
சென்னை மேயர் மா.சுப்பிரமணியன்08.09.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞர் வீட்டிலும், அண்ணா அறிவாலயத்திலும் மாநகராட்சி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுவது பற்றி கேட்டனர். அதற்கு மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் வசிக்கும் கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்த பிறகும் தொடர்ந்து பொய் புகார்களை கூறுவது வேதனை அளிக்கிறது. சென்னையில் பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு தூய்மைப்பணியை செய்வதற்காக தெருக்களில் வீடுகளுக்கிடையே சந்துக்கள் இருந்தன. பாதாள சாக்கடை திட்டம் வந்ததும் அந்தந்த வீட்டு உரிமையாளர்களே சந்துக்களை உபயோகித்து வருகிறார்கள். தி.மு.க. தலைவர் கலைஞர் 1968ம் ஆண்டே வீட்டுப்பகுதியில் உள்ள சந்தை உபயோகப்படுத்த ரூ. 3650 அரசுக்கு செலுத்தி உள்ளார். தீவிர பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அவருக்கு பாதுகாவல் பணியில் இருக்கும் போலீசாருக்காக இப்போது அந்த இடத்தில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை அவரே தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். அப்படி இருந்தும் தொடர்ந்து வீசப்படும் பழி தி.மு.க.வை களங்கப்படுத்துவதற்குத்தான். கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சியில் ரூ. 4 ஆயிரம் கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு கிரவுண்டு கூட மீட்கப்படவில்லை. அண்ணா அறிவாலயத்துக்கு முன்புள்ள பூங்காவை அறிவாலயமே பராமரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. ஆக்கிரமிப்பு இருப்பதாக சொல்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் அண்ணா அறிவாலய பூங்காவுக்கு செல்லலாம், அமரலாம் என்றார்.
No comments:
Post a Comment