கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, March 2, 2011

கலைஞர் - காங். எம்எல்ஏக்கள் சந்திப்பு


முதல்வர் கருணாநிதியை 01.03.2011 அன்று தலைமைச் செயலகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் சுந்தரம், ரங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருஞானசம்பந்தம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

கலைஞருக்கு சிறுபான்மை அமைப்புகள் நன்றி


சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கியதற்காக முதல்வர் கருணாநிதியை தலைமைச்செயலகத்தில் 01.03.2011 அன்று சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் எம்எல்ஏ, மு.அப்பாவு, தமிழ்நாடு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை மயிலை உயர்மன்ற மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னதுரை, சிறுபான்மை மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ், முஸ்லிம் லீக் மாநில அமைப்பாளர் எம்.கே.எம்.முகமது ஷபி உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

சுற்றிச் சுழன்றுவரும் சூறாவளி! மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு ஜெகத்ரட்சகன் வாழ்த்து கவிதை


துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மத்திய இணை அமைச்சர் எஸ். ஜெகத்ரட்சகன் வாழ்த்து கவிதை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

நீர் கொண்ட சாயல் நிழல் கொண்ட வதனம் போர் கொண்ட நெஞ்சம் புகழ்கொண்ட வாழ்க்கை தான்கொண்ட எங்கள் தளபதியே!

உன்னைத் தேன்கொண்ட தமிழால் தித்திக்க வாழ்த்துகிறேன்!

கற்பூர வாசனையும் கமலப்பூ வாசனையும் அற்புதமாய் மணக்கின்ற அருந்தமிழால் வாழ்த்துகிறேன்!

கடல் வானம் உள்ளளவும் கலைஞர் தமிழ் உள்ளளவும் மகத்தான சாதனைகள் மலர்வித்து வாழிய நீ!

ஒருவரின் தோளேறி உயரம் கொள்ளாமல் துயரத்தின் மேலேறித் தொடர்ந்து ஜெயித்தவனே!

மிசா எனும் பெருந்தீயில் மேன்மையுறக் குளித்தவனே!

மேயரெனும் தங்கமாக மின்னிச் சிரித்தவனே!

அரவிந்தனாய் நடித்தாய்: அதுவன்றிப் பொதுவாழ்வில் ஒருபோதும் நடித்தறியா உள்ளம் படைத்தவனே!

இரவல் வெளிச்சத்தில் இரவில் ஒளிர்கின்ற சந்திரனாய் இல்லாமல் சூரியனாய் வளர்ந்தவனே!

மாதர்கள் மனக்கணக்கில் மகிழச்சிகளை வரவு வைக்க மணிக்கணக்கில் நின்றபடி சுழல்நிதிகள் தந்தவனே!

முத்தநிதி சொரிகின்ற முகிலைப்போல்... மகளிர்க்கு மொத்தநிதியும் வழங்கி முன்னேற்றம் ஈந்தவனே!

விரல்கீறி ரத்தத்தை வெளிப்படுத்தி பொட்டிட்டுக் கொடிகண்டு பிடித்த கொற்றவனின் மகனென்னும் தகுதியால் அரசியலில் தலையெடுக்கவில்லை நீ!

உழைத்தாய்; தன்னலத்தை உதிர்தாய்; துயில்கூடத் தவிர்த்தாய்; எதிர்ப்புகளில் தழைத்தாய்; தொண்டர்களை நற்றாய்போல் தழுவி நடந்தாய்; அதனால்தான் பெற்றாய் பதவிகளை பீடுமிகப் பெற்றவனே!

தேடாமலே கிடைத்த தீந்தமிழ்க் கொடையே!

திசையதிர வந்த திராவிடப் படையே!

மீன்நோக்கும் கொக்குகளும் தேன்நோக்கும் வண்டுகளும் சூழ்ந்திருக்கும் தேசத்தில் தொண்டுமட்டுமே நோக்கிச் சுற்றிச் சுழன்றுவரும் சூறாவளி நீதான்!

நல்லவர்கள் உச்சரிக்கும் நாமாவளி நீதான்!

உன்னை வாழ்த்துவதும் உண்மையில் நம் கழகம் தன்னை வாழ்த்துவதும் சமமென்று கருதுகிறேன்!

மணவறை கண்ட மகிழ்ச்சி நிறைவதற்குள் சிறைக்கூடம் கண்ட செந்தமிழ்க் காளையே!

இல்லறத்தை விடவும் இன்பத் தமிழ்நாட்டில் நல்லறத்தை வாழவிட நரம்புகள் துடித்தவனே!

“தன்னை விதைத்தார்க்கே சரித்திர ஏடுகளில் சாதனை அறுவடை சாத்தியம் என்னும் போதனை எங்கட்குப் புரிய வைத்தவனே!

வேதனை துடைக்கும் விரலாகப் பிறந்தவனே!

மெல்லச் சிரித்தாலும்... மெல்ல நடந்தாலும்... வெள்ளத்தின் வேகத்தை வெல்லத் தெரிந்தவனே!

அமைதியாய் இருந்தாலும்... அடக்கமாய்த் திகழ்ந்தாலும்... ஒளியின் வேகத்தை உள்ளத்தில் கொண்டவனே!

மாற்றார் இகழ்ந்தாலும்... மாக்கோபம் கொள்ளாமல் ஆற்றலுடன் எடுத்து... அடுத்தஅடி வைப்பவனே!

என்போன்ற தொண்டர்க்கு எப்போதும் தலைவனே!

இயக்கப்பால் குடித்து இப்போதும் வளர்பவனே!

தேனாளும் தமிழைத் தினமாளும் எம் தலைவன் பேராள வந்த பெருமைகளின் பெட்டகமே!

பாராளும் தத்துவங்கள் பண்போடு கற்றவனே!

கலங்காத எஃகென்னும் காரணப் பெயர்கொண்ட கலங்கரை விளக்கமே!

கலைஞரின் முழக்கமே!

அஞ்சுகத்தாய் பேரனே!

அறிவாலய வீரனே!

அஞ்சுவது யாதொன்றும் அறியாத தீரனே!

ஆயிரம் பிறைகண்டு அதன்பின்னும் வாழிய நீ!

பாயிரம் நான் பாடுகிறேன்... பைந்தமிழாய் வாழியவே!

மாற்றாரும், வேற்றாரும் மதிக்கும் மாண்பாளர்! ஸ்டாலின் பிறந்த நாளுக்கு கி.வீரமணி வாழ்த்து!



துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,


திமுக பொருளளரும், துணை முதல் அமைச்சருமான ஆற்றல்மிகு அரிமா சகோதரர் மு.க.ஸ்டாலினின் 59வது பிறந்த நாள் விழா இன்று. இந்த 59 ஆண்டுகளுக்குள்ளேயே 40 ஆண்டுப் பொது வாழ்க்கை கண்ட தொண்டறச் செம்மல் இவர்.


அவர் பதவிகளை நோக்கி சென்றதில்லை என்றாலும், மேயர் பதவி முதல் துணை முதல்வர், கட்சியின் பொருளாளர் போன்ற பல்வேறு பதவிகள் அவரை நோக்கிச் சென்று பெருமை பெறுகின்றன.


சுறுசுறுப்பில் தந்தையை மிஞ்சும் தனயராக உள்ளார். பண்பாட்டில் பலரும் பாராட்டத்தக்க மாமனிதராகவே காட்சியளிக்கின்றார்.


கட்டுப்பாடு காப்பதில், தனது தந்தையாரைக்கூட கட்சியின் தலைவராகவே எப்போதும் கருதி மரியாதை காட்டத் தவறாத மாண்பாளர்.


தொண்டர்நாதனாக தோழர்களின் வற்றாத அன்பைப் பெற்று நாளும் வளரும் நம்பிக்கையின் ஊற்று அவர்.


சூறாவளிச் சுற்றுப்பயணமும் சுயமரியாதைத் கொள்கை உணர்வும் அவரது இயல்புகளாகவே ஆகிவிட்டன. பெரியார் சமத்துவபுரங்களில் என்றும் வாழுபவர் அவர்.


மாற்றாரும் வேற்றாரும் மதித்து மரியாதை காட்டும் மகத்தான தலைவரான அவர்கள், பல்லாண்டு வாழ்ந்து, கலைஞர் தம் பொற்கால ஆட்சி மீண்டும் பூத்திட தன்னை ஒரு போர்த் தளபதியாக மாற்றிக்கொண்டு, வியூகங்களை வகுத்து வெற்றி பெறும் இந்திர ஜித்தாக - மேகநாதனாக - உலாவரும் அவர் வெற்றி வாகை சூடுவார் - வரும் 2011 பொதுத் தேர்தலிலும் என்பது உறுதி. அவரது உழைப்பின் அறுவடையாக மலரப் போவது மீண்டும் திமுக ஆட்சியே. திமுகவின் விலை மதிப்பற்ற கொள்கைச் சொத்து அவர்.


தியாகத் தீயில் புடம் போட்ட லட்சியத் தங்கமும்கூட.

பல்லாண்டுப் பல்லாண்டு வாழ்ந்து தொண்டின் இமயமாய் உயர்ந்திட வாழ்த்தும் கோடானு கோடி இதயங்களுடன் தாய்க் கழகமும் இணைந்து வாழ்த்துக்கிறது. வாழ்க தளபதி. வளர்க, அவர்தம் வெற்றிகள்.


இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பிறந்த நாள்: கலைஞர் வாழ்த்து







துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் கருணாநிதி, கவர்னர் பர்னாலா, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வாழ்த்தினார்கள்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 01.03.2011 அன்று 59 வயது பிறந்தது. பிறந்த நாளை அவர் எளிமையாக கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்தார். பின்னர் குடும்பத்தினருடன் காலை 6.30 மணிக்கு கோபாலபுரம் இல்லம் சென்றார். அங்கு முதல்வரும் தந்தையுமான கருணாநிதி, தாயார் தயாளு அம்மாள் ஆகியோரிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். அதையடுத்து செனடாப் சாலையில் உள்ள இல்லம் சென்றார். அங்கு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, சபரீசன், உதயநிதி, கிருத்திகா, மு.க.தமிழரசு, செல்வம், செல்வி, அமிர்தம் மற்றும் குடும்பத்தினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்களும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். காலை 8 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. வரவேற்றனர். அங்கு ஸ்டாலின் 59 கிலோ எடையுள்ள கேக் வெட்டினார். காலை 8 மணி முதல் பகல் 1.30 மணி வரை நாற்காலியில் அமராமல் நின்றவாறு தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட கியூவில் நின்று வாழ்த்து தெரிவித்தனர்.
கவர்னர் பர்னாலா, பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஜி.கே.வாசன், ஆர்.எம்.வீரப்பன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் போனில் வாழ்த்து கூறினர். சந்திரகாசன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மாணிக்தாகூர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.
நிதி அமைச்சர் அன்பழகன், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கோசி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறன், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், எம்பிக்கள் ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, பட அதிபர் எஸ்.மார்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், காயத்ரிதேவி, ஞானசேகரன், விடியல் சேகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், தேசிய லீக் பஷீர் அகமது, தமிழ்மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், தாவூத் மியாகான் ஆகியோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் ஆவுடையப்பன், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, குமரி அனந்தன், சுப வீரபாண்டியன், ரவிகுமார் எம்.எல்.ஏ., மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், தலைமை செயலர் மாலதி, டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகை குஷ்பு, நடிகர்கள் பாக்யராஜ், சந்திரசேகர், ஜெயமணி, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், குகநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஜே.எம்.ஆரூண் எம்.பி, சுகவனம், முன்னாள் அமைச்சர்கள் திருநாவுக்கரசர், அந்தியூர் செல்வராஜ், பூவை.ஜெகன் மூர்த்தி, வி.பி.மணி
பேராயர்கள் சின்னப்பா, எஸ்றா சற்குணம், தொ.மு.ச. பேரவை தலைவர் செ.குப்புசாமி, பொது செயலாளர் மு.சண்முகம், ரத்தினசபாபதி, கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, காசி முத்துமாணிக்கம், என்.கே.பி.ராஜா, சற்குணபாண்டியன், சங்கரி நாராயணன், காயத்ரி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, கே.சி.பழனிச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் ஸ்டாலினுக்கு நோட்டு மாலை அணிவித்தனர். திருவண்ணாமலை நகராட்சி தலைவர் ஸ்ரீதரன், 59 தட்டுகளில் பழங்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தார். வெள்ளி ரதமும், ரூ.25000 தேர்தல் நிதியும் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நீலமேகன் சீரிவரிசை பொருட்களுடன் வந்தார்.
பேச்சாளர் எஸ்.எம்.கே.அண்ணாதுரை பிரச்சார பாடல் சி.டி வழங்கினார். திருவண்ணாமலை கோயில் பிரசாதம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு பகுதி தி.மு.க. செயலாளர் அன்புதுரை தலைமையில் தி.மு.க.வினர் 10 ஆயிரம் மோர் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார்கள். ஆட்டுக் குட்டி, செவ்வாழைக்குலை, பழங்கள், இனிப்பு வகைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு நேரில் சென்ற திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பொன் னாடை அணிவித்து, தந்தை பெரியாரின் நூல்களை வழங்கி, நினைவுப் பரிசையும் அளித்து பிறந்த நாள் வாழ்த்தும் தெரி வித்தார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொரு ளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞர் த. வீரசேகரன் ஆகியோரும் உடனிருந்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் யசோதா தலைமையில் கொறடா ஞானசேகரன் மற்றும் அனைத்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் துணை முதல்வரை வாழ்த்தியிருக்கிறோம்.


மு.க.ஸ்டாலின் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்து, தமிழகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் பல சேவைகள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாகவும் நெஞ்சார வாழ்த்துகிறோம் என்றார்.





எந்த நெருக்கடியில் இருந்தும் திமுகவை மக்கள் காப்பார்கள் - முதல்வர் கருணாநிதி பேச்சு



தமிழ் இனத்தை வாழவைக்கக்கூடிய இன உணர்வுக்கழகமாக, தி.மு.க. இருக்கின்ற காரணத்தால், எந்த நெருக்கடியிலும், இந்த இயக்கத்தை மக்கள் காப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்று சென்னையில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி விழாவில் முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார்.


துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1ந் தேதியை, தி.மு.க.வினர், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறார்கள். அதன்படி, தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், இளைஞர் எழுச்சி நாள் விழா 28.02.2011 அன்று நடைபெற்றது.


விழாவில், 20,000 மகளிருக்கு, 200 வாஷிங் மிஷின், 400 மிக்சி, 400 தையல் எந்திரம், 1200 ரைஸ் குக்கர், 1600 எவர்சில்வர் அண்டா, 1600 எவர்சில்வர் டிபன்கேரியர், 400 கிரைண்டர், மூன்று சக்கர சைக்கிள்கள் 20, 12000 ஹாட்பாக்ஸ் என நலத்திட்ட உதவிகளுக்கான பொருட்கள் விழா மேடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் கருணாநிதி வழங்கி பேசியதாவது:


தம்பி ஸ்டாலினுடைய பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்ற வகையில் இன்றைக்கும் நம்முடைய தென் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தால், குறிப்பாக மாவட்ட கழகச் செயலாளர் தம்பி அன்பு முயற்சியால் சீரோடும், சிறப்போடும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


இந்த விழா நாளில் நானும் கலந்து கொண்டு உங்களுடைய தொகுதியினுடைய செல்வமாக வளர்ந்து உங்களுக்காக அரும்பணிகள் பல ஆற்றி, இன்று தமிழகத்தினுடைய துணை முதல் அமைச்சராகவும் பொறுப்பேற்று தொண்டாற்றிக் கொண்டிருக்கின்ற ஸ்டாலின் அவர்களை நான் மகனாகப் பெற்றிருக்கிறேன் என்பதை விட நீங்கள் எல்லாம் உங்கள் தொகுதியினுடைய பிரதிநிதியாகப் பெற்றிருக்கிறீர்கள் என்பதில் நீங்கள் அடைவது போன்ற மட்டற்ற மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்.


இந்த நாளில் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் உங்களில் பலருக்கு மகளிருக்கு, ஆடவருக்கு பயன்படக் கூடிய வகையில் ஏறத்தாழ இருபதாயிரம் பரிசுப் பொருள்களை வழங்கியுள்ள இந்த நிகழ்ச்சி என்னை மிக மிக வியப்பிலே மாத்திரமல்ல, மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்ற நிகழ்ச்சியாகும்.


வெயில் கனலை வீசுகின்ற நேரத்திலே கூட இந்த நிகழ்ச்சியில் நான் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் உங்களுக்கு வழங்கப்படுகின்ற பரிசுப் பொருள்கள், உங்களுக்குப் பயன்படப் போகும் இந்தப் பொருட்கள் அதைப் பார்த்து நீங்கள் அடைகின்ற அந்த மகிழ்ச்சி இவைதான் அதற்கு காரணம்.


பொதுவாக எல்லோருக்கும் பிறந்த நாள் வருகிறது. ஆனால் சிலருடைய பிறந்த நாள்தான் போற்றப்படுகிறது, புகழப்படுகிறது, பாராட்டப்படுகின்றது. எல்லோராலும் வாழ்த்தப்படுகின்றது. அப்படி வாழ்த்தப்படுகின்ற அந்த வாய்ப்பை எல்லோரும் பெற முடிவதில்லை.


அதனைப் பெற்றுள்ள நம்முடைய கழகத்தினுடைய பொருளாளர் நான் அவரை துணை முதல் அமைச்சர் என்று அழைப்பதை விட அவர் இன்றைக்கு வகிக்கின்ற தி.மு.க. பொருளாளர் என்ற பதவி தான் சிலாக்கியமான பதவி, பாராட்டத்தக்க பதவி என்ற காரணத்தால், பொருளாளர் என்று அழைக்கிறேன். அது மாத்திரமல்ல, நான் பார்த்த பதவி அது.


பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.க. பொருளாளராக இருந்து, இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 67 ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலுக்கு 11 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியை அண்ணாவிடம் நான் கொடுத்த போது, அவர் நம்பக்கூட இல்லை, பதினோரு லட்சமா, நமக்கா, நம்முடைய கழகத்திற்கா? இந்த மக்கள் தந்ததா? என்று விழிகளை அகல விரித்துக்கேட்டார்.


ஆனால், இன்றைக்கு தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய தி.மு.கழகத்திற்கு இன்னும் பல வெற்றிகளைத் தேடித்தர, சாதாரண மக்கள், பாட்டாளி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளத் தோழர்கள், அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தாலும் அவர்களும் கூட தங்களால் இயன்றதைத்தந்து, இந்த இயக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.


காரணம் இது அவர்களை வளர்க்கின்ற இயக்கம். அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம். அவர்களை வளர்க்கின்ற இயக்கம் என்ற காரணத்தால், இப்போது மாத்திரமல்ல, எதிர் காலத்திலும் தமிழ் இனத்தை வாழ வைக்கக் கூடிய இன உணர்வுக்கழகமாக இருக்கின்ற இந்த இயக்கத்தை நீங்கள் நிச்சயம் எந்த விதமான நெருக்கடியிலும் காப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையோடு தான் உங்களை நான் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு முதல் அமைச்சராக அல்ல உங்களை நான் சந்திக்கும் போதெல்லாம், உங்களுடைய தொண்டர்களிலே ஒருவனாகத்தான் நான் என்னைக் கருதிக்கொண்டு உங்களுக்காகப் பாடுபடுகிறேன். உங்களுக்காக உழைக்கிறேன்.

எனவே இன்றைக்கு உங்களுக்கு வழங்கப்படுகின்ற பாத்திர, பண்டங்கள், இந்தப் பொருள்கள் எல்லாம் உங்களுக்காக இந்த இயக்கத்தின் சார்பாக வழங்கப்படுகின்றவை என்றாலும் கூட, உங்களுடைய குடும்பத்திலே உள்ளவர்கள் எப்படி தாய் தந்தைக்கு, அண்ணன் தம்பிக்கு ஒரு உடைமையைக் கொண்டு வந்து கொடுப்பார்களோ, அதைப் போன்ற உணர்வோடு தான், உரிமையோடு தான் இவைகள் எல்லாம் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்து இந்த இனிய விழாவில் நானும் கலந்துகொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

விழாவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வரவேற்றார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட பல அமைச்சர்கள், பகுதிச் செயலாளர்கள் அன்புதுரை, மதன்குமார், காமராஜ், வி.எஸ்.ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திண்டுக்கல் லியோனி பேசும்போது, “நடைபெற இருக்கும் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் சென்று தி.மு.க. அணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராமல் நானும் என் குழுவினரும் பாடுபடுவோம்” என்றார்.

மகிழ்ச்சிக்குரிய பட்ஜெட்: கலைஞர்


தமிழக அரசின் நெடுநாளைய கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை வரும் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது என்று மத்திய பட்ஜெட் பற்றி முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி 28.02.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 2011 2012 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வகுத்துள்ளார். பலதரப்பு மக்களும் பயன்படத்தக்க வகையில் தீட்டப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டத்தை வகுக்க அவருக்கு வழிகாட்டியுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியையும் பாராட்டுகிறேன்.


உலகஅளவிலான பொருளாதார தேக்க நிலையின் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தை அதிக அளவில் தாக்காதவண்ணம் பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் ஒரு சீரான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லக்கூடியதாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.


விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்

முதன்மைத் துறைகளில் முக்கியமான துறையான விவசாயத் துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், விளைப் பொருட்களின் சேதாரத்தைக் குறைக்கவும், உணவுப் பதப்படுத்துவதை ஊக்குவிக்கவும், விவசாயப் பணிகளுக்கு கடனுதவி தடையின்றி கிடைக்கவும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.


தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கான ஒதுக்கீட்டினை ரூ.6,755 கோடியிலிருந்து ரூ.7,860 கோடியாக உயர்த்தியும், 60 ஆயிரம் கிராமங்களில் பருப்பு வகைகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், ரூ.300 கோடி செலவில் 60 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் எண்ணெய் பனைப் பயிர்களை பயிரிடுவதற்கான திட்டத்தினை அறிவித்துள்ளதும், காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தும், வறட்சிப் பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பயிர்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது போன்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருந்தாலும் ஒதுக்கீடு செய்துள்ள தொகை இந்திய நாட்டின் அளவில் போதாது என்பதால், இந்தத் தொகை மேலும் உயர்த்தப்படலாம் என்று எண்ணுகிறேன்.


விலையைக் கட்டுப்படுத்த உதவும்


விவசாயப் பொருட்களின் விலையேற்றம் உள்ள இந்த நேரத்தில், இந்தத் திட்டங்களால் உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டு உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். மேலும் விவசாயிகளுக்கான பயிர்க் கடன் ரூ.3.75 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதும் முறையாக கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கு ஏற்கனவே இருந்து வந்த வட்டிச் சலுகையை 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியுள்ளதும் பாராட்டத்தக்க அம்சங்களாகும்.


தமிழக அரசு முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடனை வழங்கி வந்தாலும் மத்திய அரசின் பயிர் கடனுக்கான இச்சலுகையை வரவேற்கிறேன்.


நெசவாளர்களுக்கு விடிவு காலம்


கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சலுகையினால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாத கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு விடிவு காலம் ஏற்படும்.


மேலும், நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் ஊரக அடிப்படை வசதி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.16 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.18 ஆயிரம் கோடியாக உயர்த்தி, சேமிப்புக் கிட்டங்கி வசதியை மேம்படுத்துவதற்காக இந்தக் கூடுதல் நிதி வழங்கியுள்ளது, விவசாயப் பொருட்கள் முறையாக சேமிக்கப்பட்டு விலையைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.


முதலீட்டை அதிகரிக்கும்


மேலும் 15 பெரிய அளவிலான உணவைப் பதப்படுத்தும் பூங்காக்கள், குளிர்சாதன வசதிக்கான திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் தீவனப் பயிர்கள் உற்பத்தியைப் பெருக்குவதற்கான திட்டங்கள் போன்றவை முதன்மைத் துறையான விவசாய, கால்நடைத் துறைகளின் வளர்ச்சிக்கு குறிப்பாக கிராமப்புற வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


தொழிற்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு 23.3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்க ஒன்றாகும். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது ஆகும். மேலும், உள்கட்டமைப்பு வசதிகளின் முதலீட்டை அதிகரிக்க ரூ. 30 ஆயிரம் கோடி அளவிற்கு வரிச்சலுகை பெற்ற கடன் பத்திரங்கள் அரசு வழங்க உள்ளதாக தெரிவித்திருப்பது இத்துறையில் முதலீட்டை அதிகரிக்க உதவும்.


சமூக நலத் திட்டங்களுக்காக...


நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வீட்டுவசதி மேம்பாட்டினை தமிழக அரசு ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு சதவீதம் வட்டிச் சலுகை மற்றும் ராஜீவ் நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அடமான மீட்பு நிதி போன்றவற்றால் ஏழைகள் பயன்பெறும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை மாநில அரசுகள் விரைவாகச் செயல்படுத்த இயலும்.

சமூக நலத் திட்டங்களுக்காக மத்திய அரசின் ஒதுக்கீடு இந்த ஆண்டு 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்காக 36.4 சதவீதம் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது ஆகும்.


கல்வி வளர்ச்சி


அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கும் முதன்முறையாக ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு கல்வி உதவித் தொகை இந்த ஆண்டு முதல்முறையாக வழங்கப்பட உள்ளது போன்றவை வரவேற்கத்தக்கது. கல்வித் திட்டங்களுக்காக குறிப்பாக சர்வ சிக்ஷா அபயன் திட்டத்திற்காக சென்ற ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, கல்வி வளர்ச்சிக் குறியீடுகளை மாநிலங்கள் விரைவாக எட்டுவதற்கு மிக உதவியாக இருக்கும்.


மக்கள் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வயதுத் தகுதி 65 ல் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதும், 80 வயதிற்கு மேற்பட்டுள்ளவர்களுக்கு உதவித் தொகை ரூ.200 ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன்.


சாதி வாரி கணக்கெடுப்பு


வரிச் சலுகையைப் பொறுத்தவரை தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஒரு லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வயது முதிர்ந்தோருக்கான சலுகை பெறும் அதிகபட்ச வயது 65 லிருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதும், அவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.21/2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும், தனிநபர்களுக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்.

மேலும் 80 வயதைக் கடந்த முதியோருக்காக ஒரு புதிய வகுப்பு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் நெடுநாளைய கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பை வரும் ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. இதற்காக எனது நன்றியினை மத்திய அரசுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.