‘நீங்கள் மறுத்தாலும் நான் உங்களை மறக்கமாட்டேன். 5 ஆண்டு சாதனைகளை முன்வைத்து உங்களிடம் ஆதரவு கேட்டு நிற்கிறேன்’ என்று 02.04.2011 அன்று வேலூர் கூட்டத்தில் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் வேலூர் கோட்டை மைதானத்தில் 02.04.2011 அன்று நடந்தது.
கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
முந்தாநாள், 4, 5 நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்தவர்கள் என்னையும் தொண்டர்களை யும் விமர்சிப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 75 ஆண்டு அரசியல் பணியாற்றி சிறை அனுபவித்து, அடக்குமுறைகளை பொருட்படுத்தாமல், அஞ்சாமல் இந்த சமுதாயத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொண்டர்களை சற்று பொருத்திப்பார்த்து பார்க்க வேண்டும். ஆனால் அதை மறைப்பதற்கு சில மாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
எதற்கும் அஞ்சாமல் பாடுபடும் இயக்கத்தை யார், யாரோ பொடிப்பொடியாக்கி விடுவோம் என்று கூறுகிறார்கள். இன்று மாலையில் அழகிரியை கைது செய் என்று ஜெயலலிதா அறிக்கையில் உத்தரவிடுகிறார். இன்றைக்கு தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என்ற பெயரால் ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சி என்பது நெருக்கடி என்பது உங்களுக்கு தெரியும். எங்கு செல்ல வேண்டுமானாலும் உத்தரவு பெற்று செல்ல வேண்டும், உத்தரவு பெற்றுதான் திரும்ப வரவேண்டும்.
எனக்கே சந்தேகம். இதை காங்கிரசை சேர்ந்த ஞானசேகரன் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எனது வேதனை உரிய இடத்துக்கு போய்ச்சேரும்.
எனக்கே சந்தேகம். நான் முதல்வரா? இல்லையா? (நீங்கள் தான் முதல்வர் என கூட்டத்திலிருந்து முழக்கம்). தேர்தல் ஆணையத்துடன் மோதிக் கொள்ள விரும்பவில்லை. நடுநிலையாக செயல்பட்டால் யாரும் எதிர்க்கமாட்டார்கள், குறைகூறமாட்டார்கள்.
கண்ணனுக்கு பால் கொடுத்த பூதகியை போல பால்தானே கொடுக்கிறார் என்று எண்ணினால் பூதகி கண்ணனையே கொல்ல முயலும்போது அந்த கண்ணன் செய்த வேலையை நாம் செய்ய வேண்டும். சட்டப்படி, நியாயப்படி நடக்க வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டும். இந்த நீதிமுறை, நடைமுறை உள்ளவரை யாருக்கும் அபிப்ராயம் கிடையாது.
தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் அனைவரையும் திரட்டி வெற்றிக்கு பூநூல் உருவிக்கொண்டு பாடுபடுகிறார்கள். கருணாநிதி ஆளக்கூடாது. ஏன்?
ஏழை, எளிய மக்களின் முகத்தில் இறைவனை காண்கிறான். அவன் அண்ணா சொன்னதைபோல ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கிறான். இன்னும் 35 கிலோ அரிசி தருவேன் என்று உறுதி அளித்துள்ளான். தொடர்ந்து ஆட்சி அமைத்தால் நான் நம்முடையவர்கள் எப்போது ஆட்சி அமைப்பது என்று எண்ணுகிறார்கள்.
கேரளத்தில் கொண்டாடும் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். மகாபலி என்ற மாவலி மன்னன் இருந்தான். அவன் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருந்தான். தேவையான உதவிகளை செய்வான். ஏழை, எளிய மக்களை காப்பான். தொடர்ந்து அவன் செய்து கொண்டிருந்தால் அந்த இடத்தை பிடிக்க முடியாது என்று தேவர்கள் நினைத்தனர். தேவர்கள் என்றால் தேவாதி தேவர்கள். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.
எப்படியாவது மாவலியை அழித்துவிட வேண்டும் என்று நெருங்கி அவரை வீழ்த்திவிட்டார்கள். அவன் சாகும்போது 3 அடி நிலம்தானே கேட்டீர்கள்? ஏன் கொன்று விட்டீர்கள் என்று கேட்க, உயிரோடு இருந்தால் இன்னும் தொடர்ந்து நன்மை செய்வாய் என்று கூறினர். எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று கேட்டார் மாவலி. ‘ஆண்டுக்கு ஒரு முறை கேரளத்தில் எனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களை சந்திக்க அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டான். அந்த வரத்தை கொடுத்து ஆண்டுக்கு ஒரு முறை மாவலி மன்னன் மக்களை சந்திக்கிறான் என்று சொல்லப்படுகிறது. அந்த பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறையும் விட்டுள்ளோம். அந்த அளவுக்கு வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி புரிந்து மக்களுக்கு நன்மைகளை நல்ல திட்டங்களை செய்து கொண்டிருந்தால் ஒரு கூட்டம் பொறுத்துக் கொள்ளாது. அந்த இடத்தில் உட்கார வேண்டும் என்று எடுத்துக்கொள்வதுதான் மாவலி நிகழ்ச்சி.
இப்போது தமிழகத்தில் இந்த மாவலி மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறான். இலவச அரிசி, இலவச டிவி, இலவச சிகிச்சை, இலவச 108 வாகனம் என்று எத்தனையோ இலவச திட்டங்களை கொடுக்கிறான். இவனை விட்டு வைத்தால் ஆயிரம் ஆண்டுகளானாலும் நம்முடைய வம்சம் ஆட்சிக்கு வரமுடியாது என்று மாவலி கதையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த கதை நடைபெற வேண்டுமா? அதை அனுபவிக்க போகிறீர்களா? அதை முடிவு செய்யத்தான் தேர்தல். திமுக கூட்டணி அமைத்து தோழமை கட்சிகளோடு போட்டியிடுகிறது. எதிரணியில் ஜெயலலிதா கூட்டணி அமைத்துள்ளார். நாம் பெரியார், அண்ணா வழித்தோன்றல்கள். நம்மால் இயக்கத்தை நடத்த முடியும். ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும் சுயமரியாதை, திராவிட உணர்வை எனது உள்ளத்தில் இருந்து யாராலும் அகற்றிவிட முடியாது.
ஜெயலலிதா ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடு புகுந்து கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனது படுக்கை அறையில் புகுந்து நள்ளிரவு 12 மணிக்கு என்னை கைது செய்து சிறையில் அடைத்தார். நானே ஆட்சி அமைக்கிறேன் என்று ஜெயலலிதா கூறினால் நீங்கள் அதை விரும்புகிறீர்களா? 12 ஆயிரம் சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
எனது ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை சிதைத்து, உடைத்து அந்த திட்டங்களை நிறுத்தியது அந்த ஆட்சிதானே. அந்த ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால் இந்த திட்டங்கள் தேவையில்லை என்று நீங்களே வழிமொழிகிறீர்கள் என்று அர்த்தம். அவரை ஆதரித்து எங்களை மறந்துவிட்டால், இறக்கிவிட்டால் கவலையில்லை. உங்களை நாங்கள் மறக்கமாட்டோம். விட்டுவிடமாட்டோம். உங்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருப்போம். உங்களுக்காக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment