கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 5, 2011

அதிமுக அரசின் பழி வாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது மத்திய அரசு தலையிடுமா? : கலைஞர் ஆவேசம்


தி.மு.க. தலைவர் கலைஞர் 04.08.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


’’பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன். கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை.


ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம்தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது.


கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்! இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் - அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் - மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.


அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் - அதாவது சந்தை மதிப்பைத்தான் (மார்க்கெட் ரேட்), விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது.


அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.


எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.


இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.

தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்?


அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே? அந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா? இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது!’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment