
திமுக தலைவர் கருணாநிதி எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர் என்றும், பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் திமுகவின் செயல் திட்டம் அமைய வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரலாற்றில் இடம்பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த திமுக, அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும்.
உலகமே வரவேற்கிறது
தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் திமுகவின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள் வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.
பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம்
இனி, தி.மு.க., கறந்தபால் முலை, புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா என்ற சிந்தனைக்குரிய சித்தர்கள் வாக்கினை எண்ணிப் பார்த்து, பதவிகளைவிட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது.
லட்சிய வீரர்கள் மகிழ்ச்சி
இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட்டுகள் வரவேண்டும்: கூடுதல் இடங்கள் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை: திருமா
கடந்த 2006 சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டன. அதன் பிறகு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டன. தற்போது சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து சந்திக்கின்றன.
இதற்கிடையே மத்திய மந்திரிசபையில் இருந்து தி.மு.க. விலகுவதாக முடிவு செய்திருப்பதால் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணிக்கு திரும்பி வரவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
இப்போது காங்கிரஸ் இல்லாததால் தி.மு.க. அணிக்கு இடதுசாரி கட்சிகள் வருவதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. எனவே அவர்கள் தி.மு.க. அணிக்கு திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் இல்லாததால் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்குமா என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல என்றார்.
பீகார் தேர்தலைப் போல கலைஞருக்கு மக்கள் வெற்றியை தேடி தருவார்கள்: சுப.வீரபாண்டியன்
பீகார் தேர்தலில் நலதிட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மக்கள் ஆதரவு அளித்து வெற்றி செய்தது போல், தமிழக மக்களும் முதலமைச்சர் கலைஞருக்கு வெற்றியை தேடி தருவார்கள் என, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்,
பீகார் தேர்தலில் நலதிட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மக்கள் ஆதரவு அளித்து வெற்றி செய்தது போல், தமிழக மக்களும் முதலமைச்சர் கலைஞருக்கு வெற்றியை தேடி தருவார்கள். இந்த முடிவினால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. திமுக கூடுதல் இடங்களில் போட்டியிடப் போகிறது என்பதனால் புதிய ஊக்கமும், உற்சாகமும் தொண்டர்களிடையே காணப்படுகிறது. மாபெரும் வெற்றி திமுகவுக்கு காத்திருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment