கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 4, 2011

தமிழர் நாகரிகம், பண்பாடு வளர என்றென்றும் துணை நிற்போம் : கலைஞர் பேச்சு




�தமிழ் கலை, தமிழர் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு வளர என்றென்றும் துணை நிற்போம்� என்று திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
திமுக தலைவர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதன் தம்பி சிவாஜியின் மகன் சுதர்சன்& துர்காதேவி திருமணம், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 01.09.2011 அன்று காலையில் நடந்தது. கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர், மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:
சண்முகநாதன் என்னுடைய வீட்டிலே உள்ள பிள்ளைகளில் மூத்த பிள்ளை. அந்த அளவுக்கு, அறிவுக்கூர்மையும் இந்தக் குடும்பத்தின்பால் அன்பும், என்பால் தனிப்பட்ட பாசமும் உள்ளவர் சண்முகநாதன் என்று சொன்னால் அது மிகையல்ல.
அவரை நான் பல ஆண்டு காலத்துக்கு முன்பே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொற்பொழிவாளராக நாடெல்லாம் சுற்றிவந்த காலக்கட்டத்திலேயே பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் எனக்கு, தூரத்து உறவினர் என்று எனக்குத் தெரியாது. என்னுடைய கூட்டங்களில், நான் பேசும்போது விறுவிறுப்பாக ஒருவர் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருப்பார்.
நான் என் பக்கத்திலே இருந்த தென்னனை அழைத்து, யாரப்பா இவர்? நான் வருகின்ற கூட்டங்களில் எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு வருகிறாரே? என்று கேட்ட போதுதான், இவர்தான் சண்முகநாதன். இவர் போலீஸ் சி.ஐ.டியாக, எதிர்க்கட்சிக் கூட்டங்களில் பேசுபவர் பேச்சுகளையெல்லாம் குறிப்பெடுத்து, அனுப்பி வைத்து, அந்த குறிப்பின்படியெல்லாம், நம்மை கைது செய்வதற்கு உதவுகின்றவர் இவர் என்று சொன்னார் தென்னன்.
இப்படி எதிர்க்கட்சிகளுடைய பேச்சுகளையெல்லாம் குறிப்பெடுப்பதிலேயே எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார் என்பதை நான் எப்பொழுது அறிந்து கொண்டேன் என்றால், 1967ம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது, நானும் அண்ணா கட்டளைப்படி, ஒரு அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அந்த நேரத்தில், எனக்கு சுருக்கெழுத்தாளராக சண்முகநாதனை நியமிக்க வேண்டும் என்று கேட்டு, அண்ணாவால் நியமிக்கப்பட்ட சண்முகநாதன் இன்றளவும், நான் ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும், சுருக்கெழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, கைப்பட எழுதுவதில்லை. காரணம், எனக்கு நடைபெற்ற முதுகுத்தண்டு அறுவை சிகிச்சையின் காரணமாக, கைகொண்டு எழுத முடியவில்லை. கடிதமானாலும் கட்டுரையானாலும், சண்முகநாதனிடம் சொல்லி விடுவேன்.
அவைகள் எந்த அளவுக்கு திறமையாக, எந்த அளவுக்கு பாராட்டத்தக்க வகையில், எந்தளவுக்கு பிழையில்லாமல், வெளிவருகின்றன என்பதை அதைப் படிப்பவர்கள் நன்றாக உணர்வார்கள். அப்படிப்பட்ட திறமைசாலி.
இங்கே நண்பர்கள், தலைவர்கள், கலைஞர்கள் பேசும்போது, சண்முகநாதன் இல்லாவிட்டால் கருணாநிதி உண்டா என்றால், அதற்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை. நானே பதில் சொல்கின்றேன்; இல்லை என்றுதான். அப்படிப்பட்ட தம்பிதான், இன்றளவும் என்னோடு இருந்து, எனக்குப் பதிலாக என்னுடைய பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.
நான் இன்றைக்கு உங்களையெல்லாம் இந்த மணவிழா மண்டபத்திலே விஜயாலய சோழனைப் போல சந்திக்கின்றேன். விஜயாலாய சோழன் போர்க்களத்தில், அவனுடைய கரங்கள் துண்டிக்கப்பட்டு, அவனுடைய கைகளிலே இருந்த கணைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு, தன்னந்தனியனாக போர்க்களத்திற்கு வந்தபோது சோழன், இரண்டு பேர் என்னைத் தூக்கிக் கொண்டு வாருங்கள். இந்தப் போர்க்களத்தில் படைவீரர்கள் நடுவே நான் சென்று போரிடுகிறேன் என்று விஜயாலய சோழன் தன்னந்தனியாக வந்து போரிட்டதைப் போல், யாரையும் நம்மிடமிருந்து பிரித்தாலும், யாரை நம்மிடமிருந்து வெகுதூரத்திற்கு அனுப்பி வைத்தாலும் நம்மைக் காக்கக்கூடிய உரம், உள்ளம், உறுதி இவைகளையெல்லாம் நமக்கு அளிப்பவர்கள் பெரியாரும், அண்ணாவும் நீங்களும் என்பதை மனதில் கொண்டு, நடமாடிக் கொண்டிருக்கின்றோம்.
இன்றைய தினம் நாடு போகிற போக்கைப் பார்த்தால், நம்முடைய கலை, கலாச்சாரம், நாகரிகம் இவைகளுக்கு எல்லாம் எதிர்காலம் உண்டா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்தக் காலத்திலே நம்முடைய பெரியவர்கள் சொன்னதை மாற்றலாமா, அவர்கள் கொண்டாடிய தமிழ் வருடத்தை இன்றைக்கு மாற்றலாமா, தவறல்லவா? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்கள் கொண்டாடிய தமிழ் வருடங்கள் என்ன?
இன்றைக்கு என்ன மாற்றி விட்டோம். யாரோ தெருவில் போகிறவர்களா வந்து மாற்றினார்கள், அல்ல. மறைமலை அடிகளார் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர்கள் செந்தமிழ் கற்றோர் பச்சையப்பன் கல்லூரியில் கூடி, நடந்த மாநாட்டில், நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களுக்கென்று ஒரு ஆண்டுக் கணக்கில்லை. அந்தக் கணக்கைத் தொடங்குவோம். அந்தக் கணக்குதான் தை முதல் நாள் தொடங்குகின்ற நம்முடைய ஆண்டுப் பிறப்பு என்று சொல்லி தை முதல் நாள், தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்ற பழமொழிக்குச் சொந்தமான மாதம்.
அந்த தை மாதத்திலே ஆண்டுக் கணக்கைத் தொடங்குவோம். திருவள்ளுவர் பெயரால் தொடங்குவோம் என்றும் 500 புலவர்கள் ஒன்றுகூடி, யோசித்து முடிவெடுத்தார்களே? அவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்களா? அவர்களெல்லாம் மரபு அறியாதவர்களா? அவர்களெல்லாம் தமிழை உணராதவர்களா? என்ற இந்த கேள்விக்கு, நாம் பதிலளிக்க வேண்டும். அந்த பதிலை செயல் மூலம் காட்ட வேண்டும். அப்படிக் காட்டுகின்ற அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை.
தமிழ்க் கலை வளர, தமிழர் நாகரிகம் வளர, தமிழர் கலாச்சாரம் வளர, தமிழர் பண்பாடு வளர, என்றென்றும் நாம் துணை நிற்போம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
முன்னதாக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, வைரமுத்து, சற்குண பாண்டியன், நடிகர் சத்யராஜ், ஆர்.எம்.வீரப்பன், முரசொலி செல்வம், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், டி.ஆர்.பாலு, எல்.கணேசன், ஜெ.அன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மணமக்களுக்கு கனிமொழி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். அதை வைரமுத்து வாசித்தார். மணமக்களை தயாளு அம்மாள், மு.க.தமிழரசு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்தினர்.

No comments:

Post a Comment