இதுகுறித்து முரசொலி பத்திரிகையில் அவர் கூறியுள்ளதாவது,
கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப் பட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம். மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்துக் கலைஞரின் மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகின்றது.
விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் (அதிகாலை 1 மணி), தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்குச் செய்தி கிடைத்ததாக் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.
இந்த நேரத்தில் ஐயாவை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும்? என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர். இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, உதவிட இயலுமா? என்று கேட்டார்.
அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், கலைஞரையும், அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக்கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன். இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை என்று அவர் கூறினார். அப்படியானால், வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.
வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.
விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் கலைஞரைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.
கருணாநிதியைத் தமிழ்ச் சமூலகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.
எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ஆம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.
பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் கலைஞரைத் தமிழ்ச் சமூகம் போற்றும்.
வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.
அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய பாவிகளை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
நீங்கள் தேடும் அந்தப் பாவி போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என்று சுப. வீரபாண்டியன் முரசொலி பத்திரிகையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment