கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, April 26, 2010

நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்:கலைஞர் உருக்கமான பேச்சு

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் சட்டமேதை அம்பேத்காரின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடந்தது.

பிரமாண்டமான அம்பேத்கார் சிலையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.


’’தி.மு.க. அரசை பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கார் புகழை பாடுவதிலும் அவரது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக மக்கள் மத்தியில் பதிய வைத்து நிறைவேற்றுவதிலும் எந்த மாநில அரசுக்கும் தமிழ்நாடு பின் தங்கியதில்லை.

முன்னேறி வருகிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மேலும் முன்னேற்ற பாடுபடும் அரசுதான் தமிழக அரசு என்பதை இங்கு சுட்டிக்காட்டிட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்காரின் சிலை வடிவத்தை பார்க்கிறேன். ஒரே ஒரு கை விரலை உயர்த்திக் காட்டுவதை பார்க்கும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னதுதான் எனது நினைவுக்கு வருகிறது.

இங்கு இந்த சிலை திறக்கும்போது நான் அண்ணாவுக்கு பாடிய இரங்கல் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. இங்கு வக்கீல்கள் நிரம்ப குழுமி உள்ளீர்கள். அவர்களுக்கு வழி காட்டக்கூடிய நீதியரசர்களும் தலைமை நீதிபதியும் அமர்ந்திருக்கிறீர்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவமும், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் எடுத்துக்காட்டிய பல்வேறு கருத்துக்கள், உயர்ந்த வாசகங்கள், அனைத்தும் இந்த நாட்டில் அமைதியை, அன்பை காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.

ஜனநாயகத்தை யாரும் எத்தகைய வழியிலும் வீழ்த்த நினைப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வேன் ஜனநாயகத்தில் அநாகரீகத்தை புகுத்த நினைத்தால் எந்த காலத்திலும் அதற்கு தலைவணங்க முடியாது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இங்கு நீதியரசர்கள் இருக்கும் நிலையில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

எனக்கு 87 வயது நிறைவடைகிறது. 70 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வாழ்க்கையில் எதிர்ப்புகள், ஏளனங்கள், ஏச்சு-பேச்சு, கல்வீச்சு கண்டனங்கள் இவைகளையெல்லாம் கண்டிருக்கிறேன்.


நான் பெரியாரின் மாணவனாகவும், அண்ணாவின் தம்பியாகவும், அம்பேத்காரின் கொள்கைகளை நெஞ்சில் பதிய வைத்தும் நடந்து வருகிறேன். எனது 15-வது வயதிலேயே நான் தொடங்கிய பொது வாழ்க்கை ஆதி திராவிடர் காலனியில்தான் ஆரம்பமாகியது.

முதன் முதலாக நான் கொடி ஏற்றியதும் ஆதிதிராவிடர் காலனியில்தான். ஆதி திராவிடர்களுக்கு பாடுபட்டவன் என்ற முறையில் இன்றும் அந்த சமுதாய முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன். நான் இப்படி பேசுவதால் இங்கு அரசியல் பேசுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருதக்கூடாது. சமுதாய கருத்துதான். 1973- 1976-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சி நண்பர் சட்டசபையில் என்னை பார்த்து 3-ம் தர சர்க்கார் என்றார்.


இதை கேட்டு என் பின்னால் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு சொல்ல நான் அவர்களை கையை காட்டி அமைதியாக உட்கார வைத்துவிட்டு பேசினேன். அவர் சொல்வதில், தப்பில்லை. 3-ம் தர சர்க்கார் என்பது தவறு. 4-ம் தர சர்க்கார் என்று கூறி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த வரிசையில் இது 4-ம் தர மக்களுக்காக பாடுபடும் அரசு என்றேன்.

இதை கேள்விப்பட்டு அப்போது திருச்சியில் இருந்த பெரியார் தந்தி கொடுத்து பாராட்டினார். எனவே எவ்வளவு எதிர்ப்பு, ஏச்சு இருந்தாலும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன கொள்கையை நான் கடைபிடித்து வருகிறேன்.

நான் இங்கே வந்ததும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் ஒரு கோரிக்கை மனுவை தந்தார். எனக்கு எதிரான வாசகங்களை அதில் தந்திருப்பாரோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அவர் நாகரீகமான மனிதர். வக்கீல்களுக்காக சில கோரிக்கைகளைத்தான் அவர் வைத்துள்ளார். எல்லா வக்கீல்களும் சுகபோகத்தில் இல்லை. தற்போது வக்கீல்களுக்கு வழங்கப்படும் சேம நல நிதி இழப்பீட்டு தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.


ரூ.5 லட்சம் என்ன? அதற்கும் அதிகமாக தர தயாராக இருக்கிறேன். ஆனால் தற்போது சட்டமன்றம் நடக்கிறது. இந்த நேரத்தில் ஏதாவது நான் கோரிக்கையை நிறைவேற்றப் போகிறேன் என்று சொன்னால் சட்டமன்றம் நடக்கும்போது இதை எப்படி வெளியே அறிவிக்கலாம் என்று கேட்பார்கள். எனவே நீதிக்கு பயந்து அல்ல. சட்டத்துக்கு பயந்து சொல்கிறேன். வெளியிட வேண்டிய நேரத்தில் இதை அரசு சார்பில் வெளியிடுவேன்.

இன்னொரு கோரிக்கையையும் வைத்திருந்தார். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்த நீங்கள் வக்கீல்களின் மருத்துவ அறக்கட்டளைக்கு 10 கிரவுண்டு இடம் ஒதுக்கி தந்தால் மருத்துவ சிகிச்சைகளை மேலும் பெற முடியும் என்று கூறி இருந்தார். இதுவும் செய்ய முடியாத கோரிக்கை அல்ல.


அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும். சட்டமன்ற நிகழ்ச்சி முடிந்து இவைகளை கொண்டு வர பாடுபடுவேன். வக்கீல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடித்தமான ஒன்று.

பொது வாழ்க்கையில் யாரோடு தொடர்பு அதிகம் என்றால் போலீசாரோடு, வக்கீலோடுதான் அதிக தொடர்பு. ஏனென்றால் என்னை போலீசார் கைது செய்யும் போதெல்லாம் என்னை காப்பாற்றும் வேலையில் ஈடுபடுவது வக்கீல்கள்தான். எனக்காக வாதாடுவதும் வக்கீல்கள்தான். ஆனாலும் நான் இவர்கள் மீது என்றைக்கும் ஆத்திரப்படவில்லை.

போலீசார், போலீசாரின் குடும்பத்தினர் படும் துயரங்களை நாடகமாக போட்டு நடித்த காலத்தில் அந்த நாடகத்தையே தடை செய்தார்கள். ஆனால் சட்டசபையிலேயே அந்த நாடக பாட்டை பாடி அதை கேட்க செய்தேன். எப்போதும் என் மீது விழும் அம்புகளை மலர் கணைகளாகத்தான் எடுத்துக் கொள்வேன். என் மீது வீசும் மாலை, கணைகளை என்றைக்கும் தாங்கித்தான் பழக்கப்பட்டவன். என் இதயத்தை திறந்து பார்த்தால் காயங்கள் இருக்கும்.

நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான். உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது போல் சகாயத்தை விரும்புகிற காரணத்தால் தனிப்பட்ட ஒருவனுக்காக அல்ல சமூக நீதிக்காக போராடும் மக்களுக்காக நீங்கள் எல்லோரும் எதிர்காலத்தை வழிகாட்ட வேண்டும். இங்கு நீதிபதிகள் தமிழில் பேசியதற்காக கரவொலி எழுப்பினார்கள்.


அந்த தமிழ் உச்சநீதி மன்றத்திலும் ஒலிக்க வேண்டும். முதலில் உயர்நீதிமன்றத்திலாவது ஒலிக்க வழிகாட்ட வேண்டும். வீரப்ப மொய்லி என்னைப்பற்றி இங்கு பேசும்போது, நானும் அவரும் ஒரே ஜாதி என்று குரல் பட பேசினார். பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒன்று சேர்ந்து பாடுபடுகிறோம் என்று அர்த்தமாகும். அவரது பேச்சில் வேகம் இருந்தது. அது தாழ்த்தப்பட்ட மக்களின் இதயதாபமாகும்.

அம்பேத்காருக்கு பெருமை சேர்க்க இங்கு அவரது சிலையை திறந்து வைத்ததற்காக உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று பேசினார்.


No comments:

Post a Comment