கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 22, 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (3) - பேரா. சுப. வீ

எம்.ஜி.ஆரும் புலிகளும்

1970-80 கால கட்டத்தில்,சிறு சிறு குழுக்களாக இருந்த நிலை மாறி, ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகத் தொடங்கின. முதலில் தோன்றிய மூன்று பெரும் அமைப்புகள் என ஈராஸ், விடுதலைப் புலிகள், டெலோ ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.



ஆனால் அதே சமயத்தில் உருப்பெற்றிருந்த புதிய தமிழ்ப் புலிகள் என்னும் அமைப்பைப் பற்றிய சரியான செய்திகளை முழுமையாக அறிந்து கொள்ள இயலவில்லை. தலைவர் பிரபாகரனால் முதலில் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே அது என்று சிலர் கூறுகின்றனர். எனினும் அதற்குப் போதுமான சான்றுகள் கிடைக்கவில்லை. தனபால் சிங்கம் (எ) செட்டி என்பவர்தான் அதனைத் தொடக்கினார் என்றும், அது மிகக் குறைந்த காலம் மட்டுமே இருந்தது என்றும் கூறுகின்றனர்.

தனபால் சிங்கம் குறித்துப் போராளிகள் பலருக்கே தெரியவில்லை. ஆனால் அவருடைய தம்பி ஈழப் போராட்ட வரலாற்றில் முக்கியமானவர்களில் ஒருவராக உள்ளார். புலிகள் இயக்கத்தின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவரும், 83 ஆம் ஆண்டு ராணுவத்தின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவருமான தளபதி செல்லக்கிளியே அவருடைய தம்பி. அவர் வீட்டில் இருந்த எருமை மாடு ஒன்றினை விற்றே, புலிகள் தங்களின் முதல் துப்பாக்கியை வாங்கினர் என்பது, புலிகள் ஆதரவாளர்கள் அனைவரும் அறிந்த செய்தி.



அவருடைய அண்ணன்தான் TNT என்று சுருக்கமாக அறியப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கியவர் என்று தெரிகிறது. டி.என்.டி என்பது ஒரு வெடி மருந்துப் பொருளின் பெயராகவும் இருப்பதை நாம் அறிய முடிகிறது. அதற்காகவே அப் பெயர் சூட்டப்பட்டும் இருக்கலாம். ஆனால் அது சில ஆண்டுகள் மட்டுமே இருந்த காரணத்தினாலும், பெரிய சாதனைகள் எதனையும் செய்துவிடாத காரணத்தினாலும் வரலாற்றில் பெரிதாய் இடம்பெறவில்லை. புலிகள் என்னும் பெயரை முதலில் தாங்கிய இயக்கம் என்ற ஒன்றைத் தவிர.
கூடுதல் உரிமை,சுயாட்சி ஆகியனவற்றைத் தாண்டி, தமிழ் ஈழ விடுதலை என்பதையே ஆயுதப் போராளிக் குழுக்கள் முன்வைத்தன.

ஐம்பதுகளிலேயே தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்த பெருமை அன்றைய அரசியல் தலைவர்களில் ஒருவரான சுந்தரலிங்கத்தைச் சாரும். அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் என்றே அவர் அழைக்கப்பட்டார். ஜி. ஜி. பொன்னம்பலம் காலத்து அரசியல்வாதி அவர். ஆனால் பிற்காலத்தில் அவரும், பொன்னம்பலமும் சமரசம் செய்து கொண்டு, சிலோன் அமைச்சரவையில் அமைச்சர்களாகி விட்டனர் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.
அறப் போராட்டத்தை முன்வைத்த தலைவர்கள் கூட, 1977 ஆம் ஆண்டு தமிழ் ஈழம்தான் தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதுவே வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பதை நாம் அறிவோம். அத் தீர்மானத்தை முன் நிறுத்தியே அன்று அனைத்துத் தமிழ்க் கட்சிக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. தனி ஈழத்தை ஏற்போர் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுதான் தேர்தல் கூட்டங்களில் பேசினர். மக்களும் தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்தனர். 19 இடங்களில் போட்டியிட்ட தமிழர் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இதனை நினைவில் கொண்டே, மாவீரர்கள் நாள் உரை ஒன்றில், "மக்கள் அளித்த தீர்ப்பை நெஞ்சில் ஏந்தியே இத்தனை ஆண்டு காலம் நாங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போர்க்களத்தில் நிற்கின்றோம்" என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்பாகவே ஈழக் குறிக்கோளை நெஞ்சில் ஏந்திப் போராளிக் குழுக்கள் களத்திற்கு வந்துவிட்டன. அதற்கான செயல் திட்டங்களிலும் இறங்கிவிட்டன.
போராடுவதற்கு ஆயுதம் வேண்டும். ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும்.அதற்கான நிதி நடவடிக்கைகள் வேண்டும். அந்த நடவடிக்கைகள் அரசு வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதில் தொடங்கின.
ஈராஸ் தலைவர் பாலகுமார் அப்போது ஒரு வங்கி அதிகாரியாக இருந்தார்.அவர் வேலை செய்த வங்கியில் ஒரு பணப் பறிப்பு நடைபெற்றது. பாலகுமாரைக் கட்டிப்போட்டுவிட்டுப் பணத்தைச் சிலர் எடுத்துச் சென்றனர். பிறகு வழக்கு நடைபெற்றபோது, பாலகுமாரும் அதற்கு உடந்தை என்று சொல்லி அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடுத்ததாக இன்னொரு பெரிய வங்கிக் கொள்ளை வழக்கு நடைபெற்றது. அதற்கு நீர்வேலி வங்கிக் கொள்ளை வழக்கு என்று பெயர். ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.அவ் வழக்கு தொடர்பாகத் தேடப்படுபவர்கள் என்று சிலரது படங்களைச் சிங்கள அரசு வெளியிட்டிருந்தது.அந்தப் படத்தில் பிரபாகரன், முகுந்தன் உள்ளிட்ட போராளிகள் சிலர் இருந்தனர். ஆனால் அப்படம் அங்கு வெளியிடப்பட்டபோது பிரபாகரன், முகுந்தன், ராகவன், சிவனடி, விசுவேஸ்வரன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்தனர்.
தொடக்க காலத்தில் தமிழகம் வந்த போராளிகளுக்கு, குறிப்பாகப் புலிகளுக்கு ஆதரவு கொடுத்தவர்களில் முதன்மையானவர் சி. பா.ஆதித்தனார். இச் செய்தியைப் பம்பாய் தமிழ்மன்னன் கூற நான் அறிந்தேன். அப்போது பம்பாய் தமிழ் மன்னனைப் பல கூட்டங்களில் சந்தித்திருக்கின்றேன்.கட்டையான உருவம். கனத்த குரல். அன்று இளைஞர்களாக இருந்த எங்களைப் போன்றவர்களிடம் அன்பாகப் பழகுவார். பாரதிதாசனின், "பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை" பாடலை அவர் சொல்லித்தான் நான் முதலில் கேட்டேன். ஆதித்தனாரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இளைஞர்கள் நீங்களெல்லாம் வீரமாக இருக்க வேண்டும் என்பார். கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. இப்போதும் அவர் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.
அதே தமிழ் மன்னன்தான், போராளிகள் பலரை செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தவர் என்பதை அண்மையில் அறிந்தேன். அப்போது செஞ்சியார் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். அவருடைய சட்டமன்ற விடுதி அறையில்தான் (அறை எண் 531) போராளிகள் பலர் தங்கி இருந்தனர் என்று எங்களுக்குச் சொல்வார்கள். அது உண்மையா என்று எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் ஒரு கூட்டத்தில் அய்யா ஈழவேந்தன் அறை எண் 531 தான் எங்கள் அலுவலக அறை என்று வெளிப்படையாகவே கூறினார். அதற்காக அவரைப் பிறகு நண்பர்கள் கடிந்து கொண்டனராம்.
இவ்வாறு தமிழ் மண்ணில் காலூன்றிய போராளிகள், தனி மனிதர்களைத் தாண்டி, அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெறத் தொடங்கினர்.
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க.,ஆசிரியர் வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம், நெடுமாறன் தலைமையிலான தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சி ஆகியன ஆதரவு கொடுத்தன. கலைஞர் தலைமையிலான தி.மு.க. டெலோவை ஆதரித்தது. ஈரோஸ் அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி என்று சொல்ல முடியாவிட்டாலும், தனிப்பட்ட பலரின் ஆதரவு இருந்தது. நான் அறிந்தவரையில் பேராசிரியர் இளவரசு, பேராசிரியர் பெரியார்தாசன், வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன்,அரணமுறுவல், கோவேந்தன், எழில் இளங்கோவன், வைகறைவாணன், பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன், அறிவுறுவோன், எழிற்கோ முதலான பலரும் ஈரோஸ் ஆதரவாளர்களாக இருந்தனர்.
1980க்குப் பிறகு, ஈரோஸ் அமைப்பிலிருந்து பத்மநாபா பிரிந்துபோய் ஈ.பி.ஆர்.எல்.எப்.என்னும் அமைப்பைத் தொடங்கினார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து முகுந்தன் (எ)உமா மகேஸ்வரன் பிளாட் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவு ஈ.பி.ஆர்.எல்.எப்.பிற்குக் கிடைத்தது. பாவலேறு பெருஞ்சித்திரனார், தமிழ்மண் இளவழகன் போன்றோர் பிளாட் அமைப்புக்கு ஆதரவாக இருந்தனர். தொடக்கத்தில் புதுக்கோட்டைப் பாவாணன் கூட பிளாட் அமைப்பின் ஆதரவாளராக இருந்தார் என்றே நினைக்கிறேன்.
எந்தக் குறிப்பிட்ட அமைப்பையும் ஆதரிக்காமல், பொதுவாக எல்லா ஈழப் போராளிகளுக்கும் ஆதரவு என்னும் நிலையில் மிகப் பலர் இருந்தனர். 87 ஆம் ஆண்டு வரையில் நான் அந்தப் பட்டியலில்தான் இருந்தேன். திலீபன் மரணம் என்னைத் திசை மாற்றியது. திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன், கவிஞர் மு.மேத்தா ஆகியோரின் நட்பும், பெரியார் திடல் கூட்டங்களும், அய்யா நெடுமாறன் அவர்களின் வழிகாட்டலும் என்னை முழுமையான புலிகள் ஆதரவாளன் ஆக்கின.

தொடக்க நிலை ஆதரவுகளில் மாற்றங்களும் பின்பு நிகழ்ந்துள்ளன. அய்யா பெருஞ்சித்திரனார் போன்றவர்கள் பிற்காலத்தில் தீவிரமான புலிகள் ஆதரவாளர்கள் ஆயினர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகும், மிக நெருக்கடியான கட்டங்களில் கூடப் பெருஞ்சித்திரனார் புலிகளுக்கு ஆதரவாகக் கவிதைகள் எழுதினார். அதற்காக அவர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது. பொதுவுடமைக் கட்சியினர் பத்மநாபா தலைமயிலான .பி.ஆர்.எல்.எப் இயக்கத்துடன் நெருங்கிய நட்பினைக் கொண்டிருந்தனர். அதே வேளையில் அக் கட்சியுடன் தொடர்புடைய புகழ் பெற்ற வழக்கறிஞர் என்.டி. வானமாமலைதான், பாண்டி பசார் துப்பாக்கிச் சூடு வழக்கில், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்காக வழக்கை நடத்தினார். ஒருவேளை, அப்போது எம்.ஜி.ஆரும், பொதுவுடமைக் கட்சியினரும் நெருக்கமாக இருந்தததால் அவ்வாறு நடந்திருக்கலாம்.
தி.மு.கழகம் டெலோவை ஆதரித்தபோதும், தி.மு..வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வைகோ முழுக்க முழுக்கப் புலிகளின் ஆதரவாளராக இருந்தார். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்ன்னவென்றால், அவருடைய அப்போக்கைக் கட்சித் தலைமை மறுக்கவில்லை என்பதுதான். நாடாளுமன்றத்தில் ஈழத்திற்கும், புலிகளுக்கும் ஆதரவாக வைகோ முழங்கியது உண்மைதான். ஆனால் அது வைகோவின் குரல் மட்டுமன்று, அது தி.மு.. வின் குரலும் என்பதை மறந்துவிடக் கூடாது. தி.மு.. வின் கொரடா (whip) அனுமதியின்றி அவரால் அப்படி எல்லாம் பேசியிருக்க முடியாது.
அது மட்டுமின்றி, டெலோவைத் தாண்டிப் பிற இயக்கங்களுக்கும் தி.மு.. தன் ஆதரவைப் பல நேரங்களில் கொடுத்துள்ளது. அது குறித்து விரிவான செய்திகளை நாம் பின்னால் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, ஒரு வியப்பான செய்தியை இங்கு நாம் பகிர்ந்து கொள்ளலாம்.
 
எம்.ஜி.ஆர். முழுமையான புலிகள் ஆதரவாளர் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை. ஆனால் அவருடைய நிலைப்பாட்டிலும் ஒரு கட்டத்தில் சில மாற்றங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது. இச் செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். முதன் முதலில் படிக்கும்போது, என்னாலும் நம்ப முடியவில்லைதான். ஆனால் உரிய ஆதாரம் கிட்டியபோது நம்பாமல் இருக்க முடியவில்லை.

1987 ஆம் ஆண்டில்,புலிகள் குறித்த எம்.ஜி.ஆர். நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது பற்றி, இந்தியாவின் மேனாள் வெளிநாட்டுத் தூதுவர் ஜி. பார்த்தசாரதி தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தி காலத்தில் , ஈழச் சிக்கலைக் கையாண்டு கொண்டிருந்தவர்கள் மூவர். பி.வி.நரசிம்ம ராவ், அலெக்சாண்டர், ஜி. பார்த்தசாரதி ஆகிய அம்மூவரும் தென்னாட்டவர்களாக இருந்த காரணத்தால், சரியாக அதனைக் கொண்டு சென்றனர் என்றும், ரமேஷ் பண்டாரி, தீட்சித் போன்றவர்கள் வந்த பிறகு பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு விட்டதென்றும் நெடுமாறன் அவர்கள் அடிக்கடி கூறுவார். அம்மூவருள்ளும் கூட, ஜி. பார்த்தசாரதி தனி இடம் பெற்றவர் என்பது பொதுவான கருத்து. அந்தப் பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரைதான் எம்.ஜி.ஆர் குறித்த வியப்பான செய்தியை நமக்குத் தந்துள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் அவர்களைத் தன் தூதுவராகச் சென்று பார்த்து வரும்படி அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, ஜி. பார்த்தசாரதியை அனுப்பியிருந்தார். பால்டிமோர் மருத்துவமனையில் அவரைச் சந்தித்து உரையாடியது பற்றிய கட்டுரையே அது. அக் கட்டுரையில் உள்ள முதன்மையான பகுதியையும், அதற்கான சான்றையும் அப்படியே கீழே தந்துள்ளேன்:
"பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில், 1987 அக்டோபரில், ஓர் இதமான, வெயிலாக இருந்த காலைப் பொழுதில் அவரைச் சந்தித்தபோது, உடல் நலம் பெற்று, அவர் சென்னைக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். ஒரு வெளியுறவு அதிகாரிக்கு, அது ஒரு சங்கடமான தூதுப் பயணமாக இருந்தது.வான்கூவரில் (கனடா) நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், ராஜீவ் காந்தி என்னைப் பால்டிமோர் சென்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் குறித்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கி வருமாறு பணித்திருந்தார். இந்திய அமைதிப் படை குறித்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) குறிப்பிடத்தக்க மௌனம் காட்டி வந்ததால்,இந்திய அமைதிப் படைக்குத் தமிழ் நாட்டில் அரசியல் எதிர்ப்பு எழுச்சிக்கான அறிகுறிகள் தெரிந்தன.
என் விளக்கங்கள எம்.ஜி.ஆர் பொறுமையுடன் கேட்டார். பிறகு, இரு முக்கியமான குறிப்புகளைக் கூறினார். முதலில், உருவாகவிருக்கும் இடைக்கால நிர்வாகக் குழுவில், இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு மிகத் தாராளமாக இடமளித்து விட்டதாகவும்,ஈ.பி.ஆர்.எல்.எப். இன்னும் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறும் தகுதி உள்ளது என்றும் தான் உணர்வதை வெளிப்படுத்தினார். இரண்டாவதாக, நம் நாட்டு நலன் அடிப்படையில்,ஸ்ரீ லங்காவில் பிரதம மந்திரி (ராஜீவ் காந்தி), தேவை எனக் கருதி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் தான் ஆதரிப்பதாக நான் பிரதமரிடம் கூற வேண்டும் என்றார்.”(சான்று: http://www.rediff.com/news/2000/jul/17gp.htm)
இந்த செய்தியோடு மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியையும் சேர்த்து வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு. அதனையும் அடுத்துக் காண்போம்.

Saturday, September 8, 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (2) - - பேரா. சுப. வீ


முதல் பலியும், முதல் கொலையும்

  1947 இந்திய விடுதலைக்குப் பின் தமிழகம் இரு பெரும் மக்கள் எழுச்சியைக் கண்டது. 

 ஒன்று, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம். இன்னொன்று, 1983 ஆம் ஆண்டு எழுந்த ஈழ ஆதரவு எழுச்சி. 

 83 ஜூலையில் வெலிக்கடைச் சிறையில் நடந்த படுகொலைகளுக்குப்  பின், தமிழ் நாடே போர்க் கோலம் பூண்டது. மாநகரங்கள் தொடங்கி, சின்ன கிராமங்கள் வரை எல்லா ஊர்களிலும் ஈழ ஆதரவுக் குரல் கேட்ட காலம் அது. 

 என் அனுபவத்திலிருந்து கூற வேண்டுமானால், நான் அப்போது திருப்பனந்தாள் கல்லூரியில் பணி ஆற்றிக் கொண்டிருந்தேன்.  ஒரு வேலையின் பொருட்டு, மயிலாடுதுறை சென்றேன். குறிச்சி, பந்தநல்லூர், குத்தாலம் வழியாகச் செல்லும் பேருந்து அது. குறிச்சி என்னும் அந்தச் சிறு ஊரிலேயே சிலர் கூடி நின்று, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாய்த் துண்டறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். பந்தநல்லூர் சென்றடைந்தபோது பெரும் ஊர்வலம் ஒன்றைக் காண முடிந்தது. பந்தநல்லூரிலிருந்து பிரிந்து வைதீஸ்வரன் கோயில் போக வேண்டிய பேருந்துகள், செல்ல வழியில்லாமல்    நின்று கொண்டிருந்தன. 


 அன்று காலை, நான் பணியாற்றிய கல்லூரி மாணவர்களும் வேலை நிறுத்தம் செய்து ஊர்வலம் சென்றனர். ஊர்வல முடிவில், மாணவர்களின் விருப்பப்படி நான் ஈழம் குறித்துப் பேசினேன். என் நினைவு, அதுதான் நான் ஈழம் பற்றிப் பேசிய முதல் கூட்டம் என்பது.

 இன்று இருப்பதுபோல், நொடிக்கு நொடி செய்திகள் தரும் தனியார் தொலைக்காட்சி எதுவும் அப்போது இல்லை. அரசுத் தொலைக்காட்சி மட்டும்தான். அதில் அவ்வளவாக இது குறித்தெல்லாம் கூற மாட்டார்கள். ஆனாலும் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியது. ஈழப் போராட்டத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரித்தன. எல்லா அமைப்புகளும் ஆதரித்தன. மக்கள் ஆதரவு வெள்ளமாய்த் திரண்டது.



 அந்தக் கால கட்டத்தில்தான், ஈழ விடுதலைக்குப் போராடும் ஆயுதப் போர்க் குழுக்களைப் பற்றித் தமிழ்  மக்கள் பரவலாக அறியத் தொடங்கினர். ஆனால் எழுபதுகளிலேயே அங்கு ஆயுதக் குழுக்கள் தோன்றிவிட்டன. அறுபதுகளின் இறுதியிலேயே அதற்கான விதைகள் விழுந்து விட்டன.
   

ஐம்பதுகளில் தொடங்கிய அறப் போராட்டங்களை அரசு அடக்குமுறைகளால் எதிர்கொண்டது. தமிழீழ அரசியல் கட்சிகளும் பிளவு பட்டுக் கொண்டிருந்தன. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி உருவானது. பிறகு அக் கட்சியின் செயலாளராக இருந்த காவலூர் நவரத்தினம் தனியாகப் பிரிந்து, தமிழர் சுயாட்சிக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார்.  தொண்டைமான் தலைமையில் மலையக மக்களுக்கான கட்சி தனியே இயங்கியது. ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு கட்சிகள் தோன்றுவது இயற்கைதானே! அதனால் பொதுக் கோரிக்கைகள் வலிமை இழப்பதும் தவிர்க்க இயலாததாகவே இருக்கும்.

 அச்சூழலில் போராட்ட முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இளைஞர்களிடம் தோன்றியது. அந்த எண்ணத்திற்கு தமிழர் சுயாட்சிக் கழகம் நடத்திய 'விடுதலை' என்னும் இதழும் ஊக்கம் அளித்தது. 1970 இன் தொடக்கத்தில் 'தமிழ் மாணவர் பேரவை' என ஓர் அமைப்பு உருவானது. கல்வியைத் தரப் படுத்துதல் என்னும் பெயரில் தமிழ் மாணவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டபோது மாணவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது. அதன் விளைவாகவே பேரவை அமைப்பும் தோற்றம் கொண்டது. இந்த அமைப்பே ஈழ இளைஞர்களை அரசியல்படுத்திய முதல் அமைப்பு என்று கூறலாம். இந்த அமைப்பில் சேர்ந்த உறுப்பினர்கள் சற்று வேகமானவர்களாக இருந்தனர். அமைதிப் போராட்டம் இனி உதவாது என்ற எண்ணம் அவர்களிடம் வளர்ந்தது. இந்த அமைப்பை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் பொன் சத்தியநாதன்.

பொன்.சத்தியநாதன் லண்டனில் இருக்கிறார் என அறிந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்றிருந்தபோது நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அந்த சந்திப்பிற்கு 'வெண்புறா' அமைப்பின் டாக்டர் மூர்த்தி அவர்கள் உதவினார். சத்தியநாதன் சொன்ன பல செய்திகள் எனக்குப் புதிதாய் இருந்தன. தொடக்க காலச் செய்திகள் பலவற்றை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் இளமைக் காலம் குறித்தும் அவர் பல செய்திகளைக் கூறினார். அப்போது 'தம்பி,தம்பி' என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அவர் பின்னாளில் இப்படி ஒரு பெரும் தலைவர் ஆவார் என்று அவர்களே எதிர்பார்த்திருக்கவில்லை.

மாணவர் பேரவை எப்படி வலிமை பெற்றது, பிறகு அதிலிருந்த பலர் எப்படிப் போராளிக் குழுக்களுக்குச் சென்றனர் என்பன குறித்தெல்லாம் அவர் கூற அறிந்தேன். அவற்றையெல்லாம் இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அது ஒரு தொடக்கம் என்பதைக் குறித்துக்கொண்டால் போதுமானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 'தமிழ் இளைஞர் பேரவை' என ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர் பேரவையோ மீண்டும் அற வழியிலேயே போராட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளது.


இந்நிலையில், 22.05.1972 அன்று கொண்டுவரப்பட்ட புதிய குடியரசுச் சட்டம் நாட்டை இரு கூறாக ஆக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அச் சட்டம், தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கியது. ஜனநாயகம் முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டுச் சட்டம்தான் சிலோன் என்னும் பெயரை ஸ்ரீ லங்கா என மாற்றியது. சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் முதன்மை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய சட்டத்தின் 29 ஆம் பிரிவு, சிறுபான்மையினருக்கு (தமிழருக்கு) வழங்கியிருந்த பல சட்டப் பாதுகாப்புகளை நீக்கியது.


அதே நேரம், தமிழர்களின் கட்சிகளை ஒன்றுபடுத்திய ஒரு நல்ல செயலையும் அது செய்தது. தலைவர்கள் பொன்னம்பலம், தந்தை செல்வா, தொண்டைமான் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்னும் கூட்டமைப்பை உருவாக்கினர்.

மாணவர் பேரவை வெகுண்டு எழுந்தது. அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருளம்பலம்,தியாகராசா, பொத்துவில் கனகரத்தினம் ஆகியோர் வீடுகளின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப் போராட்டத்தில் வன்முறையும் தலை காட்டத் தொடங்கியது. அடுத்த தலைமுறையும் அமைதியாகவே இருந்துவிட மாட்டார்கள் என்பதற்கான அடையாளம் தெரிந்தது. மாணவர்கள் பேரணி பெரிய அளவில் நடைபெற்றது.

அரசு தன் அடக்குமுறையைத் தொடங்கியது. ஐக்கிய முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களையும் அரசு முதன் முதலாகக் கைது செய்தது. முத்துக்குமாரசாமி, சுந்தர் (அரவிந்தன்), மனோகர் ஆகிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதால்  மாணவரிடையே எழுச்சி கூடியது. அந்த முத்துகுமாரசாமி இப்போது அமெரிக்காவிலோ, கனடாவிலோ இருப்பதாகக் கூறுகின்றனர். சுந்தர், பிரான்சில் உள்ளார். மனோகரைப் பற்றித் தெரியவில்லை.

அடுத்த மக்கள் எழுச்சியை 74 ஆம் ஆண்டு ஈழம் கண்டது.

1974 ஆம் ஆண்டு நான்காம் உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தது. முதல் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவிலும், இரண்டாம் மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையிலும், மூன்றாம் மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரான்சிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து நான்காம் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அன்று அங்கு அதிபராக இருந்த திருமதி பண்டாரநாயகா அதனைக் கொழும்பில் நடத்துமாறு கூறினார். ஆனால் ஏற்பாட்டாளர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். யாழில் நடத்த உறுதி கொண்டு, அங்கேயே நடத்தினர். அம்மாநாட்டிற்கு அரசு தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது.

அப்போது யாழ் மேயராக இருந்த ஆல்ப்ரெட்  துரையப்பா, தமிழராக இருந்தும் சிங்கள அரசுக்கு ஏற்ற வகையில் நடந்தார். அவருக்கு அப்பகுதியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. 1960 ஆம் ஆண்டுத் தேர்தலில், இலங்கைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தவுடன் இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்து விட்டார். அதனால் ஆளும் கட்சிக்கு உரியவராக நடந்து கொண்டு, தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தார்.

எல்லாவற்றையும் மீறி, 1974 ஜனவரி 3 - 9 மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. எட்டாவது நாள் (ஜனவரி 10) அது பொது மாநாடாக நடத்தப்பெற்றது. 10,000 பேருக்கு மேல் மக்கள் கூடி விட்டனர். போக்குவரத்து  பாதிக்கின்றது என்பதாகக் காரணம் காட்டி மேயரின் ஆணைப்படி, சந்திரசேகரா என்னும்  காவல் துறை மாவட்ட உதவிக் கண்காணிப்பாளர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இந்தியாவிலிருந்து சென்றிருந்த பேராசிரியர் நைனா முகமது பேசிக் கொண்டிருந்தபோது தடியடிக்கு அந்த அதிகாரி ஆணையிட்டார். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கூட்டம் கலைந்து போய்க் கொண்டிருக்க, அந்த நேரத்தில் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மேலே இருந்து மின் கம்பி ஒன்று அறுந்து விழ, அந்த இடத்திலேயே ஏழு பேர் மரணம் அடைந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த அத்துமீறல்களை விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அக் குழுவின் அறிக்கை 18.02.1974 அன்று வெளியிடப்பட்டது. ஆயுதம் ஏதுமற்ற பொதுமக்களிடம் காவல்துறை நடந்துகொண்ட முறை மிகவும் தவறானது என்றும், காவல்துறையிடம் இப்படிப்பட்ட போக்கை அரசு எதிர்பார்க்கவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியது. ஆனால் அதற்கான நடவடிக்கை அல்லது தண்டனை என்னவென்று அரசு கூறவில்லை. உண்மையில் பிறகு என்ன நடந்தது என்றால், அந்தக் காவல் துறை அதிகாரிகள் பலருக்கும் அரசு பதவி உயர்வு அளித்தது.

தமிழ் மக்களிடம் அந்நிகழ்ச்சி பெரும் சினத்தை உருவாக்கியது.

அம்மாநாட்டில் சிவகுமாரன் என்னும் இளைஞர் தலைமையில் இளைஞர்கள் பலர் தொண்டர் அணியாக நின்று பணியாற்றினர். அவர் உரும்பிராய் சிவகுமாரன் என அறியப்பட்டவர். துடிப்பான இளைஞர். போர்க்குணம் மிக்கவர். அவரைப் பற்றி கி.பி.அரவிந்தன் தன்னுடைய 'இருப்பும் விருப்பும்' என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். அந்த இளைஞரும், அவரைச் சுற்றி இருந்தவர்களும் 'இனிப் பொறுப்பதில்லை' என முடிவெடுத்தனர். அன்றைய கோர நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்த சந்திர சேகரா என்னும் சிங்கள அதிகாரியைப் பழி வாங்குவது என முடிவெடுத்தனர்.

ஒரு முறைக்கு இரு முறை முயன்றும், அந்த அதிகாரி தப்பி விடுகிறார். ஆனால் அந்த இளைஞர்கள் சோர்வடையாமல் ஆயுதக் குழு ஒன்று கட்ட முடிவு செய்கின்றனர். அதற்கான நிதி சேர்க்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றில் ஈடுபட்டபோது, சிவகுமாரன் காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்படுகின்றார். 

துப்பாக்கி முனைகளில் காவல்துறையினர் அவரை நெருங்குகின்றனர். அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் சிவகுமாரன் சட்டென்று சயனைடு கடிக்கின்றார். அடுத்த நிமிடம் அவர் உயிரற்றுக் கீழே சாய்கின்றார். எதிரியின் கைகளில் பிடிபடாமல் சயனைடு கடித்துச் சாகும் முதல் அத்தியாயத்தை 1974 ஜூன் 5 அன்று அவர் தொடக்கி வைத்தார். ஈழப் போராட்டத்தில் அதுவே முதல் பலி.

அடுத்த ஆண்டு இன்னொரு பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது. 27.07.1975 அன்று கிறித்தவரான துரையப்பா இந்துக் கோயிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞனின் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு வெளிப்படுகின்றது. அந்தக் குண்டு சற்றும் குறி தப்பாமல் துரையப்பாவின் உயிரைக் குடிக்கிறது. அந்தத் தமிழ் இளைஞனைக் கடைசி வரையில் காவல் துறையால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞன்தான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை ஈழ வரலாறு அறிந்த அனைவரும் அறிவர்.

ஈழ விடுதலைப் போரில் அதுவே முதல் அரசியல் கொலை.        

Sunday, September 2, 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (1) - பேரா. சுப. வீ


கடந்த மூன்று ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் ஈழத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் பலர் எழுந்து முழக்கமிடுவதைப் பார்க்க முடிகிறது. ஊடகங்கள் பலவும் கூட இன்று ஈழ ஆதரவு நிலையை எடுத்துள்ளன. இந்நிலை நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்றது. எனினும் இது ஒரு காலம் கடந்த எழுச்சி என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. இருபது  ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு முன்போ இந்த எழுச்சி ஏற்பட்டிருக்குமானால் ஈழ வரலாற்றில் நல்ல மாற்றங்கள் உருவாகி இருக்கக் கூடும். இன்று ஈழம் குறித்த நல்ல தகவல்களை எல்லாம் தரும் பல ஊடகங்கள் அன்று ஈழம், புலி ஆகிய சொற்களையே பயங்கரவாதம் என உரைத்தன. எவ்வாறாயினும் நல்ல மாற்றங்களை நாம் வரவேற்கிறோம். அதே வேளையில், புதிய எழுச்சியில் பல பழைய வரலாறுகள் திரித்தும் மாற்றியும் சொல்லப்படுகின்றன. உண்மைகள் பல திட்டமிட்டு மறைக்கப் படுகின்றன.

எனவே இத்தொடர் இரண்டு நோக்கங்களுடன் தொடங்கப்படுகின்றது.

என் அனுபவத்திலும், என் பார்வையிலும் ஈழம் தொடர்பாக இங்கே நடந்த நிகழ்வுகள் பலவற்றை அப்படியே பதிவு செய்வது முதல் நோக்கம். வெறும் பழங்கதை பேசுவதாக இல்லாமல், இனி இக்காலகட்டத்தில் நாம் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் யாவை என்பது குறித்து உரையாடுவது இரண்டாவது நோக்கம்.


இத்தொடர் பற்றிய என் எண்ணத்தை நண்பர்களிடம் வெளியிட்டபோது அவர்களிடம் மகிழ்ச்சி, தயக்கம் இரண்டுமே தெரிந்தன. நல்லது, கண்டிப்பாக எழதுங்கள் என்று சிலர் கூறினார். வேண்டாம், நீங்கள் என்ன எழுதினாலும் அதனைக் குறை கூறுவோர்தான் இன்று மிகுதியாக உள்ளனர், ஈழ மக்களில் பலரே இன்று உங்களுக்கு ஆதரவாக இல்லாத நிலையில், ஏன் இந்தத் தொடர் என்று கேட்டவர்களும் உண்டு.

      அவர்கள் சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டில் சிலர் என்னைத் துரோகி என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் பேச்சை நம்பும் புலம் பெயர் ஈழ மக்களும் இன்று பெரிய எண்ணிக்கையில் இருக்கவே செய்கின்றனர். என் எழுத்து பெரிதாக இன்று எடுபடாது என்பதை நானும் அறிந்தே இருக்கிறேன். அறிந்தும் கூட இதனை எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது. இன்றில்லா விட்டாலும் நாளை அல்லது என்றேனும் ஒருநாள் உண்மையை உலகம் அறியும். அன்று இந்த எழுத்து அதற்கான ரத்த சாட்சியாய் அமையும்.

நான் கலைஞரை ஆதரிக்கிறேன் என்னும் ஒரே காரணத்திற்காகவேபலரும் இன்று என்னை எதிர்க்கின்றனர்ஈழத்திற்கு அவர் துரோகம் செய்துவிட்டார் என்றும்அதனால் அவரை ஆதரிக்கும் ஆசிரியர் வீரமணிநண்பர்தொல் திருமாவளவன்நான் அனைவரும் துரோகிகள் என்றும் சிலர் கூறித்திரிகின்றனர்கலைஞரை நம்பியா ஈழப் போராட்டம் தொடங்கப்பட்டது,என்ன நம்பிக்கைத் துரோகத்தை அவர் செய்து விட்டார்சர்வ தேசச் சிக்கலைஒரு மாநில முதல் அமைச்சரால் தீர்க்க முடியுமா என்பன போன்றவினாக்களை நாம் எழுப்பினால்அவற்றிற்கு விடை தராமல்நம் மீது வசைமாறிப் பொழிகின்றனர்.

எல்லோரும் ஒரே திசையில் நின்றுராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றவும்இன்னும் அங்கே வாடிக்கொண்டிருக்கும் ஈழ மக்களின்  வாழ்வுரிமைக்குக் குரல் கொடுக்கவும்முன்வராமல்கலைஞரைக் குறை சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பாகமட்டுமே இதனைக் கருதுவது எவ்வளவு பெரிய மோசடி! 

இச் சூழலில்தான் உண்மைகள் பலவற்றை விளக்கி ஒரு தொடர்எழதும் எண்ணத்திற்கு நான் வந்தேன். 

ஈழ மக்களுக்காக நான் பெரிய தியாகம் எதையும்செய்துவிடவில்லைதுப்பாக்கி எடுத்து அவர்களுக்காக நான்போரிடவில்லைஉயிரைப் பணயம் வைத்துப் படகுப் பயணம் எதையும்செய்யவில்லைபணம்நகையை அள்ளிக் கொடுத்திடவில்லைநான்செய்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்அவர்கள் பக்கம் இருந்தநியாயத்தை எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எடுத்து வைக்கும்கருத்துப் பரப்புரை மட்டுமே என்னால் செய்ய இயன்ற செயல்அதனைஅன்று தொடங்கி இன்று வரை ஓயாமலும்தயங்காமலும் செய்துவருகின்றேன்அதற்கான விளைவுகளை எதிர் கொண்டும் வருகின்றேன்.குறிப்பாக 1991-95 கால கட்டத்தில் புலிகளை ஆதரிப்பது ஒரு பக்கம்இருக்கட்டும்ஈழத்தை ஆதரிப்பதே தேசத் துரோகமாகவும்,பயங்கரவாதமாகவும் கருதப்பட்டதுஅப்படிப்பட்ட நிலையில் எந்தத்தயக்கமும் இன்றிமேடைக்கு மேடைஎழுத்துக்கு எழுத்து புலிகளைஆதரித்தவன் என்ற உரிமையில் இத்தொடரைத் தொடங்குகின்றேன். 

     போற்றுவோர் போற்றட்டும்புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்.