கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, February 28, 2011

கேட்கின்ற ஆதரவு கட்சியின் பெயரால் அல்ல : கலைஞர்


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றுக்கு பாரம்பரிய மரபணு பூங்காக்கள், நாகை கீழ வேளூர் வேளாண் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, தஞ்சை பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகம் திறப்பு விழா, பெருந்துறை வேளாண் விற்பனை முனையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவை தலைமை செயலகத்தில் 27.02.2011 அன்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.

விழாவில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

’’இன்று காணொலிக் காட்சி வாயிலாக ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் -தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை வணிக வளாகம் - கீழ்வேளூர் வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா உட்பட - வேளாண் துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆகிய நிகழ்ச்சிகள் ஒருசேர நடத்தப்படுகின்ற இந்த இனிய வைபவத்தில் நானும் கலந்து கொண்டு, நீங்கள் அடைகின்ற மகிழ்ச்சியில் பங்கு பெறுவதில் மிகுந்த நல்லுணர்வும் - நம்பிக்கை கொண்ட மகிழ்ச்சியும் அடைகின்றேன்.


அண்மையில் நடைபெற்று நிறைவேறிய கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் - நான் குறிப்பிட்ட தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் - ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றிலே சில திட்டங்களைத் தொகுத்துரைத்து - அதனைத் தொடங்குகின்ற நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள - குறிப்பாக வேளாண் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் மற்றுமுள்ள அமைச்சர் பெருமக்களையெல்லாம் வரவேற்கிற அதே நேரத்தில், இந்தத் திட்டங்கள் செவ்வனே நடைபெறுவதற்கு அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்களுடைய உழைப்பினை நல்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் - பள்ளிப் பருவத்தில் பாடப் புத்தகத்திலே படித்த ஐந்திணை - ஐவகை நிலம் - இவைகளெல்லாம் தமிழகத்திலே இருந்தனவா என்ற கேள்விக்கிடையே படிக்கப்பட்டவை - சொல்லப்பட்டவை - பரிமாறிக் கொள்ளப்பட்டவை - அவற்றையெல்லாம் இன்றைக்கு நிறைவேற்றுகின்ற பொற் பணியில், ஒரு பொறுப்பில் நான் அமர்ந்திருப்பதும், அதை நிறைவேற்றி வைக்கின்ற அரும்பணியினைத் தொடங்கி வைப்பதும் நான் பெற்ற பேறு என்றே கருதுகின்றேன்.

இன்றையதினம் நடைபெறுகின்ற இந்த விழாவில் என்னென்ன நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதெல்லாம் இங்கே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் பிரித்து நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அந்தந்தத் துறையினுடைய அதிகாரிகள் இங்கே எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாக காணுகின்ற தமிழ்ப் பெருமக்கள், தமிழகத்திலே எத்துணை சிறப்பாக ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் எதிர்கால எழிலை, எதிர்கால ஏற்றத்தை, எழுச்சியை நினைத்தவாறு இந்த அரசு நடைபெறுகிறது என்பதை எண்ணிப் பார்த்து, தங்களுடைய ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேட்கின்ற ஆதரவு கட்சியின் பெயரால் அல்ல - ஆட்சியின் பெயரால் - தமிழ்ச் சமுதாயத்தின் பெயரால். திராவிட இனம் எப்படி ஒரு காலத்திலே வாழ்ந்தது -– எந்த வகையிலே நிலங்களைக் கூட வகுத்துக் கொண்டு அதை அந்த இலக்கண ரீதியாக வாழ்ந்து காட்டியது என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னால், எதிர்காலத்திலே மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தங்களுடைய சந்ததியினருக்குப் பயன்படும் என்ற வகையிலே இந்த இனிய விழாவிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் காணொலி மூலம் சந்திப்பதிலே பெருமையும், பெரும் பேறும் பெற்றதாகக் கருதி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்’’என்று உரையாற்றினார்.

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை ஆணையர் சந்திரமோகன், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகேச பூபதி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். வேளாண் முதன்மை செயலாளர் ராமமோகன்ராவ் வரவேற்றார். இயக்குநர் விவேகானந்தன் நன்றி கூறினார். தஞ்சை கலெக்டர் மா.சு.சண்முகம், சேலம் கலெக்டர் ஜெ.சந்திரகுமார் ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.
ஐந்து இடங்களில் மரபணு பூங்காக்கள் :
ஐக்கிய நாடுகள் சபையானது, 2010ம் ஆண்டை “உலக உயிரியல் பன்மை” ஆண்டாக அறிவித்துள்ளது. அந்த வகையில் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஐந்தினை நிலங்களின் பெருமைகளை விளக்கும் வகையில் குறிஞ்சி (ஏற்காடு, சேலம்), முல்லை (சிறுமலை, திண்டுக்கல்), மருதம் (மருதாநல்லூர், தஞ்சாவூர்), நெய்தல் (திருக்கடையூர், நாகை), பாலை (அச்சடிப்பிரம்பும், ராமநாதபுரம்) ஆகிய இடங்களில் பாரம்பரிய மரபணு பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக முதல் கட்டமாக ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் அமைக்கும் பணிகள் ஐந்து மாதத்துக்குள் முடியும் என்று அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment