கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, May 13, 2010

முதல்வர் கருணாநிதி ஆங்கில பத்திரிக்கை டெக்கான் கிரானிக்கல் பேட்டி


கேள்வி: உங்கள் ஆட்சியில் அதிகார மையங்கள் நிறைய உள்ளதாகவும், நிர்வாகத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் அவற்றின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்:
குற்றம் சாட்டாவிட்டால், பின்னர் எப்படி அவை எதிர்க்கட்சிகளாக இருக்க முடியும்? அதிகார மையங்கள் என்பதில் அர்த்தமும் இல்லை; அடிப்படையும் இல்லை. கேள்வி: சினிமா துறையினருக்கு நீங்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் தருவதாகவும் ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் மக்களிடத்தில் சினிமா நடிகர்களுக்கு உள்ள செல்வாக்கை உங்களுக்கான ஆதரவாக மாற்றும் முயற்சியா இது?

பதில்:
அரசியல் துறையிலே இருப்பதைப் போலவே, இலக்கியத் துறையிலே இருப்பதைப் போலவே சினிமா துறையிலும் எனக்கு ஏராளமான நண்பர்கள் அந்தக் காலத்திலிருந்தே உண்டு. அந்தத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் அடிக்கடி என்னைச் சந்திப்பார்கள். அது தானே தவிர அந்தத் துறைக்கென்று அபரிமிதமான முக்கியத் துவம் எதையும் நான் தர வில்லை. அந்தத் துறையிலே உள்ள தொழிலாளர்கள் மீது அந்தக் காலத்திலிருந்தே எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதன் காரணமாக அவர்களுக்கென்று சில பல சலுகைளை நான் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற காரணத்தால், செய்கின்ற காரணத்தினால், அந்தத் துறைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருகிறேன் என்று உங்களைப் போன்ற சிலர் கருதுகிறார்கள் போலும். கேள்வி: முன்பெல்லாம் தேர்தல் களம் என்பது கொள்கைப் பிரச்சாரம் வாதம் எதிர்வாதம் என அமர்க்களப்படும். ஆனால் இப்போது ஏராளமாக பணம் புழங்குவதும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற காரணியாக பண பலம் மாறி விட்டதற்கான சூழல் தென்படுகிறது. வாக்காளர்களே பணம் கேட்கும் நிலை ஏற்படுவதாக தேர்தல் அதிகாரிகளே வருந்துகிறார்கள். சாமானியர்கள் தேர்தலைப் பற்றி சிந்திக்க முடியாமல் செய்து விடும் இந்தச்சூழல் ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதா?

பதில்:
காலக்கணக்கெடுத்திட நீங்கள் நண்பர் சோ அந்தக் காலத்தில் நடத்திய சம்பவாமி யுகே யுகே நாடகத்தைப் பார்த்திருக்க வேண்டும். கேள்வி: நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நேரில் சென்று கண்டு ரசிக்கவும் நீங்கள் தவறுவதில்லை. ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டியில் மாறுபட்டுள்ள டி.20 போட்டி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அண்மைக் காலத்தில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

பதில்:
டி.20 போட்டிகள் விளையாட்டு வீரர்களின் திறமையைப் பொறுத்து முடிவுகள் அமைய வேண்டுமே தவிர சூதாட்டக்காரர்களின் முடிவுகளாக அமைந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடர்ந்து டெண்டுல்கர் பொறுப்புணர்வோடு விளையாடுவது என்னைக் கவர்ந்த ஒன்றாகும். அண்மைக் கால வீரர்களைச் சொல்ல வேண்டுமானால் சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் டோனி, ஷேர்ன் வாட்சன், ஜாகஸ் காலீஸ் போன்றவர்கள் என்னைக் கவர்ந்தவர்களாவர். கேள்வி: தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கிராமப் புறங்களில் வறட்சியும் வறுமையும் தொடர் கின்றனவே? வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை தேடி நகரங்களுக்குப் படையெடுக்கும் சூழலும் நீடிக்கின்றனவே?

பதில்:
தமிழ்நாட்டில் பொதுவாக தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதற்காக நன்றி. கிராமப்புறங்களிலே வறட்சியும் வறுமையும் தொடர்வதாகக் கேட்டிருக்கி றீர்கள். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்துவதாலும்; ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தினாலும் கிராமப்புறங்களில் பெருமளவுக்கு வறுமையும் வறட்சியும் குறைந்து வருகிற தென்பதைக் கண்கூடாகக் காணலாம். கிராமப்புறங்களிலும் வளமையைக் கொண்டுவர வேண்டுமென்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.


அதற்காகத் தான் புதிதாக தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களை யெல்லாம் கிராமப் புறங்களிலே தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டுமென்றும், அந்தத் தொழிற்சாலை அமைகின்ற பகுதிகளிலே உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு அத்தகைய தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கு மேயானால, நகரங்களுக்கு படையெடுக்கும் சூழல் தானாகவே குறைந்து விடும்.

கேள்வி: நான்காண்டு கால ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச டி.வி., கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை, சட்ட மன்றக் கட்டடம், வீட்டு வசதித் திட்டம் என சாதனைப்பட்டியல் நீளமானது. இவற்றில் உங்களைக் கவர்ந்தது எது?

பதில்:
ரோஜா தோட்டத்தில் உங்களைக் கவர்ந்த ரோஜா எது எனக் கேட்பதைப் போல இருக்கிறது.

கேள்வி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகி, அழகிரி மாநில அரசியலுக்கு வருவார் என்றும், கனிமொழி மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஊடகங்களில் செய்திகள் அடிபடுகின்றனவே?

பதில்:
நீங்கள் தான் உங்கள் கேள்வியிலேயே ஊடகச் செய்தி என்று சொல்லி விட்டீர்களே?

கேள்வி: ஜெயலலிதாவுக்கு சின்சியாரிட்டி பிடிக்கும். உங்களுக்கு சீனியாரிட்டி பிடிக்கும் என்பது பரவலாகப் பேசப்படும் விஷயம். அமைச்சரவையிலும், சட்ட மன்றத்திலும் புதிய முகங்களை, புதிய சிந்த னையை வரும் ஆண்டிலாவது பார்க்க முடியுமா?

பதில்:
என்னைப் பொறுத்த வரையில் சின்சியாரிட்டி யோடு இணைந்த சீனியாரிட்டி யைத்தான் நான் எப்போதும் மதிப்பவன். கழகம் அவ்வப்போது தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வருவதை அனைவரும் அறிவர். புது முகங்களுக்கும் புதிய சிந்தனைக்கும் கழகத்தில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடைசியாக நடைபெற்ற பென்னாகரம் இடைத்தேர்தலில் கூட படித்த ஒரு இளைஞரான புது முகத்தைத் தானே நிறுத்தி வெற்றி பெறச் செய்தோம்.

கேள்வி: இப்போது 5 வது முறையாக முதல் மந்திரியாக இருக்கிறீர்கள். ஏற்கனவே 4 முறை முதல் மந்திரி பதவியில் இருந் துள்ளீர்கள். இந்த காலத்தில் நீங்கள் நினைத்த எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி விட்டீர்களா? அல்லது இன்னும் நிறைவேற்ற வேண்டியவை இருக்கிறதா?

பதில்: ஏற்கனவே நான்கு முறை பதவியிலே இருந்த காலத்திலும், தற்போது ஐந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலும் மக்களின் தேவைகளை ஓரளவிற்கு நிறைவேற்றினோம் என்ற மன நிறைவு எனக்குள்ளது என்ற போதிலும் இன்னும் ஏராளமாக மக்களுக்கு செய்திட வேண்டு மென்ற வெறி எனக்குள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றது. மக்களிடம் தேவை என்று ஒன்று இருக்கின்ற வரையில் அதனைப் பூர்த்தி செய்திட வேண்டுமென்ற எனது விருப்பம் இருந்து கொண்டுதானே இருக்கும்.

கேள்வி: சட்டசபை தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி நீடிப்பது குறித்து சோனியாவிடம் பேசினீர்களா?

பதில்: தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி; வரும் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கும் தொடரும் என்று இரு தரப்பிலும் பலமுறை வெளிப்படையாகச் சொல்லியாகிவிட்டது. எனவே அண்மையில் அவர்களைச் சந்தித்தபோது, அது பற்றி பேசவில்லை.

கேள்வி: அதிகாரம் மற்றும் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக நீங்கள் 2 தடவை சொல்லி விட்டீர்கள். இந்த நிலையில் அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா?

பதில்: எனது இறுதி மூச்சு இருக்கும் வரையில் இலக்கியத்தையும், அரசிய லையும், மக்கள் பணியையும் என்னிடமிருந்து எதுவும் பிரித்து விட முடியாது. ஏதோ ஒரு வகையில் என் னுடைய தொண்டு மக்க ளுக்காகத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்த பொதுத் தேர்தலில் நிற்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.

கேள்வி: கடந்த 4 ஆண்டில் நீங்கள் செய்த முக்கிய சாதனைகள் என்ன?

பதில்: தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் கழக அரசு செய்துள்ள எண்ணற்ற சாதனைகள் என் எண்ணத்தில் நிழலாடுகின்றன. எனினும், 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டம், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஆகிய மூன்றும் மறக்க முடியாதவை மட்டுமல்ல; மகத்தான சாதனைகளாகும்.

கேள்வி: உங்களின் மிக முக்கிய திட்டமாக எதை கருதுகிறீர்கள்?

பதில்: பெரியார் நினைவு சமத்துவப்புரத் திட்டம் அண்ணா மறு மலர்ச்சித் திட்டம்.

கேள்வி: தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

பதில்: பசியும், பிணியும் தீண்டாத தமிழகம்; இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி முதல் நிலையில் இருக்கும் தமிழகம்; சமத்துவமும், சகோதரத்துவமும் பின்னிப் பிணைந்து இழையோடும் தமிழகம்; தாய்மொழிப் பற்றும், தாயகத்தின் மீது பாசமும் நிறைந்துள்ள தமிழகம் இவைதான் நான் கனவு காணும் தமிழகம்.

கேள்வி: சென்னையின் தோற்றத்தை மாற்றும் திட்டம் உள்ளதா?

பதில்: சென்னையின் முகத்தையும், தோற்றத்தையும் மாற்றுவதற்கு ஏராளமான திட்டங்களை கழக அரசு வகுத்து செயல்படுத்தி வருகிறது. தமிழக துணை முதல் அமைச்சர், தம்பி மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிட பத்துக்கு மேற்பட்ட மேம்பாலங்கள், நகர் முழுவதிலும் அழகழகான பூங்காக்கள், சென்னைக் கடற்கரையை அழகு படுத்தும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை வகுத்து முறையாகச் செயலாற்றியிருக்கிறார். தற்போது அடையாறு பூங்கா அமைக்கும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை உயர்நிலை விரைவுச்சாலை திட்டம் போன்றவையெல்லாம் சென்னையின் முகத்தை அழகுபடுத்துவதற்கான திட் டங்கள்தான்.

கேள்வி: சென்னையில் துணை நகரம் அமைக்க திட்டம் தீட்டினீர்கள். அந்த திட்டம் வருமா?

பதில்: சென்னையைப்போல் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களுக்கு துணை நகரம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இரண்டாண்டுகளுக்கு முன்பு துணை நகரம் ஒன்றினை உருவாக்கிடத் திட்டமிடப்பட்டு பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை ஒரு துயரமான முடிவுக்கு வந்திருக்கிறது. அந்நாட்டில் போர் முடிந்து, இரு தேர்தல்கள் நடந்துள்ள நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும் அரசியல் தீர்வு ஏற்படவும் இந்தியாவின் நடவடிக்கைகளில் மெத்தனமும் அலட்சியமும் தென்படுகின்றனவே?

பதில்:
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அமைதியான நல்வாழ்வு வாழ வேண்டும். அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இங்குள்ள மத்திய, மாநில அரசுகளின் பெரு விருப்பமாகும்.


இலங்கை ஒரு அன்னிய நாடு என்கிற போது தான், அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாம் தலையிடும்போது முள்ளில் விழுந்த துணியை, கிழியாமல் எடுப்பது போல் எடுக்க வேண்டியிருக்கின்றது. அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, இங்குள்ள ஒருசில அரசியல்வாதிகள் அரசியல் ரீதியான உள்நோக்கங்களோடு, ஏதோ அவர்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்காகப்பாடுபடு பவர்களைப் போல நடிக்கிறார்களே தவிர, வேறொன்றும் இல்லை.

உதாரணமாக பார்வதி அம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை. இருந்தாலும் ஒருசிலர் தங்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக அந்த அம்மையாரின் உடல் நிலையை வைத்து தாங்கள் தான் அவர்மீது அக்கறையும், பாசமும், பற்றும் உள்ளவர்கள் என்பதைப்போல திட்டமிட்டு எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படும் நிலைமை தொடர்கிறதே?

பதில்:
இந்தத் துன்பத்தைகளைவதற்கு பல ஆண்டுகளாக நம்மால் முடிந்த முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டு தான் வருகிறோம். எனினும் மீண்டும், மீண்டும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது என்று அந்தப் பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கேள்வி: இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததும் காங்கிரசிடம் ஒரு கர்வமும் பெரிய அண்ணன் போக்கில் நடந்து கொள்வதாகவும் டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில்கூட தமிழக அரசோடு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டி இருக்கிறது.

பதில்:
இது ஏதோ உள்நோக்கத்தோடு கேட்கப்படுகின்ற கேள்வியைப் போல உள்ளது.இருந்தாலும் பதில் கூறுகிறேன். காங்கிரசிடம் எந்தக் கர்வமும் ஏற்படவும் இல்லை. பெரிய அண்ணன் போக்கில் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை. இவை வெறும் கற்பனை. அண்மையில் நான் டெல்லி சென்றிருந்தபோது கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மிகுந்த அன்போடு என்னை வரவேற்றார்கள். பிரபாகரனின் அன்னையார் விவகாரத்தில் கூட தமிழக அரசோடு மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்று தி.மு.க. தரப்பில் யாரும் குற்றஞ்சாட்டவில்லை. பிரபாகரனின் அன்னையார் தரப்பிலிருந்து தான் யாரும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் நீங்கள் வேண்டுமென்றே அனைத்தையும் மாற்றி கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.
No comments:

Post a Comment