மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் திட்டங்கள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வு செய்தார். வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்கள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் கருணாநிதி, மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடத்தி, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பலரும் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே மேலும் வளர்த்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டத்தினை, தேவைப்படும் இடங்களுக்கு விரிவுபடுத்திடும் வகையில் கூடுதலாக 200 ஊர்திகளை விரைந்து கொள்முதல் செய்து, இத்திட்டப் பணிகள் மேலும் செம்மையாக நடைபெற ஆவன செய்திட வேண்டுமென்றும்;
பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்திட உரிய தடுப்பு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதிலும் விரைந்து மேற்கொள்ளுமாறும்; பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டதைப் போன்று இந்த ஆண்டிலும் செம்மையாகச் செயல்படுத்தி, தேவைப்படும் மாணவ மாணவியர்க்குக் கண் கண்ணாடிகளை உடனடியாக வழங்கிட வேண்டுமென்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், நிதித்துறை முதன் மைச் செயலாளர் கே. சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment