கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, December 26, 2010

10, 12வது படித்த இளைஞர்களுக்கு வேலை திறன் பயிற்சி நியமன ஆணை - முதல்வர் கருணாநிதி


தி.மு.க. ஆட்சியில் இதுவரை 4 லட்சத்து 98 ஆயிரத்து 40பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப் பட்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களும், மகளிரும் நல்லாட்சி தொடர ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் முரசொலியில் 23.12.2010 அன்று கடிதமாக எழுதியுள்ள விவரம் வருமாறு:-

2006ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் முன்னால் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் கூட, எவ்வித வேலை வாய்ப்பும் பெற்றிடாத இளைஞர்களுக்கு - பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வரையில் மாதம் 150 ரூபாயும், மேல்நிலைப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பட்டதாரி களுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித் தொகையாக வழங்குவோம். அ.தி.மு.க. ஆட்சியின் பணி நியமனத் தடை யாணை காரணமாக பணியில் சேர வாய்ப்பின்றி வயது உச்சவரம்புக்கு ஆட்பட்டு, கடந்த நான்காண்டு காலமாக பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு வயது உச்ச வரம்பைத் தளர்த்துவோம். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பணி நியமனத் தடையாணை விளைவாக காலியாக உள்ள சுமார் மூன்று இலட்சம் பணி இடங்களையும் நிரப்புவோம் என்று உறுதியளித்திருந்தோம்.

அதிமுக ஆட்சியில் நடந்ததென்ன...

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தங்களது உரிமையைக் கேட்ட காரணத்தினால் ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டு - பல பேர் அதிர்ச்சியால் இறந்த துயரகரமான சம்பவங்கள் நடை பெற்றதுண்டு. ஆனால், 2006ஆம் ஆண்டு கழக ஆட்சி அமைந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் அளித்த வாக் குறுதிப்படி, இதுவரை தமிழகத்தில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 40 பேர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறையில் மட்டும் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 625 பேரும், பள்ளிக் கல்வித் துறையில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 67 பேரும், போக்குவரத்துத் துறையில் 41 ஆயிரத்து 916 பேரும், எரிசக்தித் துறையில் 26 ஆயிரத்து 154 பேரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 33 ஆயிரத்து 766 பேரும், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் சார்பாக 27 ஆயிரத்து 189 பேரும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 21 ஆயிரத்து 172 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் சார்பில் 30 ஆயிரத்து 832 பேரும், வருவாய்த் துறையில் 9 ஆயிரத்து 972 பேரும், உயர் கல்வித் துறை சார்பாக 8 ஆயிரத்து 422 பேரும், வேளாண்மைத் துறையில் 4 ஆயிரத்து 966 பேரும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக 4 ஆயிரத்து 265 பேரும், பொதுப்பணித் துறை சார்பாக 3 ஆயிரத்து 388 பேரும், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை சார்பாக 3 ஆயிரத்து 555 பேரும், மற்ற பிற துறைகளின் சார்பில் நூற்றுக் கணக்கானவர்களுக்கும் அரசுப் பணிகள் கடந்த நான்கரை ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திங்கள் முதல் வாரத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக துணை முதலமைச்சர் தம்பி மு.க. ஸ்டாலின் சிறப்பு ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் 851 பேர்களுக்கும் - கருணை அடிப்படையில் 62 பேர்களுக்கும் - தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 190 தட்டச்சர்களுக்கும் என மொத்தம் 1,103 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 67 பேர் பணி வாய்ப்புப் பெற்றதில் புதிதாக நியமனம் பெற்றவர்கள் மட்டும் 57 ஆயிரத்து 127 பேர். இவர்களில் பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள், தொழிலாசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், விவசாய ஆசிரியர்கள் என நியமிக்கப்பட்டவர்கள் மாத்திரம் 27 ஆயிரத்து 915 ஆசிரியர்கள். தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பில் 26 ஆயிரத்து 451 பேர்களும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரை யாளர்களாக 248 பேர்களும், கருணை அடிப்படையில் உதவியாளர்கள், தட்டச்சர்கள் என 740 பேர்களும், அரசு தேர்வாணையத்தின் மூலமாக 741 பேர்களும் அடங்குவார்கள். இவர்களை அன்னியில் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் அதாவது பெற வேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே தரப்பட்ட நிலையில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். 2006ஆம் ஆண்டில் கழக ஆட்சி அமைந்த பிறகு 1-6-2006 முதல் இந்த 47 ஆயிரத்து 200 ஆசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி - ஒவ்வொரு ஆசிரியரும் தாம் பெற்று வந்த ஊதியத்தைவிட மூன்று மடங்கு அதிகம் பெறுவதற்கும் வழி வகுத்திருக்கின்றோம்.

கனிமொழியின் தொண்டறம்

அரசு சார்பில் இந்த அளவிற்கு வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்றபோதிலும் - தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித் தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப் பட்டு, அவர்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் - திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் - கடலூர் மாவட்டத் தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் - வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 17 ஆயிரத்து 2 பேர் - தூத்துக்குடி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் - குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்து 77 பேர் - நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் - காரியாப்பட்டியில் ஆயிரத்து 196 பேர். இவ்வாறு வேலைவாய்ப்பு கிடைத்தவர்களை அன்னியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலைவாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற் கான வாய்ப்புக் கூறுகள் உள்ளன.

தேர்தல் அறிக்கையில்...

அடுத்து, தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிக் கிணங்கவும் - 2006-2007 நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறும், படித்து வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 150 ரூபாய் விகிதமும்; 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 200 ரூபாய் வீதமும்; பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 300 ரூபாய் விகிதமும் நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டம் 11.11.2006 அன்று திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இதுவரை 3 லட்சத்து 53 ஆயிரத்து 801 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 31.3.2010 வரை 261 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 774 பேர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவர். வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு 24 ஆயிரம் ரூபாய் என்பதிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2 இலட்சத்து 32 ஆயிரத்து 169 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் - 60 ஆயிரத்து 55 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதற்காக 13 அரசாணைகள் வெளியிடப் பட்ட - 41 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 13 தொழிற் சாலைகள் திறக்கப்பட்டு விட்டன. 10 ஆயிரத்து 683 பேருக்கு இதுவரை வேலை வாய்ப்புகள் இந்தத் தொழிற்சாலைகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

சொன்னதைச் செய்வோம்

சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பதற்கிணங்க தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில் இவைகளையெல்லாம் நிறைவேற்றிய திராவிட முன்னேற்றக் கழக அரசு - சொல்லாததையும் செய்வோம் என்ற வகையில் - 15.8.2010 அன்று சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, சென்னை-புனித ஜார்ஜ் கோட்டை யில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நான் உரையாற்றியபோது, அய்க்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டினை உலக இளைஞர்கள் ஆண்டு என அறிவித்திருப் பதையொட்டி, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புப் பெறுவதற்கேற்ற பயிற்சிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன், புதிய திட்டம் ஒன்றும் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த இளைஞர்கள் - பொறியியல், இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஆகியோர்க்கு வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும். பயிற்சி பெற்ற இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்புகளைப்பெற இத்திட்டம் வழி வகுக்கும். நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவிருக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த முதற் கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை இந் நன்னாளில் வெளியிடப்படுகிறது - என அறிவித்தேன். அந்த அறிவிப்பின்படி முதற்கட்டமாக, திருவாரூர், திருவள்ளூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெறுவதற் கேற்ற பயிற்சி அளிக்கும் திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், 13 ஆயிரத்து 441 இளைஞர்கள் வேலைவாய்ப்புக் காக முன்பதிவு செய்யப்பட்டனர். அவர்களை 83 தொழில் நிறுவனங்கள் அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி, 5 ஆயிரத்து 216 இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகள் அளித்திட தேர்வு செய்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், 7 ஆயிரத்து 286 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முன்பதிவு செய்யப் பட்டனர். அவர்களை 60 தொழில் நிறுவனங்கள் அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி, 2 ஆயிரத்து 335 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகள் அளித்திட தேர்வு செய்தன. திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 12 ஆயிரத்து 550 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முன்பதிவு செய்யப்பட்டனர். அவர்களை 54 தொழில் நிறுவனங்கள் அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி, 4 ஆயிரத்து 703 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்புகள் அளித்திட தேர்வு செய்தன. கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில், 16 ஆயிரத்து 218 இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முன்பதிவு செய்யப் பட்டனர். அவர்களை 77 தொழில் நிறுவனங்கள் அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தி, 5 ஆயிரத்து 346 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகள் அளித்திட தேர்வு செய்தன. எனவே இந்த ஆறு மாவட்டங்களிலும், வேலைவாய்ப்பு முகாம்களில் பதிவு செய்யப்பட்ட 49 ஆயிரத்து 495 இளைஞர்களில், மொத்தம் 17 ஆயிரத்து 600 இளைஞர் களுக்குப் பயிற்சி அளித்து, வேலை வாய்ப்புகள் அளிக்கப் படுகின்றன. இவர்கள் அனைவரையும் 2011, ஜனவரி 5ஆம் தேதியன்று சென்னைக்கு அழைத்து, அவர்கள் அனை வருக்கும் வேலைக்கான பயிற்சி பெறுவதற்கான நியமன ஆணை களை நானே நேரடியாக வழங்கிடவிருக்கிறேன். இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற் குரிய செலவினங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்காக 50 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. நான் வழங்கும் ஆணைகளின் அடிப்படையில், இளைஞர்கள் சம்மந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சென்று, பயிற்சிகளைப் பெற்று, அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

வேலை காலி இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை

எனவே வேலை காலி இல்லை என்று விரட்டும் பலகைகளுக்கு இனி எங்கும் இடம் இல்லை என்ற நிலையை உருவாக்க; இந்த அரசு தொடர்ந்து பாடுபட இளைஞர், மகளிர் அனைவரும் - ஆதரவுக்கரம் நீட்டுவர் என்பதில் அணுவளவும் அய்யமில்லை!

-இவ்வாறு முதல்வர் கலைஞர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment