�அதிமுகவினர் ஏராளமானோர் மீது நில மோசடி புகார்கள் வந்தபோதும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் சமரசம் செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்� என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
நில மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்கேகேபி ராஜா, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், ஈரோடு மேயர் குமார் முருகேஷ் உட்பட திமுகவினர் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 05.08.2011 அன்று காலை கோவை வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சிறையில் உள்ள இவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திமுகவினர் மீது நில அபகரிப்பு தொடர்பாக இட்டுக்கட்டிய புகார்களின் மீது முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலரை அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். திமுகவை அழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நடக்கும் இவற்றை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் மீதும் நில அபகரிப்பு புகார்கள் போலீசில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த புகார்களில் அதிமுகவினர் மீது எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக புகார் அளித்தவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர். பொய் வழக்குகளுக்கு திமுகவினர் அஞ்சமாட்டார்கள். தொடர்ந்து இயக்கப்பணி ஆற்றுவோம்.
இவ்வாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளகோவில் சாமிநாதன், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணப்பன், ஈரோடு முத்துசாமி மற்றும் செல்வகணபதி எம்.பி ஆகியோரும் சிறையில் உள்ளவர்களை சந்தித்தனர்.
மு.க.ஸ்டாலின் வந்த தகவல் அறிந்து, சிறை முன்பு கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திமுகவினர் பலர் குவிந்தனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இணையதளத்தில் கோரிக்கை மனு அனுப்பிய கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப், ஸீ70 ஆயிரம் - மு.க.ஸ்டாலின் வழங்கினார் :
கோவை மாநகர திமுக சார்பில் கல்லூரி மாணவிகள் 2 பேருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் லேப்டாப்பினை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 05.08.2011 அன்று வழங்கினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெயரில் பிரத்யேக இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் மனு அளித்து உதவி பெற்று வருகின்றனர். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிஇ படித்து வருபவர் ரம்ஷியா பேகம். இவர் தனது கல்லூரி படிப்பை தொடர்ந்து படிக்க நிதியுதவி வேண்டி மு.க.ஸ்டாலின் இணையதளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார். இதே போல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த கதிர்வேல். விவசாயி. இவரது மகள் சொர்ணசிந்து. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம்.காம் படித்து வருகிறார். இவரும் தான் படிப்பதற்கு உதவியாக லேப்டாப் வேண்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இணையதளத்திற்கு மனு அளித்து இருந்தார். இவ்விரு மாணவிகளின் மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், 05.08.2011 அன்று கோவை வந்த முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவி ரம்ஷியா பேகத்திற்கு ஸீ70ஆயிரம் உதவித் தொகையும், மாணவி சொர்ணசிந்துவிற்கு இலவச லேப்டாப்பையும் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவை மாநகர திமுக செயலாளர் வீரகோபால் செய்திருந்தார். பின்னர் மாலை விமானம் மூலம் ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
No comments:
Post a Comment