ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் சென்னையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அமைச்சர் ராசா மீது குற்றச்சாட்டு இருப்பதாகக் கூறி, அவர் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று கேட்டு அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
ஆனால், கடந்த காலத்தில் ஊழல் புகார்கள் கூறப்பட்டு, நீதிபதிகளால் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது, இவர் தார்மிகப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தாரா?
கடந்த 2001 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும், அவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்ததாலும் அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட தகுதியிழந்த ஒருவருக்கு முதல்வராகப் பதவி பிரமாணம் செய்துவைக்கலாமா என்ற கேள்வி அப்போது எழுந்தது.
ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த ஒருவர் மேல் நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை, அரசுப் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எம்.எல்.ஏ.வாக இல்லாத ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். அவர் ஆறுமாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக ஏதாவதொரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். டான்சி மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த நிலையில்,அவர் எந்தவொரு தொகுதியிலும் போட்டியிட முடியாது. எனவே, அவர் 2001, நவம்பர் 13 ம் தேதி முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார்.
அவருக்குப் பதிலாக அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இப்படிப்பட்ட ஒருவருக்கு (ஜெயலலிதா) மற்றவர்கள் மீது குறை கூறி ஆர்ப்பாட்டம் நடத்த தகுதி உண்டா என்பதை தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment