திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தந்தவர்களிடம், 5வது நாளாக முதல்வர் கருணாநிதி 12.03.2011 அன்று நேர்காணல் நடத்தினார்.
தமிழகம், புதுவை சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் தந்தவர்களிடம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி நேர்காணல் நடத்தி வருகிறார். நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் குழுவினர் உடன் இருந்து வருகிறார்கள்.
காலை முதல் இரவு 11 மணி வரை நடைபெறும் நேர்காணலில் விருப்ப மனுக்கள் தந்தவர்களை அழைத்து தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றி விசாரணை நடத்துகிறார். எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று கேட்கிறார். சாத்தூரில் இருந்து ஒருவர் சக்கர நாற்காலியில் நேர்காணலுக்கு வந்திருந்தார்.
கோவையில் இருந்து நேர்காணலுக்கு வந்திருந்த ஒருவர், “ஸீ3 கோடி வரை செலவு செய்வேன்” என்று கூறியதும், முதல்வர் குறுக்கிட்டு ‘கோடிக்கு எத்தனை பூஜ்யம்?’ என்று கேட்டதும், அவரால் பதில் கூற முடியாமல் தவித்துள்ளார். சில இளைஞர்களிடம் ‘உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது’ என்று கூறி கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு சிலரிடம் ‘உடனே எவ்வளவு தொகை செலுத்த முடியும்’ என்று கேட்டுள்ளார்.
சிலர் தங்களைப் பற்றிய குறிப்புகள், தங்களின் சாதனைகள் கொண்ட சிறு கையேடுகளை முதல்வரிடம் தந்தனர். தொகுதி மாறி மனு தந்தவர்களிடம், ‘ஏன் தொகுதி மாறுகிறீர்கள்?’ என்று முதல்வர் விசாரித்துள்ளார்.
விருப்ப மனு தந்த அமைச்சர்களும் மற்றவர்கள் போலவே நேர்காணலில் கலந்து கொண்டு, முதல்வரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள்.
பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பெண்கள் மனுக்கள் தந்து நேர்காணலில் கலந்து கொண்டனர்.
தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்றால், விருப்ப மனு தந்த அனைவரையும் அழைத்து, ‘உங்கள் தொகுதி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது; அனைவரும் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற பாடுபடுங்கள்’ என்று கூறுகிறார். ஒரே தொகுதிக்கு 100 பேருக்கு மேல் விண்ணப்பித்தால் 5 பேர், 10 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
12.03.2011 அன்று மதியம் 12 மணிக்கு 5ம் நாளாக நேர்காணல் தொடங்கியது. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விருப்ப மனுக்கள் தந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.
அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் மற்றும் கு.பிச்சாண்டி, பெ.சு.திருவேங்கடம், சி.சண்முகம், வெற்றிவேல், உகம்சந்த், ஸ்ரீதரன், ஆர்.காந்தி, ஏ.கே.சுந்தரமூர்த்தி, எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாலையில் திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை மாவட்டங்களுக்கு நேர் காணல் நடந்தது. 13.03.2011 அன்று புதுவை மாநிலத்துக்கான நேர்காணல் நடக்கிறது. கடந்த 10ம் தேதி நடந்த திமுக & காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நேர்காணல் 13.03.2011 அன்று மாலை காலை நடக்கிறது. புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு விருப்ப மனுக்கள் தந்தவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள 35 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்து வருகிறது.
இதில் சராசரியாக ஒரு நாளை க்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேரிடம் முதல்வர் கருணாநிதி நேர்காணல் நடத்துகிறார்.
No comments:
Post a Comment