கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, October 31, 2011

நம்மை நோக்கி வருகின்ற காவல்துறை அஞ்சி நடுங்க வேண்டும்: கலைஞர் பேச்சு




தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்பதின் மூலம் நம்மை நோக்கி வருகின்ற காவல் துறையாக இருந்தாலும், எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அரசின் அத்து மீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் (10.09.2011) நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமை தாங்கினார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.


தி.மு.க. தலைவர் கலைஞர் பேசுகையில்,


தி.மு.கழகத்திற்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி எத்தகையது என்பதை நாங்கள் பல நேரங்களிலே எடுத்துக் காட்டியிருக்கிறோம். இங்கே வந்திருக்கின்ற நீங்களும் அனுபவ ரீதியாக அவற்றை உணர்ந்திருக்கிறீர்கள்.

இந்திராகாந்தி காலத்தில் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டில் இருந்த அதிகாரிகள், காவல் துறையினர், சிறைத் துறையினர் இவர்கள் எல்லாம் நம்முடைய கழகக் கண்மணிகளை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்தினார்கள் என்பதை நான் இப்பொழுது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.


அந்தக் காலக் கட்டத்திலேயே தி.மு.கழகத்தை யாரும் அடியோடு வீழ்த்தி விட முடியவில்லை. தி.மு.கழகம் அன்றைக்கும் வளர்ந்தது, வலிமையோடு வளர்ந்தது, இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற சோதனைகள் அது வீரத்தோடு, நெஞ்சுரத்தோடு நடைபெற்ற காரியங்கள் நெருக்கடி காலத்திலே என்றால் இன்றைக்கு வஞ்சகத்தோடு நம்மை எப்படியும் அழித்து ஒழித்து நாம் இருக்கின்ற இடத்திலே அவர்கள் வந்து அமர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு நடைபெற்ற தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரியம் தான் இன்றைக்கு நடைபெறுகிறது.

இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளை யெல்லாம் சந்திப்போம் அதிலிருந்து மீண்டு வருவோம் நாம் மாத்திரமல்ல, நம்முடைய கழகத்தையும் மீட்போம் என்ற அந்த உணர்வோடு தான் வழக்கறிஞர்களாகிய நீங்கள் எல்லாம் இங்கே குழுமியிருக்கிறீர்கள்.


இந்த அரசு மாத்திரம் இவ்வளவு கொடுமைகளை இழைக்காமல் இருக்குமேயானால், இவ்வளவு பேர் சிறையிலே தள்ளப்படாமல் இருந்திருப்பார்களேயானால் இவ்வளவு வழக்கறிஞர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாமலே போயிருக்கும்.


அந்த வகையிலே நீங்கள் இன்று வரையிலே நம்முடைய கழகத் தோழர்களை மீட்பதற்காக கழகக் கண்மணிகளைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது படிந்திருக்கின்ற புழுதிகளைத் துடைப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளையெல்லாம் நான் பாராட்டுகிறேன். தொடர்ந்து அந்த முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே நான் கேட்டுக் கொண்டு தம்பி பாரதி படித்த அந்தக் கேள்விகளை மனதிலே வைத்துக் கொண்டு அந்தக் கேள்விகளைக் கேட்டாலே நம்மை நோக்கி வருகின்ற காவல் துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே அவர்கள் பயப்பட வேண்டும்.


அதற்கேற்ப இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் மனதிலே வைத்துக் கொண்டு "ரைட்டு இன்பர்மேஷன்'' என்ற அந்தத் தலைப்பில் "இன்பர்மேஷன்'' என்று எண்ணினாலே எதற்காக இந்த இன்பர்மேஷனை கோருகிறார்கள் என்கின்ற பயம் அவர்களுக்கு ஏற்படும். அந்தப் பயமே கூட நம்மைப் பாதுகாக்கின்ற ஒரு எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே அதையும் பயன்படுத்துங்கள்.


நம்முடைய கழகக் காவலர்களுக்கு இது போன்ற தொல்லைகள் ஏற்படும்போது அவர்களை கைது செய்திருக்கிறோம், சிறையிலே வைத்திருக்கிறோம், அவர்களுக்கு ஜாமீன் தர மாட்டோம்

என்றெல்லாம் சொல்லுகிற போது அவர்களுக்கு அரணாக இருந்து, அவர்களுக்கு துணையாக இருந்து, அவர்களை மீட்டுக் கொண்டு வருகின்ற அந்தப் பணியினையும் நீங்கள் தான் ஆற்ற வேண்டும்.


அப்படி ஆற்றுகின்ற அந்தப் பணி அரும்பணியாக, அறிவுப்பணியாக, கழகத்தைக் காப்பாற்றுகின்ற பணியாக அமைந்திட வேண்டும், அதற்காக செலவழிக்க வேண்டாமா என்று நீங்கள் கேட்பது உங்கள் உள்ளங்களிலே ஒலிப்பது என்னுடைய காதுகளிலே வீழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தி.மு.கழகம், பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்து விட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி என்பதை மறந்து விடாமல் வழக்கறிஞர்கள் தங்கள் வாக்குச்சாதுர்யத்தையே தங்களுடைய வாத வல்லமையையே தங்களுடைய நா திறமையையே நம்பி வழக்காடி அந்த வழக்கிலே வெற்றி பெற்றோம் என்ற நல்ல செய்தியை எங்களுக்கு அறிவிக்க வேண்டும்.

செலவு செய்வதற்கு உங்களைச் சுற்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கழகம் இருக்கிறது. கழகம் என்பது தலைமைக் கழகம் மாத்திரமல்ல ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட கழகத்திற்கு எத்தனை கிளைகள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எனவே மகாப் பெரிய இந்த பேரியக்கத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உங்களுக்கு இருப்பதை மனதிலே பதிய வைத்துக் கொண்டு இதற்கெல்லாம் போய் நாம் தலைமைக் கழகத்தை எதிர்பார்க்கக் கூடாது, தலைமைக் கழகத்தை எதிர்பார்க்கக் கூடிய காலம் வேறு உண்டு, அந்த நேரத்தில் எதிர்பார்ப்போம், அப்படி எதிர்பார்க்கின்ற நேரத்தில் அவர்கள் நம்மை ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் பணியினை ஆற்றுங்கள்.

நீங்கள் பெருந்திரளாக இன்றைக்கு வந்திருப்பதை இந்தச் சர்க்காரை இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாக நான் கருதுகிறேன்.

என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.



No comments:

Post a Comment