தன்னுடைய பிறந்த நாளில் கோபாலபுரம் இல்லத்தை அரசுக்கோ அல்லது பொது அறக்கட்டளைக்கோ கொடுக்க உள்ளதாக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
சில விஷயங்களை நெஞ்சில் பதிய வைக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியோடு இங்கிருக்கிறேன். 1949 ம் ஆண்டு தி.மு.க.வை அண்ணா உருவாக்கியபோது, பிரசாரக் குழுவில் உறுப்பினராக இருந்து, பின்னர் கழகத்தின் பொருளாளராக இடம் பெற்று, பிறகு அண்ணாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல் அமைச்சராக உங்களின் அன்பான ஆதரவோடும், வாழ்த்துகளோடும் சுமார் 50 ஆண்டுகாலம் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகின்றேன்.
போதாது, இன்னும் கொஞ்சம் நாள் தொடர்ந்து இரு என்று சொன்னதைப் போல தம்பி பொன்முடியும் மற்றவர்களும் இங்கு பேசியுள்ளனர். நான் இருந்தது போதும், இதுவரை செய்தது இந்த நாட்டு மக்களுக்குப் போதும், இனி செய்ய வேண்டியதை இருப்பவர்கள் வந்து செய்யுங்கள் என்ற அழைப்புவிடுகின்ற நிலையிலே உள்ளவன். 86 வயதிலே இருக்கிறேன் என்று எனது வயதை இங்கு பேசியவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு என்னுடைய மனதில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்.
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக் காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தாதா? என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் பரவாயில்லை, சொல்லட்டும் என்று சொல்வதற்கு காரணம் உண்டு. இன்று வலுவான உடல் படைத்த வாலிபர்கள், தமிழன் என்று சொல்லிக் கொள்கிறவர்கள், தமிழ்த்தாய் கண் முன்னே ரத்தம் சிந்துவதை பார்த்துக் கொண்டு, சோம்பனாக படுத்துக் கொண்டு, தமிழன்னைக்கு மேலும் மகுடங்களைச் சூட்டுவோம் என்றில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களை எழுப்பவாவது, பார், அந்தக் கிழவனை, 86 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கிறான்' என்று சொல்வதன் மூலமாவது இளைஞர்களை தூண்டிவிட்டு உற்சாகத்தை ஏற்படுத்த, தமிழ் மீது பற்றையும், அதை காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தையும் உணர்வையும் எழுப்பிவிடத்தான், காலையில் இருந்து மேடைகளில் 86, 86 என்று சொன்னார்கள். நல்லவேளை என் மனைவி என்னோடு கூட்டத்துக்கு வரவில்லை. வந்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தி.மு.க. ஒரு உரிமை இயக்கம். மற்ற கட்சிகள், எதற்காக பாடுபடப் போகிறோம் என்பதையெல்லாம் மக்களிடம் சொல்லி ஆள் சேர்த்து இயக்கங்களை நடத்துவார்கள். தி.மு.க. அப்படி அல்ல. தொடக்கத்திலே இது தி.மு.க. என்ற பெயரோடு உருவானதல்ல. 50, 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி என்ற பெயரால் இந்த இயக்கம் உருவானது. நீதி கோருகிற கட்சியாக உருவானதால் அதற்கு அப்படி பெயர் வந்தது.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை, குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதன் நிழலிலே நீதி கோருகின்றார்கள். அவர்களுக்கு அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றால், வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பில் இடமில்லை. அவற்றை உயர் ஜாதிக் காரர்கள், சீமான்கள், பூமான்கள் அதை தங்களின் வேட்டைக் களமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில்தான் இவர்களும், பெரும்பான்மையாக இருந்த பின்தங்கிய சமுதாயத்தினரும், தங்களுக்கு ஆறுதலாக யார் வரப்போகிறார்கள்? என்று எண்ணிய போதுதான் நீதிக்கட்சி என்ற ஜஸ்டிஸ் கட்சி உருவானது.
நீதி கோரி தொடங்கிய கட்சி, இன்றைக்கும் அதே நீதியைக் கோரி இன்னமும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற நிலையில், அது தி.மு.க. என்ற பெயரில் இருந்தால்கூட, அன்று கோரிய நீதியை மறந்துவிடவில்லை. இன்னமும் அந்த நீதியைப் பெற நாட்டிலே போராடிக் கொண்டிருக்கிற கட்சி என்பதால்தான், நீதிக்கட்சியின் வேர் பட்டுப்போகவில்லை. அதன் விழுதாக முளைத்த கட்சிகள் பல பட்டுப் போயிருக்கலாம். நேரடியாக நீதிக்கட்சியில் இருந்து வந்த திராவிட இயக்கம், தி.மு.க. என்ற அரசியல் இயக்கமாக உருவெடுத்து, உங்கள் ஆதரவைப் பெற்று கடந்த பல ஆண்டுகாலமாக போராடி, ஜனநாயக போராட்டங்களில் வென்றுள்ளது.
தியாக வரலாற்றை உருவாக்கி, மொழி காத்து, மொழி காக்கும் போராட்டங்களில் 60 க்கும் மேற்பட்ட உயிர்களை ஈத்து, ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். அதன்பிறகு சென்னை ராஜ்யமாக இருந்த பெயரை தமிழ்நாடு என்று ஆக்கியதால்தான், அங்கு வாழுகிறவர்கள் தமிழனாக வாழ முடியும், அன்னிய மொழிக்கு இங்கு ஆதிக்கமில்லை என்று சொல்ல முடியும் என்பதற்காகத்தான் மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு, பல வெற்றிகளைப் பெற்று, உயிர்த்தியாகங்களை செய்து, அண்ணாவின் தலைமையில் அரசு அமைந்து, சென்னை ராஜ்யம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றி, காங்கிரஸ், கம்ழூனிஸ்டு கட்சிகள் உட்பட பெயரில் என்ன இருக்கிறது என்று கூறியவர்கள் உட்பட அத்தனை பேரும், வாழ்த்து கூறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றினர்.
நீதிக்கட்சி உருவான காலகட்டத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை ராஜ்யத்தில் பிரதமராக, பிரிமியராக இருந்தார். அப்போது கட்டாய இந்தியை அவர் கொண்டு வந்தார். அதை எதிர்த்து தாளமுத்து நடராஜன் போன்றவர்கள் சிறைச்சாலையில் உயிர் நீத்தார்கள். அதை எதிர்த்து சிங்கத் தமிழன் சின்னச்சாமி உட்பட பலர் தங்களை தீவைத்துக் கொண்டு மாண்டார்கள். அண்ணா பெற்றுத் தந்த தமிழ்நாட்டில் தமிழை வாழ வைக்க வேண்டும், பிற மொழிகளுக்கு ஆதிக்கம் கூடாது என்பதற்காகவே என்று ஏற்பட்ட அந்த கிளர்ச்சித் தீ, புரட்சி எரிமலை வெடித்து சிதறியது. பதவி, பவுசு, பட்டங்கள் போன்றவற்றை எதிர்பார்க்கும் கட்சியாக அல்ல, உணர்வைக் காட்டி, சமுதாய பெருமையைக் காட்டி, அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான அறப்போர் நடத்தி அதில் கண்ட வெற்றிதான் அண்ணாவை முதல் அமைச்சராகப் பெற்றது.
மக்களோடு மக்களாகப் பழகி அவர் கற்றுத் தந்த பாடம்தான், இன்று மந்திரிகளானாலும், முதல் அமைச்சர் ஆனாலும் அதே பாடத்தைத்தான் நான் கற்றுக் கொண்டிருக்கின்றேன். அந்தப் பாடத்தின் வழியில்தான் நான் நடக்கிறேன். மற்றவர்களும் அதுபோல் நடக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன். தி.மு.க. ஏழைகளின் இயக்கம். இங்கே ஏதோ பொன்முடி பொன்னாலான தகடுகளைத் என்னிடம் தந்தார். நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அது வெறும் தங்கமாக இருந்தால் வாங்கிய மேடையிலேயே வீசியிருப்பேன்.
ஆனால் அதில் பெரியார், அண்ணா உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், தங்கத்தை விட நான் அதிகம் நேசித்த சிங்கம் பெரியார், அண்ணாவை வீசிவிட்டவன் என்றாகிவிடுவேன் என்பதால்தான் நான் மேடையில் அதை ஏற்றுக் கொண்டேன். மேடையில் ஏற்றுக் கொண்டேனே அல்லாமல், அவை அனைத்தும் நாளைக்கு கலைஞர் கருவூலத்துக்குத்தான் போகுமே தவிர எனது வீட்டுக்குப் போகாது.
இன்னும் 100 ஆண்டுகள் கழித்து, எனது பேரன், பேத்தி, ஸ்டாலினின் பேரன், பேத்தி வந்து அண்ணா அறிவாலயத்தில் நடமாடும் போது, அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களாக, அந்த காலத்தில் நமது பாட்டன், பூட்டன் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள், எப்படியெல்லாம் அவர்கள் கொள்கைகளுக்கு மக்களிடையே வரவேற்பு இருந்தது, ஆதரவு இருந்தது என்பதை அந்த தங்கத் தகடுகளைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள். அதற்குத்தான் அது பயன்படுமே தவிர, அதை உருக்கி, அதை நகை, வளையல் செய்து, தங்கக் கயிறு செய்து எனது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கழுத்தில் மாட்டிக் கொள்ளும் எண்ணம் இல்லை. அப்படி கொடுத்திருந்தால், அதை அவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள். தலைவர்கள், பேச்சாளர்கள் வந்தால் அவர்களுக்கு வாழ்த்து பத்திரங்கள் கொடுங்கள். வாயால், கைகளால் வாழ்த்துங்கள். அப்படித்தான் வாழ்த்து இருக்க வேண்டுமே தவிர, அது பொன்னால் இருந்தால்தான் வாழ்த்து என்றிருக்கக் கூடாது. அதை வாழ்த்து என்றெண்ணாதீர்கள்.
ஏனென்றால், அந்தப் பொன்னின் துளியளவு தகட்டைப் பார்த்தாலே ஆகா, கண்ணைப் பறிக்கிறதே, என்று எண்ணும் ஏழை, எளியவர்கள் இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்களின் அன்பை, ஆதரவைப் பெற நாம் ஏழையைப் போல் நடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஏழைகளாகவே இருக்க வேண்டும்.
உங்களுக்கு தெரியும் கோபாலபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டை எனக்கு பிறகு மருத்துவ மனைக்கென்று எழுதி வைத்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு பிறகு அவ்வளவு காலம் என்னுடைய வீடாக இருக்க வேண்டுமா என்று என்னுடைய கேள்விக்கு நான் அளித்துக் கொண்டிருக்கக்கூடிய பதில் வருகிற ஜுன் மாதம் 3 ந் தேதி என்னுடைய பிறந்த நாளென்று சொல்கிறார்கள். அன்றைக்குக்கூட அன்று நான் எழுதி வைத்த கோபாலபுரம் வீட்டை அரசுக்கோ அல்லது பொது அறக்கட்டளைக்கோ கொடுத்துவிடத்தான் போகிறேன்.
இதை சொல்வதற்கு காரணம் பற்றில்லாமல் வாழ வேண்டும். அந்த வாழ்க்கை அரசியலுக்கு பயன்பட வேண்டுமென்றால் அந்த அரசியல் புனிதமான அரசியலாக இருக்க வேண்டும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் மக்களும் நம்மை பார்த்து நடந்து கொள்வார்கள். ஆனால் மக்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்பதற்காக நாம் ஏழையாக இருக்க முடியாது. நாம் ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் அதே நேரத்தில் மக்களையும் ஏழ்மையில் இருந்து விடுவிப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த சபதத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.
உண்மையான வாழ்க்கை மக்களை வாழ வைக்கின்ற மன திண்மையான வாழ்க்கை பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுக்களை வெறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக எல்லோரும் புத்தனாக, சித்தாந்தனாக இருக்க வேண்டுமென்று சொல்ல வில்லை. குறைந்த பட்சம் காந்தியடிகளைப்போல, வினோபாஜியைப்போல, அந்த அளவுக்குக்கூட வேண்டாம் அண்ணாவைப்போல ஒரு வேட்டி, துண்டோடு கடைசி வரை வாழ்ந்தாரே அப்படி எளிமையானவர்களைப்போல வாழ்ந்தாலே போதும். ஒரு கட்சி நடத்துபவர் என்ற எளிமை நமக்குத்தேவை. நாம் எளிமையாக இருந்தால்தான் எளியவர்களை காப்பாற்ற முடியும்.
நாங்கள் புரிந்த சாதனைகளை நீங்கள் எப்படி உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் உங்களை அடிக்கடி சந்திக்கிறோம். இங்கே பேசிய மு.க.ஸ்டாலின் பொன்முடி ஆகியோர் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினார்கள். நாங்கள் புதியதாக தம்பி ஸ்டாலினை முன் வைத்து நடத்த இருக்கிற ஒரு பெரிய சாதனை இனி தமிழ்நாட்டில் குக்கிராமங்கள், சிற்றூர்கள், குடிசை வீடுகள் கிடையாது. குடிசை வீடுகளை இடித்துவிட்டு அத்தனையும் காங்கிரீட் வீடுகள். இந்த திட்டத்திற்கு கலைஞர் திட்டம் என்றாலும்கூட இது ஏழை, எளியவர்களின் திட்டம்.
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிக குடிசைகள் உள்ளன. ஆக நாங்கள் களத்தில் இறங்க வேண்டிய முதல் இடமே விழுப்புரம்தான். இந்த திட்டம் 3 லட்சம் வீடுகள் இந்த ஆண்டு 1,800 கோடி ரூபாய். எங்கே இருக்கிறது பணம். யாரோ கேட்ட குரல் காதில் விழுகிறது, சட்டசபையில் கேட்ட குரல். நாங்கள் நினைத்தால் பணத்திற்கா பஞ்சம். நாங்கள் என்ன மடாதிபதிகளா, லட்சாதிபதிகளா, கோடீஸ்வரர்களா இல்லை. நாங்கள் ஏழைகளுக்காக வாழ்பவர்கள், ஏழைகளுக்காக சிந்திப்பவர்கள்.
ஏழைகளுக்காக சிந்திக்கின்ற ஒரு ஆட்சிக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பணம் கிடைக்கும். இந்த திட்டம் நிறைவேற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய திறமை ஸ்டாலினிடம் உள்ளதால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இந்த திட்டம் நமது வரவு, செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு ரூ.1,800 கோடியில் முதல் கட்டமாக நிறைவேறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதைவிட இன்னொரு திட்டத்தையும் நான் அறிவித்திருக்கின்றேன். மனித உறுப்புகள் கண் பார்வை இழந்தால் அவரை குருடன் என்கின்றோம், வாய் பேச முடியாவிட்டால் ஊமை என்கிறோம். கால் நொண்டியாகிவிட்டால் அவனை முடவன் என்கிறோம். கை இல்லை என்றால் முடவன் என்கிறோம். இனி அப்படி அவர்களை அழைக்கக்கூடாது. மாற்றுத்திறனாளி என்றுதான் அனைவரும் அழைக்க வேண்டும்.
மாற்றுத்திறனுடையவருக்காக ஒரு தனி இலாகாவை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் கையெழுத்திட்ட நாடுகளில் 7 வது நாடு இந்தியா. அதனால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா எண்ணவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நினைவூட்ட இருக்கிறேன். நினைவூட்ட வேண்டுமா, வேண்டாமா என்று இங்கு விழுப்புரத்தில் குழுமி இருக்கும் நீங்கள் கையை உயரே தூக்கி உங்கள் பதிலை தெரிவியுங்கள். (முதல் அமைச்சர் இவ்வாறு கூறியதும் மேடை முன்பு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்கள் கைகளை உயரே தூக்கி ஆதரவு தெரிவித்தனர்). அதுமட்டுமன்றி ஐ.நா.சபையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஒரு இலாகாவும், அதற்கொரு மந்திரியும் நியமிக்கலாம் என்று கருதுகிறேன். அவைகள் எல்லாம் நிதிநிலை அறிக்கையை பேராசிரியர் படித்த பிறகு அதை தொடர்ந்து அவைகள் அறிவிக்கப்பட்டு அந்த சாதனையும் நிறைவேற்றப்பட உள்ளது. இந்திய மக்கள் தொகையில் மாற்றுத்திறன் படைத்தோர் 2 அல்லது 3 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 18 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வளிக்க அடுத்த திட்டத்தை இந்த அரசு கொண்டு வரும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை.
No comments:
Post a Comment