கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, April 15, 2011

தமிழர்களின் உரிமை பிரச்னை மட்டுமல்ல; உயிர் பிரச்னையும் கூட கச்சத் தீவை திரும்ப பெற வேண்டும் - முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இது தமிழர்களின் உரிமைப்பிரச்னை மட்டுமல்ல; உயிர் பிரச்னையும் கூட’ என்று சோனியா காந்திக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை தீவுத்திடலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் 05.04.2011 அன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
தனது உரை மூலம் தமிழக மக்கள் இந்த தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டுகோள் விடுக்க வந்துள்ள சோனியா காந்தியை வருக வருக என்று வரவேற்கிறேன்.
இங்கு வந்துள்ள அவரிடம் சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். வந்த இடத்தில் அம்மையாரிடம் சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டு விட்டால் மாநிலத்திற்கு நான் இழைத்த குற்றமாகிவிடும்.
மாநிலங்களுக்கு இடையே நதிகளை தேசியமயமாக்க அரசியல் அமைப்பு சட்டம் மத்திய பட்டியல் 58ம் பகுதியில் இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையே நதிநீர் சிக்கலை தீர்க்க நதிகளை தேசியமயமாக்குதல் மட்டுமே நீண்டகால தீர்வாக அமையும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
100 ஆண்டுகளாக செம்மொழி தகுதியை தமிழகம் கோரி வந்தது. பரிதிமார் கலைஞர் முதல் தமிழ் புலவர்கள், தமிழ் அறிஞர்கள் கேட்டும் அது நடக்காமல் திமுக ஆட்சியில் நான் பொறுப்பேற்ற காலத்தில் , சோனியா என்னிடம் தமிழ்நாட்டிற்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, தமிழகத்திற்கான கோரிக்கைகளில் சிகரம் போன்ற கோரிக்கை தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி என அறிவிக்க வேண்டும் என்று கூறினேன். உடனே அவர் அதை ஏற்று அறிவித்தார். அது மகத்தான, சரித்திர பிரசித்தி பெற்ற காரியமாகும். அதற்காக தமிழர்கள் இன்னும் அவரை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
செம்மொழி தகுதி பெற்ற தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும். நான் உரிமையோடு தமிழில் உள்ள பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது அவர் அறிந்த உண்மை. இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆக வேண்டும். அந்த பெருமையை, உரிமையை வழங்க வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இல்லாமல் மத்திய பட்டியலில் இடைக்காலத்தில் இணைக்கப்பட்டு விட்டது அதை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஆன்றோர் கூறி வருகிறார்கள். இதற்காக மத்திய அரசு அமைத்த கோத்தாரி குழுவும், கல்வி வல்லுனர்களும் இதை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே மாநில பட்டியலில் கல்வியை சேர்க்க உரிய அரசியல் சட்ட திருத்தை கொண்டு வர வேண்டும்.
1974ல் கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டபோது தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்தவும், அங்குள்ள தேவாலய த்தில் வழிபடவும் இருந்த உரிமை 1976ம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது.
இதனால் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. எனவே கச்சத்தீவை திரும்ப கேட்க மத்திய அரசு உதவிட வேண்டும். இது உரிமை பிரச்னை அல்ல, தமிழர்களின் உயிர் பிரச்னை. எனவே இதில் சோனியா தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.
சேது கால்வாய் திட்டப் பணிகள் 2.7.2005ல் தொடங்கப்பட்டன. மதவாத காரணங்களை காட்டி அது தடை செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு நடத்தி முடித்து திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முல்லைப்பெரியாறு பிரச்னை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காவேரி பிரச்னை நடுவர்மன்ற தீர்ப்புக்கு பிறகும் நடுவர்மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. பாலாறு பிரச்னையும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
உரிய முறையில் இந்த வழக்குகள் நடக்க என்ன செய்யலாம் என்று அமைச்சர்களையும், சட்ட வல்லுனர்களையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் அராஜகம், அநாகரீக தலையீடுகள் ஏற்படாமல் அமைதி காக்க முடியும்.
திமுக ஆட்சியில் பவுத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் வழங்கப்பட்டன. அதேபோல தலித் கிறிஸ்தவர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கல்வியில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பில் சிறுபான்மை சமுதாயத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடி க்கை எடுக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களைப் போன்று சம உரிமை வழங்கி அரசியல் தீர்வு எட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். அதை விரைந்து முடித்து தமிழர் நெஞ்சத்தில் பால் வார்க்க வேண்டும்.
எந்த நேரத்திலும் கோரிக்கை வைக்கும் உரிமை எனக்கு உண்டு. அதை நிறைவேற்றும் கடமை அவருக்கும் உண்டு. உறவுக்கு கை கொடுக்கும் இந்த கூட்டணி உரிமைக்கு குரல் தந்திருக்கிறது என்பதை எண்ணி ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

சோனியா காந்தியிடம் கலைஞர் வைத்த கோரிக்கைகள் :
*முதல்கட்டமாக தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும்
*தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழியாக வேண்டும்
*கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்
*கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும்
*சேது கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்
*தலித் கிறிஸ்தவர்களை ஆதி திராவிடர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்
*ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, ஆட்சியில் சம பங்கு வேண்டும்.

No comments:

Post a Comment