கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 29, 2010

பெரம்பூர் பாலத்திற்கு மாறன் பெயர்


சென்னை பெரம்பூர் புதிய மேம்பாலத்தின் திறப்பு விழா இன்று இரவு நடந்தது. இத்திறப்பு விழாவிற்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார்.

துணை முதல்வர் ஸ்டாலின்,தயாநிதி மாறன் உட்பட பலரும் இத்திறப்பு விழாவில் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் கருணாநிதி இன்று இப்பாலத்தை திறந்து வைத்தார்.

முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மாநகாரட்சியின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

துணை முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, இந்தியாவிலேயே மாநகராட்சியின் சார்பில் மேம்பாலங்கள் கட்டும் மாநிலம் தமிழ் மாநிலம்தான் என்று குறிப்பிட்டார்.

முதல்வர் கருணாநிதி பேசும் போது, கிருஸ்துவுக்கு ஜெருசலேம் போல், இஸ்லாமிற்கு மெக்கா போல், இந்துவிற்கு ராமேஸ்வரம் போல், திமுகவுக்கு வடசென்னை என்று குறிப்பிட்டார்.

’’ நம்முடைய மேயரின் உழைப்பு-துணை முதல்-அமைச்சருடைய ஆர்வமிக்க முயற்சி என்றெல்லாம் சொன்னார்கள். அவரை "துணை முதல்வர்'' என்று சொல்வது கூட, நீங்கள் எல்லாம் அவரை பாராட்டுவதைப் பார்த்தால் -போற்றுவதைப்பார்த்தால் -பத்திரிகைகளிலே அவரைப்பற்றி எழுதுவதைப்பார்த்தால் - அவர் உழைப்பதைப் பார்த்தால் -"துணை முதல்வர்'' என்பதற்கு ஆங்கிலத்தில் "டெபுடி -சீப்மினிஸ்டர்'' என்று கூறுவீர்கள்.


ஆனால் நான் கருதுகிறேன் -எனக்கு "துணையாக இருக்கின்ற அமைச்சர்'' என்று தான் நான் கருதுகின்றேன். அந்த அளவுக்கு எனக்குத்துணையாக இன்று அவர் செயல்படுகின்றார்.

நான் என்ன கருதுகிறேன் என்பதை -என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு -அந்த நினைப்பை நிகழ்ச்சியாக ஆக்குவதற்கும் -நான் கருதுவதை காட்சியாக காட்டுவதற்கும்-நான் எண்ணுவதை அப்படியே திண்ணியமாகச் செய்து முடிப்பதற்கும் -அவர் தன்னுடைய திறமையைக்காட்டி வருவதைத்தான் இங்கே நீங்கள் கண்டீர்கள் அதைத்தான் நீங்கள் போற்றுகின்றீர்கள்.

நம்முடைய மேயர் சுப்பிரமணியம் -நான் அவர் மேயராக வருவதற்கு முன்பு அவர் இந்த அளவுக்கு உழைப்பார்-இந்த அளவுக்கு பணிபுரிவார் - இந்த அளவிற்கு திறமையை காட்டுவார் என்றெல்லாம் எண்ணிடவில்லை. ஆனால் நான் கருதிய அந்தக்கருத்து தவறு என்பதை இன்றைக்கு அவர் செயல் மூலமாக அவர் என்னைத் தோற்கடித்துக் காட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவரை எங்கேயாவது திடீரென்று கடைத்தெருவிலே பார்த்தால், இவர் மேயர் என்றோ -இவரா மேயர் என்று கேட்கின்ற அளவிற்குத்தான் உருவம் படைத்தவர்.

மேயருக்கான தோரணையோ-மேயருக்கான டாம்பீகமோ-மேயருக்கான ஆடம்பரமோ-மேயருக்கான நடையுடை பாவனைகளோ எதுவுமில்லாமல் - ஒரு சாதாரண தொழிலாளியைப்போல அவர் இருக்கின்ற காரணத்தினாலே தான்-தொழிலாளர் இயக்கமாம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் எண்ணங்களை-கருத்துக்களை செயல்படுத்த முடிகிறது என்றுதான் கருதுகிறேன்.

அப்படிப்பட்ட அருமைத்தோழர், இன்றைக்கு இந்த மாநகரத்தின் மேயராக இருப்பதும்-அவருக்கு துணையாக மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்- கட்சி வேறுபாடு இருந்தாலுங்கூட அவைகளையெல்லாம் மறந்து-மாநகர முன்னேற்றம் தான் முக்கியம் என்ற வகையிலே பாடுபடுகின்ற -இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நம்முடைய மகேந்திரனைப்போல பாடுபடுகிறவர்கள்-மாநகராட்சியிலும் அந்தக் கட்சியின் சார்பில் இருக்கிறார்கள் என்று எனக்குத்தெரியும்’’

’’வடசென்னையில் இன்று இந்த பாலம் அமைந்திருக்கிறது என்றால், இது இந்த மாநகரின் இருபகுதிகளை இணைக்கின்ற பாலமாக மாத்திரமில்லாமல்-இரு பகுதிகளாக பிரிந்திருக்கின்ற எல்லா இயக்கங்களையும் சேர்ந்த தமிழர்களையெல்லாம் இணைக்கின்ற பாலமாகவும் இது அமைய வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்தப்பாலத்தை உருவாக்க மத்திய அரசு மொத்த செலவில் 35 சதவிகிதத்தையும்-மாநில அரசு 15 சதவிகிதத்தையும் வழங்கி-எஞ்சிய 50 சதவிகிதத்தை மாநகராட்சி வழங்கியிருக்கிறது.

இந்த அருமையான பாலம்- கண் கவரும் பாலம்-இது எத்தகைய உற்சாகத்தையும், உத்வேகத்தையும், எழுச்சியையும், மகிழ்ச்சியையும் நமக்கெல்லாம் அளிக்கிறது என்பதை எனக்கு முன்னால் பேசிய அனைவரும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனக்கு இங்கே எழுந்து நின்று பேச இயலவில்லை. உங்களுக்கு தெரியும்-கடந்த ஆண்டு நான் செய்து கொண்ட மிகப்பிரச்சினைக்குரிய முதுகெலும்பு அறுவை சிகிச்சையின் காரணமாக கால்களில் பலம்குன்றி -கால்கள் நிற்க முடியாத காரணத்தால்- தமிழ்த்தாய் வாழ்த்து-தேசிய கீதம் போன்றவைகளுக்கெல்லாம் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியாது-ஆனால் மனதளவில் உங்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிற நிலையில் -இங்கே வரவேண்டியிருக்கின்றது.

பாலம் ஒருவகையில் நமக்கு பலத்தை தருகின்றது. எப்படியென்றால் எனக்கு கால் சரியில்லை - ஆகவே இங்கே நின்று உங்களிடத்திலே பேச இயலவில்லை. பாலம் என்பதில் கால் சரியாக இல்லா விட்டால் பலம் -எழுதிப்பாருங்கள் "பாலம்'' என்று-அதிலே காலை அழித்து விடுங்கள்- "பலம்'' ஆகிவிடும்.

இந்த பாலத்துக்கு கால் சரியாக இருக்கக்கூடாது என்று தான் கடந்த காலத்திலே ஆட்சியாளர்கள் அதை ஒடிக்க, ஊனப்படுத்த, எத்தனையோ முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டாலுங்கூட -உங்களுடைய மனப்பலத்தால்- இந்த வட்டாரத்திலே இருக்கின்ற தமிழ் மக்களுடைய ஏழை எளிய மக்களுடைய, பாட்டாளி மக்களுடைய, தொழிலாள தோழர்களுடைய அத்தனை பேர்களுடைய மனப்பலத்தால்-உங்களின் கோரிக்கை இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேறியிருக்கின்றது’’

’’இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் நம்முடைய மகேந்திரனைப்போல பாடுபடுகிறவர்கள்-மாநகராட்சியிலும் அந்தக் கட்சியின் சார்பில் இருக்கிறார்கள் என்று எனக்குத்தெரியும்’’என்று தெரிவித்தார்.


அது மாத்திரமல்ல-சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனை பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்றைக்குள்ள நிலையில் அவர் இங்கே மேடையில் பேசும் போது, என்ன பேச வேண்டுமோ அதைப் பேசினார். பாராட்டினார்-அதே நேரத்தில் பட்டா கொடுக்கவேண்டுமென்று அந்த கருத்தையும் இங்கே குழைத்து எடுத்துச்சொன்னார்.

ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் தோழர்- அரசாங்க மேடையில் என்ன சொல்ல வேண்டுமென்பதையும் -அவர் இந்த மேடையில் வந்து அமர்ந்திருப்பதை பார்த்து யாராவது சந்தேகப்படுவார்களோ என்பதற்காக பட்டாவையும் சேர்த்து சொல்லி திட்டவட்டமாக, தெளிவாக இந்தப் பாலத்தை அமைத்ததற்கு பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

அவர் போன்றவர்கள் -வேறு கட்சியைச்சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்வது -அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்து மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அறிந்து புறக்கணிக்காமல் அவைகளை நிறைவேற்ற வேண்டும்.

எல்லோருக்கும் பொதுவானது தான் இந்தப்பாலம். அதைப்போல நாட்டுப்பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுவானது என்று கருதிக்கொள்ள வேண்டும். அப்படி கருதினால் தான் நமக்குள் இருக்கின்ற ஆயிரம் வித்தியாசங்கள், வேறுபாடுகள் அனைத்துக்கும் அப்பால் ஒரு சக்தியாக- மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென்ற சக்தியாக -நாம் விளங்க முடியும்.

எல்லோரும் சேர்ந்து ஒரு பகுதியிலே தீப்பிடித்து எரியும்போது, அனைவரும் சென்று கட்சி பாராட்டாமல், நீ காங்கிரஸ்-இங்கே வராதே, நீ கம்யூனிஸ்டு-இங்கே வராதே, நீ தி.மு.க., நீ தி.க., நீ அ.தி.மு.க. உங்களுக்கெல்லாம் அங்கே இடம் கிடையாது என்று எண்ணினால் -திட்டம் வகுத்தால்-வராதே என்று மிரட்டினால்-அது நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அறிகுறியாக அமையாது என்று தான் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களைத்திரட்டி-மக்களுக்காக நடைபெற வேண்டிய காரியங்களுக்காக-கிளர்ச்சி செய்து-வேண்டுகோள் வைத்து-ஆர்ப்பாட்டங்கள் நடத்தி-ஊர்வலங்கள் நடத்தி-பவனிகள் நடத்தி-பொதுக்கூட்டங்கள் நடத்தி -தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் சேர்ந்து இல்லாவிட்டாலும் -தனித்தனியாக இருந்து ஒரு கோரிக்கை நிறைவேறுகிற நேரத்தில்-

அது பொதுவான கோரிக்கையாக இருந்தால் அந்தக் கோரிக்கை நிறைவேறுகின்ற மகிழ்ச்சியில் - குதூகலத்தில்- அனைவரும் ஒரே மேடையில் இருந்தார்களேயானால் - நான் இந்தப்பாலத்தை பார்க்கின்ற பரவசத்தை விட-ஒரே மேடையில் எல்லா கட்சிக்காரர்கள் இங்கே இருக்கிறார்கள்-மாநகராட்சி மன்றத்திலே இருக்கின்ற கட்சிகள் எல்லாம் இன்றைக்கு வடசென்னையிலே நடைபெறுகின்ற பெரம்பூர் பாலத்திறப்பு விழாவிலே காணுகின்ற பாக்கியத்தை பெற்றோம்.

இது மேம்பாலத்தை கட்டித்திறந்ததை விட-எல்லோரும் ஒரே இடத்திலே அமர்ந்து -இந்த பொதுப் பிரச்சினையிலே பொறுப்போடு கலந்து கொண்டிருக்கிறார்களே என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதை நான் பெரிய பாக்கியமாகக் கருதுவேன். ஆனால் அது நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் -நாம் உருவாக்கிக் கொண்ட அரசியல் பண்பாட்டின் காரணமாக-அது இயலாமல் போகிறது.

இந்த மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்திற்கு சென்றால், அங்கெல்லாம் இந்த அளவிற்கு ஆக்ரோஷமான கருத்து வேறுபாடு கிடையாது. பொதுப்பிரச்சினைகளிலே எல்லோரும் ஒன்றாகக்கூடி மகிழ்கின்ற நிலை பக்கத்து மாநிலங்களிலே, கேரளா ஆகட்டும், அல்லது ஆந்திரா ஆகட்டும், ஏன் மேற்கு வங்கம் ஆகட்டும், திரிபுரா ஆகட்டும், டெல்லிப் பட்டணம் ஆகட்டும் - எங்கு சென்றாலும் அந்த பண்பாட்டை காண முடிகிறது.

தமிழ்நாட்டிலே தான் என்ன பாலம் பெரம்பூரிலே கட்டினாலுங்கூட நம்மிடையே பாலத்தை கட்ட முடியாமல் நாம் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.அது பண்புப் பாலம்-இது அன்புப் பாலம்- இது நட்புப் பாலம்-இது பொதுமக்களுக்காக இருக்க வேண்டிய பாலம்-அப்படிப்பட்ட பாலத்தை அமைத்தால் தான் இந்தப் பாலங்களால் உருவாகின்ற பயன்களை நாம் அடைய முடியும்.

இன்னும் பல பாலங்கள் இந்த பெரம்பூர் பகுதியிலே கட்டவேண்டும் -வடசென்னை பகுதியிலே கட்ட வேண்டும் என்று தம்பி டி.கே.எஸ். இளங்கோவனை போன்றவர்கள் இங்கே பேசும்போது குறிப்பிட்டார்கள். எனக்கும் அந்த கோரிக்கையிலே எந்தவிதமான மாறுபாடும் இல்லை.

எனக்கு மாறுபாடு இல்லாத காரணத்தால் அவைகளை நிறைவேற்றுகின்ற அந்தப் பணியிலே நிச்சயமாக இந்த அரசு ஈடுபடும். மாநகராட்சி மன்றமும் ஈடுபடும். நம்முடைய அதிகாரிகள் எல்லாம் ஈடுபடுவார்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறேன்.

இங்கே இந்த பாலம் கட்ட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தவர் - இந்தத் தொகுதியும் இணைந்து நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக வெற்றி பெற்று-மத்தியிலே அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்து-டோகா மாநாடு வரையிலே சென்று நம்முடைய இந்திய நாட்டின் குரலை ஓங்கியொலித்த தம்பி முரசொலி மாறன் அவர்களைப்பற்றி இங்கே பேசியவர்கள் எல்லாம் குறிப்பிட்டார்கள்.

அந்த முரசொலி மாறனுடைய பெயரை இந்தப்பாலம் பெறட்டும் என்று கேட்டுக் கொண்டு எல்லோரும் இதை ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு; இந்தப்பாலத்தின் வெற்றிக்கும் இதை அமைப்பதற்கும்பாடுபட்ட அனைவருடைய ஆர்வத்தையும் பாராட்டி, வாழ்த்தி விடைபெறுகிறேன்’’என்று பேசினார்.


No comments:

Post a Comment