கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 23, 2010

திராவிட பாசறைகள் பிளவுபட்டிருந்தாலும் யாரை வீழ்த்த வேண்டுமோ அவர்கள் வீழ்த்தும்: கலைஞர்


சென்னையில் அண்ணா அறிவாலயத்தில், பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி, ஆராய்ச்சி, அறக்கட்டளை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்' (இரண்டாம் பதிப்பு, 20 தொகுதிகள்) என்ற நூல் தொகுப்பு (தொகுத்தவர் வே.ஆனைமுத்து) வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

இங்கு பேசியோர் ஆனைமுத்து எவ்வளவு கஷ்டப்பட்டார், சிரமப்பட்டார் என்றெல்லாம் பேசினார்கள். அவர் தன்னை போலவே எனக்கும் வயதாவிட்டதாக கருதிக்கொண்டு என்னிடம் உரக்கமாக பேசினார். அது உங்கள் காதில் விழுந்திருக்கும். நான், எனக்கு காது கேட்கும் மெதுவாகச் சொல்லுங்கள் என்றேன். நான் திடமாகத்தான் இருக்கிறேன், முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன் காரணமாக இந்த வண்டியில் வந்திருக்கிறேனேயன்றி, எனக்கு எந்தவித உபாதையும் இல்லை.

ஆனால், எலும்பும், தோலுமாக இருக்கும் இந்த மனிதர் எவ்வளவு இரும்பு நெஞ்சம் கொண்டிருக்கிறார். பெரியார் கருத்துக்களை நாட்டிலே பரப்பவேண்டும் என அவர் உழைப்பதை பார்த்து வியக்கிறேன். இந்த தளர்ந்த வயதிலே அவருக்கு ஏற்பட்டிருக்கும் உந்துதலும், உணர்ச்சியும் எல்லோருக்கும் ஏற்படவேண்டும் என்று கோருகின்றேன். இந்த பிரார்த்தனையை இயற்கை நிறைவேற்றித் தரும் என்று நம்புகிறேன்

திராவிட இயக்கம் இன்று நேற்றல்ல. என்றைக்கு நீதிக்கட்சி என்ற பெயரிலே, தொண்டாற்ற, மக்கள் பணியாற்ற, பார்ப்பனர் அல்லாத மக்களுடைய உரிமைகளுக்காக போராட முன்வந்ததோ அன்று முதல் இன்று வரை இந்த இயக்கத்தை தலையெடுக்க விடாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கூடவே இருந்து குழி பறிக்கின்ற காரியங்கள் பல நடைபெற்றாலும், அனைத்தையும் மீறி இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தாக்கம் தமிழகத்தில், தமிழகத்தை தாண்டி தென்னக பகுதிகளில், தென்னகத்தை தாண்டி வடஇந்திய பூமியில், அதையும் தாண்டி உலகத்தில் கொடி கட்டிப் பறக்கின்ற காலத்தில் நாம் வாழ்வது தந்தை பெரியாருடைய எண்ணங்களை, அறிஞர் அண்ணாவின் கருத்துக்களை செயலாக்க அவற்றுக்கு வடிவம் கொடுக்க என்பதை மறந்துவிடாமல் இன்றும் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய ஆனைமுத்து அவர்கள் தந்தை பெரியாரின் போதனைகளை, கருத்துக்களை அறிவுரையை எல்லாம் நூலாக தொகுத்து வழங்கியுள்ளார்கள். அவர்கள் இன்று வழங்கப்பட்டிருக்கிற 20 புத்தகங்களை ஒரு பெட்டியிலே வைத்து இங்கே அளித்தார்கள். இன்னும் பெரியாரின் மற்ற கருத்துக்களை, எண்ணங்களை திரட்டி இங்கு வழங்கவேண்டும் என்றால், ஒரு பெட்டி போதாது. ஒரு பீரோவில் வைத்துத்தான் அவற்றை கொடுக்க வேண்டும்.

அந்த அளவுக்கு கருத்துக்கள், அந்த அளவுக்கு பகுத்தறிவு உரைகள், அந்த அளவுக்கு லட்சிய சிந்தனைகள் உள்ளடக்கியவை பெரியாரின் நூல்கள். பெரியாரின் சிந்தனைகள். அவற்றை விட்டால் வேறு வழியில்லை இன்றைய மக்களுக்கு. பெரியார் என்று சொல்வது தனிப்பட்ட மனிதனை அல்ல. அவர் ஒரு இயக்கம். சகாப்தம். அவர் வகுத்த நெறி இன்று மாத்திரமல்ல என்றென்றைக்கும் தமிழனுக்கு, திராவிடர்களுக்கு பயன்படக்கூடிய, திராவிடர்களை ஒன்றுபடுத்தக்கூடிய, திராவிடர்களை அடையாளம் காட்டக் கூடியவை ஆகும்.

அவர் 50 ஆண்டுக்கு முன்பே தொடங்கிய பகுத்தறிவு எப்படியெல்லாம் பரவிற்று என்பதற்கு சான்று. இன்று தொலைக்காட்சியில் கலைவாணர் வரலாறு பற்றிய குறும்படத்தை பார்த்தேன். 50 ஆண்டுக்கு முன் நான் எழுதிய மணமகள் படத்தில் கலைவாணர் நடித்த சில காட்சிகளை காட்டினார்கள். அதில், கலைவாணர் ஒரு பள்ளியில் ஆசிரியர். அங்கு சின்னஞ்சிறு மாணவர்கள் படிக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்பார். அதற்கு, ஒரு பையன் எப்போதுமே அந்த பள்ளியில் துறுதுறுப்பாக பரபரப்பாக முரட்டுத்தனமாக இருக்கும் பையன். அப்போதே அந்த பையனுக்கு நான் அழகிரி என்று பெயரிட்டிருக்கிறேன். அது எனக்கு மறந்துவிட்டது. இன்றைக்கு கலைவாணர் படத்தை பார்க்கும்போதுதான் ஓஹோ அப்போதே பெயர் வைத்தோமா என்று எண்ணிக் கொண்டேன்.

அதில், என்ன காட்சி என்றால், எவ்வளவு அற்புதமாக, சுலபமாக நமது கருத்துக்களை, பெரியார் எண்ணங்களை மக்களுக்கு கலைவாணர்கள், கலைஞர்கள், கலை விற்பன்னர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்கு சான்று. நான் என்ன செய்ய?'' என்று அந்த மாணவன் கேட்பார். கலைவாணரோ ஆத்திரத்தில், தீயை வை'' என்பார். அந்த பையன் கேட்பார் எங்கே வைக்கிறது. ஆத்திரத்தில் கோபத்தில் தலையில் தீயை வை என்பார். அவன், தலையில் சூடத்தை வைத்து நெருப்பை வைத்து விடுவான். அது வாத்தியாருக்கு தெரியாது. தலையில் டர்பன் கட்டியிருப்பார். அப்போது அங்கு வருவோரெல்லாம் அய்யோ' என்று ஓடுவார்கள். தலையில் நெருப்பு', நெருப்பு' என்று கூறிக் கொண்டே ஓடுவார்கள். அப்போதுதான் தன் தலையில் சிறுவன் நெருப்பு வைத்துவிட்டான் என்பது கலைவாணருக்கு தெரியவரும். அவர் சொல்வார், எதையெதை சிறுவயது குழந்தைகளிடம் பேசுவது என்று தெரிந்து பேசவேண்டும். சிறுபிள்ளைக்கு தலையில் தீவைத்தால் சுடும் என்று தெரியுமா? என்று கூறுவார்.

கலைவாணர் போன்றோர் இதுபோன்ற கருத்துக்களை சொல்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். இப்படி சிந்தனைகளை, விருந்தாக ஏன் எதற்காக என்ற கேள்விகளை எழுப்பும் நிலைக்கு ஆளாக்கக்கூடிய வகையில் அந்த காலத்தில் 50 ஆண்டுக்கு முன்பு கலைவாணர் இதுபோன்ற காட்சி அமைவதற்கு காரணம் பெரியாருடைய தாக்கம். அந்த படத்தை அடுத்த படத்தில் தி.மு.க. என்ற வாசகம் அமைத்து ஒரு பாடலை கலைவாணர் பாடினார். தி.மு.க. என்பது திராவிட முன்னேற்ற கழகம். அப்படி சொல்லக்கூடாது என்று சென்சாரில் சொன்னார்கள். அதற்கு, தி.மு.க. என்றால் திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று விளக்கம் சொன்னார். அதுபோல், பெரியார்'' என்றும் அதில் பாடலை பாடி முடிப்பார். அது வள்ளுவ' பெரியார் என்று விளக்கம் சொன்னார். அண்ணன்மார்களுக்கு தம்பி போல என்றும், தம்பிகளுக்கு அண்ணா' போல் என்றும் அண்ணாவை பற்றியும் அதில் சொல்லியிருப்பார்.

திராவிட இயக்கம் வலுவான இயக்கம். அந்த இயக்கத்திலே எந்த ஒரு பிளவு ஏற்பட்டாலும், அப்படி ஏற்பட்ட அந்த பிளவு அந்த இயக்கத்தினை பெரிதும் வளர்க்க இதுவரை பயன்பட்டிருக்கிறதேயல்லாமல் வேறல்ல. திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிரிந்தது. அப்போது, நான் கண்டபடி திட்டியிருக்கிறேன் என்று ஆனைமுத்து சொன்னார். திட்டியதையெல்லாம் பொறுத்துக்கொண்டதால்தான் இன்று வாழ்த்துகிறார்கள். நாங்கள் வாழ்க வசவாளர்கள் என்று சொன்னபோது நீங்கள் திட்டிக் கொண்டிருந்தீர்கள். இப்போது நீங்களே வாழ்க என்று சொல்கிறீர்கள்.

திராவிட இயக்கத்தில் இன்றைக்கு ஆனைமுத்து இந்த புத்தகத்தை வெளியிடுகிறார் என்றால், வீரமணியும் சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த பாசறைகள் பல என்றாலும், அண்ணா சொன்னதை போல் இரட்டை குழல் துப்பாக்கிகளாக இருந்தாலும், குறி தவறாமல் யாரை வீழ்த்த வேண்டுமோ அவர்களை வீழ்த்த, இந்த இயக்கம் என்றும் துவளாது. துவண்டுபோகாது என்று நான் உறுதியாக சொல்ல காரணம் 30 ஆண்டுக்கு முன்பு இதே புத்தகத்தின் முதல் தொகுப்பை வெளியிட்டபோது இந்த மண்டபத்தில் பாதியளவு மக்கள் கூட இல்லை. இப்போதோ இந்த மண்டபம் நிரம்பி வழிகிறது. இது பெரியாரின் கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தமிழர்களிடம் கிடைக்கும் ஆதரவு மேலும் மேலும் பெருகி வருகிறது என்பதற்கு அடையாளம். அதற்கு துணையாக இருக்கும் ஆனைமுத்துவை நான் பாராட்டுகிறேன் என்றார்

No comments:

Post a Comment