கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, March 15, 2011

உடல் ஒத்துழைக்காவிட்டாலும் உள்ள உறுதியோடு பிரசாரத்தில் ஈடுபடுவேன் - முதல்வர் கருணாநிதி அறிக்கை


தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 14.03.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
நேர்காணலுக்கு வருகின்றவர்களை சந்திக்கும்போது, பல பேர் நாங்கள் வேட்பாளராக நிற்பதற்காக பணம் கட்டி இங்கே வரவில்லை. உங்களை நெருக்கத்தில் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமே என்பதற்காகத்தான் வந்தோம் என்று சொல்வதைக் கேட்கும்போது, இவர்களை உடன்பிறப்புகளாகப் பெற நாம் என்ன பாக்கியம் செய்தோம் என்று எண்ணிடத்தான் தோன்றியது. அதிலும் இந்த முறை எந்தத் தேர்தலுக்கும் வராத அளவிற்கு நேர்காணலுக்குக் கூட்டம். முன்பெல்லாம் ஒரு தொகுதிக்கு இருபது அல்லது இருபத்தைந்து பேர்கள்தான் நேர்காணலுக்கு வருவார்கள்.
இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக எவ்வளவு பேர் மனு செய்திருக்கிறார்கள் என்று கேட்கும்போது 80 பேர், 90 பேர் என்று பதில் வரும். ஒவ்வொருவராக அழைத்து நேர்காணலை நடத்தினால் தேர்தல் நாளே வந்துவிடும். எனவேதான் முதல் நாள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பார்த்தபோது, 7 மாவட்டங்களில் 2 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கூடப் பார்த்து முடிக்க முடியவில்லை.
எனவே தான் இரண்டாவது நாளிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் மனு செய்தவர்களை இரண்டு மூன்று குழுக்களாகப் பிரித்து நேர்காணலை நடத்தி முடித்தோம். நேர்காணலுக்கு வந்திருப்பவர்களைக் காண அண்ணா அறிவாலயத்திற்குள் ஒவ்வொரு நாளும் நுழையும்போதே ஒரு திருவிழா கூட்டம். என்னைக் காண்பதிலே தான் அவர்களுக்கு எத்தனை இன்பம், எவ்வளவு ஆர்வம். போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, வாய்ப்பு கேட்பவர்களுடன் உடன் வந்தவர்கள்தான் எத்தனை பேர்?
நேர்காணலுக்கு வந்தவர்கள் சிலபேர் பழைய நினைவுகளையெல்லாம் எடுத்துக் கூறினர். ஒரு சிலர் அந்தக் காலத்தில் அண்ணாவோடும், என்.வி.என். போன்றவர்களோடும், தளபதி அண்ணன் அழகிரியோடும் நான் அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்களையெல்லாம் கொண்டு வந்து காட்டியபோது நான் அந்தக் காலத்தில் அவர்களோடு அமர்ந்திருந்த அந்த பழைய நினைவுகள் எல்லாம் என் சிந்தனையிலே மிதந்தன.
இதோ ஒரு கடிதம் 9&8&1968ல் நான் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம். அந்தக் கடிதத்தை நண்பர் ஒருவர் பொக்கிஷம் போல எடுத்து வந்து காட்டினார். அந்தக் கடிதத்தில் தஞ்சை மாவட்டக் கழகத் தேர்தலில் பொதுக்குழுவிற்கு போட்டியிட்ட நான், எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டு எழுதிய கடிதம்தான் அது.
அத்தனை தொகுதியிலிருந்தும் வந்தவர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு அமர்ந்திருந்து நேர்காணலை முடித்து விட்டோம். இடையிடையே தோழமைக் கட்சியின் தலைவர்களுடனும், குழுவினருடனும் எந்தெந்த தொகுதிகளை யார் யார் பங்கிட்டுக் கொள்வதென்று நமது குழுவினர் சந்தித்து, என்னோடும் அதைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். நானும் பொதுச் செயலாளர் பேராசிரியரும் எங்கள் அறைக்குள் இருந்தவாறு அவர்களுக்கு யோசனைகளைத் தெரிவித்தோம்.
தற்போது அநேகமாக நமது தோழமைக் கட்சிகளுடன் எல்லாம் பேசி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இறுதியாக்கப்பட்டு விட்ட நிலை. இன்று அல்லது நாளைக்குள் அந்தப் பட்டியலை நீ ஏடுகளிலே காணலாம். அனைத்துக் கட்சியினரும் தங்கள் தங்களுக்குள் விட்டுக் கொடுத்து தொகுதிகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றோம். ஒரு சில தொகுதிகளை குறிப்பிட்டு இரண்டு மூன்று கட்சிகள் கேட்டதால் பேசி முடிக்க சில நாட்களாகி விட்டன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக தீர்க்கப்பட்டு விட்டன.
இதனையடுத்து, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். நான் முன்பே எழுதியது போல ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 80 பேர் போட்டியிடுகிற நிலையில், அவர்களில் ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுபற்றி மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேச வேண்டும். அதற்கு உதவியாக மாவட்ட செயலாளர்கள் இன்றும், நாளையும் சென்னையில் இருப்பது நல்லது. ஏனென்றால் வேட்பாளர்களின் பெயர்கள் 16&3&2011 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் என்னால் செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்படவுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் 19&3&2011ல் தொடங்குகிறது. அதற்கு முதல் நாள் 18&3&2011ல் மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்திலேயே தோழமைக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. தேர்தல் அறிக்கையினை 19&3&2011ல் மாலையில் அண்ணா அறிவா லயத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிடவுள்ளேன். அதன் பின்னர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுபவர்கள் அவரவர் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தாக வேண்டும். தேர்தல் பிரசாரம் தொடங்கப்பட வேண்டும். இடையிலே இருப்பதோ ஒரு சில நாட்கள்தான்.
ஒவ்வொரு முறையும் நான் தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுகின்ற அளவிற்கு இந்த முறை முடியாது. எனினும் உடல் ஒத்துழைக்காவிட்டாலும் உள்ள உறுதியோடு முடிந்த வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். என்னைப் போலவே பொதுச் செயலாளரும், பொருளாளரும், முன்னோடிகளும், திமுக கலைஞர்களும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.
தொகுதிகளில் திமுக போட்டியிட்டாலும், நமது அணியிலே உள்ள கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கெல்லாம் திமுக தோழர்களின் பணி சிறப்பாக அமைந்திட வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நமது அமைச்சர்களின் துறைகள் வாயிலாக என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறோம் என்பதை வாக்காளப் பெருமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். சாதனைகளைச் சொல்லி தைரியமாக மக்களிடம் வாக்கு கேட்கக் கூடிய அளவிற்கு திமுக அரசு பாடுபட்டிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment