
ஏழைக்கு ஒரு பள்ளி, பணக்காரர்களுக்கு இன்னொரு பள்ளி எனப் படிக்கிற வயதிலேயே மாணவர்கள் மனதில் பேதத்தை உருவாக்கிவிடுகிறது தமிழகத்தின் கல்வி நிலைமை. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. பெற்றோரும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிப்பதை விரும்பாமல், தங்கள் சக்திக்கு மீறி தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். அப்போதுதான் ஆங்கில அறிவு வளரும் என்றும் தரமான கல்விக் கிடைக்கும் என்றும் நினைக்கிறார்கள். பெற்றோரின் நினைப்பை மூலதனமாக்கி, கல்வி வணிகத்தைச் சிறப்பாக நடத்துகின்றன தனியார் பள்ளிகள். இந்தப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகள் பற்றி தொடர்ச்சியாகக் குமுறல்களும் புகார்களும் எழுந்ததால், 2009-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூல் ஒழுங்குபடுத்துதல்) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில், பள்ளிகளின் கட்டணங்களை வகைப்படுத்தவும் முறைப் படுத்தவும் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அதுபோலவே மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு பள்ளிக்கு எப்படி கட்டணம் நிர்ணயிப்பது என்ற காரணிகளாக, அப்பள்ளியின் அமைவிடம், உள்கட்டமைப்பு, எதிர்காலவளர்ச்சிக்கான நிதி வசதி, குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகள், பள்ளிகளின் 100% தேர்ச்சி விகிதம் ஆகியவை கணக்கிடப்பட்டன. இப்படிக் கணக்கிடுவது ஏற்றத்தாழ்வான கல்விக்கே வழிவகுக்கும் என்றும், இது சமச்சீரான கல்விக்கு எதிரானது என்றும் கல்வியாளர்களும் சமூக நல ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். கல்விக் கட்டணக்குழுவில் பள்ளி நிர்வாகம் சார்பில் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், மாணவர்கள் சார்பிலோ பெற்றோர் சார்பிலோ பிரதிநிதிகள் இல்லை. எல்லா வகையிலும் பள்ளி நிர்வாகங்களுக்கே சாதகமாக இந்தக் குழுக்கள் இருந்தபோதும், நீதிபதி கோவிந்தராசன் குழு நிர்ணயித்த கட்டணத்தை தனியார் பள்ளிகள் பலவும் ஏற்கவில்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை பள்ளி நிர்வாகங்கள் சென்றபோதும், நீதிபதி தலைமையிலான குழுவின் உத்தரவை மாற்ற முடியவில்லை. பள்ளிநிர்வாகங்களோ இந்தக் கட்டணத்தை ஏற்க முடியாது எனப் பிடிவாதமாக இருந்தன. கோவை மசக்காளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் தனது ஒரே மகன் தர்ஷனை முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சென்றார். அந்தப் பள்ளியில் முதல் வகுப்புக்கு நீதிபதி குழு நிர்ணயித்திருந்த கட்டணம் 4ஆயிரத்து 190 ரூபாய். உழைத்து சேர்த்திருந்த பணத்தில் 5000 ரூபாயை எடுத்துக்கொண்டு மகனுடன் பள்ளிக்குச் சென்றார் சங்கீதா. ஆனால், பள்ளி நிர் வாகமோ 7 ஆயிரம் ரூபாய் கட்டினால்தான் படிக்க முடியும் என்று சொல்லிவிட்டது. சங்கீதாவிடம் அவ்வளவு பணம் இல்லை. பள்ளி நிர்வாகம் இரக்கம் காட்டவில்லை. மகனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற கவலையில் வீட்டுக்குத் திரும்பிய சங்கீதா தன் உடலுக்குத் தீ வைத்துக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இத்தகைய கொடூர நிகழ்வுகளும் கட்டணச் சிக்கலால் நிகழ்ந்தன. கல்விக்கட்டணக் குழப்பத்தால் பள்ளி நிர்வாகங்களுக்கு எதிரான பெற்றோரும் மாணவர்களும் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில்தான், நீதிபதி தலைமையிலான குழுவிடமே மேல்முறையீட்டு மனு செய்யலாம் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 6ஆயிரத்து 355 பள்ளிகள் தங்கள் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யவேண்டும் என மனு அளித்தன. இந்நிலையில், நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியிலிருந்து விலகியதால், நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் கட்டண நிர்ணயம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குநரக வளாகத்தில் இக் குழுவிற்கான இடம் ஒதுக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த பள்ளிகளின் நிர்வாகிகள் இந்த அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. 2010 நவம்பர் 15-ஆம் நாள் தொடங்கிய இந்த ஆலோசனை, 2011 மே 5-ஆம் நாளுடன் நிறைவடைந்தது. ஏறத்தாழ 7 மாதங்கள் நடந்த இந்த ஆலோசனைகளுக்குப்பிறகு, 13.6.2011 அன்று 6,355 பள்ளிகளுக்கு, நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த திருத்தப் பட்ட கட்டணம் பற்றிய விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டணத்தைப் பார்த்து பெற்றோர் பலரும் அதிர்ச்சியடைந்தனர். எல்.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புக்கு அதிகபட்ச கட்டணம் 15ஆயிரத்து 400 ரூபாய். +2-வுக்கு 25ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் சில பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணத்தை விட சற்று குறைவான கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பள்ளிகள் ஏற்கனவே தனது மாணவர்களிடம் கட்டணம் வசூலிலித்துவிட்டது. அப்படியென்றால், கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகை திருப்பி யளிக்கப்படுமா என்ற ஆவல் பெற்றோரிடம் ஏற்பட்டது. ஆனால், அது பற்றிய விவரம் எதுவும் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப் படவில்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் பலவும், கட்டண மறு நிர்ணயம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்கின்றன. இந்தக் கட்டணம் மூன்றாண்டு காலத்திற்கு நீடிக்கும் என நீதிபதி தலைமையிலான குழு அறிவித் திருப்பதால், இத்தனை ஆண்டுகள் வரை இதே கட்டணத்தை வசூலிலித்தால் கட்டுப்படியாகாது என்கின்றன. பள்ளிகளின் கட்டமைப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து நீதிபதி தலைமையிலான குழு 22 கேள்விகள் கேட்டிருந்தன. அதற்குப் பதிலளித்திருந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள், கட்டண நிர்ணயம் செய்வதற்காகத்தான் இந்தக் கேள்விகள் கேட்கப் படுகின்றன என்று தங்களுக்குத் தெரியாது என்றும் சொல்கின்றன. தாங்கள் விரும்புவது போன்ற கட்டணத்தை நிர்ணயிக்காவிட்டால் பள்ளிகளை மூடுவோம் என்கிற குரலும் தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து ஒலிலித்தன. இந்தப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்தான். பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளிகளை மூடுவோம் என மிரட்டினால், அவற்றிற்கான அனுமதியை ரத்து செய்யும் உரிமை அரசாங்கத்திடம் இருக்கிறது என்கிற கல்வியாளர்கள், இத்தகைய பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தினால் கட்டணச் சிக்கல்கள் தீரும் என்கிறார்கள்.
கல்வியும் மருத்துவமும் கொழுத்த வியாபாரமாகி விட்டன. மனிதர்களுக்கு ஏற்றத்தாழ்வின்றி கிடைக்க வேண்டிய இவை இரண்டிலும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதுதான் வணிகக் கொள்ளைத் தடுக்கப்படும்.
நன்றி : நக்கீரன் பொதுஅறிவு உலகம்
No comments:
Post a Comment