கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, June 26, 2010

"தாய்த்தமிழ் வளர்க்க" - முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை


உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் 23ம் தேதி அன்று தொடங்கியது. 27ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது.


மூன்றாம் நாளான நேற்று மாநாட்டு அரங்கில் காலை 10.30க்கு கவியரங்கம் தொடங்கியது.’ கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்கக்கூட்டம்’ கவியரங்கத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து தலைமையேற்றுள்ளார்.


முதல்வர் கருணாநிதி, தயாளுஅம்மாள், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின், ஆற்காடுவீராச்சாமி, துர்க்கா ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் ஆகியோர் அரங்கத்தில் அமர்ந்து ரசித்தனர்.


கவிஞர் நெல்லை ஜெயந்தா, முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியர் கருணாநிதி, கவிஞர் விவேகா, கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் கயல்விழிஅழகிரி ஆகியோர் கவிதை படித்தார்கள்.


கவிஞர் ஈரோடு தமிழன்பன் தொடக்கவிதை படித்தார். வைரமுத்து நிறைவு கவிதை படித்தார்.

தாய்த்தமிழ் வளர்க்க என்ற தலைப்பில் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை படித்தார்.

இதோ அந்த கவிதை:


இருண்டு கிடந்த தமிழகம்
சற்றே புரண்டு,
விழித்துக்கொண்டது தந்தை பெரியாரால்;
எழுந்து அமர்ந்தது பேரறிஞர் அண்ணாவால்;
நிமிர்ந்து நின்றது முத்தமிழ் அறிஞர் கலைஞரால்!

அதுவரை,

திக்கற்றுத் திகைத்து இருந்த திராவிட இனம்,
அன்று முதல்,
ஒரு கரகரத்த குரலே
தன் திசைமானி என்றுணர்ந்தது;
தமிழுக்காய் அவர் தண்டவாளத்தில் வைத்த தலையே
தன் பாய்மரம் எனப் பற்றிக் கொண்டது;
தமிழூறும் அவரது எழுதுகோலையே
தன் எதிர்காலமென வரித்துக்கொண்டது.

பெரியார் உயிர் எழுத்து;

பேரறிஞர் மெய் எழுத்து;
கலைஞரோ உயிர்மெய் எழுத்து மட்டுமல்ல,
தமிழின் உயிர், மெய் காக்கும் - ஆயுத எழுத்து;
நிலம், மொழி, இனமென்னும்
ஆயுத எழுத்து.

உலகத் தமிழ்ச் சான்றோர்களை எல்லாம்
ஒன்று கூட்டி,
இதற்கு முன் தமிழன்னை
இரண்டு முறை தமிழகத்தில்
தன்னை அழகுபடுத்திக் கொண்டாள் -
(நஞ்சை நினைவூட்டும் தஞ்சை கணக்கல்ல)
ஆனால், அப்பொழுதெல்லாம்
அவளுக்குச் ‘செம்மொழி’ எனும் தனிச்சிறப்பில்லை.

தமிழையே தன் ஐம்புலனாய்
வரித்திருக்கும் என் தலைவா,
திருவாரூர் தந்த சமத்துவத் தேர் நீ!
உன் பொற்கரத்தால்,

மூவாயிரமாண்டு மூத்த பனையோலை கொண்டு,
தமிழுக்குச் செம்மொழி எனும் தனிக் கிரீடம் சமைத்தாய்.
அதுவரை புன்னகையை மட்டுமே
அணிந்திருந்த அவளது அழகு,
இந்தப் பனையோலை மகுடத்தில்
பன்மடங்காய் மிளிர்ந்தது.


எம் இறவாத் தமிழின் பூர்வ பட்டயமே -

‘பழமை’ என்றாலே பயந்தோடும்
‘இளமை’யை ஈர்ப்பதற்கும்
கணினி உத்தியுண்டு உன்னிடம்.
பனையோலையில் ‘கணினி’த் தமிழ் புகுத்திய
இக்காலத்து இளங்கோ நீ!


அன்னூர் வரலாறு, ஆறைநாடு வரலாறு
எனச்செழித்த கொங்கு மண்டலத்தில்,
செம்மொழி மாநாடு எனும்
புதிய வரலாற்றைத் துவங்கி வைத்தவன் நீ!
காய்ந்து கிடக்கும் நொய்யலாறு
காஞ்சி மாநதியாய் உருமாறும்
காலம் வருமா எனக் காத்துக் கிடப்போர்க்கு,
நீ,


தமிழ் வாய்க்கால் வரப்பு வெட்டி
தற்காலிக நீர் வரத்து செய்தாய்.

உமிழ்நீர் கூடத் தமிழ் நீர்தான் உனக்கு!

சேர, சோழ, பாண்டியர் கால் பதித்த பேரூர் கோவன்பதி இது -
சேரன் பெருமாள் காடு திருத்தி அமைத்த இப்பதியில்
தமிழ்க் கோ நீ இன்று,


சாலை திருத்தி உலகத் தமிழ்ப் பூக்காடு சமைத்தாய்.

காவிரியின் வெள்ளப் பெருக்கை
பா வரையும் கம்பர், தன் வெண்பா
ஒன்றால் சுருக்கியதாய்க் கொங்குநாட்டுக்
குலோத்துங்கன் காலத்துக் கதை உண்டு;
அதனைக் கொண்டாட,
‘வதுவை வரி விலக்கு’ தந்தான் அவன்
என்கிறது வரலாறு.


உம்மைப் போல,
அரசரே புலவராகவும் இருக்கின்ற ஆளுமை அவனுக்கில்லை;
அதனால் பாவம் அவன்,
கம்பரை துணைக்கழைத்திருக்கின்றான்.

வதுவை வரி விலக்கு என்ன புதுமையா?
இதோ,
கலைஞரின்
‘வதுவை உதவித் தொகை’யால் இணைந்தோம் என
ஏழை இளையோரெல்லாம் கைதொழும்
இக்காலக் குலோத்துங்கன் நீ!


முற்றிலும் கருங்கல்லால் - கொங்குச் சோழன் கரிகாலன்
நொய்யலாற்றில் கட்டினான் படித்துறை;
குடிசைவாசிகளின் இருப்பிடம் இனி
கான்கிரீட் இல்லங்கள் மட்டுமே
என்று அறிவித்த நீயோ,
மெய்கீர்த்தி சொல்ல,
படித்துறைக்குப் பதில்
கான்கிரீட் குடியிருப்புக்களை
தேர்ந்தெடுத்துக் கொண்ட
தாய்மைக் கரிகாலன்!

பார்த்திருக்க மாட்டார்கள் கோவைப் பெருமக்கள்
பதிமூன்றாம் நூற்றாண்டை;

முதலாம் கொங்குப் பாண்டியன் இளவரசன் வீரபாண்டியனின்
பொற்காலக் கோவையைத்
தற்காலத்து மக்கள் பார்க்கட்டுமென,
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த
இவ்வூரைத் தெரிவு செய்த,
தமிழ்க்காதல் பாண்டியன் நீ!

உன் நோக்கு எப்போதும்
அரிமா நோக்கு தான்!
கடந்து போன சரித்திரத்தின் பொற்கதவிற்கான திறவுகோல்கள்
நிகழ்கால நடவடிக்கைகளிலேயே இருக்கின்றன என்பதாலேயே,
21-ம் நூற்றாண்டில் இரண்டாம் நூற்றாண்டைத்
திரும்பிப் பார்க்கச் செய்கின்ற எதிர்கால தீர்க்கதரிசி நீ!


திராவிடத்தின் தீப்பிழம்பே -
தமிழ்ச்சாவி கொண்டு
நீ திறக்கும்
தமிழர் தம் செம்மொழிப் பொற்காலத்தைத்
தன் தலைமுறைக்கும் தமிழ்நாடு நினைத்திருக்கும்!

பெரியாரின் கைத்தடியும்
அண்ணாவின் கண்ணாடியும் கலந்ததொரு
தீப்பிடித்த பேனாவால்,
திராவிடத் தொன்மையுடன் மானுடம் பேசும்
உன் மேல்,

அலாதி வாஞ்சைதான் தமிழன்னைக்கு!
இயல், இசை, நாடகமெனும் முப்பாலும்
உனக்குப் புகட்டியிருந்தாலும்,
கவிதைப் பாலில் மட்டும் கொஞ்சம்
‘தேன்’ கலந்து ஊட்டியிருக்கின்றாள்.
பின்னாளில்,
பேரறிஞரையும்,
நீ,

கவிதையில் கடந்து சென்றபோது
இறும்பூதி எய்தியபடி பார்த்திருந்தவளை,
இடைமறித்து “எப்படி" என்றேன் -
“இயலும், நாடகமும் கலைஞருக்கு இரு கண்கள்;
ஆனால் - கவிதையோ உயிர் என்பதால்
பதினாறடி பாய்கிறது” என்றாள்.

பாட்டுடைத் தலைமகனே -
செம்மொழி நாயகனே -
என் முதல் வணக்கம் உமக்கு!

கவியரங்கத் தலைமை தாங்கும்
கவிப் பேரரசே....


உம் தலைமையினை உரைக்கையில்
தமிழ்க் காவல் தடுப்பிருப்பதால்
‘ஊர்ப் பாசம்’ எனக்கு வழுக்காது.

கள்ளிப்பால் கசக்கும்
கருங்கல் பூமியதில்,
இதிகாசம் படைத்த
இவரது பேனாவில்,
எம் தெற்கத்திச் சீமையின்,

வேல்கம்பு, வீச்சறுவா மூச்சிருக்கும்.
வெங்காட்டுப் புழுதிப் பேச்சிருக்கும்.
கள்ளின் ருசியோடு காதலுமிருக்கும்.

அணி, யாப்பு, செய்யுள் பயின்று
அதனை மீறுகின்ற புதுக்கவிதைப் பாவலர்.
ஆறாம் புலனாய்க் கலைஞரை
வரித்துக் கொண்ட,
அணிமாறா, அபூர்வக் காதலர்.


வங்கக் கடல் வந்து கலந்தபின்பும்,
வட்டாரத்தமிழுக்கு தேசிய அங்கீகாரம்
வாங்கித் தந்த
வடுகபட்டிக் கண்மாய்த் தமிழ் மீன்.

உம் தலைமையில்
‘கிளம்பிற்று காண்
தமிழச் சிங்கக் கூட்டம்’.

கவிஞர் தம் பவனியில்,
பவானியோடு கலக்கும் சிறுவாணி போல
சிற்றாறாய் இத் தமிழச்சியும் அடக்கம்!
தொடங்குகிறேன் -
‘தாய்த் தமிழ் வளர்க்க’!


சூரல் எனும் பிரம்புக் கொடிகள்
இருந்த ஊர், ஆதியிலே
கொங்குநாட்டுச் சுந்தரபாண்டிய நல்லூர்.
மறுவி அது சூரலூர் ஆகி,
பின் சூலூர் ஆனதைப் பொறுக்கலாம் -
பொருள் திரியாமல் சற்றே
அழகு மட்டுமே குறைந்த ‘ஆகுபெயர்’ ஆனதால்.
ஆனால்,
‘அம்மா, ஆரஅஅல ஆனதை
அத்தை ஹரவேல ஆனதை
அம்மான் ரூஉடந ஆனதை’
எப்படி அப்படியே ஏற்க?


அலுவலக மொழிக்கு ஆங்கிலத் தொப்பி,
அன்றாட வெயிலுக்குச் சும்மாடே சுகம் எனும்
அடிப்படை உணர்வற்ற அடுத்த தலைமுறையை
உருவாக்கத்தானா
‘உலகின் மூத்த தொல்குடி எம்மினம்’
என உரக்கச் சொன்னோம்?

எல்லா மொழிகளும் எமக்கு இறக்கைகள்;
தாய்மொழி மட்டுமே உயிர் வேர்க்கால் என்பதை
என் அடுத்த தலைமுறை அறிந்திருக்கிறதா என்ன?


‘‘உண்மை ஒன்று சொல்வேன்;
‘நம் தாய்மொழி தமிழ்
தொன்மை, முன்மை, தூய்மை,
தாய்மை, இளமை, வளமை,
இனிமை, தனிமை, செம்மை, மும்மை
அனைத்தும் பெற்றது’
தெரியுமா உனக்கு?” என்று என்
சிறு வயது மகளைக் கேட்டேன்;


‘ராவணன்’ திரைப்படம் வந்த பிறகே
ரயில் பெட்டிகள் போல்
‘ன, ண’வை ரகசியமாய்க் கற்றுக் கொண்டேன் என்றாள்;
வெட்கித் தலை குனிந்தேன்.

ஆலயங்களில் இங்கே தமிழ் வந்த பின்பும்
ஆறுமுகத்தின் தேவாரத்திற்குத்
தீட்டு என்றதே தில்லை?

ஆட்சி மொழியில் ஒன்றாய்
இன்னும் இங்கு இன்பத்தமிழ் ஏனில்லை?

பெரியாரின் நெஞ்சில் தைத்த ஊவா முள்ளை
தன் ஒரே ஒரு உத்தரவில் நீக்கிய
தமிழாய்ந்த திருமகனைத்
தலைவனாய்ப் பெற்றிருந்தும்,
இளைய தலைமுறை இது குறித்து எண்ணிப் பார்க்கிறதா?

ஒரு முள்ளகற்ற – முத்துவேலர் பெற்ற பிள்ளை
நடந்து வந்த முட்காடுகள் எத்தனை?
கடந்து வந்த காயங்கள் எத்தனை?

தமிழ்க் களிம்பு தடவி
தழும்புகளாய் மாறிய அவர்தம் வடுக்களை,
இனமானப் போரின் தடங்களை,
இன்றைய ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு இளைஞர்கள்’
திரும்பிப் பார்க்கிறார்களா?


‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ எனும்
இனமான இலச்சினையை
வலுவாய் நம் அரசு முன்னெடுத்திருக்கும்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமிது;
விழித்துக் கொண்டு நாம்,
தமிழை வழியாய்க் கொண்ட
தலைமுறையைப் பேணல் வேண்டும்;


பேச்சுத் துணைக்காய்ப் பிறமொழிகள்
நம் மேல்
தம் மூச்சை விடாமல்
பின்னோடு வந்தால் பிழையில்லை.

‘மருத்துவ, அறிவியல் கல்வியில்
தமிழ் என்றால்’

நடுங்குகிறார்கள் நகர்புறத்து மாணவர்கள்;
சீன மொழியும், ரஷ்ய மொழியும் கற்ற பின்பே
அங்கிருந்து மருத்துவராய்த் திரும்புகின்ற அவர்களது
நண்பர்களை மேற்கோள் காட்டினாலோ –
‘ஒப்பு நோக்குதல் பெற்றோர்க்கு அழகல்ல’ என
தமக்கு வசதியாய்
ஒரு அவசர ஆத்திச் சூடியை அறிமுகம் செய்கிறார்கள்.

தமிழருக்கு,

பிற மொழி இலக்கியம் போற்றுகின்ற பெருந்தன்மை உண்டு;
கூடவே,
தன் மொழி தாழ்ந்ததன்று எனும் பேராண்மையும் மிக உண்டு.
‘கிளம்பிற்றுக் காண் தமிழச் சிங்கக் கூட்டம் -
கிழித் தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை’ என
கலைஞரின்‘தமிழ் மாணவர் மன்ற ஆண்டு விழா’ துவக்கத்தில்
முழங்கினார் பாரதிதாசன்.

கிழித்தெறியப்படவேண்டியது – தாழ்வுணர்ச்சி!

‘சூத்திரன்’ என அழைத்த
சாத்திர மொழியை விட,
காத்திரமான மொழிக்குப்
பாத்திரமானவர்கள் நாம்;
கோத்திரம் அறிந்து மணம் செய்வதில்
நம்பிக்கையில்லை நமக்கு;
ஆனால்,

பாத்திரம் அறிந்து பிறர்க்குப் பிச்சையிடும் தேவையுண்டு;

இடம் கொடுத்தால் மடம் பிடுங்கும்
யத்தனிப்புடன் பிறமொழிகள்
முன்னேற்றப் போர்வையில் பின்வாசல் வருகையில்,
கணினித் தமிழ் கொண்டு
தற்காத்துக் கொள்வோம்.


எப்பொழுதும் தாழ்சடை மட்டுமே
தமிழன்னையின் தனி அடையாளமா என்ன?
தேவையெனில்,
நவீனத்துவம், பின்நவீனத்துவம் எனும்
இரட்டை ஜடை பின்னிக்கொள்ளும்
அடர் கூந்தல் வாய்க்கப் பெற்ற
‘சீரிளமைத் திறன் குன்றா’
சீமாட்டி அல்லவா அவள்!


ரசமிழந்து போகாத
தொன்மக் கண்ணாடி நம் தமிழ்;
நவீன ஒப்பனைகளுக்கும் அது நெகிழ்ந்து உதவும்;
ஆனால், பூச்சற்ற எளிமையில்,
‘உலகின் பேரழகி யாரென்றால்’
இனம், மொழி, நிலம் எனும்
அடையாளம் கொண்ட கருவாச்சிகளையே
அது உயர்த்திப் பிடிக்கும்!

‘தமிழில் உரையாடி,
தமிழ்ப் பெயர் சூட்டி,
தாய் மொழிக் கல்வி கற்று,
தமிழறிஞர்களைப் போற்றி’ வாழ்பவர்களுக்கு,
உலகமயமான அகராதியில்
‘பிழைக்கத் தெரியாதவர்கள்’
என்று அர்த்தம் இருக்கலாம்.
ஆனால் –

வரலாற்றின் பக்கங்கள், அவர்களை
‘வாழத் தெரிந்தவர்கள்’ என்றே பதிவு செய்யும்.

பிழைத்தல் அவமானம் -
வாழுதல் மானம் -
நாம் தமிழர்களாய் வாழ்வோம்!


No comments:

Post a Comment