கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, March 27, 2011

தமிழ் இனம் வாழ வாக்களியுங்கள்: கலைஞர்தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.


திருச்சியில் 25.03.2011 அன்று ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல் அமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


1956ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிட கழகத்தின் மாநில மாநாட்டில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பிரச்சினைகளுக்காக கட்சி போட்டியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மாநாட்டில் எடுத்த முடிவின் படி மக்கள் பிரச்சினைக்காக சட்டசபை தேர்தலில் கழகம் போட்டியிட்டது. 1957 ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் போது, நான் ரெயிலில் வெளிழூருக்கு சுற்றுப்பயணம் செய்து, சென்னை ராயபுரத்தில் உள்ள அறிவகத்துக்கு சென்று கொண்டு இருந்தோம். அப்போது தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து பேரறிஞர் அண்ணா ராயபுரம் அறிவகத்தில் கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தார்.


உடனடியாக நான் ராயபுரம் அறிவகத்துக்கு விரைந்து சென்றேன். கட்சி தலைவர் அண்ணா என்னிடம் ஒரு பட்டியல் கொடுத்து பார் என்றார். அந்த பட்டியலில் நான் போட்டியிடும் தொகுதி குளித்தலை என்று இருந்தது. அண்ணாவிடம் குளித்தலை தேர்தலில் நிற்கும் அளவுக்கு வலிமை, திறமை, நண்பர்கள் கூட இல்லை என்று அண்ணாவிடம் கூறினேன். அதற்கு அண்ணா நீ குளித்தலையில் நிற்கவேண்டும் என்று கண்டிப்பாக கூறினார். குளித்தலை தொகுதியில் நிற்க வேண்டும் என்று அண்ணா சொன்ன போது நான் அதிர்ச்சி அடைந்தேன்.


நான் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுவதாக நினைத்து இருந்தேன். கட்சி தலைவர் அண்ணா குளித்தலை என்று சொன்னபோது, அண்ணாவின் தம்பிகள் என்ற முறையில் அதை ஏற்றுக்கொண்டேன். அதற்கு அண்ணா நீ குளித்தலையில் நிற்பது குறித்து அன்பிலிடம் கேட்ட போது உனக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார். எனவே நீ தைரியமாக நில் என்றார். கட்சி தலைவர் அண்ணா நியாயப்படுத்தி கூறியதை தொடர்ந்து குளித்தலையில் நின்றேன்.

குளித்தலை என்ற தொகுதி இருபுறமும் வயல்வெளிகள், ஓடைகள், சாலைகள், இடையே பாலங்கள் என்று குளித்தலை இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் குளித்தலை பக்கம் வெள்ளறை, ராயல்பட்டறை என்ற வறண்ட பாதையாக இருப்பதை கண்டேன். அதனால் தான் இந்த இடத்தில் நிற்க அண்ணா சுட்டிக்காட்டி உள்ளார் என்று நினைத்தது உண்டு. ஆனால் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றேன்.


இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்றைக்கு தொகுதிகள் எல்லாம் முடிவு செய்யப்பட்டு இன்னார் நிற்கிறார் என்று அறிவித்த பிறகு கூட தொகுதியை மாற்றுகிறார்கள். ஆனால் அன்றைக்கு தலைவன் இட்ட கட்டளையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கருதி அண்ணா இட்ட கட்டளையை ஏற்று குளித்தலையில் நின்றேன், வென்றேன். அதன் பிறகு தொடர்ந்து நின்று வென்றேன். இதுவரை விடுபட்டிருந்த எனது சொந்த தொகுதியில் நிற்கும் பேறு இப்போது பெற்றிருக்கிறேன். அங்கு நான் வென்றிட வேண்டும் என்று எனக்கு வாழ்த்து கூறியவர்கள் எல்லாம் இந்த மேடையிலே இருக்கிறார்கள்.


திருமாவளவன் பேசும்போதும், காதர் மொய்தீன் பேசும்போதும் எனக்கே மலைப்பு. நான் இவ்வளவு பெரியவனா என்று. என் மனைவி அருகில் இருந்தால் கண்ணாடியை கொண்டுவா என்று என் முகத்தை பார்த்து இருப்பேன். என்னை இவ்வளவு புகழ்கிறார்கள் என்றால் அது இவ்வளவு தகுதியான வேட்பாளரை உங்கள் முன் நிறுத்தி உள்ளோம். அவரை வெற்றி பெறச் செய்து அமைச்சர் பொறுப்பில் அமர்த்துங்கள் என்று உங்களுக்கு சொல்கிறார்கள்.


நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன். இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம். நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6 வது முறையாக முதல் அமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை. என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6 வது முறையாக என்னை முதல் அமைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதல் அமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன். இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.


நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது. இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறினார்.

கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது விஜயகாந்த், சரத்குமார், ஜெ.வுக்கு உண்டா? திருமா

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,

கலைஞருக்கு உள்ள சங்கடமே அவருக்கு இணையாக தகுதி உள்ள எதிரிகள் தமிழகத்தில் இல்லை. அதுதான் கலைஞருக்கு உள்ள தர்ம சங்கடம். தலைவர் கலைஞரை எதிர்ப்பவர்கள் உண்டு. எதிரிகள் இல்லை. எதிரிகள் என்றால் நமக்கு என்ன தகுதிகள் இருக்கிறதோ, அதற்கு இணையான தகுதிகள் இல்லாவிட்டாலும், ஓரளவுக்காகவது தகுதி இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் தான் எதிரிகள். யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம். அவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. எதிர்ப்பவர்கள் வேறு. எதிரிகள் வேறு. தமிழகத்தில் கலைஞருக்கு எதிரிகளே இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

கலைஞர் இயல்பாகவே தோன்றிய தலைவர். அவரை எதிர்ப்பதற்காகவே சில தலைவர்கள் தோற்றுவிக்கப்பட்டார்கள். உருவாக்கப்பட்டார்கள். அப்படி உருவாக்கப்பட்டவர்தான் எம்ஜிஆர் அவர்கள். கலைஞரை எதிர்ப்பதற்காகவே அவர் உருவாக்கப்பட்டவர். தோற்றுவிக்கப்பட்டவர். அவருக்கு பிறகு தமிழகத்தில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் தோற்றம் அளிக்கிற தலைவர்கள். கொஞ்சம் சிரமப்பட்டாவது சிரித்து பேசு மற்றவர்களிடம் என்று சொல்லி உட்காரவைத்து சிரிக்கச்சொல்வார்கள். மேடைக்கு வரும்போதாவது கொஞ்சம் நேரம் உள்ளுக்குள் போடாமல் பேசு என்று சொல்லி மேடையிலே ஏற்றி வந்து நிறுத்துவார்கள். ஏதாவது எழுதி தந்தாவது படி என, அறிக்கையை எழுதித் தந்து படிக்கச் சொல்வார்கள். அப்படி எழுதித் தருகிற அறிக்கையை படிக்கிற தலைவர்கள். அவர்கள் தோற்றம் அளிக்கிற தலைவர்கள்.

இதைத்தான் எனக்கு முன்னாள் பேசியவர்கள் சொன்னார்கள். ஒப்பிட்டு பார்க்கக் கூட தகுதி இல்லாதவர்கள் எல்லாம், கலைஞரை எதிர்க்கிறார்கள் என்று சொன்னார்கள். யாரெல்லாம் எதிர்க்கிறார்கள். 4 ஆண்டுக்கு முன்பு கட்சித் தொடங்கிய ஒருவர். 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்சித் தொடங்கிய ஒருவர். 2 ஆண்டுக்கு முன்பு கட்சியை தொடங்கியவர்கள்.

கலைஞர் 75 ஆண்டு காலம் தமிழகத்திலே கால்களில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று சுழன்று வந்து, அவர் சுற்றாத தொடாத கிராமங்களே இல்லை என்ற அளவுக்கு சுற்றி சுழன்று வந்து பணியாற்றியவர். அன்று கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றி சுழன்று வந்து பணியாற்றியவர், இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு சுற்றி சுழன்று வந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

75 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள கலைஞரை எதிர்க்கிறார்கள். யாருடைய தலைமையிலே 1984ஆம் ஆண்டு ஒரே ஒரு நாள் அறிக்கையை வாங்கி படித்துவிட்டு, எனக்கு இந்த கொள்கைகள் எல்லாம் பிடித்திருக்கிறது என்று கடலூரிலே வந்து கட்சியிலே சேர்ந்தவர்.

கலைஞருக்கு இணையான ஒரு தகுதியாவது எதிரணியில் உள்ளவர்களுக்கு உண்டா. சமூக நீதி என்றால் என்ன என்று ஒரு 10 வரி எழுத முடியுமா. கேப்டனால். ஒரு பத்து வரி பேச முடியுமா நடிகர் சரத்குமாரால். ஒரு பத்து வரி மேடைகளிலே உரையாற்ற முடியுமா அம்மா அவர்களால். சமூக நீதி என்ற சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் கலைஞரை எதிர்க்கிறார்கள்.

திராவிட இயக்க கொள்கைகள் என்றால் என்ன. அண்ணா சொன்ன கொள்கை எது. மாநில சுயாட்சிதான் அண்ணாவின் இறுதி மூச்சு கொள்கையாக இருந்தது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த மாநில சுயாட்சியை பற்றி ஓரிரு வரிகளாகவது எழுதுகிற ஆற்றல் கலைஞரை எதிர்ப்பவர்களுக்கு உண்டா. என்ன தகுதி இருக்கிறது.

கலைஞரை போல குறளோவியம் எழுத வேண்டாம். கலைஞரைப் போல தொல்காப்பிய பூங்கா எழுத வேண்டாம். கலைஞரைப் போல இலங்கிய நடையிலே அறிக்கைகள் எழுத வேண்டாம். சொந்தமாக சுயமாக ஒரு பிரச்சனையைப் பற்றி அறிக்கை எழுதுகிற ஆற்றல் அந்த எதிரணியில் இருப்பவர்களுக்கு உண்டா. எந்த தகுதியுமே இல்லை. மக்களை நேரிக்கிற பண்பு உண்டா. கலைஞரை விமர்சிப்பது மட்டும்தான் அவர்களது கொள்கை.

எம்ஜிஆர் உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைஞர் மக்களை பார்த்து சொன்னார், எம்ஜிஆர் என்னுடைய நண்பர். அவருடன் எனக்கு ஏற்பட்ட 12 ஆண்டுகால பகையை காட்டிலும், 40 ஆண்டு கால நட்பே என் நெஞ்சில் மேலோங்கி நிற்கிறது. தமிழக மக்களே எம்ஜிஆர் மீது விசுவாசமுள்ளவர்களே, ஆட்சியே திமுகவிடம் ஒப்படையுங்கள். என் நண்பர் வந்தவுடன் ஒப்படைத்துவிடுகிறேன். எம்ஜிஆர் பெயரைச் சொல்லி இங்கே நாடகமாடுகிறவர்களிடம் ஒப்படைத்துவிடாதீர்கள் என்று எச்சரித்தார். ஏன், அப்படி அவர் சொன்னதில் என்ன வெளிப்படுகிறது. தன்னை எதிர்க்கிற அரசியல் தலைவரை கூட, எம்ஜிஆரை கூட நாகரீகத்தோடு நண்பர் என்று எழுதியவர், பேசியவர் இன்றும் எழுதிக்கொண்டிருப்பவர் கலைஞர். ஆனால் கலைஞரை எதிர்க்கிற அவர், மூச்சுக்கு முன்னூறு முறை கருணாநிதி என்று பக்குவமில்லாத, நாகரீகம் இல்லாதவர்கள் தமிழகத்தில் கலைஞரை எதிர்த்து அரசியல் நடத்துகிறார்கள்.

கலைஞர் யாரையும் பழிவாங்க விரும்பமாட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் யார் யாரெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள். அவரை எதிர்த்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டார்கள். பொடா சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டார்கள்.

18 மாதங்கள் உள்ளே வைக்கப்பட்டார் வைகோ. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞரால் வளர்க்கப்பட்டவர்தான். தன்னை மாணிக்க கல்லாக உயர்த்திவர் கலைஞர் என்று மேடைகளில் பேசியவர் வைகோ. அவர் மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவரின் நிலைமை என்ன. அவரின் அரசியல் நிலைமையே இன்று கேள்விக் குறியாகி விட்டது. புதைக்குழியிலே இன்றைக்கு தள்ளிவிட்டார்.

அதற்கு வைகோ பேசுகிறார். குற்றச்சாட்டு. வெளிப்படையான குற்றச்சாட்டு. அரசியலில் இருந்து ஓரம்கட்டுவதற்காக, ஒழிப்பதற்காக ஸ்டெர்லைட் என்கிற நிறுவனம் என்னை எதிர்க்கிறவர்களுக்கு ஆயிரம் கோடி நிதி தந்திருக்கிறது என்று வைகோ கூறுகிறார். வைகோ அவர்களே இந்த மேடையில் இருந்து கேட்கிறேன். நேர்மை இருந்தால், மனசாட்சி இருந்தால், ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியது யார் என்று வெளிப்படையாக சொல்லுங்கள். நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துங்கள். நாட்டுக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆயிரம் கோடி ரூபாயை வாங்கியது யார். அரசியலில் இருந்து உங்களை ஓரங்கட்டுவது யார். அரசியல் வாழ்விலிருந்து உங்களை ஒதுக்குவது யார்.

எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தபோது, 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உங்களுக்கு 23 இடங்கள் ஒதுக்க முன்வந்தார் கலைஞர். ஒரு ஒரு தொகுதிக்கு முரண்பட்டு அதிமுக அணிக்கு போனீர்கள். இந்த 5, 6 ஆண்டுகள் எவ்வளவு பாதுகாப்பு தந்தீர்கள் அம்மாவுக்காக. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது, பாதிக்கப்படுகிற ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதைவிட அம்மாவை காப்பற்றுவதே வைகோவுக்கு குறியாக இருந்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தடுத்து நிறுத்துவதைவிட, கலைஞரின் வெற்றியையே தடுத்து நிறுத்துவதையே அவர் குறியாக இருந்தார். ஈழத்தமிழர்களை அழித்து ஒழிக்கக் கூடிய சிங்கள அரசை எதிர்ப்பதை விட, சிங்கள அரசுக்கு துணை நிற்கக் கூடிய உலக நாடுகளை எதிர்ப்பதை விட, ராஜபக்சேவை எதிர்ப்பதை விட கலைஞரை எதிர்ப்பதையே முன்வைத்திருந்தார். யாருக்காக அம்மாவுக்காக. விசுவாசம் காட்டினார். ஆனால் அந்த அம்மா இன்று என்ன செய்திருக்கிறார். எந்த அணியிலும் சேர முடியாத நிலையில், புதிய அணியும் உருவாக்க முடியாத நிலையில், தனித்தும் போட்டியிட முடியாத நிலையில் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கி விட்டார். எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். அரசியல் நாகரீகமா இது. இப்படிப்பட்ட அரசியல் அநாகரீகத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.

மதிமுகவை வெளியே தள்ளிய ஜெயலலிதா: தோழமைகளை அரவணைக்கும் கலைஞர்

கலைஞர் அப்படி செய்திருப்பாரா? நாடாளுமன்ற தேர்தலில் எவ்வளவோ முரண்பட்டு பேசிய பாமகவை கூட்டணியில் அரவணைத்துக்கொண்டார். தன்னைவிட வயது குறைந்தவர் என்றாலும், மருத்துவர் அய்யா என்று பெருந்தன்மையாக பேசியவர் கலைஞர்.

ஆனால் 6 ஆண்டு காலம் உள்ளே இருந்த மதிமுகவை பிடரியை பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா. இது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம். பழி வாங்கும் எண்ணம் கலைஞருக்கு உண்டா. 18 மாதம் உள்ளே தள்ளிய அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. ஈழத்தமிழர்களை என்றைக்கும் ஆதரிக்காத அந்த அம்மாவுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாமா. விடுதலைப் புலிகளுக்கு தடை வாங்கித் தந்தது நான் தான் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் அவருடன் கூட்டணி சேரலாமா. பிரபாகரனை கொண்டுவந்து விசாரணை நடத்தி தூக்கு ஏற்ற வேண்டும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றிய அந்த அம்மாவோடு கூட்டு சேரலாமா. கூடா நட்பின் விளைவு, அண்ணன் வைகோ இன்று அம்போ என்று நடுத்தெருவில் நிற்கிற நிலை ஏற்பட்டுடவிட்டது. நான் உள்ளபடியே அவர் மீது வைத்திருக்கிற அன்பின் விளைவாக வேதனைப்பட்டு சொல்கிறேன். உள்ளம் நொந்து சொல்கிறேன்.

கலைஞரை எதிர்க்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்திற்காக இன்றைக்கு எப்படிப்பட்ட நிலை. கலைஞர் யாரையும் கைவிட்டதில்லை. திமுக 119 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடுகிறது. தோழமை கட்சிகளுக்கு தாராளமாக இடம் தந்து அரவணைத்துக்கொண்டிருக்கிறார் கலைஞர்.

ஆனால் அந்த அணியில் கேப்டனுக்கு 41, சரத்குமாருக்கு 2, கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பற்றி பேசவே இல்லை. 160 தொகுதிகளுக்கு பட்டியலை அறிவித்துவிட்டார்.

கலைஞர் என்ன செய்தார் காங்கிரஸ் கட்சிக்கு 63 கொடுத்துவிட்டு, பாமகவுக்கு 30 தொகுதிகள் அடையாளம் காட்டிவிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் கொடுத்துவிட்டு, தோழமைக் கட்சிகளுக்கு அறிவித்துவிட்டு, பின்னர் அண்ணா அறிவாலத்தில் 119 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது என்று கலைஞர் அறிவிக்கிறார்.

தனித்து ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை. 119 தொகுதிகள் போதும் என்று கலைஞர் நினைக்கிறார் என்றால், திருமாவளவனை நம்புகிறார். பாமகவை நம்புகிறார். தோழமை கட்சிகளை நம்புகிறார். எல்லோரும் வலிமைப்பெற்றவர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் கலைஞரின் பெருந்தன்மை.

எதிரணியில் அறிக்கை கூட சுயமாக இல்லை. சொந்தமாக இல்லை. மக்கள் நலனில் இருந்தால்தான் இதுவெல்லாம் சுயமாக வரும்.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

கலைஞர் முதல் அமைச்சராக இருந்தால்தான், தமிழக மக்களின் வாழ்வு விடியும்: திருச்சி சிவா

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி.,

நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்த நாட்களில் தனிமையில் பேசுகிறபோது அடிக்கடி ஒரு வார்த்தையை சொல்வார், தமிழனை போல் நன்றி உணர்ச்சி உள்ளவன் யாரும் இல்லை. ஆனால் அவனைப்போல் ஞாபக மறதி உள்ளவன் யாரும் இல்லை என்று சொல்வார்.

ஞாபக மறதி என்று சொன்னால் நேற்று நடந்தது அல்ல. ஐந்து ஆண்டுக்கு முன்னால் நடந்ததை தமிழக மக்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். நாகை மாவட்டம் கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் இன்று இருக்கிற பகுதியை யாராவது போய் பார்த்தால், சில ஆண்டுகளுக்கு முன்னால் கடுமையான சுனாமியால் தாக்கப்பட்ட பகுதிபோல் இருக்காது. அந்த பகுதி புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பகுதி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவர்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ஒன்றுகூடி அந்த வேதனையான நாளை நினைவு கூட்டி பார்க்கிறார்கள்.


கடலோர பகுதி மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்த நாளை நினைவு கூட்டி பார்ப்பது போல், தமிழ்நாட்டு மக்கள் கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 5 ஆண்டுகள் பட்ட அவதியை நினைவு கூட்டி பார்க்க வேண்டிய நாள் தான் ஏப்ரல் 13.


தேர்தலுக்காக மட்டும் தமிழக மக்களை சந்திக்கிற, ஆட்சிக்கு வரத்துடிக்கின்ற எதிரணியைப் போன்ற தலைவரை போன்றவர் இல்லை கலைஞர். அமைச்சர் நேரு பேசும்போது ஒன்றை குறிப்பிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியிலே போட்டியிடுகின்ற காரத்தினால்தான், அதிமுக தலைவி வாகனத்திலே வலம் வந்தார். இல்லையென்றால் வானத்திலே பறந்திருப்பார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் மதுரையில் கலைஞருக்கு ஒரு நிகழ்ச்சி. மறுநாள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. மதுரை நிகழ்ச்சி முடிந்து மறுநாள் ராமநாதபுரத்துக்கு செல்கிறபோது, கலைஞருக்கு சற்று உடல்நிலை சரியில்லை. மருத்துவர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். எந்த நிகழ்ச்சியையும் ஒப்புக்கொண்டு அதை ரத்து செய்வது எனக்கு பழக்கமில்லை என்றார் கலைஞர்.


நிற்க கூட முடியாமல் வயிற்றுப்போக்கு போகும்போதுகூட அதோடு சேர்ந்து கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த அந்த கலைஞர்தான், மேடையில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றபோது மனைவி இறந்தார் என்று செய்தி வந்தபோது, அதை வாங்கி படித்துவிட்டு, மேடையில் உரையாற்றிவிட்டு பின்னர் மனைவியை பார்க்க போன கலைஞர் அவர்கள்தான், நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, போய்தான் தீருவேன் என்று சொன்னபோது, அனைவரும் சொன்னார்கள் ஹெலிகாப்டரில் போகலாம் என்று. இல்லை நான் சாலை வழியாகத்தான் பயணத்தை மேற்கொள்வேன் என்றார் கலைஞர்.


மீண்டும் மீண்டும் அனைவரும் வலியுறுத்தி சொன்னார்கள். அப்போது கோபத்தோடு கலைஞர் ஒரு வார்த்தை சொன்னார். புரிந்துகொள்ளுங்கள். நான் ஹெலிகாப்டரில் போனால் விரைவில் போகலாம். பாதுகாப்பாக போகலாம். ஆனால் சாலை வழியாக நான் சென்றால் ராமநாதபுரம் மக்களை நான் பார்பேன். அவர்கள் என்னை பார்ப்பார்கள் என்றார்.


கலைஞர் ஆட்சியிலே இருந்து செயல்படுத்திய திட்டங்களை, அடுத்து வந்தவர் பறித்தார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் யாரையும் விமர்சிக்க வரவில்லை. ஏனென்றால் எங்களைப் போன்றவர்கள் அரசியல் பயிற்சி எடுப்பது அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் காலடியில்.


நல்லது செய்துவிட்டோம். மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்வது கலைஞரை முதல் அமைச்சராக ஆக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அவர் முதல் அமைச்சராக இருந்தால்தான், தமிழக மக்களின் வாழ்வு விடியும் என்றார்.

ஜெயலலிதாவின் கொசுவத்தி சுருளில்...: திருச்சி செல்வேந்திரன்

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருச்சி செல்வேந்திரன்,


ஒரே ஒரு விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். எதற்கு என்றால், அவர் தேர்தல் அறிக்கையின் துவக்கத்தில் ஒரு வரி சொல்லியிருக்கிறார், அதை யாரும் கவனித்தார்களோ இல்லையோ என்பது எனக்கு தெரியாது. மக்கள் நல திட்டங்கள் தொடரும் என்று சொல்லியிருக்கிறார். கலைஞர் அறிவித்த திட்டங்கள் உண்மையிலேயே மக்கள் நல திட்டங்கள்தான் என்று அவர் நிதானத்தோடு இருந்தபோது, எழுதிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


இந்த திட்டங்கள் எல்லாம் வீண். மக்கள் அனைவரும் சோம்பேறியாகி விடுவார்கள். மக்கள் அனைவரும் தூங்க போய்விடுவார்கள். உழைக்க மாட்டார்கள். இலவசத்தால் இந்த நாட்டை கெடுத்துவிட்டார்கள் என்று, அத்தனை பேரும் திரும்ப திரும்ப எழுதினார்கள். ஜெயலலிதாவின் கொசுவத்தி சுருளில் தூங்கி கொண்டிருக்கிற கூட்டணி கட்சித் தலைவர்களும் எழுதினார்கள்.


ஆனால் இன்று உங்கள் தலைவியே மக்கள் நல திட்டங்கள் என்று ஒப்புக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அது தொடரும் என்று அறிவித்திருக்கிறார். மரியாதையாக மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் நீங்கள் சொன்னதெல்லாம் தவறு என்று.


கலைஞரை 6வது முறையாக முதல் அமைச்சராக ஆக்குங்கள் என்று நான் கேட்கவில்லை. அது சரித்திரத்தின் கட்டாயம். எவன் மறுத்தாலும் அதுதான் நடக்கும். நீங்கள் விசுவாசமாக இருங்கள். எந்த கட்சிக்காரர்களாக இருந்தாலும் குடிக்கிற தண்ணீருக்கு விசுவாசமாக இருங்கள். சாப்பிடுகிற உணவுக்கு விசுவாசமாக இருங்கள். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு விசுவாசமாக இருங்கள். கருவில் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு விசுவாசமாக இருங்கள். ஏனென்றால் அத்தனையிலும் கலைஞரின் உதவி இருக்கிறது என்றார்.No comments:

Post a Comment