கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 1, 2011

முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு தினம் : மு.க.அழகிரி மரியாதை


காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் 14ம் ஆண்டு நினைவு தினம் 31.07.2011 அன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி மல்லாங்கிணறு கூட்டுறவு வங்கி முன்பிருந்து நடந்த ஊர்வலத்தை விருதுநகர் மாவட்ட திமுக செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். திமுகவினர் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தங்கபாண்டியன் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் கே.பி.ராமலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, துணை செயலாளர் எம்.எல்.ராஜ், மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் திருச்சுழி பொன்னுதம்பி, காரியாபட்டி சண்முகசாமி, மாவட்ட கவுன்சிலர் நரிக்குடி போஸ், நரிக்குடி ஒன்றிய சேர்மன் சுந்தரி தங்கபாண்டி, விருதுநகர் மாவட்ட துணை செயலாளர் ரூபசுந்தரி, ரெட்டியபட்டி சேதுராமன், திருச்சுழி ஒன்றிய அவை தலைவர் அழகர்சாமி, கல்லூரணி ஜெய்சங்கர், திருமலைபுரம் ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பரளச்சி சத்தியசுந்தர், பூலாங்கால் டென்மார்க் ராஜகம்பள மகாஜன சங்க தலைவர் பால்சாமி, ரெட்டியார் நல அறக்கட்டளை முன்னாள் தலைவர் சந்திரபாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் உள்பட 7 பேர் கைது: 5 பிரிவுகளில் வழக்கு பதிவு


சமச்சீர் கல்விக்கு ஆதரவாக பள்ளி மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தி.மு.க. அழைப்பு விடுத்திருந்தது. இதையொட்டி கடந்த 29.07.2011ல் கொரடாச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திருவாரூர் தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு பிறகு மாணவர்கள் வீடு திரும்பினர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் சென்ற அரசு பஸ் மஞ்சக்கொல்லை என்ற இடத்தில் கவிழ்ந்தது. இதில் மாணவன் விஜய் (13) சம்பவ இடத்திலேயே பலியானான். 20 மாணவ மாணவிகள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெருமாளகரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மாணவர்களை திரட்டி தி.மு.க.வினர் போராட்டம் செய்தனர். மேலும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்றும் இதனால் மாணவன் விஜய் உயிர் இழக்க நேரிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் 30.07.2011 காலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் சென்று கொண்டிருந்த திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட கொரடாச்சேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாலச்சந்திரன் (40), தி.மு.க. பிரமுகர்கள் சங்கர் (30), பிரபாகரன் (35), விமலாதித்தன் (20), சுப்பிரமணியன் (37), மகாராஜன் (25), ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரையும் திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் சந்திரசேகரன் 7 பேரையும் ஆகஸ்டு 12 ந்தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 7 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திருவாரூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143 (அனுமதியின்றி கூடுதல்) 268 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) 506 (2) கொலை மிரட்டல், 188 (நடை முறை உத்தரவை மீறுதல்), 120 பி (குற்றசதி) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எழுச்சியால் ஸ்டாலின் மட்டும் விடுதலை : திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை


நாடு முழுவதும் எழுந்த எழுச்சியின் காரணமாக ஸ்டாலினை மட்டும் விடுதலை செய்து இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி 31.07.2011 அன்று எழுதியுள்ள கேள்வி&பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா அளித்த பேட்டியில், பழி வாங்கும் நோக்கத்தோடு யாரையும் கைது செய்யவில்லை என்று சொல்லியிருக்கிறாரே?
ஜெ.அன்பழகனை அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கைது செய்திருக்கிறார்கள். புகார் கொடுத்தவர் யார் தெரியுமா? 2009ம் ஆண்டு ஆகஸ்டில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் ஸீ250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த ஒருவர். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தவர். ஒரு மாவட்ட செயலாளரை, எம்எல்ஏவை காவல் துறை அதிகாலையில் கைது செய்திருக்கிறார்கள் என்றால் அது பழிவாங்கும் செயல் அல்லவா? படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது அவர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் சென்றபோது யாரோ ஒருவர் புகார் செய்திருக்கிறார் என்று கைது. அந்தப் புகார் பற்றி விசாரிக்கப்பட்டதா?
அதைப் போலவே திருவாரூரில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் பள்ளி மாணவன் ஒருவன் இறந்ததையொட்டி, அந்த விபத்து ஏற்படவே திமுக மாவட்டச் செயலாளர்தான் காரணம் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்து அதற்காக அவர் கழகப் பிரச்சாரத்திற்காக திமுக பொருளாளரோடு பயணம் செய்த நேரத்தில் கைது செய்வது முறைதானா?
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் சொல்லி யிருக்கிறாரே?
ஓ! இதன் விளைவுதான் �தா.பாண்டியனைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 30 கிளைகள் கலைப்பு�, �1000 பேர் விலகினர்� என்ற செய்தியா?
ஆளுங்கட்சிக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதில் தமிழ் ஏடுகள் சிலவற்றுக்கு மத்தியில் பெரிய போட்டி நிலவுகிறதே?
ஆட்சிக்கு ஒரு கட்சி வந்தவுடன், அதனை ஆதரிக்க இப்படிப்பட்ட போட்டிகள் இருக்கத்தான் செய்யும்.
ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமரும், சோனியா காந்தியும் பதிலளிக்க வேண்டுமென்று ஜெயலலிதா பேட்டியில் கேட்டிருக்கிறாரே?
பொதுத் தேர்தலுக்கு முன்பு இதே ஜெயலலிதா, ஆ.ராசா மீது காங்கிரஸ் தலைவரும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்க வேண்டும், அப்படி செய்தால் அதிமுக நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் அரசுக்கு அளிக்கும் என்று இதே ஜெயலலிதா சொன்னார். அவரேதான் தற்போது பிரதமரும், சோனியா காந்தியும் ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜெயலலிதாவின் உறவுக்காக தவமிருந்து வாய்க்கு வந்தவாறு இப்போதும் உளறிக் கொண்டிருக்கின்ற ஒரு சில காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
மு.க.ஸ்டாலினை கைதே செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டியில் �மு.க. ஸ்டாலின் தரப்பு சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைதாகினர். அவர்களைப் பாதுகாப்பாக திருவாரூர் அழைத்து வந்தோம்� என்று கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் எழுந்த எழுச்சி காரணமாக விடுவித்ததுதான் உண்மை. ஆனால் அதை மறைப்பதற்காக மு.க.ஸ்டாலின் கைது தேவையில்லை, விடுவித்து விடலாம் என்று முடிவு செய்துவிட்டு, ஸ்டாலின் கைதே ஆகவில்லை என்று கூறியிருக்கிறார்.
வன்முறை, ஆபாச திரைப் படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று ஜெயலலிதா அரசு அறிவித்திருக்கிறதே?
திரைப்படங்களுக்கு தமிழில் பெயரிட்டால் மட்டும் வரி விலக்கு தரப்படமாட்டாது. வன்முறை ஆபாச திரைப்படங்களுக்கு வரி விலக்கு இல்லை என்று அறிவித்திருப்பது தங்களுக்கு வேண்டாத தங்களிடம் அடி பணியாதவர்களின் திரைப்படங்களுக்கு வரி விலக்கு கிடையாது என்று மறுக்க இதனை ஒரு காரணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான்.

பொய் வழக்கை கண்டித்து திருவாரூரில் 6ம் தேதி கருணாநிதி பேசுகிறார் :

திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் மீது அதிமுக அரசு தொடர்ந்துள்ள இட்டுக்கட்டிய பொய்யான வழக்கைக் கண்டித்து, திருவாரூரில் 6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசுகிறார்.
தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்றதும், திமுகவினர் மீது பொய்யான வழக்குகளை போட்டு, போலீசார் கைது செய்து வருகின்றனர். இதைக் கண்டித்தும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 30.07.2011 அன்று சென்றார். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
கொரடாச்சேரி அருகே கிளரியம் கிராமத்தில், பஸ் விபத்தில் பலியான பள்ளி மாணவன் விஜய் வீட்டுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், மாணவனின் தந்தை சேகருக்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு, மு.க.ஸ்டாலினுடன் காரில் சென்றுக் கொண்டிருந்த பூண்டி கலைவாணனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். �உரிய ஆவணங்கள் இன்றி கைது செய்ய விடமாட்டோம்� எனக்கூறிய மு.க.ஸ்டாலின், நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, உடனடியாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பூண்டி கலைவாணன் தவிர மற்ற அனைவரையும், மாலையில் போலீசார் விடுதலை செய்தனர்.
இந்தச் சம்பவத்தை கண்டித்து, திமுக தலைமைக் கழகம் 31.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், “திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது அதிமுக அரசு தொடர்ந்துள்ள வழக்கு, இட்டுக்கட்டிய பொய்யான கொலை வழக்கு. இதைக் கண்டித்து 6ம் தேதி திருவாரூரில் கண்டன கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா வாங்காமல் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெயலலிதா தயாரா - மு.க.ஸ்டாலின் பேச்சு



வாய்தா மேல் வாய்தா வாங்காமல் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க ஜெயலலிதா தயாராக உள்ளாரா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடியில் நகர, ஒன்றிய திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு, திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் 30.01.2011 அன்று இரவு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி, மத்திய இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் மதிவாணன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், மாநில விவசாய அணி இணை செயலாளர் கோட்டூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இன்று (நேற்று) காலை திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்துள்ளனர். பஸ்சில் படியில் பயணம் செய்து விபத்துக்குள்ளாகி காயமடைந்த பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்க பூண்டி கலைவாணன் முயற்சி மேற்கொண்டார். சிகிச்சை பலனின்றி இறந்த மாணவனின் உடலை பெற்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மாணவனின் சாவுக்கு இவர் மீது காரணம் கற்பித்து கைது செய்துள்ளனர். வேண்டுமென்றால் நேற்று (நேற்று முன்தினம்) என்னை வரவேற்க திருச்சி ஏர்போர்ட்டுக்கு அவர் வந்த போது கைது செய்திருக்கலாம். அல்லது இன்று (நேற்று) தஞ்சையில் இருந்து என்னை வரவேற்று அழைத்து செல்ல வந்த போது கைது செய்திருக்கலாம். அதை விடுத்து செல்லும் வழியில் தடுத்து கைது செய்ய போலீசார் முயன்றனர்.
மாணவன் சாவு தொடர்பாக பூண்டி கலைவாணன் மீது புகார் கொடுக்க, இறந்தவரின் குடும்பத்தாரோ, உறவினர்களோ, அதிகாரிகளோ முன்வராத நிலையில் கலெக்டரிடம் இருந்து புகாரை பெற்று கைது செய்ய வந்தனர். வாகனத்தை தடுத்து நிறுத்தி, வழிமறித்து போலீஸ் வாகனங்களை சாலையை மறித்து நிறுத்தி அவரை கைது செய்ய வந்தனர். வாரன்ட் உள்ளதா அல்லது எழுதிக்கொடுத்துவிட்டு அழைத்து செல்லுங்கள் என்றோம். அவரை கைது செய்வதென்றால் எங்களையும் அழைத்து செல்லுங்கள் என்று கூறி மறியல் செய்தோம்.
மறியல் செய்ததற்காக கைது செய்வதென்றால் முதலில், சாலையை மறித்து வாகனங்களை நிறுத்திய போலீசாரைத்தான் கைது செய்ய வேண்டும்.
ஆனால் எங்களை கைது செய்தனர். எந்தவொரு தொண்டனுக்கு துன்பம் வந்தாலும் உடனே ஓடிவந்து உதவுகிற கட்சி திமுக. புகார்கள் கிடைக்காமல் கலெக்டரை புகார்தாரர் ஆக்கியுள்ளனர். இன்னும்கூட நேரம் அதிகமாகி விடவில்லை. தெரியாமல் புகார் கூறிவிட்டேன் என்றால் அவர் தப்பித்துக்கொள்ளலாம்.
திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவந்த திட்டம் என்பதால், ஆட்சிப்பொறுப்பேற்ற உடனே சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றினர். ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தோம். இப்போது பலரும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்துகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் ஒழுங்கை சீர்செய்கிறோம் என்றனர். ஆனால் கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. நில அபகரிப்புக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தி 2006 முதல் 2011 வரை நடந்த நில அபகரிப்பு வழக்குகளை கொடுக்கலாம் என்று கூறியுள்ளனர். உதாரணமாக 2007ல் அப்போதைய மார்க்கெட் விலைக்கு நிலத்தை விற்ற ஒருவர், இப்போது விற்றால் அதிக லாபம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் புகார் கொடுக்க முன்வரலாம். அதிலும் திமுகவினர் நிலம் வாங்கியது தொடர்பாக மட்டுமே குறி வைத்து புகார்கள் பெறப்பட்டு வழக்கு பதியப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் 2001 முதல் 2006 வரை அதற்கு முன் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உள்ள நில அபகரிப்பு புகார்கள் பற்றி கணக்கெடுத்து நடவடிக்கை எடுக்காதது ஏன். அப்படி எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு வழக்குகளில் அதிமுகவினர் வந்துவிடுவார்கள் என்று இப்படி செய்கிறார்களா.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா இதுவரை 108 முறை வாய்தா வாங்கியுள்ளார். 2010ல் 30க்கும் மேற்பட்ட முறை வாய்தா வாங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே வாய்தா வாங்க வேண்டும். ஆனால் இவர்களோ மொழிபெயர்த்து தரவேண்டும், மொழிபெயர்ப்பாளரை விசாரிக்க வேண்டும் போன்ற எண்ணற்ற காரணங்களை கூறி வாய்தா வாங்கியுள்ளனர்.
நீதிமன்றம் சென்று வழக்கை சந்திக்க தெம்பும், யோக்கியதையும் இல்லாத ஜெயலலிதா நில அபகரிப்பு வழக்கில் திமுகவினர் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இத்தகைய கைது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். வாய்தா வாங்காமல் நீதிமன்ற விசாரணைக்கு நியாயமாக ஒத்துழைக்க ஜெயலலிதா தயாரா.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக பொய் பிரசாரம் - திமுக தலைவர் கருணாநிதி


இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக பொய் பிர சாரம் நடக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 30.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கச் செய்து, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய உலகத் தமிழர்களின் தலைவர் அம்மா பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்” & இப்படி பக்கம் பக்கமாக விளம்பரங்கள் போற்றி போற்றி விளம்பரங்கள் போலிப்புகழ் பாடும் விளம்பரங்கள்.
நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரைப் பக்கத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். “நன்றி நன்றி நன்றி... இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க அயராது முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்ட அரசியல் சாணக்கியமே... உலகம் வாழ்த்தும் அருந்தவமே...” என்று விளம்பர வாசகங்கள் உள்ளன.
அடுத்து ஒரு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அவரும் அரை பக்கத்தில் ஒரு விளம்பரம். அதிலேயும் அதே நன்றி நன்றி நன்றி இத்தியாதி, இத்தியாதி...
எதற்காக இந்த நன்றிகள்? அமெரிக்கா, இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறதா? அமைச்சர்களே விளம்பரம் கொடுத்திருக்கிறார்களே இல்லாமலா கொடுப்பார்கள்? எல்லோருக்கும் சந்தேகம்
இந்தச் செய்திக்குக் காரணமான பிரகாஷ் எம். ஸ்வாமி தான் தற்போது இலங்கை அரசை எதிர்த்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா துணிச்சலும் அந்த மனதிடமும் ஹிலாரியைக் கவர்ந்ததாகச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா மட்டும்தான் பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாரா?
இதற்கு முன்பு இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானங்களே நிறைவேற்றப்படவில்லையா? வேறு சிலர் பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றிய காரணத்தால் அமெரிக்கா இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாகவே சொல்லுகிறார்கள், பாராட்டு தெரிவிக்கிறார்கள். எவ்வளவு பெரிய பொய்யைத் திட்டமிட்டு இங்கேயுள்ள சிலர் உண்மையாக்கி ஊராரை மயக்குவதற்கு எவ்வளவு பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு திருமாவளவன் கூட அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அது உண்மையாக இருக்கலாமோ என்றெண்ணி வரவேற்றிருக்கிறார். அதைப் பார்த்தவுடன் இந்தியாவில் வாழ்கிற இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்தபோது அப்படி எதுவும் அமெரிக்கா இதுவரை அறிவிக்கவில்லை என்று கூறினார்கள்.
அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுத் துறைக்கான குழு, இலங்கை அரசுக்கு அமெரிக்க உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக வாக்களித்துள்ளது. இந்த நடவடிக்கை கூட உடனடியாக அமலுக்கு வராது. 2012 அக்டோபர் மாதம் துவங்கும் நிதியாண்டில் இலங்கைக்கான உதவி நிறுத்தம் பற்றிய இந்தக் குழுவின் பரிந் துரை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட், காங்கிரஸ் என்ற இரண்டு அவைகளிலும் வைக்கப்பட்டு, அவற்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.
இந்த ஆலோசனை கடந்த பல வாரங்களாக இக்குழுவின் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் இந்தியச் சுற்றுப்பயணத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் மட்டும்தான் விவாதிப்பாரே தவிர, மாநில அரசிடம் விவாதிக்க மாட்டார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹிலாரியின் இந்தியச் சுற்றுப்பயணம் மற்றும் அவரது பேச்சுகள் வெளிவந்தன. அதில் அண்ணா நூற்றாண்டு நூலகம், உழைக்கும் பெண்கள் அமைப்பு, தாஜ் ஓட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஆகிய மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
அமெரிக்க உதவிச் செயலாளர் ஒருவர் கூறும்போதுகூட “அவர்கள் இலங்கை குறித்துப் பேசினார்கள், இலங்கையிலுள்ள நிலைமை பற்றி நமக்கு கவலைகள் உள்ளன என்பதை அவர்கள் இருவரும் ஏற்றுக் கொண்டனர் என்று நான் நினைக்கிறேன்” என்றுதான் கூறியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பிலே கூட, இலங்கைப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றியோ, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிப்பது பற்றியோ இருவரும் பேசியதாக எதுவும் இல்லை.
இப்படித்தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது ஐ.நா. மன்றம் ஜெயலலிதாவுக்கு கௌரவ விருது வழங்கப் போகிறது என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதற்காக பெரிய விழா, பக்கம் பக்கமாக விளம்பரங்கள், புகழாரங்கள் அத்தனையும் நடைபெற்றது. ஆனால் பிறகு அது உண்மையல்ல என்று தெரிந்ததும், ஐ.நா. சபையல்ல, ஐ.நா. சபையின் ஆலோசனை அமைப்பு என்றும், மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்றும் முகவரியை மாற்றினார்கள். கோபி அன்னனுக்கு அளிக்கப்பட்ட விருதுதான் எங்கள் அம்மாவுக்கு தரப் போகிறார்கள் என்றார்கள்.
அதன்பிறகுதான் ஐ.நா. சபையில் இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக உரையாற்றச் சென்ற ஆர். சண்முகசுந்தரம், எம்.பி, அவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த்சர்மா மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாத்ரு பூமி ஆசிரியர் மாதவன் குட்டியும் விசாரித்து அந்த விருதுக்கும் ஐ.நா.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்கள்.
அதைப்போலவே தான் இப்போதும் இலங்கை அரசை எதிர்த்து ஜெயலலிதா தீர்மானம் போட்டதால், அமெரிக்கா பயந்து கொண்டு இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்து விட்டதாக செய்தி பரப்ப முயலுகிறார்கள். அதிலும் அ.தி.மு.க. அமைச்சரவையிலே உள்ள மூத்த அமைச்சர்களே ஏடுகளில் அரைப்பக்க அளவிற்கு கொடுத்துள்ள விளம்பரங்களில் சொல்லியிருக்கிறார்கள் என்றால், அமெரிக்காவைப் பற்றி உண்மைக்கு மாறாக இப்படியெல்லாம் விளம்பரம் செய்யலாமா? அது ஒரு வெளிநாட்டுப் பிரச்னை அல்லவா?
மாலையில் ஏடுகளைப் பிரித்தால் பக்கம் பக்கமாக ஜெயலலிதாவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் உட்கார்ந்திருக்கின்ற புகைப்படங்களை விதம் விதமாகப் போட்டு வார்த்தை ஜாலங்கள் தான்.
தமிழகத்து மாணவச் செல்வங்கள் கடந்த மூன்று மாதங்களாக எந்தப் புத்தகத்தைப் படிப்பது என்று தெரியாமல் கலங்கி நிற்கின்றார்கள். அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்போது புத்தகம் வரும் என்று தெரியாமல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் மாணவர்களை தன்னுடைய பிடிவாதம் காரணமாக இன்னலுக்கு ஆளாக் கிய ஜெயலலிதா அம்மையாரைப் பற்றி இப்படி இல்லாத செய்திகளையெல்லாம் வெளியிட்டு, அதிலே இன்பம் காணுகிறார்களே, பொய் சொல்வதற்கும் ஒரு எல்லை வேண்டாமா? ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றிய சாட்சாத் அதே ஜெயலலிதாவேதான் இன்று பக்கம் பக்கமாக விளம்பரப் பஜனைப் பாடப்படுகிற உலகப் புகழ் உத்தமத் தமிழச்சி ஆகிவிட்டார்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
அவர்தான் பாராட்டியிருக்கிறார்...
பிரகாஷ் எம்.ஸ்வாமி, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். தற்போது நியூயார்க்கில் இருக்கிறார். தமிழகம் வரும்போது ஒவ்வொரு முறையும் என்னைச் சந்திக்க நேரம் கேட்டு ஓரிரு முறை சந்தித்துமிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் அமெரிக்காவிற்கு வர வேண்டும், உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கச் செய்கிறேன், விருது வழங்க ஏற்பாடு செய்கிறேன், தெருவுக்குப் பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றெல்லாம் கூறுவார்.
கடந்த முறை தி.மு.க ஆட்சியில் ஒரு முறை சந்தித்தேன். அடுத்த முறை வாய்ப்பு வழங்க முடியவில்லை. தி.மு.க ஆட்சியில் அவருக்கு கலைமாமணி விருதே வழங்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது கூட அமெரிக்க நாடு வாழ் தமிழர்களையெல்லாம் ஒருங்கிணைத்து அழைத்து வரத் தனக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென்று கோரினார். அவர்தான் தற்போது வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஜெயலலிதாவை பாராட்டியிருக்கிறார்.
இதே பிரகாஷ் ஸ்வாமி 2&2&2010ல் என்னைச் சந்தித்த செய்தி ஏடுகளில் அப்போதே வந்தது. அந்தச் செய்தியில், �அமெரிக்காவில் உள்ள நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி, முதல் அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவை தெரிவித்துக் கொண்ட அவர், இந்த மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 100 தமிழறிஞர்கள் கலந்து கொள்ள விருப்பதாகக் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஸ்வாமி, முதல்வர் கருணாநிதியின் சமுதாயச் சேவையைப் பாராட்டி, அமெரிக்க நாடாளுமன்றம் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அமெரிக்க காங்கிரஸ் மகாசபை விருது வழங்கப்பட விருப்பதாகத் தெரிவித்தார். முதல் முறையாக இந்தியத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் இந்த விருதை, கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது நியூயார்க் தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள் நேரில் வழங்குகின்றனர் என்றும் அவர் கூறினார்� என்கிறது அந்த செய்தி.

மு.க.ஸ்டாலினை கைது செய்தது சரியல்ல - மார்க்சிஸ்ட்



மு.க.ஸ்டாலினை கைது செய்தது சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் நேற்று முன்தினம் அரசு பேருந்தில் சென்றபோது பேருந்து கவிழ்ந்து விஜய் (வயது 12) என்ற மாணவன் பலியாகியுள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். மாணவன் விஜயை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
இந்த விபத்திற்கு திருவா ரூர் மாவட்ட திமுக செயலா ளர் பூண்டி கலைவாணன் காரணமென்றும் அவரை கைது செய்ய காவல்துறை முயன்றதாகவும், இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்பட பலர் திருத்துறைப்பூண்டி அருகே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடைபெற்ற விபத்து குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை கைது செய்திருப்பது சரியான நடைமுறையாகாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.
எனவே, பேருந்து விபத்து குறித்து முழுமையாக விசாரித்து விபத்திற்கு காரணமானவர்களை கைது செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்ற போது கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சிறைச்சாலைக்குப் போக மு.க.ஸ்டாலின் அஞ்சக் கூடியவர் அல்ல - கி.வீரமணி :

தஞ்சை வல்லத்தில் இன்று (30.7.2011) காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,


தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை திடீரென்று காவல்துறையினர் கைது செய்து திருவாரூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்கிற செய்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.


பொதுவாக எல்லோருக்குமே இது அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியாகும். அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டியவர்களை காரண காரியம் இல்லாமல் இது போல கைது நடவடிக்கைகளில் ஈடுபடலாமா? என்ன குற்றம் செய்தார்கள் என்பதுகூட வெளிப்படையாகத் தெரிவிக்கப்படாமல் கைது செய்யப்படுவது என்பது கண்டிக்கப்படக் கூடியது.


உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும். பொது வாழ்க்கையில் கருத்துக்களால் மாறுபடுகிறவர்களை எல்லாம் கைது செய்யலாமா? அடக்குமுறை ராஜ்ஜியம் இங்கு நடக்கிறது என்பதுதான் பொருளாகுமே தவிர, ஜனநாயகத்திற்கு இது அழகாகாது.


குறிப்பாக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவராக இருக்கிறார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. சிறைச்சாலைக்குப் போக அவர் அஞ்சக் கூடியவர் அல்ல என்றாலும், அதற்குரிய காரண காரியத்தோடு அரசு விளக்கினால் அவர் அதை மகிழ்ச்சியோடு ஏற்பார். எதிர்கொள்வார்.

ஆனால் இந்த நிலை தொடரக்கூடாது. இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அரசு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பது எங்களைப் போன்றவர்களுடைய வேண்டுகோள் என்றார்.



அமைதியான முறையில் 1ம் தேதி போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் - திமுக தலைவர் கருணாநிதி


திட்டமிட்டபடி வரும் 1ம் தேதி திமுக போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் 30.01.2011 அன்று அவர் அளித்த பேட்டி வருமாறு:
** திமுக நிகழ்ச்சிக்காக திருவாரூர் சென்றிருந்த மு.க.ஸ்டாலின் மற்றும் பல முன்னணியினரை அரசு கைது செய்துள்ளதே?
*** இப்போதுதான் அது பற்றி எங்களுக்கும் செய்தி வந்தது.
** 1ம் தேதி திமுக சார்பில் நடத்த இருக்கும் போராட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகதான் அரசு இவ்வாறு செய்கிறதா?
*** திமுக ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. அப்போது திமுக அரசு, போராட்டம் நடத்தியவர்களை எப்படி நடத்தியது என்பதும் காலையில் கைது செய்து மாலையில் விடுவித்ததும் உங்களுக்கெல்லாம் தெரியும்.
இப்போது ஜெயலலிதா ஆட்சியில் அம்மையாரின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்கு மேலும் மேலும் தூபம் போடும் காவல் துறையினரின் நடவடிக்கைகளும் அத்துமீறி போய்க் கொண்டு இருக்கின்றன.
** 1ம் தேதி போராட்டம் திட்டமிட்டபடி நடக்குமா?
*** போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். போராட்டம் காவல் துறையின் அராஜகங்களை கண்டிப்பதற்காகவும் பொய் வழக்குகள் போடுவதை கண்டிப்பதற்காகவும் அறிவிக்கப்பட்டு நடைபெறுகின்ற போராட்டம் ஆகும். அதனால் அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடைபெறும்.
** பொய் வழக்குகள் போடுவது தொடர்ந்தால் உங்கள் தலைமையில் ஏதாவது போராட்டம் நடைபெறுமா?
*** அவசியப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி சிந்தித்து செயல்படுவோம்.
** பெங்களூரில் நடைபெறுகிற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றம் தடையாணை பிறப்பித்த காரணத்தால் ஜெயலலிதா பழி வாங்குவதற்காக இப்படியெல்லாம் செய்கிறாரா?
*** பழி வாங்குவதற்கு அவர்களுக்கு காரணம் வேண்டியதில்லை. பழி வாங்க வேண்டும் என்று நினைத்தாலே பழி வாங்குவார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.
அப்போது திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தனர்.