வன உயிரின வார விழாவையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2 ஆம் தேதி நாள் முதல் நாடு முழுவதும் ஒரு வார காலம் வன உயிரின வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. பழந்தமிழரின் ஐவகை நிலப்பாகுபாடுகளில் காடுகளும், காடுகள் சார்ந்த நிலப்பகுதிகளும் முல்லை நிலம் என அழைக்கப்பட்டு வனவளமும் வனம் வாழ் உயிரினங்களும் போற்றப்பட்டுள்ளன.
அதனையொட்டி அண்மையில் கோவை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஐவகை நிலங்களிலும் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கேற்ப சேலம் மாவட்டத்தில் குறிஞ்சி மரபணுப் பூங்கா திண்டுக்கல் மாவட்டத்தில் முல்லை மரபணுப் பூங்கா, தஞ்சை மாவட்டத்தில் மருதம் மரபணுப் பூங்கா, நாகை மாவட்டத்தில் நெய்தல் மரபணுப் பூங்கா, ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலை மரபணுப் பூங்கா ஆகியவை அமைக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக அந்தந்த நிலப் பகுதிகளுக்குரிய அரிய வகை உயிரினங்களைக் காக்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 22,877 சதுர கிலோ மீட்டர் வனப்பரபில் 4,578 சதுர கிலோ மீட்டர் அதாவது 20 விழுக்காடு வனப்பரப்பு பாதுகாப்புப் பகுதியாகும். இதில் 5 தேசிய பூங்காக்கள், 9 வன உயிரின சரணாலயங்கள், 12 பறவைகள் சரணாலயங்கள், 4 யானைகள் காப்பகங்கள், 3 உயிரிசூழல் காப்பகங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள ஆசியாவிலேயே அரிய வகை வெள்ளைப் புலிக்குட்டிகள் மூன்றில் ஆண் புலிக்குட்டிக்கு செம்பியன் என்றும் பெண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு இந்திரா வள்ளி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் எனும் உணர்வுடன் மரம் வளர்ப்போம், வனப் பகுதிகளைப் பெருக்குவோம் வன உயிரினங்களைக் காப்போம் எனும் சிந்தனைகளை மக்களிடையே உருவாக்கிட இந்த ஆண்டின் வன உயிரின வார விழா எங்கும் எழுச்சியுடன் நடைபெற எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment