பரமக்குடி கலவரம் தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவு நாளினையொட்டிய நிகழ்ச்சிகள் பரமக்குடியில் நேற்று நடை பெற்றிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சாலை மறியல், கலவரம் இவற்றின் காரணமாக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிர் இழந்திருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் படுகாய மடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் ஜான்பாண்டியன் பரமக்குடி வந்தால் வன்முறை நிகழலாம் என்று கருதி, அவருடைய வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததையொட்டி, ஜான்பாண்டியனும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவே, கலவர நிகழ்வுகள் பரமக்குடியிலும் மதுரையிலும் நடைபெற்றிருக்கின்றன.
ஜான்பாண்டியனை பரமக்குடிக்கு வர அனுமதித்திருந்தால் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும், அவர் வருவதைத் தடை செய்து, கைது செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் முன் கூட்டியே சிந்தித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தால், கலவரம்-துப்பாக்கிச்சூடு போன்ற வேண்டத்தகாதவற்றைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. நடைபெற்று விட்ட நிகழ்ச்சிகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று பல்வேறு கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அந்தக் கோரிக்கை அலட்சியப்படுத்தப்படக் கூடியதல்ல. எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவங்கள் ஏற்படாதவாறு ஆட்சியினர் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புகிறேன். உயிரிழந்தோரின் குடும் பங்களுக்கு என்னுடைய ஆழந்த இரங்கலையும், காயமடைந்தோருக்கு என்னுடைய அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment