முதல்வர் கருணாநிதி தலைமையில் வேட்பாளர்கள் நேர்காணல் 08.03.2011 அன்று தொடங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பிப்ரவரி 25 முதல் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 15 ஆயிரம் பேர் விருப்ப மனுக்கள் கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய முதல்வர் கருணாநிதி முடிவு செய்தார். அதன்படி, நேர்காணல் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் 07.03.2011 அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் விருப்ப மனுக்கள் தந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து முதல்வர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.
முதலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான நேர்காணல் நடந்தது. இதில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் இருந்து 239 பேரிடம் நேர்காணல் நடந்தது. ஏராளமான பெண்களும் நேர்காணலில் கலந்து கொண்ட னர். அமைச்சர் சுரேஷ்ராஜன், எப்.எம்.ராஜரத்தினம், அந்தோணி அம்மாள், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், முன்னாள் எம்எல்ஏ பெர்னார்டு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜிதா, புஷ்பலீலா ஆல்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேர்காணல் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆர்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் டி.ஆர்.பாலு எம்பி, மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்.
நேர்காணல் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. அதன்பின், மாலை 5 மணிக்கு மீண்டும் நேர்காணல் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளான திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனு தந்தவர்களிடம் நேர்காணல் நடந்தது. இதில் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், கருப்பசாமி பாண்டியன், அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை மற்றும் அப்பாவு, வீனஸ் வீர அரசு, சுப.சீதாராமன், நெல்லை துணை மேயர் முத்துராமலிங்கம், பிரபாகரன், ரசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் கேட்ட கேள்வி
முதல்வர் கருணாநிதி நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு நிலவரம், செலவு செய்யும் தொகை, தனிப்பட்ட செல்வாக்கு போன்ற விவரங்கள் பற்றி கேட்டார். சிலரிடம், உங்களுக்கு வாய்ப்பு தராவிட்டால் வேறு யாருக்கு தரலாம் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
No comments:
Post a Comment