கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, April 6, 2010

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கவும் தயார்: கலைஞர்


போலி மருந்து குறித்த பிரச்சனையில் மாநில அரசு மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், இந்த விவகாரம் மற்ற மாநிலங்களுக்கும் பரவியிருந்தால் சிபிஐ விசாரணை கேட்கவும் தயங்க மாட்டோம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

சட்டசபையில் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய அவர் மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் செயல்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் போலி மருந்து விற்பனை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பி.கே.சேகர்பாபு (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன்(பாமக), நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் விவாதத்தில் கலந்துகொண்டு பேசினார்கள்.

உயிருக்கு உலைவைக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். உறுப்பினர்களின் விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் கருணாநிதி கூறியதாவது:

உறுப்பினர்களின் விவாதம் ஏற்படுத்திய உணர்வுக்கும், மக்கள் பீதிக்கு உள்ளாகும் அச்சத்துக்கும் உள்ள வேறுபாட்டை மறந்து விடக்கூடாது. நாம் பேசுகின்ற விஷயங்கள் மாநிலத்தையோ, நாட்டையோ, பிற மாநிலங்களையோ பாதித்து விடும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதே சமயம் மக்கள் பெரும் பீதிக்கு ஆளாகும் நிலையையும் ஏற்படுத்தக்கூடாது.

தமிழ்நாட்டில் 539 மருந்து தயாரிப்பு கம்பெனிகள் உள்ளன. 42 ஆயிரத்து 500 சில்லறை மற்றும் மொத்த மருந்து வியாபாரிகள் உள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு தரமான மருந்து மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.

அதன்படி போலி மருந்து விற்பனை செய்து அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என்றும் குறைந்த பட்சம் அபராதம் ரூ.10லட்சம் விதிக்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இத்தகைய குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை கேலிக்கூத்தாகவே இருந்தது.கடந்த 2001ம் ஆண்டு மீனாட்சி சுந்தரம் மீது மருந்து உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதற்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவருக்கு வெறும் 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் களையும் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மற்றொரு வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும் நீதிமன்றம் களையும் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இப்படி தண்டனை அளிக்கப்பட்டால் அதை எல்லோரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். எனவேதான் உயிரோடு விளையாடும் இத்தகைய குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு போலி மருந்து தயாரிப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் மருந்து மற்றும் அழகு சாதன சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது.

தமிழ்நாட்டில் நடந்த குற்றத்தை இரண்டு வகையாக பிரிக்க வேண்டும். ஒன்று போலி மருந்து தயாரிப்பு. இரண்டாவது காலாவதி மருந்து விற்பனை. காலாவதி மருந்துகளை விற்பதால் உயிருக்கு பெரிய அளவு ஆபத்து இருக்க வாய்ப்பில்லை. ஏன் என்றால் அந்த மருந்தில் உள்ள சத்து குறைந்து விடுகிறது. ஆனால் போலி மருந்து தயாரிப்பு என்பது அந்த மருந்தே விஷமாக ஆகிவிடும் தன்மை கொண்டதாகும்.

எனவே காலாவதி மருந்து விற்பனை கொஞ்சம் பரவாயில்லை என்றே எண்ண வேண்டும். தமிழகத்தில் அதுதான் வெளிச்சத்துக்கு வந்து கடந்த மாதம் தலைமைச் செயலாளர், உயர் போலீஸ் அதிகாரிகள், அதிகாரிகள், அமைச்சர் ஆகியோரை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தினேன். அதன்படி உடனடி நடவடிக்கையை அனைவரும் எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை எடுத்ததால்தான் தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்று கருதி வியாபாரிகள் கூடை கூடையாக காலாவதி மருந்துகளை குப்பைகளில் கொட்டி தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள். இந்த செயல்பாடு அரசு நடவடிக்கை எடுத்தததால்தான் ஏற்பட்டுள்ளது.எப்போதுமே கள்ளச்சந்தையில் அரிசி மூட்டைகள் சில மாநிலங்களுக்கு கடத்தும்போது காவல்துறை பிடித்தால் அதைப்பாராட்டமாட்டார்கள்.

கள்ளச்சந்தை பெருகிவிட்டது என்றே எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். கடத்தல் அரிசியை பிடிக்கா விட்டால்தான் தவறு. பிடிப்பது எப்படி தவறாகும்.எனினும் அரசு மீது குற்றம்சாட்ட இதுபோன்ற விஷயங்கள் பயன்படுகின்றனன.எதிர்க்கட்சிகள் பாராட்டும் என்று கருத முடியாது. அப்படி பாராட்டவும் கூடாது. பாராட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் எதற்கு? நீங்கள் சுட்டுக்காட்டுவதால்தான் எங்களால் தவறுகளை திருத்திக்கொள்ள முடிகிறது. நாங்களும் அதையேதான் செய்தோம். ஆனால் உங்களைப்போல (அதிமுக) முரட்டுத் தனமாக நடந்து கொண்டதில்லை. போலி மருந்து விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை ஏற்ற நடவடிக்கைகளை உடனடி நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

தொடர்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். சென்னையில் இந்த மருந்து பிரச்சனை எழுந்தபோது அதை சென்னை போலீஸ் விசாரித்தது. அது மற்ற மாவட்டங்களிலும் பரவியிருப்பதால் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

ஒருவேளை இந்த விவகாரம் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது தெரிந்தால் சிபிஐ விசாரணை கேட்கவும் தயங்க மாட்டோம்.

எனினும் மக்கள் பீதிக்கு அணைபோடும் வகையில் நாம் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும். செய்திகளை வெளியிடுவோரும் இந்த பொறுப்புணர்வை உணரவேண்டும். அதற்காக இதனை மறைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. தவறுகளை சுட்டிக்காட்டும்போதுதான் அதை திருத்திக்கொள்ள முடியும் என்றார்.


No comments:

Post a Comment