கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, August 18, 2011

ஜெ. ஆட்சியின் அவலத்தால் 2016க்கு முன்பே தேர்தல்: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு



தமிழகத்தில் 2016ம் ஆண்டுக்கு முன்பே தேர்தல் வரும் என்று நெய்வேலியில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேசினார்.
நெய்வேலியில் தொமுசவின் பொன்விழா ஆண்டு, அண்ணா விருது பெற்ற பேரவை தலைவர் குப்புசாமிக்கு பாராட்டு, கலைஞர் அரங்கம் திறப்பு விழா என முப்பெரும் விழா 14 .08 .2011 அன்று நடந்தது. மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொமுச பொது செயலாளர் கோபாலன் வரவேற்றார். ஆண்டகுருநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் தணிகைசெல்வன், புகழேந்தி, ராஜவன்னியன், வீரராமச்சந்திரன், பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் குழந்தை தமிழரசன், இள.புகழேந்தி, பேரவை தலைவர் குப்புசாமி ஆகியோர் பேசினர்.
இவர்களை தொடர்ந்து முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
இன்று நெய்வேலி நகரத்தின் தொ.மு.ச சார்பிலும் நகர கழகத்தின் சார்பிலும் மாவட்ட கழகத்தின் ஒத்துழைப்போடு பல்வேறு அணிகளை சேர்ந்த அன்பர்களின் அரவணைப்போடு அனைத்துக்கும் மேலாக உங்கள் உற்சாகத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மன்னிக்க வேண்டும் பொதுக்கூட்டம் என்று சொல்லுவதை விட மாவட்ட அளவிலான மாநாடு என்கிற அளவில் எழுச்சி மிகுந்த நிகழ்ச்சி ஆர்வத்தோடு ஆரவாரதோடு இங்கு நடைபெற்றுக் கொண்டுஇருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் NLC தொ.மு.ச பேரவையின் பொன் விழா, நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா பெயரிலான விருது பெற்றிருக்கிற தொ.மு.ச தலைவர் அண்ணன் செ. குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழா , அது போல் தொ.மு.ச பேரவைக்கென்று ஒரு கட்டிடம் உருவாகி அந்த கட்டிடத்திலே தலைவர் கலைஞரின் பெயரால் ஒரு அரங்கத்தின் திறப்பு விழா. இந்த மூன்று விழாக்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிற தொ.மு.ச வாக இருந்தாலும் சரி நகர கழகமாக இருந்தாலும் சரி மாவட்ட கழகமாக இருந்தாலும் சரி அவர்களின் அனுமதியோடு நான் தெரிவிக்க விரும்புவது இந்த நிகழ்ச்சியில் மூன்று விழாக்கள் மட்டுமல்ல சமச்சீர் கல்வியில் வெற்றி பெற்றதையும் சேர்த்து நான்கு விழாக்களாக இந்த விழாவை நாம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் .

நம்முடைய பேரவைத் தலைவராக இருக்கிற அண்ணன் குப்புசாமி அவர்கள் முப்பெரும் விழா நிகழ்ச்சியின் நேரத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் நாம் ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் விருது, அறிஞர் அண்ணா விருது, கலைஞர் விருது, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் விருது என்று கழக முன்னோடிகளுக்கு கழகத்திற்காக பணியாற்றியவர்களுக்கு பாடுபட்டவர்களுக்கு உழைத்தவர்களுக்கு நிர்வாகிகளுக்கு செயல்வீரர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்த தொடர்ந்து உற்சாகப்படுத்த அந்த விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுத்து தலைவர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன் விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் கொண்டாடிய முப்பெரும் விழாவில் அண்ணா விருது பெற்ற அண்ணன் குப்புசாமி அவர்களுக்கு பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். பேரவையின் பொதுச்செயலாளர் அண்ணன் சண்முகம் அவர்கள் பேசும் போது கோடிட்டுக் காட்டினார்கள். அண்ணன் குப்புசாமி அவர்களை பாராட்டிடும் அளவுக்கு தகுதியை தெம்பை திராணியை நான் இன்னும் பெற்றிட வில்லை. இருந்தாலும் அவரை பாராட்ட வந்திருக்கிறேன் என்றால் அவரை பாராட்டுவதன் மூலமாக எங்களுக்கு பெருமை வந்து சேரும் என்கிற அந்த உணர்வோடு அவரை பாராட்டுகிறோம். நான் எண்ணிப் பார்கிறேன். அண்ணன் குப்புசாமி அவர்களை பொறுத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக தனது உழைப்பை ரத்தத்தை வியர்வையை சிந்திக் கொண்டு தலைவர் கலைஞர் ஆணையிடுவதை ஏற்று செயலாற்றிக் கொண்டிருப்பவர். குறிப்பாக தொழிலாளர்களுக்காக தொடர்ந்து உரிமையோடு போராடிக் கொண்டிருப்பவர்.

இன்றைக்கு நமது தலைமைக் கழகம் அண்ணா அறிவாலயத்திலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களிலே ஆரம்பத்தில் ராயபுரம் அறிவகத்திலும் பின்பு அண்ணா சாலையிலுள்ள அன்பகத்திலும் தொடர்ந்து அரசினர் தோட்டத்தில் அமைந்திருந்த நமது சட்டமன்ற கட்சி அலுவலகத்திலும் தலைமைக் கழகம் செயபட்டுக் கொண்டிருந்தது. அந்த நேரத்திலே அன்றைக்கு இருந்த ஆட்சியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்ட போது நமக்கென்று ஒரு அலுவலகம் சென்னையின் மைய்ய பகுதியாக இருக்கிற அண்ணா சாலையிலே நாம் ஏற்க்கனவே வாங்கி வைத்திருத்த இடத்திலே அண்ணா அறிவாலயம் எழுப்பப்பட்டது. அப்போது அன்பகத்தை இளைஞர் அணியும் தொ.மு.ச பேரவையும் கேட்ட போது தலைவர் கலைஞர் எங்களுக்கு இடையில் ஒரு பந்தயத்தை வைத்தார்கள். யார் தலைமைக் கழகத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதியாக முதலில் தருகிறார்களோ அவர்களுக்கு அன்பகம் ஒதுக்கப்படும் என்றார்கள். இளைஞர் அணி சார்பில் அதன் செயலாளராக இருந்த நான் தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் நடத்தி நிதி திரட்டி கொடியேற்று விழாவுக்கு ஒரு தொகை, பொதுக் கூட்டத்திற்கு ஒரு தொகை, திருமணம் நடத்தி வைக்க ஒரு தொகை, இயக்கத்தினர் வீட்டிற்கு செல்வதற்கு ஒரு தொகை, உணவருந்த ஒரு தொகை, சிற்றுண்டி உண்ண ஒரு தொகை என முறைப்படுத்தி வசூலித்து பத்து லட்ச ரூபாயை தலைமை கழகத்திடம் கொடுத்து அன்பகத்தை இளைஞர் அணியின் அலுவலகமாக பெற்றோம். ஆனால் நியாயமாக பார்த்தால் தொ.மு.ச முயன்று அதைப் பெற்றிருக்க முடியும். ஒரு பரந்த மனப்பான்மையோடு பெருந்தன்மையோடு இளைஞர்களாக இருக்கிறவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று விட்டுக் கொடுத்து அதன் பிறகு தொ.மு.சவுக்கென ஒரு கட்டிடத்தை வாங்கி அதிலே அவர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்று சொன்னால் நமது இயக்கத்தில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த இதை செய்த தொ.மு.ச பேரவைக்கும் அதன் தலைவர் குப்புசாமிக்கும் நான் இந்த நேரத்திலே நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
எனக்கு முன்னாள் பேசிய முன்னோடிகள் எல்லாம் நெய்வேலியின் வரலாற்றை பற்றியும் குறிப்பிட்டு பேசினார்கள். கருப்பு தங்கம் எனப்படும் நிலக்கரி விளைகின்ற பூமி இந்த நெய்வேலி பூமியாகும். கருப்பாக இருக்கிற நிலக்கரியை மூடிருக்கிற மண் சிவப்பாக இருக்கிறது. எனவே இயல்பாகவே கருப்பு சிவப்பு வந்து விடுகிறது. இதனால் நெய்வேலி நகரத்திலே கருப்பு சிவப்பு கொடி பறந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை பொறுத்த வரையில் ஏறத்தாழ 11,000 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் 7,343 பேர் தொ.மு.ச உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1960ஆம் ஆண்டு இந்த தொழிற்சங்கத்தை தொடங்கிய பொது ஏழு பேர் தான் உறுப்பினர்களாக இருந்தார்கள். அதில் நாலு பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆபரேட்டர் வடமலை, ஆபரேட்டர் கருப்பணன், ஆபரேட்டர் ஆதி என்கிற 3 பேர் நம்மிடத்திலே இல்லை. இயற்கை எய்தி விட்டார்கள். மிச்சம் இருக்கிற ஆபரேட்டர் காளியப்பன், போர்மன் செல்வராஜ் , மெக்கானிக் அமீது, ஆபரேட்டர் அன்புமுத்து இவர்கள் பெயரை எல்லாம் நாங்கள் நினைவு படுத்தக் காரணம் அவர்கள் வைத்த விதை தான் இன்றைக்கு விருட்சமாக தொ.மு.ச கட்டிடமாக நம் முன்னே காட்சியளிக்கிறது.

நமது கழகம் இந்த பகுதியிலே வலிமையோடு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எத்தனை தோல்வி வந்தாலும் அந்த வேதனைகளை தாண்டி பீடு நடை போடுகிற இயக்கம் தி.மு.க. யாராலும் இதை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்பதற்கு இந்நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது. நெய்வேலி பூமிக்கு பல வரலாற்று சான்றுகள் உண்டு. 1970ஆம் ஆண்டு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் இந்த பகுதிக்கு வந்து தனது சீர்திருத்த கருத்துகளை சுயமரியாதை உணர்வோடு எடுத்துக் கூறினார். 1969ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் சிலையினை இங்கு திறந்து வைத்துள்ளார்கள். 1978ஆம் ஆண்டு தொ.மு.ச சார்பிலே தலைவர் கலைஞர் அவர்களின் எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா இங்கு நடைபெற்று 61 கிலோ நாணயம் தலைவரிடத்திலே வழங்கப்பட்டிருக்கிறது. 1980ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் இந்த பகுதிக்கு வந்து தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்துள்ளார்கள். அதே போல இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் 1982ஆம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்துள்ளார்கள். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டுமானால் 1984ஆம் ஆண்டு தொ.மு.ச சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களிடம் தேர்தல் நிதியாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இருபது ஆண்டுகளுக்கு பிறகு 2004 இல் இந்த அடியேனிடம் இதே பகுதியில் நடைப் பெற்ற பொதுக் கூட்டத்தில் தொ.மு.ச சார்பில் தேர்தல் நிதியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் பட்டது.

இதை எல்லாம் இங்கே நான் எடுத்துக் காட்டக் காரணம் இந்த இயக்கத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் அளவு கடந்த பற்றையும் பாசத்தையும் கொண்ட NLC தொழிலாளர்களுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போராடுகிற இயக்கம் தான் தி.மு.க. 1966ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் NLC தொழிலாளர்களுக்காக தடையை மீறி ஊர்வலம்.13.08.1967 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் இருந்த NLC தொழிலாளர்களை அழைத்து அன்றைய முதல்வர் அண்ணா பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டார். தொடர்ந்து பல போனஸ் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தினோம். இன்னும் பெருமையோடு சொன்னால் 2006 இல் NLC பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்ச்சித்த போது இந்த முடிவை திரும்ப பெற வில்லை என்றால் கழகத்தின் மத்திய அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவார்கள் என அறிவித்து முதல்வர் கலைஞர் மத்திய அரசின் முடிவை திரும்ப பெற செய்தார். மற்ற பொதுத் துறை நிறுவனங்களை விட NLC யில் போனஸ் ஊதியம் அதிகமாக இருக்கக் காரணம் தொ.மு.ச என்ற அமைப்பு தான் . இதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது. தற்காலிக பணியாளர்களாக இருந்த இரண்டாயிரம் பேரை 1996,1997,1998,1999 ஆண்டுகளில் முறைப்படி நிரந்தரமாக்கிய வரலாறுக்கு சொந்தக்காரர்கள் தொ.மு.ச என்கிற அமைப்பு. அதை போல 2000ஆம் ஆண்டு தொ.மு.ச எடுத்த முயற்சி காரணமாக 750 பேர் நிரந்தரமாக்கப் பட்டார்கள் என்பதையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இப்படி பின்னிப் பிணைந்தது தொ.மு.ச வாக இருந்தாலும் தி.முக வாக இருந்தாலும் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருக்கிறது


வெற்றி தோல்வி என்பது அரசியலில் சகஜம். 1967ல் மாபெரும் கட்சியான காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தோம். அண்ணா முதல்வரானார். 2 ஆண்டிலேயே அண்ணா மறைந்து போக, கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். 1971ல் 184 இடங்களை பிடித்து மாபெரும் சக்தியாக திமுக விளங்கியது. திமுகவை போல வெற்றிகளை சந்தித்தவர்களும் இல்லை. தோல்விகளை சந்தித்தவர்களும் இல்லை. கடந்த 2 தேர்தல்களில் நாம் வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கிறோம். இந்த வெற்றி தோல்விகளை சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் தான் தீர்மானித்து இருக்கி றார்கள். தோல்வியடைந்த ஜெயலலிதா வனவாசம் சென்றிருந்தார். ஆனால் நாமோ தோல்வியடைந்த 2வது மாதத்திலேயே மக்களை சந்திக்க வந்து விட்டோம். தொடர்ந்து மக்களை சந்தித்து கொண்டே இருப்போம். அடுத்த தேர்தல் 2016ல் நடக்க வேண்டும். அதற்குள்ளாகவே தேர்தல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம் இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்கள் தான்.
கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் நல திட்டங்களில் முதல் கையெழுத்தை போடுகிறார். ஆனால் ஜெயலலிதாவோ ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்விக்கு தடை என மக்கள் விரோத சட்டங்களில் கையெழுத்திடுகிறார்.
இதுதான் நமக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம்.

இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், எம்பிக்கள் சுகவனம், விஜயன், முன்னாள் எம்எல்ஏக்கள் மருதூர் ராமலிங்கம், சபா.ராஜேந்திரன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொமுச பொருளாளர் ரகுராமன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment