கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, September 8, 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (2) - - பேரா. சுப. வீ


முதல் பலியும், முதல் கொலையும்

  1947 இந்திய விடுதலைக்குப் பின் தமிழகம் இரு பெரும் மக்கள் எழுச்சியைக் கண்டது. 

 ஒன்று, 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம். இன்னொன்று, 1983 ஆம் ஆண்டு எழுந்த ஈழ ஆதரவு எழுச்சி. 

 83 ஜூலையில் வெலிக்கடைச் சிறையில் நடந்த படுகொலைகளுக்குப்  பின், தமிழ் நாடே போர்க் கோலம் பூண்டது. மாநகரங்கள் தொடங்கி, சின்ன கிராமங்கள் வரை எல்லா ஊர்களிலும் ஈழ ஆதரவுக் குரல் கேட்ட காலம் அது. 

 என் அனுபவத்திலிருந்து கூற வேண்டுமானால், நான் அப்போது திருப்பனந்தாள் கல்லூரியில் பணி ஆற்றிக் கொண்டிருந்தேன்.  ஒரு வேலையின் பொருட்டு, மயிலாடுதுறை சென்றேன். குறிச்சி, பந்தநல்லூர், குத்தாலம் வழியாகச் செல்லும் பேருந்து அது. குறிச்சி என்னும் அந்தச் சிறு ஊரிலேயே சிலர் கூடி நின்று, ஈழப் போராட்டத்திற்கு ஆதரவாய்த் துண்டறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். பந்தநல்லூர் சென்றடைந்தபோது பெரும் ஊர்வலம் ஒன்றைக் காண முடிந்தது. பந்தநல்லூரிலிருந்து பிரிந்து வைதீஸ்வரன் கோயில் போக வேண்டிய பேருந்துகள், செல்ல வழியில்லாமல்    நின்று கொண்டிருந்தன. 


 அன்று காலை, நான் பணியாற்றிய கல்லூரி மாணவர்களும் வேலை நிறுத்தம் செய்து ஊர்வலம் சென்றனர். ஊர்வல முடிவில், மாணவர்களின் விருப்பப்படி நான் ஈழம் குறித்துப் பேசினேன். என் நினைவு, அதுதான் நான் ஈழம் பற்றிப் பேசிய முதல் கூட்டம் என்பது.

 இன்று இருப்பதுபோல், நொடிக்கு நொடி செய்திகள் தரும் தனியார் தொலைக்காட்சி எதுவும் அப்போது இல்லை. அரசுத் தொலைக்காட்சி மட்டும்தான். அதில் அவ்வளவாக இது குறித்தெல்லாம் கூற மாட்டார்கள். ஆனாலும் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியது. ஈழப் போராட்டத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரித்தன. எல்லா அமைப்புகளும் ஆதரித்தன. மக்கள் ஆதரவு வெள்ளமாய்த் திரண்டது.



 அந்தக் கால கட்டத்தில்தான், ஈழ விடுதலைக்குப் போராடும் ஆயுதப் போர்க் குழுக்களைப் பற்றித் தமிழ்  மக்கள் பரவலாக அறியத் தொடங்கினர். ஆனால் எழுபதுகளிலேயே அங்கு ஆயுதக் குழுக்கள் தோன்றிவிட்டன. அறுபதுகளின் இறுதியிலேயே அதற்கான விதைகள் விழுந்து விட்டன.
   

ஐம்பதுகளில் தொடங்கிய அறப் போராட்டங்களை அரசு அடக்குமுறைகளால் எதிர்கொண்டது. தமிழீழ அரசியல் கட்சிகளும் பிளவு பட்டுக் கொண்டிருந்தன. ஜி. ஜி. பொன்னம்பலம் தலைமையிலான இலங்கை காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி உருவானது. பிறகு அக் கட்சியின் செயலாளராக இருந்த காவலூர் நவரத்தினம் தனியாகப் பிரிந்து, தமிழர் சுயாட்சிக் கழகம் என்னும் கட்சியை உருவாக்கினார்.  தொண்டைமான் தலைமையில் மலையக மக்களுக்கான கட்சி தனியே இயங்கியது. ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு கட்சிகள் தோன்றுவது இயற்கைதானே! அதனால் பொதுக் கோரிக்கைகள் வலிமை இழப்பதும் தவிர்க்க இயலாததாகவே இருக்கும்.

 அச்சூழலில் போராட்ட முறையை மாற்ற வேண்டும் என்ற எண்ணமும் இளைஞர்களிடம் தோன்றியது. அந்த எண்ணத்திற்கு தமிழர் சுயாட்சிக் கழகம் நடத்திய 'விடுதலை' என்னும் இதழும் ஊக்கம் அளித்தது. 1970 இன் தொடக்கத்தில் 'தமிழ் மாணவர் பேரவை' என ஓர் அமைப்பு உருவானது. கல்வியைத் தரப் படுத்துதல் என்னும் பெயரில் தமிழ் மாணவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டபோது மாணவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது. அதன் விளைவாகவே பேரவை அமைப்பும் தோற்றம் கொண்டது. இந்த அமைப்பே ஈழ இளைஞர்களை அரசியல்படுத்திய முதல் அமைப்பு என்று கூறலாம். இந்த அமைப்பில் சேர்ந்த உறுப்பினர்கள் சற்று வேகமானவர்களாக இருந்தனர். அமைதிப் போராட்டம் இனி உதவாது என்ற எண்ணம் அவர்களிடம் வளர்ந்தது. இந்த அமைப்பை ஏற்படுத்தியவர்களில் முதன்மையானவர் பொன் சத்தியநாதன்.

பொன்.சத்தியநாதன் லண்டனில் இருக்கிறார் என அறிந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்றிருந்தபோது நேரில் சென்று அவரைச் சந்தித்தேன். அந்த சந்திப்பிற்கு 'வெண்புறா' அமைப்பின் டாக்டர் மூர்த்தி அவர்கள் உதவினார். சத்தியநாதன் சொன்ன பல செய்திகள் எனக்குப் புதிதாய் இருந்தன. தொடக்க காலச் செய்திகள் பலவற்றை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் இளமைக் காலம் குறித்தும் அவர் பல செய்திகளைக் கூறினார். அப்போது 'தம்பி,தம்பி' என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அவர் பின்னாளில் இப்படி ஒரு பெரும் தலைவர் ஆவார் என்று அவர்களே எதிர்பார்த்திருக்கவில்லை.

மாணவர் பேரவை எப்படி வலிமை பெற்றது, பிறகு அதிலிருந்த பலர் எப்படிப் போராளிக் குழுக்களுக்குச் சென்றனர் என்பன குறித்தெல்லாம் அவர் கூற அறிந்தேன். அவற்றையெல்லாம் இங்கு விவரிக்கத் தேவை இல்லை. அது ஒரு தொடக்கம் என்பதைக் குறித்துக்கொண்டால் போதுமானது. சில ஆண்டுகளுக்குப் பிறகு 'தமிழ் இளைஞர் பேரவை' என ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர் பேரவையோ மீண்டும் அற வழியிலேயே போராட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளது.


இந்நிலையில், 22.05.1972 அன்று கொண்டுவரப்பட்ட புதிய குடியரசுச் சட்டம் நாட்டை இரு கூறாக ஆக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். அச் சட்டம், தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கியது. ஜனநாயகம் முற்றிலுமாக மறுக்கப்பட்டது.

1972 ஆம் ஆண்டுச் சட்டம்தான் சிலோன் என்னும் பெயரை ஸ்ரீ லங்கா என மாற்றியது. சிங்கள இனத்திற்கும், பௌத்த மதத்திற்கும் முதன்மை வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய சட்டத்தின் 29 ஆம் பிரிவு, சிறுபான்மையினருக்கு (தமிழருக்கு) வழங்கியிருந்த பல சட்டப் பாதுகாப்புகளை நீக்கியது.


அதே நேரம், தமிழர்களின் கட்சிகளை ஒன்றுபடுத்திய ஒரு நல்ல செயலையும் அது செய்தது. தலைவர்கள் பொன்னம்பலம், தந்தை செல்வா, தொண்டைமான் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒருங்கிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்னும் கூட்டமைப்பை உருவாக்கினர்.

மாணவர் பேரவை வெகுண்டு எழுந்தது. அச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருளம்பலம்,தியாகராசா, பொத்துவில் கனகரத்தினம் ஆகியோர் வீடுகளின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப் போராட்டத்தில் வன்முறையும் தலை காட்டத் தொடங்கியது. அடுத்த தலைமுறையும் அமைதியாகவே இருந்துவிட மாட்டார்கள் என்பதற்கான அடையாளம் தெரிந்தது. மாணவர்கள் பேரணி பெரிய அளவில் நடைபெற்றது.

அரசு தன் அடக்குமுறையைத் தொடங்கியது. ஐக்கிய முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களையும் அரசு முதன் முதலாகக் கைது செய்தது. முத்துக்குமாரசாமி, சுந்தர் (அரவிந்தன்), மனோகர் ஆகிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதால்  மாணவரிடையே எழுச்சி கூடியது. அந்த முத்துகுமாரசாமி இப்போது அமெரிக்காவிலோ, கனடாவிலோ இருப்பதாகக் கூறுகின்றனர். சுந்தர், பிரான்சில் உள்ளார். மனோகரைப் பற்றித் தெரியவில்லை.

அடுத்த மக்கள் எழுச்சியை 74 ஆம் ஆண்டு ஈழம் கண்டது.

1974 ஆம் ஆண்டு நான்காம் உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தது. முதல் மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவிலும், இரண்டாம் மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையிலும், மூன்றாம் மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரான்சிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து நான்காம் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அன்று அங்கு அதிபராக இருந்த திருமதி பண்டாரநாயகா அதனைக் கொழும்பில் நடத்துமாறு கூறினார். ஆனால் ஏற்பாட்டாளர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். யாழில் நடத்த உறுதி கொண்டு, அங்கேயே நடத்தினர். அம்மாநாட்டிற்கு அரசு தன்னால் இயன்ற தடைகளை எல்லாம் செய்தது.

அப்போது யாழ் மேயராக இருந்த ஆல்ப்ரெட்  துரையப்பா, தமிழராக இருந்தும் சிங்கள அரசுக்கு ஏற்ற வகையில் நடந்தார். அவருக்கு அப்பகுதியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. 1960 ஆம் ஆண்டுத் தேர்தலில், இலங்கைக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலத்தை சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் அவர் தோல்வி அடைந்தவுடன் இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்து விட்டார். அதனால் ஆளும் கட்சிக்கு உரியவராக நடந்து கொண்டு, தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்தார்.

எல்லாவற்றையும் மீறி, 1974 ஜனவரி 3 - 9 மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. எட்டாவது நாள் (ஜனவரி 10) அது பொது மாநாடாக நடத்தப்பெற்றது. 10,000 பேருக்கு மேல் மக்கள் கூடி விட்டனர். போக்குவரத்து  பாதிக்கின்றது என்பதாகக் காரணம் காட்டி மேயரின் ஆணைப்படி, சந்திரசேகரா என்னும்  காவல் துறை மாவட்ட உதவிக் கண்காணிப்பாளர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார். இந்தியாவிலிருந்து சென்றிருந்த பேராசிரியர் நைனா முகமது பேசிக் கொண்டிருந்தபோது தடியடிக்கு அந்த அதிகாரி ஆணையிட்டார். கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கூட்டம் கலைந்து போய்க் கொண்டிருக்க, அந்த நேரத்தில் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். அதில் மேலே இருந்து மின் கம்பி ஒன்று அறுந்து விழ, அந்த இடத்திலேயே ஏழு பேர் மரணம் அடைந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த அத்துமீறல்களை விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அக் குழுவின் அறிக்கை 18.02.1974 அன்று வெளியிடப்பட்டது. ஆயுதம் ஏதுமற்ற பொதுமக்களிடம் காவல்துறை நடந்துகொண்ட முறை மிகவும் தவறானது என்றும், காவல்துறையிடம் இப்படிப்பட்ட போக்கை அரசு எதிர்பார்க்கவில்லை என்றும் அவ்வறிக்கை கூறியது. ஆனால் அதற்கான நடவடிக்கை அல்லது தண்டனை என்னவென்று அரசு கூறவில்லை. உண்மையில் பிறகு என்ன நடந்தது என்றால், அந்தக் காவல் துறை அதிகாரிகள் பலருக்கும் அரசு பதவி உயர்வு அளித்தது.

தமிழ் மக்களிடம் அந்நிகழ்ச்சி பெரும் சினத்தை உருவாக்கியது.

அம்மாநாட்டில் சிவகுமாரன் என்னும் இளைஞர் தலைமையில் இளைஞர்கள் பலர் தொண்டர் அணியாக நின்று பணியாற்றினர். அவர் உரும்பிராய் சிவகுமாரன் என அறியப்பட்டவர். துடிப்பான இளைஞர். போர்க்குணம் மிக்கவர். அவரைப் பற்றி கி.பி.அரவிந்தன் தன்னுடைய 'இருப்பும் விருப்பும்' என்னும் நூலில் விரிவாக எழுதியுள்ளார். அந்த இளைஞரும், அவரைச் சுற்றி இருந்தவர்களும் 'இனிப் பொறுப்பதில்லை' என முடிவெடுத்தனர். அன்றைய கோர நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்த சந்திர சேகரா என்னும் சிங்கள அதிகாரியைப் பழி வாங்குவது என முடிவெடுத்தனர்.

ஒரு முறைக்கு இரு முறை முயன்றும், அந்த அதிகாரி தப்பி விடுகிறார். ஆனால் அந்த இளைஞர்கள் சோர்வடையாமல் ஆயுதக் குழு ஒன்று கட்ட முடிவு செய்கின்றனர். அதற்கான நிதி சேர்க்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். வங்கிக் கொள்ளை முயற்சி ஒன்றில் ஈடுபட்டபோது, சிவகுமாரன் காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்படுகின்றார். 

துப்பாக்கி முனைகளில் காவல்துறையினர் அவரை நெருங்குகின்றனர். அவர்கள் யாரும் எதிர்பாராத வகையில் சிவகுமாரன் சட்டென்று சயனைடு கடிக்கின்றார். அடுத்த நிமிடம் அவர் உயிரற்றுக் கீழே சாய்கின்றார். எதிரியின் கைகளில் பிடிபடாமல் சயனைடு கடித்துச் சாகும் முதல் அத்தியாயத்தை 1974 ஜூன் 5 அன்று அவர் தொடக்கி வைத்தார். ஈழப் போராட்டத்தில் அதுவே முதல் பலி.

அடுத்த ஆண்டு இன்னொரு பெரும் நிகழ்வு நடைபெறுகின்றது. 27.07.1975 அன்று கிறித்தவரான துரையப்பா இந்துக் கோயிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு இளைஞனின் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு வெளிப்படுகின்றது. அந்தக் குண்டு சற்றும் குறி தப்பாமல் துரையப்பாவின் உயிரைக் குடிக்கிறது. அந்தத் தமிழ் இளைஞனைக் கடைசி வரையில் காவல் துறையால் பிடிக்க முடியவில்லை. அந்த இளைஞன்தான், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்பதை ஈழ வரலாறு அறிந்த அனைவரும் அறிவர்.

ஈழ விடுதலைப் போரில் அதுவே முதல் அரசியல் கொலை.        

No comments:

Post a Comment