார்களோ, அவர்கள்தான் ஆங்கிலத்திலும், தமிழிலும் கலந்து பேசுகிறார்கள்.

ஊடங்களில்_தமிழ் தொலைக்காட்சிகளில், தமிழ் தொலைந்த காட்சியை இன்றைக்குப் பார்க்கின்றோம். வேதனையாக இருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் என்று தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். தமிழைக் கூட நுனி நாக்குத் தமிழ் என்று சொல்லக் கூடிய அளவிற்கு சிலர் இருக்கிறார்கள். யாருக்காகவும் அல்ல. எதை எப்பொழுது செய்ய வேண்டுமோ, அதை அப்பொழுதே செய்யக் கூடியவர்தான் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

தொலைக்காட்சியினர் மாற வேண்டும்

தொலைக்காட்சிகளில் ஷோ டைம், டாப்டக்கர், ஸ்டார்ஸ் ஸ்டைல், சூப்பர் ஹிட் படம், கிளைமாக்ஸ், சூப்பர் டூப்பர், சூப்பர் காமெடி, சூப்பர் டாப்டென், என்றெல்லாம் சொல்லப்படுகின்றன. தொலைக்-காட்சிகளில் எல்லாம் தமிழ் முழுக்க வரவேண்டும். அதற்கு தொலைக்காட்சி நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு காலத்தில் அக்கிராசனர் என்று சொல்லப்பட்டவர் தலைவர் என்று தமிழால் அழைக்கப்பட்டார். நமஸ்காரம் வணக்கம் ஆயிற்று. அபேட்சகர் வேட்பாளர் ஆனார். இப்படி எல்லாம் இந்த இயக்கம் வளர்ந்த காரணத்தால் வடமொழி-யில் அழைக்கப்பட்டது. தமிழாக மாறியது. அந்த சுயமரியாதை, உணர்வு உள்ள காரணத்தால் இத்தனையும் நடந்திருக்கிறது. எனவேதான் நாம் தெளிவான வாய்ப்பை உருவாக்க வேண்டும். சொன்னார்கள் நண்பர்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். அறிவுக்காகப் படிப்பது என்பது வேறு. வேலைக்காகப் படிப்பது என்பதும் அதுவும் முக்கியம்தான். எனவே அதற்குரிய தீர்மானங்களை முதல்வர் கலைஞர் நிச்சயமாக எடுப்பார்கள். தமிழ் படித்தே தீர வேண்டும் என்பது கட்டாயம் மட்டுமல்ல.

அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று ஆக்கினால் பயன்தரும். செய்வார்கள். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற மத்திய பொது தேர்வு ஆணையம், அதிலே இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் தாய் மொழியில் எழுதிவெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது தமிழால் முடியாதது ஒன்று மில்லை. பயிற்று மொழி தமிழ், முடியுமா? என்று கேட்கிறார்கள். ஜப்பானை விட தொழில் வளர்ச்சி நிறைந்த நாடு வேறில்லை. தமிழ்மொழி அதுபோல் ஆட்சித் தமிழ், ஆய்வுத் தமிழ், அறிவியல் தமிழ், அதற்கெல்லாம் மேலாக தன்மான உணர்வைத் தர வேண்டிய தமிழ். ஆய்வாளர்கள் கூனிக் குறுகியிருப்பவர்களாக இருக்கக் கூடாது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதை இப்பொழுது நாம் பெற்றிருக்கின்றோம். எனவே இந்த செம்மொழி மாநாடு என்பது ஒரு அடித்தளம். அதிலேயிருந்து நாம் மேலே வர-வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதற்குரிய திட்டங்களை நீங்கள் சிறப்பாகச் செய்யுங்கள். அதே நேரத்திலே தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒரு வேண்டுகோள்!

தமிழர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு நீங்கள்தான் பாதுகாவலர். இங்கே நடைபெறுவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. உலகத்தின் பற்பல நாட்டு நண்பர்கள் உறவுகளாக இங்கே வந்திருக்கின்றார்கள்.

எனவே தமிழ்நாட்டிலே மட்டும் தமிழ் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதே போல இந்தியாவிலே மட்டும் தமிழ் என்று நினைக்காதீர்கள். உலகம் முழுவதும் தமிழ் வெற்றிகரமாக நடைபோட வேண்டுமானால் தமிழ் எழுத்து சீர்திருத்தமடைய வேண்டும். இணையத்திற்குரிய வாய்ப்பைப் பெற வேண்டும். சிலருக்கு இன்னமும் பழமையில் ஆர்வம். அய்யோ, எழுத்தை எல்லாம் மாற்றினால் என்ன ஆகும்? பெரியார் எழுத்தைக் குறைத்தார். அதனால் எந்தச் சங்கடமும் இல்லை. எழுத்துச் சீர்திருத்தம் வராமல் இணையத்தில் தமிழ் எளிதாக ஆகாது. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் சொன்னார்: ஒலித் தகடுகளில் வரிகள் வருகின்றன. கே.பி.சுந்தராம்பாள் பாட்டு அய்யோ, காணாமல் போய்விட்டதே என்று யாரும் கவலைப் படத்தேவையில்லை. காசு போட்டால் வரும். சங்க காலத்திலிருந்து கல்வெட்டுகள் காலத்திலிருந்து ஒரே மாதிரியாக இருந்ததில்லை.

எதிர்ப்பு இருக்கும்

எனவேதான் அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். எந்த மாற்றத்தைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு இருக்கும். நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று சொன்னீர்கள். இன்றைக்கு அது மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அது போலத்தான் இணையம் முக்கியமானது. இணையத்திற்கு தமிழ் முக்கியமானது. ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியதற்குக் காணரம் எழுத்துகள் குறைவு.

எழுத்துகளை குறைப்பதால் தமிழ் கெட்டுவிடாது. இறுதியாக ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். கிராமத்திலே இருக்கிற தமிழைப் பார்த்து நகரத்துக்காரன் கற்றுக்கொள்ள வேண்டிய நிலை நம்முடைய நாட்டிலே. கிராமத்திலே இருக்கின்ற என்னுடைய தமிழச்சி அருமையாகச் சொல்லிக்-கொடுக்கிறார். சோறு சாப்பிட்டாயா? சாறு கிடைக்குமா? என்று கேட்கிறார்கள். ஆனால் படித்தவன், நாகரிகமானவன் சாதம் சாப்பிட்டாயா? என்று கேட்கின்றான்.

சோறு என்று கேட்டால் அது ஏதோ கீழ் ஜாதி என்று சொல்லுவதைப் போல, என்ன சோறு என்று சொல்லுகிறாயே என்று கேட்க ஆள் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் வேகமாக நாகரிகமாக நளினமாக இருந்தால் ரைஸ் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். வெந்ததா? வேகவில்லையா? என்பது தெரியாது. ஆகவேதான் சோறு, சோறாக இருக்க வேண்டும். செம்மொழி வெற்றி பெற வேண்டு-மானால் சோறு சாதமாக ஆக்கக் கூடாது. ரைஸ் ஆகவும் ஆகக் கூடாது. சோறு சோறாக இருக்க வேண்டும். அதுதான் தமிழனின் அடித்தளம் சரியாக இருக்கிறது. பண்பாட்டுப் படை யெடுப்பிலிருந்து தமிழனைக் காப்பாற்றுகிறோம் என்று பொருள்.

எனவே நீதிமன்றமாக இருந்தாலும் சரி, நீதிமன்றமாக இருந்தாலும் தமிழ் வளர வேண்டும். அதற்கு வேண்டிய அடித்தளத்தை நீங்கள் இடுங்கள்.

இந்த மாநாட்டிலே அதற்குரிய முடிவுகளை எடுங்கள். எல்லாவற்றையும் விட, செம்மொழியைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதற்கு அடித்தளம் உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்குப் பாதுகாப்புத் தேடுங்கள். தமிழர்கள் எந்த நாட்டிலும் இலங்கை உள்பட முள்வேலிக்-குள்ளே இருக்கக் கூடாது. தமிழனுக்கு உரிமை கிடைக்க வேண்டும். தமிழனின் உரிமை பாதுகாக்க வேண்டும்

தமிழன், தனித்தன்மையோடு வாழ வேண்டும். தமிழனுடைய உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்கெல்லாம் ஒரு பாதுகாப்பு அமைப்பாக இந்த செம்மொழி மாநாட்டிலே ஒன்றை அறிவியுங்கள்.

உலகத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு

உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்பதை உருவாக்குங்கள். மொழிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அது போன்றது. மொழியை எப்பொழுது பாதுகாக்க முடியும்? மொழி மக்களை வைத்துத்தான் பாதுகாக்க முடியும் என்ற கருத்திலே வருகிற பொழுது ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமையாக இருந்தாலும் சரி, இன்னொரு நாடுகளில் தமிழர்கள் சந்திக்கின்ற கொடுமையாக இருந்தாலும் சரி, அதைத் தட்டிக்கேட்கக் கூடிய உரிமை இந்தத் தாய் மண்ணுக்கு உண்-டு. அதற்கொரு அமைப்பை உருவாக்க வேண்டும். அத்தகைய ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.

தலைசிறந்த மகுடம்

செம்மொழி மாநாட்டின் வரலாற்றிலேயே அதுதான். தலைசிறந்த மகுடமாக இருக்கும் என்று கூறி உங்களுக்கு காலமெல்லாம் நன்றி செலுத்த தமிழ் மக்கள் சுயமரியாதை உள்ள மக்கள் எல்லாம் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள்.

எனவே பண்பாட்டுப் படையெடுப்பை அடையாளம் காணுங்கள் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார்.

No comments:

Post a Comment