கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 30, 2010

இலங்கை தமிழர்களுக்காக தி.மு.க. செய்தது என்ன


முதல்-அமைச்சர் கருணாநிதி 20.10.2008 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரிய கண்டுபிடிப்பு

1956-ம் ஆண்டிலேயே இலங்கை தமிழர்கள் உரிமை, மொழி, கலாசாரம் இவற்றைப் பாதுகாத்திடவும்- சிங்கள மொழியினர் ஆதிக்கம் அகன்றிடவும் அங்குள்ள தமிழர் கிளர்ந்தெழுந்தனர் என்பதைக் குறிப்பிடவும்; இன்று நேற்றல்ல- இலங்கை தமிழர் பிரச்சினை 1956 முதற்கொண்டு உருவானதாகும் என்று நான் சுட்டிக்காட்டியதற்கு ஆதாரமாக 1956-ல் சிதம்பரம் தி.மு.க. பொது குழுவிலேயே நான் முன்மொழிந்து- பொன்னம்பலனார் வழி மொழிந்த தீர்மானத்தை சான்றாக கூறியிருந்தேன்.

அதைப் படித்து விட்டு சிலர் 1956-ம் ஆண்டிலிருந்து- இருந்து வருகிற இலங்கை பிரச்சினையைத் தீர்க்க முடியாத கருணாநிதி; இப்போது தீர்க்கப் போவதாகச் சொல்வது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டை மறைப்பதற்காகத் தான் என்று அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள்.

அலட்சியப்படுத்திவிட்டு

இந்தியாவில்; தமிழ் மாநிலத்தில் மட்டும் மின்சாரப் பற்றாக்குறை இருப்பதாகவும்- மற்ற மாநிலங்களில் மின்சாரத் தடையே கிடையாதென்றும் பொய் கூறி- அரசியலுக்காகப் பேசுவோரின் அறியாமை கண்டு, அப்படிப் பேசுவோரை அலட்சியப்படுத்தி விட்டு; நாம் நமது ரத்தத்துடன் ஊறிய தமிழ் உணர்வு கொண்ட ஈழத் தமிழர்களின் இன்னல் துடைக்கும் பணியினைத் தொடருவோம்.

இலங்கை பிரச்சினை- அங்கே தமிழ் மொழியையும்- தமிழரையும் தாழ்த்தும் பிரச்சினை- அதனை எதிர்த்து முழங்கிய பிரச்சினை- இவையனைத்தும் 1956-ல் என்று தான் நாம் நினைத்திருக்கிறோம்; ஆனால்; இன்னும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டது அந்த பிரச்சினை என்பதற்கு; இரண்டு நாளைக்கு முன்பு; திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவருமான வீரமணி என்னிடம் அளித்த பழைய "விடுதலை'' ஏடு சான்றாகத் திகழ்கிறது.

1939-ல் நிறைவேற்றிய தீர்மானம்

1939-ல் இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளில் வாழும் தமிழர் பற்றி பண்டித நேரு குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தேன் அல்லவா? அதே ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாகக் குழுவில் (10-8-1939) ஈரோடு நகரில் தந்தை பெரியாரும்- அவர் தலைமையில் குமாரராஜா முத்தையா, ஏ.டி.பன்னீர்செல்வம், டபிள்ï.பி.ஏ.சவுந்திரபாண்டியன், சி.என்.அண்ணாதுரை (அண்ணா), என்.ஆர்.சாமியப்ப முதலியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.ஏ.வி.நாதன், சென்னை, பி.பாலசுப்பிரமணியம், சென்னை, எஸ்.நடேச முதலியார், ஏ.கே.தங்கவேலு முதலியார், காஞ்சி, பட்டுக்கோட்டை அழகிரி, என்.வி.நடராசன், சென்னை, என்.ஜீவரத்தினம் சென்னை, டி.சண்முகம் பிள்ளை திருவொற்றிïர், சி.டி.நாயகம், சென்னை, எம்.ஆர்.திருமலைசாமி, திருச்சி, டி.பி.வேதாசலம், டாக்டர் தர்மாம்பாள் சென்னை, வி.வி.ராமசாமி, விருதுநகர் ஆகியோர் கலந்து கொண்டு நிறைவேற்றிய முதல் தீர்மானம்-

"இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை சர்க்கார் கொடுமையாய் நடத்துவதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்து வருவதையும் இந்த குழு வன்மையாய்க் கண்டிக்கிறது.''

நீதி கட்சியினர்

ஆம்; 1939-ம் ஆண்டு பெரியார், அண்ணா, அழகிரிசாமி, கி.ஆ.பெ., பன்னீர்செல்வம் போன்ற பெரிய தலைவர்களால் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானமே- 17 ஆண்டு காலத்திற்குப் பிறகும் செயல் முறைக்கு வர முடியாமல்- இலங்கை தமிழர்களின் இன்னல்களைக் களைய முடியாமல் போனதென்றால்- அது பற்றி 1956லும் ஒரு தீர்மானம் தி.மு.க. பொது குழுவில் நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றால்- மொத்தத்தில் தமிழர் தலைவர்கள் அனைவரும் நடத்திய போராட்டத்திற்கு- சிந்திய ரத்தம்- கொடுத்த உயிர்- பறி போன உடைமை- இவையெதுவும் போதவில்லை என்பது தானே பொருள்?

அதனால் தானே இப்போது மிச்சமிருக்கிற தமிழ் இனத்தின் பிஞ்சுகள், அரும்புகள் உள்ளிட்ட மாந்தரையாவது மீட்பதற்கு வழி காண- நம்மிடையே ஏற்பட்ட துன்ப துயரங்களையும்- அதிர்ச்சிகளையும் தாங்கிக் கொண்டு; ஓரணியில் திரண்டு இந்திய அரசிடம் கேட்கும் உதவியையாவது ஒற்றுமையுடன் கேட்போம் என்று அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் அன்பான வேண்டுகோள் வைத்தோம்.

தாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை 17 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியவில்லையே என்று ஏங்கி; தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதி கட்சியினர்) அந்த தீர்மானத்தை திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாட விட்டு விடவில்லை. எனவே; அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக 1956-ல் நாம் நிறைவேற்றிய தீர்மானத்தை செயல்படுத்த முனைவதே, நாம், தமிழ்ப்பால் அருந்தியவர்கள் என்பதை தரணிக்கு உணர்த்தும் செயலாக இருக்க முடியும்.

பண்டாரக வன்னியன் வரலாறு

இலங்கையின் வரலாறு நமது தஞ்சை ராசராசன் எனும் பெருவேந்தன் காலத்துக்கு முன்பிருந்தே நமக்குப் பால பாடம்- இன்னும் அந்த வரலாற்றின் சில எழுச்சி மிகு பக்கங்களைப் போல அமைந்த கண்டி மன்னன் விக்கிரம ராஜ சிங்கன் அங்கே கி.பி. 1815 வரையில் ஆட்சி புரிந்த வரலாறும்- அதே ஆண்டில் கண்ணுசாமி என்ற அந்த தமிழ் மன்னனின் வீழ்ச்சியும்- தோற்றுப் போய் சிறைப்பட்ட கண்ணுசாமி (ஆம்; கண்டி, விக்கிரம ராஜ சிங்கன்) தமிழ்நாட்டில் வேலூரில் சிறை வைக்கப்பட்டதும் நானறிந்த வரலாறு என்பதால்; பதினாறு ஆண்டுகள் குடும்பத்துடன் சிறையிலிருந்து, சிறையிலேயே வேலூரில் மாண்டு விட்ட அந்த மன்னன் பெயரையும், வரலாற்றையும் மறந்து விடாமல் நினைவூட்ட; நான் முதல்-அமைச்சராக இருந்த 1-7-1990 அன்று வேலூரில் கண்டி தமிழ் மன்னன் பெயரால் முத்து மண்டபம் அமைத்து திறப்பு விழாவும் நடத்தினேன்.

இதெல்லாம் வரலாற்றுத் துளிகள்- வாய் புளித்ததோ; மாங்காய் புளித்ததோ என்று பேசுபவர்களுக்கு வக்கணையாகத் தான் தோன்றும்- இலங்கை தீவில் அரசோச்சிய தமிழ் அரசர்களில் பண்டாரக வன்னியனின் வரலாற்றை நூலாக எழுதியவன் நான் என்ற முறையில்- இலங்கை வரலாற்றில் தந்தை செல்வநாயகம் வரையில் என் நெஞ்சில் நிற்பவர்கள்- அந்த தமிழ் உணர்வு தரிசாகப் போய் விடாத காரணத்தினால் தான் இன்றும் அந்த தமிழர்கள் இலங்கையில் படும் துன்பங்களை எண்ணித் துடித்துப்போகிறேன்.

தி.மு.க. செய்தது என்ன

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. என்ன செய்தது என்று தொடர்ந்து சிலர் தொடர்ந்து கேள்வி கேட்டு வருபவர்களுக்கு சுருக்கமாக அந்த பட்டியலைத் தருகின்றேன்.

1981-ம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த அன்றைய தினமே, ஆகஸ்டு 13-ந் தேதியன்று நான் அன்றைய இந்திய பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் "கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும், தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று கூறுகின்றன. அங்குள்ள அரசாங்கமே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகின்றது. வட கொழும்பில் தமிழர்களின் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் ரெயில்கள் தாக்கப்பட்டுள்ளன. அதில் இருந்த தமிழ் பயணிகள் கொள்ளை அடிக்கப்பட்டு வண்டியை விட்டு வழியில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அம்பாரை கோவில் தேர் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வம்சாவழித் தமிழர்களும் இலங்கை முழுதும் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போய் விட்டது. கொழும்பில் வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழர்களுக்கு நிவாரணமளிக்க முன் வரும் அமைப்புகள் இயங்க அரசாங்கம் அனுமதி தர மறுக்கிறது. கலவரங்களை அடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. செய்திகள் உங்களுக்கு நேரடியாகக் கிடைக்கும் ஆதலால் இந்த பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் தாங்கள் தங்கள் கவனத்தை செலுத்தி உதவிட வேண்டுகிறேன்'' என்று கேட்டுக்கொண்டேன்.

கைது செய்யப்பட்டேன்

அந்த தந்தியைத் தொடர்ந்து 18-8-1981 அன்று மீண்டும் ஒரு தந்தியை இலங்கை தமிழர்களின் துயரம் குறித்து பிரதமருக்கு அனுப்பினேன். இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து, சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொள்ள தமிழக அரசின் தடை உத்தரவை மீறி- பல்லாயிரக்கணக்கானவர்கள் 29-8-1981 அன்று குழுமினர். ஆனால் மாவட்ட செயலாளர் சீத்தாபதி, சட்ட மன்ற உறுப்பினர்கள் து.புருஷோத்தமன், என்.வி.என்.சோமு உள்பட 250 பேரை மட்டுமே காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யாவிட்டால் நானே போராட்டத்திற்கு தலைமை தாங்குவேன் என்று அறிவித்தேன். அ.தி.மு.க. அரசு என்னையும் கைது செய்தது.

ஆம், இலங்கை தமிழர்களுக்கான பிரச்சினையில் நான் கைது செய்யப்பட்டேன். நான் இலங்கை தமிழர்களுக்காக கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள்- போராட்டங்கள் நடைபெற்றன. எனது வேண்டுகோளையும் மீறி பலர் நா விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரி குறிப்பாக கோவிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன், சென்னை மேரி போன்றவர்கள் தீக்குளித்தனர்.

கொன்று குவித்தனர்

அதன் பின்னர் 1983-ம் ஆண்டு தான் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர்'' என்கிற ஏடு 1983-ல் எழுதியது வருமாறு:-

"சிங்கள ராணுவத்தினர் 30 பேர் மன்னார் பகுதியில் உள்ள மக்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இவர்களது கொடூரத் தாக்குதல் ஆறு மணி நேரம் தொடர்ந்தது. மன்னார் நகரின் மத்திய மருத்துவமனையை ராணுவத்தினர் வெறி பிடித்துத் தாக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்களை நிறுத்தி அதில் உள்ளே இருந்தோரை வெளியே இழுத்துப் போட்டு அந்த இடத்திலேயே ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார்கள். அருகில் இருந்த அஞ்சலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 15 பேரை வரிசையாக நிற்க வைத்து அவர்களை நிர்த்தாட்சண்யமாக சுட்டுப் படுகொலை புரிந்தார்கள். வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உழவர்களையும் சிங்கள ராணுவம் விடவில்லை. அவர்களையும் சுட்டுத் தீர்த்தது. இந்த திடீர் தாக்குதலின் முடிவில் 150 பேர் செத்துக் கிடந்தார்கள். 20 தமிழ் இளைஞர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் அருகில் இருந்த ராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்''.

சிறைக்காவலர் முன்னிலையில்

25-7-1983 அன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிங்களவர் நுழைந்து தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றவர்களை- கத்திகள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், விறகுக் கட்டைகளால் தாக்கினர். அனைத்துக் கொடுமைகளும் சிறைக் காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றது. அந்த ஒரு நாளில் மட்டும் 35 தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள். செய்தி கிடைத்தவுடன் தி.மு.க. கேளாக் காதுடையதாகவா இருந்தது? கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்தேன். 7 மணி நேர அவகாசத்தில் 8 லட்சம் பேர் அந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

27-7-1983 அன்று மீண்டும் 18 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து நான்கு நாட்கள் இலங்கையிலே நடைபெற்ற வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலைக்கு ஆளானார்கள் என்று செய்தி கிடைத்தது. சென்னையிலே குடியிருந்த குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.

31-7-1983 அன்று முகவை மாவட்ட கழக மாநாடு என அறிவிக்கப்பட்டதை- இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாடாக மாற்றப்பட்டு ராமநாதபுரம் நகரிலே நடத்தப்பட்டது. தமிழக அரசு 2-8-1983 அன்று முழு அடைப்பு என்று அறிவித்து தமிழகம் முழுவதிலும் வெற்றிகரமாக நடத்தியது.

எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா

4-8-1983 அன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டமும், 5-8-1983 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டமும் நடத்துவதென்று முகவை மாவட்ட மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. மத்திய அரசு தானாகவே முன் வந்து 5-8-83 அன்று தமிழகத்திலே ரெயில்கள் ஓடாது என அறிவித்தது.

7-8-1983 அன்று தி.மு.க. செயற்குழு கூடி, ஐ.நா. மன்றத்திற்கு இலங்கை தமிழர்களைப் பாதுகாக்க வேண்டுமென்று கோரி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. சபைக்கு அனுப்ப முடிவு செய்து, அவ்வாறே வழக்கறிஞர் டி.பி.ராதாகிருஷ்ணன் மூலமாக அனுப்பியும் வைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, 10-8-1983 அன்று நானும், கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தோம்.

பாதுகாப்பு மாநாடு

1983-ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் நான்கு நாட்கள் தமிழகம் முழுதும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கூட்டங்களை நடத்தினோம். எதிர்க்கட்சியிலே தான் அப்போது இருந்தோமென்றாலும், 25-8-1983 அன்று பிரதமரின் தூதுவராக ஜி.பார்த்தசாரதி என்னை சென்னையிலே சந்தித்து பேசி விட்டுத் தான் பிறகு இலங்கை சென்றார்.

அவர் என்னைச் சந்தித்த போது இலங்கை தமிழர் பிரச்சினையில் பிரதமர் இந்திரா காந்தி விடுதலைப் போராளிகளிடம் கொண்டுள்ள பரிவையும், அந்த அடிப்படையில் அவர் வழங்கிடும் உதவிகளையும் என்னிடம் விளக்கினார்.

மூன்றாண்டு கால அமைதிக்குப் பின் 1986-ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகள் அதிகரித்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை ராணுவத்தினர் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தைகளையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மாண்டனர்.

தொடர்ந்து இப்படிப்பட்ட செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டேயிருந்ததால், 26.3.1986 அன்று சென்னையில் `டெசோ'வின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மே திங்கள் 4-ம் நாள் மதுரை மாநகரில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட `டெசோ' சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது.

கறுப்புச் சின்னம் அணிந்து

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் இந்தியாவிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் அக்கறை கொண்டிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டி மத்திய அரசு தனது மெத்தனத்திலிருந்து விடுபட்டுத் தக்க தீர்வு காண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

1986-ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் பசும்பொன், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, இலங்கையிலே சிங்கள ராணுவத்தின் அடக்குமுறை அதிகமாகி அன்றாடம் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தி வந்து, சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்னை திரும்பினேன். சென்னை வந்ததும், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தம், தங்கத்துரை ஆகியோரும் என்னைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை விளக்கினார்கள்.

இலங்கையில் நடைபெறும் கொடுமைகளைத் தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்த 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த வேண்டுமென்றும், அனைவரும் கறுப்புச் சின்னம் அணிந்து ஆங்காங்கு கண்டன ஊர்வலங்களும், பொது கூட்டங்களும் நடத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தேன்.

அந்த ஆண்டும் என்னுடைய பிறந்த நாள் விழாவை நடத்த வேண்டாமென்றும், பிறந்த நாளுக்காக எனக்கு மாலை அணிவிப்பதற்குப் பதிலாக ஈழத் தமிழ்ப் போராளிகளுக்கு உதவிட நிதி அளித்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டேன்.

முழு அடைப்பு போராட்டம்

31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. அனைத்துப் போக்குவரத்துக்களும், விமானம், ரெயில் போக்குவரத்து உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. சென்னையில் நாஞ்சிலார் தலைமையில் பிரமாண்டமான கண்டன ஊர்வலம் நடைபெற்றது.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், எழுதிக் கொண்டே போகலாம். 1997-ம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, இலங்கை தமிழர் பிரச்சினை எழுந்த போது இதே ஜெயலலிதா என்ன சொன்னார்?

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க கருணாநிதி முயல்கிறார் என்றும், விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்றும் உள்நோக்கத்தோடு ஜெயலலிதா கடுமையாக ஓர் அறிக்கை விடுத்தார்.

ஜெயலலிதாவுக்கு ராமதாசின் பதில்

அதற்கு நான் பதில் கூறுவதற்கு முன்பே, பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அப்போது விடுத்த அறிக்கையில் "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயல்கிறார் என்று தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றம் சாட்டுவது கேலிக்குரிய செய்தியாகும்.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறைப்பதற்காக இப்படி அநாகரிகமான முறையில் குற்றம் சுமத்துவது ஒரு பொறுப்புள்ள கட்சியின் செயலாகாது. கடந்த கால ஜெயலலிதா ஆட்சி, நீதிமன்ற வளாகத்திலும், பொது இடங்களிலும் பத்திரிகைகளின் மீதும் தாக்குதல் நடத்திய, குண்டர்களின் புகலிடமாக இருந்துள்ளது என்பதை தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாது.

இவற்றையெல்லாம் மறந்து விட்டு தன் நாட்டு விடுதலைக்காக போராடி வரும் ஈழப் போராளிகளைக் கொச்சைப் படுத்தி, அவர்கள் இந்த ஆட்சியில் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறுவது எந்த வகையில் நியாயம்?

ஆட்சியில் அமர்ந்து சிறிது காலமே ஆன நிலையில் தமிழக முதல்வர் மீது இப்படி பொறுப்பற்ற முறையிலே வாய்க்கு வந்தபடி குறை கூறுவது ஆட்சி கட்டிலில் இருந்து இறங்கிய கட்சிக்குரிய நல்ல மரபாகாது.

கருணாநிதி ஆட்சியில் புலிகள் மீண்டும் தலை தூக்கி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறிக்கொண்டே துயருற்று அவதியுறும் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு அரசியலில் காலம் கடத்தி விடலாம் என நினைக்கின்றார் போலும். கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் ஈழத் தமிழர்களின் குழந்தைகளுக்கு மீண்டும் படிப்புரிமை கொடுத்து தமிழக வரலாற்றில் தமிழின உணர்வுகளுக்கு எதிராக படிந்திருந்த களங்கத்தை துடைத்தெறிந்தார்.

மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது, கருணாநிதியின் அத்தகைய நடவடிக்கை பாராட்டுக்குரியது.

தமிழின உணர்வு அற்ற சிலரின் வறட்டுக் கூச்சலுக்கு செவி மடுத்து அப்பாவி ஈழத் தமிழர்களை மீண்டும் பலிக்கடா ஆக்காமல் இருக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்.

மனித சங்கிலி எதற்கு

அனைத்து கட்சிகளின் சார்பில் 21-ந் தேதி நடத்தவுள்ள "மனிதச் சங்கிலி அணிவகுப்பைப்'' பற்றி அதனால் என்ன பயன் என்று ராசிபுரத்திலே போய் ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். இதே கேள்வியைக் கேட்டு, என்ன பேசுவது என்று தெரியாமலே வேறு சிலர் பேசித் திரிகிறார்கள்!

இலங்கையில் தமிழினம் படும் துயர் கண்டு தாய்த் தமிழகம் கண்ணீர் வடிக்கிறது என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி. எந்த இனமானத் தமிழ் மகன், எந்த மண்ணைத் திருத்தி வளமிகு சோலையாக்கினானோ, அந்த மண்ணிலே அவன் தலை பந்தாடப்படுகின்ற செய்தி கேட்டு, ஆயிரம் செந்தேள் செவியிலே கொட்டியது போல் துள்ளுகிறோம், துவண்டு போகிறோம் - அதனை வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி.

முடிவே கிடையாதா?

இலங்கை கொடுமைக்கு ஒரு முடிவு காண இந்திய பேரரசு ஒருக்கணமும் தயங்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தத் தான் மனிதச் சங்கிலி. ஐந்து கோடி தமிழர்கள் மட்டுமல்ல; அயல் நாடுகளில் பரவியுள்ள தமிழ் இனம் முழுவதும் "இதற்கோர் முடிவே கிடையாதா?'' என்று கொதித்துக் கேட்கின்ற நிலையை உலகத்திற்கு வெளிப்படுத்தத் தான் மனிதச் சங்கிலி?

"தென் திசையைப் பார்க்கின்றேன்; என் சொல்வேன் என்றன் சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் பூரிக்குதடடா!'' எனப் பாடினாரே பாவேந்தர் - அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன் ராவணனின் புகழ் பாடும் கவிதையினைப் படிக்கும் போதெல்லாம் சிந்தையும், தோள்களும் பூரிக்கும் என்பது உண்மை! ஆனால் இன்று, சிந்தையெலாம் தோள்கள் எல்லாம் துடிக்குதடடா! என்ன சொல்வது? என்பதை எடுத்துக் காட்டத் தான் மனிதச் சங்கிலி!

21-ந் தேதி தமிழகத் தலைநகராம் சென்னையிலே நடைபெறும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான மனித சங்கிலி சரியாக 3 மணிக்கு தொடங்கும்.

தமிழனாக பிறந்தவன்

தமிழ் உள்ளங்கள் அத்தனையிலும் இன்று தணல் அன்றோ அள்ளி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது! வெளிநாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தொலைபேசி வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

கண்ணீரோடு நன்றி தெரிவிக்கிறார்கள். அந்த கண்ணீருடன் இணைந்து அவர் தம் கண்களிலே கனல் பறப்பதை அவர்தம் வாய்ச் சொற்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

தமிழன் கொல்லப்படுகிறான், அது கேட்டு தமிழனாகப் பிறந்தவனும்- இருப்பவனும் கொதிக்கிறான். இந்த செய்தி உலகத்திற்கு எட்ட வேண்டுமே என்பதற்காக தான் மனிதச் சங்கிலி. உதவாதினி ஒரு தாமதம், சென்னைக்கு விரைந்திட; உடனே எழுக தமிழா!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment