கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, August 12, 2011

அதிமுக அரசின் பழிவாங்கும் கனவு பகல் கனவாகும் - திமுக தலைவர் கருணாநிதி


திமுகவினரை பழிவாங்கிட துடிக்கும் அதிமுக ஆட்சியாளரின் கனவு பகல் கனவாகி விடும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி 11.08.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குப் போடுகிறது தமிழக அரசு என்று திமுக தலைவர் கருணாநிதி திரும்பத் திரும்பச் சொல்கிறார். ஒருவர் பொய் சொல்லலாம், இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் பொய் சொல்லலாம். ஊர் முழுவதும், மாநில முழுவதிலும் மக்கள் பெருவாரியாக வந்து பொய் சொல்வார்களா? என்று ஒரு பத்திரிகை விமர்சித்துள்ளது.
திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் மீது ஜெயலலிதா அரசு ஒரு வழக்கினைப் பதிவு செய்து கைது செய்ய முன் வந்தது. அவர் என்ன குற்றம் செய்ததாக இந்த அரசு கூறியது?
29ம் தேதி சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நடைபெற்ற அறப்போரில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிகளைப் புறக்கணித்தனர். அதிலே கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ஒருவருடைய மகனும் கலந்து கொண்டு, பின்னர் அவர் இல்லம் திரும்பும்போது அவர் சென்ற பேருந்து லாரி ஒன்றோடு மோதியதில் அந்தச் சிறுவன் இறந்து விட்டார். அதற்கும் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளருக்கும் என்ன தொடர்பு?
அடுத்து, 30&7&2011 காலை 10 மணியளவில் திருத்துறைப்பூண்டியில் சொத்து மற்றும் பொருள்களை சேதப்படுத்தியதாக பூண்டி கலைவாணன் மீது 7 பிரிவுகளில் மற்றொரு வழக்கை அ.தி.மு.க. அரசு அவசரம் அவசரமாக பதிவு செய்து பாளையங்கோட்டை வரை காவல் துறையினர் சென்று ஜாமீனில் கலைவாணன் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கேயே கைது செய்தார்கள்.
இரண்டாவது முறையாக கலைவாணனை கைது செய்து நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்ய முற்பட்டபோது, கலைவாணனே நீதிபதியிடம் 29&7&2011 இரவு சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி வந்த கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தான் சென்றிருந்ததாகவும், அன்றிரவு அவரோடு தஞ்சையிலே தங்கியிருந்ததாகவும், 30ம் தேதி காலையில் அவருடனேயே வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது காவல் துறையினர் வழியிலே மறித்து தன்னை கைது செய்து விட்டதாகவும், இரண்டாவது வழக்கிலே காவல் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்த நேரத்தில் தான் திருத்துறைப்பூண்டியிலேயே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
அவர் திருத்துறைப்பூண்டியில் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அ.தி.மு.க. அரசு கூறியுள்ள புகாரை பொய் இல்லையா? இதற்குப் பிறகும் அந்தக் கலைவாணன் மீது அ.தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றால், இந்த ஆட்சியில் பொய் வழக்குப் போடவில்லை என்று கூற முடியுமா?
ஈரோட்டில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளருமான என்.கே.கே.பி. ராஜாவை நள்ளிரவு 2 மணி அளவில் கைது செய்யச் சென்ற காவல் துறையினர், காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்துத் தான் உள்ளே சென்றிருக்கிறார்கள். நீதிபதியின் இல்லத்திற்கு அவரை அழைத்துச் சென்று தமிழகக் காவல் துறையினர் அவரை ரிமாண்ட் செய்யவேண்டுமென்று கோரி யிருக்கிறார்கள்.
ஆனால் ஈரோட்டில் உள்ள நீதிபதி, காவல் துறையினர் என்.கே.கே.பி. ராஜாவை கைது செய்து, ரிமாண்டில் வைப்பதற்கு எந்தச் சான்றுகளையோ, காரணங்களையோ தெரிவிக்கவில்லை என்று கூறி அவரை ரிமாண்டில் வைப்பதற்கு தான் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
அடுத்து தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகனை அவசர அவசரமாக அதிகாலையில் சென்று தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி எட்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் புகாரைக் கொடுத்தவர் யார் தெரியுமா? 2009ம் ஆண்டு ஆகஸ்டில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் ரூ. 250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கைதாகி, ஜாமீனிலே வெளிவந்த ஒருவர். இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்தவர்.
சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியே வந்து காவல் நிலை யத்திலே அன்றாடம் கையெழுத்து போட வேண்டுமென்ற நிபந்தனையை நிறைவேற்றச் சென்றபோது, மேலும் அவர் மீது மற்றொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்தார்கள்.
மதுரையிலே அவ்வாறே திமுகவினர் மீது வழக்குகள் ஜாமீனிலே வெளியே வர முடியாத அளவிற்கு குண்டர் சட்டங்கள். திருச்சியில் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ஒருவரை கைது செய்து, குண்டர் சட்டத்திலே அவரை காராக்கிருகத்தில் அடைத்தார்கள். ஆனால் அது என்னவாயிற்று? தற்போது அவர் வெளியே வந்துவிட்டார்.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக நடப்பது என்ன? அ.தி.மு.க. வினர் மீது நில அபகரிப்புப் புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல், சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்துப் புகார் கொடுக்க வந்தவர்களுடன் பேசி சமாதானம் செய்து அனுப்புகிறார்கள்.
ஆனால் நிலத்தை விற்றவர்கள் தி.மு.க. வினர் மீது புகார் கூறினால் அந்தப் புகார் உண்மையா? அல்லவா? என்று விசாரிக்காமலேயே வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறார்கள் என்று நான் ஏற்கனவே சொன்னதைத்தான் இப்போதும் வலியுறுத்துகிறேன்.
நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினைகளில் சட்டம், ஒழுங்குக்குப் பொறுப்பு வகித்திடும் காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜார்ஜ் இது சம்பந்தமாக என்ன சொன்னார்?
நில அபகரிப்பு பிரச்னைகளில் பல்வேறு காரணங்களுக்காகவும், உள் நோக்கங்களுக்காகவும் காவல் துறை அபரிமிதமான ஆர்வம் காட்ட முற்படும்போது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் மலிந்து, அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
குறிப்பிட்ட அரசியல் கட்சியை மட்டும் குறி வைக்காமல் தீர விசாரித்து, நில அபகரிப்புப் புகாரின் உண்மைத்தன்மையினை அறிந்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அனுமதிக்கப்பட வேண்டும். நில அபகரிப்பு என்ற பொய்ப் புகார்களை வைத்துக் கொண்டு; காவல் துறையின் துணையோடு, கழகத் தோழர்களை நிலை குலையச் செய்யலாம் என்று அ.தி.மு.க. ஆட்சியினர் கனவு காண்கிறார்கள். பழிவாங்கிடத் துடிக்கும் அவர்களது கனவு பகல் கனவாகிப் போகும்.
அ.தி.மு.க.வினரும், காவல் துறையினரும் மோசமான முன்மாதிரிகளை உருவாக்குவதில் நேரத்தையும் நினைப்பையும் வீணாக்குவது நல்லதல்ல பரவாயில்லை ஆடும் வரை ஆடட்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment