கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, October 6, 2010

பிரச்னைகளை உருவாக்கி ஆதாயம் தேடும் எதிர்க்கட்சிகள் - முதல்வர் கருணாநிதி குற்றச்சாட்டு


முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்த ஜனநாயகத்திலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அத்தியாவசியத் தேவைகள். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அப்போதுதான், மக்களாட்சியின் மாண்புகள் பொலிவு பெறும். நிர்வாக குறைகளை ஆக்கபூர்வமான முறையில் எதிர்க்கட்சி சுட்டிக் காட்டுவதும், இதய சுத்தியோடு சுட்டிக் காட்டப்படும் அந்தக் குறைகளைக் களைந்து, ஆளுங்கட்சி ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்துவதும்; ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நடைமுறை.
ஆனால், தமிழக அரசியலில் காண்பதென்ன? இதுவரை இல்லாத அளவுக்கு சரித்திரம் போற்றும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது திமுக அரசு. ஏழை எளியோர், பாட்டாளி மக்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் பேணிக் காத்திடும் அரசு திமுக அரசு.
தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் உணவு, மருத்துவம், உறைவிடப் பாதுகாப்பும் வழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அதன் காரணமாக மக்கள் பலனடைந்து நிறைவும், நிம்மதியும் பெற்று வருகின்றனர். நல்லவர்கள், நடுநிலையாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல் கட்சிகளைச் சாராத அமைப்பினர், அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் போற்றிப் பாராட்டி வருகின்றனர்.
திமுக அரசு நாள்தோறும் பெற்றுவரும் பாராட்டுகளையும், மக்களிடையே பெருகி வரும் பேராதரவினையும் கண்டு பொறுக்காத எதிர்க்கட்சியினர் சிலர், எங்காவது ஒரு துரும்பு கிடைத்தாலும், அதை தூணாக்கிக் காட்டுவதிலும், சிறு பொறி கிடைத்தாலும் ஊதி பெருநெருப்பாக்குவதிலும், நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டு வருகிறார்கள்.
இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். நேற்று (நேற்று முன்தினம்) சென்னையில் நடந்த நிகழ்ச்சியையே பார்ப்போம். சென்னை, தி.நகரிலிருந்து ஆவடிக்கு 3.10.2010 அன்று இரவு 9 மணிக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறது.
அந்தப் பேருந்து பாடி, புதுநகர் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்கார்ப்பியோ கார் ஒன்று அந்த பஸ்சை முந்த முயன்றிருக்கிறது. காருக்குள் ஓட்டுநர் உதயகுமார், செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன் என்போர் இருந்திருக்கின்றனர்.
பேருந்து ஓட்டுநர் காருக்கு வழிவிடவில்லை என்பதால், பேருந்துக்கும், காருக்கும் போட்டியும், உரசலும் ஏற்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக இரு குழுவினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி, கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கைகலப்பில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த குமாரவேல், குமார், உமாபதி, தினகரன், பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் காயம் அடைந்திருக்கின்றனர்.
காயம் அடைந்த 6 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே தேவையான சிகிச்சைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆனால், சி.ஐ.டி.யு. சங்கத்தைச் சார்ந்த சிலர், குமாரவேல், குமார், தினகரன் ஆகிய மூவரையும் அழைத்துச் சென்று சென்னை பொது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்யுரையாக, காயம் அடைந்த ஒருவர் இறந்து விட்டார் என்ற வதந்தியை அந்த தொழிற்சங்கத்தினர் பரப்பியதால், பணிமனைகளில் பதற்றம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, 4.10.2010 காலையில் அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்க மறுத்தனர். பேருந்துகளை எடுத்துச் சென்ற ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் வழிமறித்து, பேருந்துகளை சாலைகளிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தச் செய்தனர்.
அதற்குக் காரணம், சில எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள்தான். பேருந்துகள் ஓடாமல் இருந்ததால், பொதுமக்கள் எவ்வளவு அவதிக்கு ஆளானார்கள் என்பதை அனைத்துப் பத்திரிகைகளும் விரிவாக வெளியிட்டிருக்கின்றன.
செந்தில் சுரேஷ், ஸ்டாலின், முருகன், உதயகுமார் ஆகிய நான்கு பேர் மீதும் கொலை முயற்சி, பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து; அவர்களைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் உண்மை நிலை என்ன தெரியுமா? காரில் பயணம் செய்த செந்தில் சுரேஷ் என்பவர் அம்பத்தூர் நகராட்சி, 37வது வட்டம் தி.மு.க. கவுன்சிலர் அன்பு என்பவரின் மகன். கைகலப்பின் காரணமாகக் கலவரத்தில் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்களில் உமாபதி, பாப்பையா, சுப்பிரமணியம் ஆகியோர் திமுக சார்பிலான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள். அவர்கள் தி.மு.க.வினர் அல்லது தி.மு.க. ஆதரவாளர் என்பதற்காக, காவல்துறை அவர்களைக் கைது செய்யாமலோ, ரிமாண்டில் வைக்காமலோ, விடுவித்து விடவில்லை. மாறாக, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுமிருக்கிறார்கள். இத்தனை நடவடிக்கைகளையும் பாரபட்சமில்லாமல், தயவு தாட்சண்யம் பாராமல், இந்த அரசின் காவல் துறை எடுத்திருக்கும்போது, பேருந்துகளை இயக்கிடாமல், தொழிலாளத் தோழர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுவதால், போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய், பொதுமக்கள் எவ்வளவு பெரும் பாதிப்புக்கு ஆளாகிட நேரிட்டது என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்த்திட வேண்டுகிறேன்.
நியாயத்துக்காகப் போராடும் தொழிலாளிக்கு விரோதமாக எந்தவொரு செயலும் நடைபெறுவதை நான் விரும்பாதவன் என்பதை இன்று நேற்றல்ல, இளமைக் காலம் முதலே நிரூபித்து வருபவன் என்ற முறையில், யாருடைய கோபதாபமானாலும், அதன் விளைவாக பொதுமக்களோ, பொதுச் சொத்துக்களோ தாக்குண்டு, ஏற்படும் இழப்பை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட மோதலை, காரணமாகக் காட்டி, எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இன்னல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
இப்படித்தான், எதிர்க்கட்சிகள் பிரச்னைகளே இல்லை என்றாலும்கூட, பிரச்னைகளை உருவாக்கி, தொடர்புடையவர்களைத் திசை திருப்பி, பிரச்னைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அவதியும், இன்னலும் ஏற்படும் என்றாலும், அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை கொள்வதில்லை. எந்தப் பிரச்னையாவது கிடைக்காதா, அதை வைத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முடியாதா என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சான்றாகும்.
தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர்க்கு ஆக்கபூர்வமான முறையில் பொதுப்பணி ஆற்றிட வேண்டும் என்ற நோக்கத்தைவிட, எதையாவது வைத்து அரசியல் நடத்திட வேண்டும். தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதாயம் தேடிட வேண்டும் என்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள் என்ற நிலையைத் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இத்தகைய அமைதி குலைக்கும் காரியங்களில் ஈடுபடுவோர் மறந்துவிடக் கூடாது.
இவ்வாறு முதல்வர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment