கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, January 9, 2011

தமிழ் வைத்திய முறைக்கு சிறப்பு ஏற்படுத்திய பனகல் அரசர் : முதல்வர் கருணாநிதி அறிக்கை


தமிழ் வைத்திய முறைக்கு சிறப்பு ஏற்படுத்தியவர் நீதிக் கட்சி தலைவராக இருந்த பனகல் அரசர் என்று முதல்வர் கருணாநிதி பாராட்டியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி 06.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:

சட்டமன்ற மேலவையிலும், பேரவையிலும் பனகல் அரசருடைய படத்தை வைப்பதற்கு நான் முயற்சி எடுத்துக் கொண்டபோது அதிகாரிகள் சிலர், பனகல் அரசர் யார் என்று கேட்டார்கள். நான் அவர்களுக்குச் சொன்னேன்.
என்னுடைய 13வது வயதில் 1937ம் ஆண்டு திருவாரூர் உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு நான்டிடெயில் (துணைப்பாடம்) புத்தகமாக பனகல் அரசர் வரலாறு வைக்கப்பட்டிருந்தது. 45 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறிய புத்தகத்தை மணி. திருஞான சம்மந்த முதலியார் எழுதியிருந்தார். ஒற்றுமை ஆபீஸ் சைதாப்பேட்டை, மதராஸ் என்று முகவரி அச்சிடப்பட்டு மூன்றணா விலைக்கு விற்கப்பட்ட புத்தகம் அது.
அந்தப் புத்தகத்தில் 13 அதிகாரங்களையும் 45 பக்கங்களையும் நான் மனப்பாடம் செய்து அப்பொழுதே வகுப்பில் ஒப்பிக்கும் திறமை படைத்தவனாக விளங்கி வகுப்பாசிரியர் ராமசாமி செட்டியார். முத்துகிருட் டிண நாட்டார் ஆகியோரு டைய பாராட்டைப் பெற்றவன்.
பனகல் அரசர் தமிழ்நாட்டில் 1917ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில் நியாயக் கட்சி எனும் நீதிக் கட்சியின் தலைவராகவும் அதைத் தொடர்ந்து 1923ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பிரதான மந்திரியாகவும் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் அப்பதவிகளில் வீற்றிருந்து 1928ம் ஆண்டு காலமானார்.
பனகல் அரசர் மறைந்த போது, பெரியார் எழுதிய இரங்கல் தலையங்கத்தில், “ஒரு நல்ல நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பனகல் அரசரின் காலம் முடிவு பெற்றதால், பெரியதும் திறமையானதுமான ஒரு யுத்தம் முனைந்து வெற்றிக் குறியோடு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் போர் வீரர்கள் சேனாதிபதியின் ஆக்ஞையை எதிர்பார்த்துத் திரும்பியபோது சேனாதிபதி இறந்து போய் விட்டார் என்கின்ற சேதி கிடைக்குமானால், அந்தச் சமயத்தில் அப்போர் வீரர்களின் மனம் எப்படி துடிக்குமோ அது போல் நமது தமிழ் மக்கள் துடித்திருப்பார்கள் என் பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவாய்க் கருதப்பட்ட மக்கள் அதாவது தீண்டாதார், கீழ்ச்சாதியார், ஈனச் சாதியார், சூத்திரர் என்பனவாகிய பிறவி இழிவும் பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி மக்களின் சுய மரியாதைக்கும் விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் மனிதத்தன்மைக்குமாக வேண்டி பிரவாகமும் வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர்நீச்சு செய்வது போன்ற கண்டுமான காரியத்தைக் கைக்கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர் பனகல் அரசர்”
பெரியாரால் இவ்வாறு எழுதப்பட்ட பனகல் அரசர் ஆட்சியில்தான் தமிழ் வைத்திய முறைக்கு பெரும் சிறப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆலயங்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற தர்மகர்த்தாக்களின் இழிந்த செய்கைகளை ஒழித்திட அவர்தான் இந்து சமயச் சீர்திருத்தச் சட்டம் என்ற மிகச் சிறந்த சட்டம் ஒன்றை அனைவரும் பாராட்டுகின்ற வகையில், ஒரு சில சுயநலக்காரர்களின் கடுமையான எதிர்ப்பையும் சமாளித்து அரசு சார்பில் கொண்டு வந்தவர் என்பதை வரலாறு எடுத்துச் சொல்கிறது.
அந்தப் பெருந்தகையினுடைய அஞ்சாமை, ஆற்றல், அறிவு, ஏழைகளின்பால் அவர் கொண்டிருந்த இரக்க உணர்வு இவ்வளவையும் தொகுத்து எழுதப்பட்டதே ஐந்தாம் வகுப்பில் நான் படித்த துணைப்பாட நூலான பனகல் அரசர் பற்றியதாகும். அந்தப் புத்தகத்தை இப்போது தேடியெடுக்கச் செய்து திருவாரூர் மாவட் டம், மன்னார்குடி மாவட்ட நூலகத்தில் அதைத் தேடிப் பிடித்தெடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் எம். சந்திரசேகரன், எனக்கு அனுப்பியிருந்தார்.
45 பக்கங்களே கொண்ட அந்தச் சிறிய நூலினைப் படித்துப் பார்த்தால் நீதிக் கட்சி சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு அந்தக் கட்சியின் சார்பில் பொறுப்பிலே இருந்தவர்கள் கடைபிடித்த கண்ணியம், நேர்மை, நியாயம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். அத்தகைய பெருமகனாரின் படம் தான் இப்பொழுது சென்னையில் புதிய சட்டமன்றப் பேரவையிலும், மேலவையிலும் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பழைய படம் வந்து சேரும் வரையில் பனகல் அரசருடைய வரலாற்றுக் குறிப்புகள் என் கையில் கிடைக்கும் வரையில் இந்த உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியா மல் நான் எவ்வளவோ வேதனைப்பட்டேன்.
என் வேதனை விலகிடவும் மேலும் சாதனைகள் புரிந்திட உற்சாகம் பெற்றிட வும் வேரில் இடப்பட்ட எரு வாக ஊற்றப்பட்ட நீராக இந் நு£ல் என் கைக்குக் கிடைத்துள்ளது. இதனை மலிவுப் பதிப்பாக வெளியிட்டால் மக்களுக்கு நீதிக் கட்சியின் தொடக்கம், வரலாறு, அதன் தேவை எனும் இத்தனை உண்மைகளும் கிடைத்திடும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment