கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, March 14, 2011

ஏழைகளுக்கு உயர் மருத்துவ வசதி தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இந்திய அளவில் சாதனை : முதல்வர் கருணாநிதி


கலைஞர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிக நிதி ஒதுக்கீடு

தி.மு.க. அரசு அமையும் போதெல்லாம் மக்கள் நல்வாழ்வுத் துறைக்குத் தனி முக்கியத்துவம் அளித்து, தமிழகத்தில் வாழும் ஏழை எளிய நலிந்த பிரிவினர் அனைவருக்கும் தரமான மருத்துவவசதிகள் எளிதில் கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உருவாக்கப்படுகின்றன.

2005 2006 ம் ஆண்டு இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1487 கோடி என்பதற்கு மாறாக 2010 2011 ல் நிதி ஒதுக்கீடு ரூ.3889 கோடியாக உயர்ந்துள்ளது. மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனுக்குடன் இந்த அரசு நிரப்பி வருகிறது. 2006 க்குப் பின், 7,438 மருத்துவர்கள்; 9,744 செவிலியர்கள்; 1,799 கிராம சுகாதார செவிலியர்கள், 703 மருந்தாளுநர்கள், 433 இரண்டாம் நிலை ஆய்வக நுட்புனர்கள், 129 மூன்றாம் நிலை ஆய்வக நுட்புனர்கள் முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,249 மருத்துவர்கள், 5,478 செவிலியர்கள் உட்பட இதுவரை மொத்தம் 34,854 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம்

உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 2009 ம் ஆண்டு ஜுலை 23 ல் தொடங்கப்பட்டது. பலராலும் பாராட்டப்படும் இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் உயர்தர தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்க உதவும் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் கழக அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தில் 7.3.2011 வரை 2,90,291 நோயாளிகளுக்கு ரூ.750.28 கோடி செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.

"அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்'', இ.எம்.ஆர்.ஐ. என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் 24 மணிநேர இலவச சேவையாக 415 ஊர்திகளுடன் 365 நாட்களும் செயல்படுத்தப்படுகிறது. உலக வங்கி நிதி உதவியில் இந்த திட்டத்திற்கு மேலும் ரூ.31 கோடி செலவில், 200 ஊர்திகளைக் கொண்டு விரிவாக்கப்படும். மொத்தம் 632 வாகனங்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும். அண்ணா பிறந்த நாளான 15.9.2008 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 7.3.2011 வரை 8,62,576 நோயாளிகளை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்தான நிலையிலிருந்த 34,407 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இவற்றில், 2,20,294 பிரசவங்களும் அடங்கும். இதுவரை ரூ.143.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு நிதி உதவி

ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா ரூ.6000 நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 25,76,612 கர்ப்பிணிகளுக்கு ரூ.1,389.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வருமுன் காப்போம் திட்டம் 1997 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட இத்திட்டம் 30.12.2006 அன்று மீண்டும் தொடங்கப்பட்டு, 28.02.2011 வரை 19,272 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1.81 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்களில் உயர் சிகிச்சைகள் தேவை எனக் கண்டறியப்படுபவர்களுக்கு "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில்'' இலவச அறுவை சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

கண்ணொளி காப்போம்

கண்ணொளி காப்போம் திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 14,801 பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள். இந்தத் திட்டத்தில் 30.04 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவர்களில் பார்வைக் குறைபாடு கண்டறியப்பட்ட 1,60,903 மாணவ மாணவியர்க்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 2010 2011 முதல் 10 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கும் விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம் 28.2.2011 வரை 39,60,467 மாணவ மாணவியர்களுக்குப் பரிசோதனைகள் செய்து, 1,70,803 மாணவர்களின் கண் குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களில் 1,02,779 மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

"இளம் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்'', "பள்ளிச் சிறார் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம்'' என்ற இரண்டு திட்டங்களின் கீழும் 27 தனியார் மருத்துவமனைகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 1,800 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சைகள் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 9,800 ஆகும்.

இருதய நோய் தடுப்பு

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. "கருப்பை வாய் புற்றுநோய் தடுப்புத் திட்டம்'' ரூ.100 கோடி செலவில் எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

"நலமான தமிழகம்'' என்ற புதுமையான திட்டத்தின்மூலம் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிகிச்சைகள் அளிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. இதுவரை 45,982 முகாம்கள் நடத்தப்பட்டு இதில் 3.18 லட்சம் ரத்த அழுத்த நோயாளிகளும், 2.90 லட்சம் சர்க்கரை நோயாளிகளும், 1.82 லட்சம் பேர் இரண்டு நோய்களும் பாதிக்கப்பட்டவர்களும் கண்டறியப்பட்டு, மொத்தம் 7.90 லட்சம் பேர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கிராமப்பகுதி மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2006 க்குப் பின் ரூ.66.42 கோடி செலவில் 166 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment