கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, August 22, 2011

தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது திமுகவை அழித்துவிடலாம் என நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் : தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பேச்சு



தமிழகத்தில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடக்கிறது, திமுகவை அழித்துவிடலாம் என்று நினைப்பவர்கள் அழிந்துபோவார்கள் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சை திலகர் திடலில் 21.08.2011 அன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமை வகித்தார். மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் வரவேற்றார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்த பொதுக்கூட்டம் எந்த தலைப்புமில்லாமல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் சமச்சீர் கல்வியின் வெற்றி கூட்டமாக கருதி பேசுகிறேன். கடந்த 19ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் சமச்சீர் கல்வி தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு ஏதோ தனிப்பட்ட திமுகவுக்கு கிடைத்த வெற்றியல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று முழங்க வேண்டும். கல்வியில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. ஏழை, நடுத்தர குடும்பத்தில் பிறந்த குழந்தைகளும் தாங்கள் வசதியில் வேறுபாடு கண்டிருந்தாலும், கற்கும் கல்வியில் வேறுபாடு இருக்கக்கூடாது என்று கருதிதான் திமுக தலைவர் கருணாநிதி சமச்சீர் கல்வியை கொண்டு வந்தார்.
2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, திமுக தேர்தல் அறிக்கையில் எத்தனையோ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் முக்கியமான அறிவிப்பு சமச்சீர் கல்வி திட்டம். வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் 100க்கு 100 சதவீதம் நிறைவேற்றி காட்டியுள்ளோம். சமச்சீர் கல்வி திட்டம் என்பது ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படவில்லை. பல ஆய்வுகள் நடத்தி, கல்வியாளர்களை அழைத்து கலந்து பேசி, அத்துறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்குப்பிறகு முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்று, அதன் பின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் கமிஷன் அமைத்து அறிக்கை பெற்றோம். அதன் பின்னரும் இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி அங்குள்ள கல்வி முறை பற்றி அறிந்து வந்து, முழு மனதுடன் சமச்சீர் கல்வியை நிறைவேற்றினார் திமுக தலைவர் கருணாநிதி.
அதன்பிறகு தேர்தல் வந்து, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்து தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதை நாங்கள்தான் எதிர்த்தோம். கூட்டணி கட்சியினர் துதி பாடினார்கள். தற்போது உச்ச நீதிமன்றம் திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வி திட்டத்தைத்தான் ஏற்று நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
2002ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது பழைய தலைமை செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்து பணி செய்வதற்கு ஏற்ற கட்டிடமாக இல்லை. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென முடிவெடுத்தவர் ஜெயலலிதாதான். பல்வேறு இடங்களை தேர்வு செய்தும் கடைசியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியை தேர்வு செய்து பூஜையும் நடத்தினார். அதை பின்னர் அப்படியே கிடப்பில் போட்டார். 2006ல் திமுக அரசு பதவியேற்ற பிறகு அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் வசதியாக எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வகையில் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தை தேர்வு செய்து புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது ஜெயலலிதா பதவியேற்றவுடன் என்ன காரணத்தினாலோ புதிய தலைமை செயலகத்தை இழுத்து பூட்டி சீல் வைத்தார். தற்போது தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தலைமை செயலகத்தில் சட்டமன்றத்தை நடத்த வேண்டுமென திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. எப்படி சமச்சீர் கல்வியில் வெற்றி பெற்றோமோ அதேபோல் இந்த வழக்கிலும் நாம் வெற்றி பெறுவோம்.
நீதிமன்றம், அரசின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை எப்படி மூடினீர்கள் என்று கேள்வி எழுப்பிவிடுமோ என்று பயந்துபோய் 110 விதியை பயன்படுத்தி சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி அக்கட்டிடத்தில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். சட்டமன்றம் நடத்த ஏற்ற முறையில் அங்கு கட்டிடம் கட்டப்படவில்லை. லாயக்கற்ற கட்டிடம் என்று கூறிய ஜெயலலிதா, மருத்துவமனை நடத்த ஏற்றதாக உள்ளது என கூறுவது வியப்பாக உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

தஞ்சை திலகர் திடலில் 21.08.2011 அன்று திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி தலைமை வகித்தார். மத்திய நிதித்துறை இணைஅமைச்சரும், மாவட்ட செயலாளருமான பழனிமாணிக்கம் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் உபயதுல்லா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் திமுக அரசியல் பிரிவு செயலாளர் எல்.கணேசன், எம்பி சுகவனம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர்கள் மதிவாணன், அழகு திருநாவுக்கரசு, செல்வராஜ், திருச்சி செல்வேந்திரன், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நீலமேகம், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, யாகசுரேஷ், கும்பகோணம் நகராட்சி தலைவர் சுப.தமிழழகன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் சோம.செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கோ.சி.மணி பேசும்போது, அதிமுகவை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்ட பிறகும் ஜெயலலிதா பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு சாட்சி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நடந்த கொள்ளை. எனவே வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சிந்தித்து நல்ல முடிவை தருவார்கள் என்றார்.
மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் பேசும்போது, கல்வியில் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் சமமாக கல்வி அறிவை பெறவேண்டும் என சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. கல்வி சமமாக இருந்தால்தான் தமிழகத்தில் போராடி வெற்றிபெற முடியும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது. சமுதாயத்தில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் உச்சநீதி மன்றத்திற்கு சென்றார்கள். ஆனால் அவர்கள் அடித்த பந்து திரும்பவும் இங்கே வந்து விழுந்தது. திமுக தலைவர் கருணாநிதி காட்டிய வழியில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று உருவானது. ஆனால் இதை கம்யூனிஸ்ட் கட்சிகள், பொதுவுடமை கட்சிகள் திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த திட்டம் என கூற மறுக்கின்றன. எதிர்க்கட்சிக்கான கடமையை ஆற்ற தவறி உள்ளன. இந்த ஆட்சியில் திமுகவினரை எல்லாம் திட்டமிட்டு பொய்புகாரின்பேரில் சிறைக்கு அனுப்புகின்றனர். நாங்கள் 5 ஆண்டுகாலம் சுகமாய் இருந்து விட்டோம். இப் போது அவர் வழங்கி இருக் கிற சிறைப்பயிற்சி உத்வேகப்படுத்தி உள்ளது. ஆனால் அவருக்கும் (ஜெயலலிதா) சிறைவாசத்தை பெங்களூர் தரும் என்றார்.

No comments:

Post a Comment