திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில், முதல்வர் கருணாநிதி போட்டியிட 750 பேர் விருப்ப மனுக்களை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல், கடந்த 8ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. முதல்வர் கருணாநிதி நேர்காணல் நடத்தி வருகிறார். மனு தந்தவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, மக்கள் மனநிலை பற்றி விசாரித்து வருகிறார். 4வது நாளாக 11.03.2011 அன்று காலை 10.45 மணிக்கு நேர்காணல் தொடங்கியது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் விருப்ப மனு தந்தவர்களிடம், முதல்வர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார்.
பிற்பகலில் கிருஷ்ணகிரி, தர்மபுரி (வடக்கு), தர்மபுரி (தெற்கு), விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. அப்போது, நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு எம்பி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நேர்காணலில் அமைச்சர்கள் கோ.சி.மணி, உ.மதிவாணன், உபயதுல்லா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், குத்தாலம் அன்பழகன், கோ.சி.இளங்கோவன், ராசபிரபு, விஜய்கமல், டி.ஆர்.பி.ராஜா, வேதரத்தினம், சாக்கோட்டை அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதி போட்டியிடக் கோரி 750 பேர் மனுக்கள் தந்திருந்தனர். வேறு யாரும் போட்டியிட மனு தரவில்லை.
No comments:
Post a Comment