‘தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணி திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும்’ என மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் 03.04.2011 அன்று வாக்குசேகரித்தார். கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியத்தை ஆதரித்தும், அன்னூரில் அவிநாசி காங்கிரஸ் வேட்பாளர் நடராஜை ஆதரித்தும்,மேட்டுப்பாளையம் தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் அருண்குமாரை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் காலத்தில் மட்டும் உங்களை தேடி வருபவர்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரக்கூடியவர்கள் நாங்கள். தமிழ்நாட்டில் சில தலைவர்கள் இருக்கிறார்கள். தேர்தலின் போது மட்டும் வருவார்கள், அப்போது மட்டும் அவர்களுக்கு தமிழ்நாடு பற்றி நினைவிருக்கும். தேர்தல் முடிந்ததும் கோடநாடு சென்று விடுவார்கள்.
அ.தி.மு.க.தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. அது கூட்டணியாக தெரியவில்லை. அதில் ஒரு தலைவர் இருக்கிறார். வேட்பாளர்களை அடிக்கிறார். அவரோடு செல்லும் வேட்பாளர்கள் தங்கள் தலையை பாதுகாத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும். இதுதான் அக்கூட்டணியின் நிலைமை.
5 ஆண்டு காலம் தமிழகத்திலே முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பிலே இருந்தது. இந்த காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். 2006 தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக என்னவெல்லாம் சொன்னோமோ அதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ அரிசி ^2க்கு வழங்குவோம் என்றோம், ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனேயே முதல் கையெழுத்திட்டு அத்திட்டத்தை முதல்வர் நிறைவேற்றினார். ஆனால் தேர்தலுக்கு முன்பாக இத்திட்டத்தை நிறைவேற்றவே முடியாது, சாத்தியம் இல்லை என்றெல்லாம் ஜெயலலிதா பேசினார். ஏன், சத்தியமே செய்தார்.
ஆனால் கிலோ அரிசி ^2 என்பதை பின்னர் ஒரு ரூபாயாக குறைத்து சாதித்து காட்டியவர்தான் நம்முடைய முதல்வர். அதேபோல விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் கூட்டுறவு கடன் ^ 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு வாரம் 2 முட்டை என்பதை தற்போது 5 முட்டையாக உயர்த்தி வழங்கி வருகிறோம்.
1989ல் ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் ^5 ஆயிரம் உதவித் தொகையோடு பெண்கள் திருமண உதவித் திட்டத்தை முதல்வர் கலைஞர் செயல்படுத்தினார். அதன்பின்பு வந்த அ.தி.மு.க.ஆட்சியில் அத்திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார். மீண்டும் 1996ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் திருமண உதவித்தொகையை ^10 ஆயிரமாக உயர்த்தினோம். 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் அத்திட்டத்தை நிறுத்தினார்.
ஒவ்வொரு முறையும் மக்களின் நலனுக்காக முதல்வர் கருணாநிதி திட்டங்களை செயல்படுத்துவார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லா நல்ல திட்டங்களுமே நிறுத்தப்படும். இதுதான் இதுவரை நடந்த நிலை.
எனவே அதையெல்லாம் எண்ணிப்பார்த்து 6வது முறையாக தமிழகத்தில் மீண்டும் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய உங்கள் ஆதரவை தர வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஸ்டாலின் பேச்சை கேட்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ஸ்டாலின் பேச்சை கேட்டனர்.
No comments:
Post a Comment